தமிழ்library
, அந்தக்கரணங்கள்−சித்தம், மனம், புத்தி அகங்காரம், தமிழ்library

அந்தக்கரணங்கள்−சித்தம், மனம், புத்தி அகங்காரம்

மனம் என்றால் என்ன? மனம் வேறு, புத்தி வேறா? சித்தம் என்றால்? அஹங்காரம் என்பது ஒரு ஆணவக்குறியீடா? சனாதன தர்மத்தின் அத்வைத வேதாந்த சாத்திரங்கள் இவற்றைப் பகுத்து விளக்குமளவிற்கு வேறு எந்த தர்மமும் விளக்குகின்றதா, தெரியவில்லை. இவற்றை, வெகு எளிதாக விளங்கிக் கொள்ள, நாம் முதலில் ஆராயத் தொடங்கிய அனுபவங்களுக்கு மீண்டும் செல்லலாம். நம் அனுபவங்கள் வெறும் சப்த, ஸ்பரிச, ரூப, ரஸ கந்தங்கள் மட்டும் தானா? இல்லையே. அவற்றை சுகமாகவோ, துக்கமாகவோ நாம் உணர்வதும் அனுபவங்களே. உணர்வது என்றால்? இது சுகமாக இருக்கின்றது என்னும் எண்ணம் நம் மனதில் எழுவதையே சுக உணர்வு என்கின்றோமா? மனமா? மனம் என்றால் என்ன? அதன் இயல்புகள் யாவை? அதன் ஸ்வரூபம் என்ன? அதன் லக்ஷணங்கள் யாவை? பல நேரங்களில், மனது சந்தோஷமாக இருக்கின்றது, மனது வேதனைப்படுகின்றது என்றெல்லாம் கூறுகின்றோமே, அவை சரியான சொற் பிரயோகங்கள் தாமா? என் மனம் இசையில் லயித்து விட்டது என்கிறோமே, நாம் சொல்ல விரும்புவதைச் சரியாகச் சொல்கிறோமா?

இந்த்ரியங்கள் வழி உள்வாங்கப்படும் ஒவ்வொரு விஷயமும், நமக்குள் சில எண்ணங்களை விளைக்கின்றன. அந்த எண்ணங்கள் பலவகையானவை. அவை, அவற்றுக்குத் தொடர்புடைய பல்வேறு எண்ணங்களை விளைக்கின்றன. விஷயங்கள் மட்டுமா எண்ணங்களை விளைக்கின்றன? ஆதாரம் இன்னதென்று நாம் அறிய முடியாவண்ணம், தொடர்ந்து நம்முள் எண்ணங்களும், அவற்றுக்குத் தொடர் எண்ணங்களும் விளைந்தவாறே உள்ளன. நாம் விழித்திருக்கும் ஒவ்வொரு கணமும், (கனவு காணும் போதும் கூட) நம்முள் எண்ணங்கள் எழுந்தவாறே இருக்கின்றன. கடலில் தொடர்ந்து அலைகள் எழுவதைப்போல், இடைவெளி இன்றி நம்முள் எண்ணங்கள் எழுந்தவாறே இருக்கின்றன. ஒரு அலை ஓய்வதற்குள், மற்றோரு அலை உருவாவதைப் போல, ஒரு எண்ணம் மறையும் முன்பே, மற்றொரு எண்ணம் உருவாகின்றது. ஒரு அலை ஓயும் முன்னே, மீண்டும் தொடர் அலைகளால் வலுப்பெற்று மீண்டும் அலையாவதைப் போல, ஒரு எண்ணம் ஓயும் முன்னே, தொடர் எண்ணங்களால் மீண்டும் வலுப்பெறுகின்றது.

அவற்றில் சில, உள்வாங்கப்படும் விஷயங்கள் மீதான ஆய்வாகவோ, விஷயங்கள் நம்மில் விளைத்த சுக துக்கம் போன்ற உணர்வுகளாகவோ, இவற்றின் தொடர் எண்ணங்களாகவோ இருக்கின்றன. வேறு சில, எந்தவித விஷயாதாரங்களும் இல்லாத, ஒன்றோடும் தொடர்பில்லாத ஏதாவதொரு எண்ணமாகவோ, தொடர் எண்ணங்களாகவோ தோன்றி மறைகின்றன. கர்மேந்த்ரியங்களால் நாம் ஆற்றும் செயல்கள் யாவும், முதலில் ஒரு எண்ணமாகவே விளைந்து, பேச்சாகவோ, செயலாகவோ உருப்படுகின்றது. பசி, தாகம், அசதி, காமம் போன்ற வேட்கைகளும் நம்மில் எண்ணங்களை விளைத்தவாறே இருக்கின்றன.

வேதாந்தம், இந்த எண்ணங்களின் தொகுப்பை, ஒரு கருவியாகவே காண்கின்றது. அகக் கருவி என்னும் பொருள்பட, அந்தக்கரணம் என்று அழைக்கப்படும் எண்ணங்கள் எதிலிருந்து விளைகின்றன? நமக்குள் எண்ணங்கள் எழுவதை அறியும் நாம், அவை ஏதேனும் ஒரு கருவியிலிருந்தே விளைய வேண்டும்; அந்தக் கருவியும் ஸ்தூலமாகவே இருக்க வேண்டும் என்றே நம்ப விரும்புகின்றோம். வெறும் எண்ணங்களின் தொகுப்புக்கு என்ன பலம் இருக்க முடியும்? ஒருங்கே எண்ணங்களுக்கு எப்படி ஒரு தனி இருப்பு இருக்க முடியும் என்ற கேள்விகள் எழுகின்றன.

மனம் என்றும், புத்தி என்றும், சித்தம்என்றும், அஹமர்த்தம் என்றும் நான்கு கூறுகளாய் வேதாந்தம் பகுக்கும் நம் அகக் கருவியை சற்றே விரிப்போமா? முதலில் சித்தம். அந்தக்கரணங்களில் ஒன்றான சித்தம், தன்முனைப்பற்ற ஒரு கருவியாகும். நமது பேராற்றல்களில் ஒன்று சித்தம். நினைவுகூர்வதும், ஏற்கனவே உள்ளப் பதிவுகளுடன், புதிய நினைவுகள், நிகழ்வுகளை ஒப்பிடுவதும், புதிய நினைவுகளை, நிகழ்வுகளைப் பதிவு செய்து கொள்வதும் நமக்கு இயல்பாகும். நமக்கு நிகழ்ந்த, நாம் கண்ட, கேட்ட, படித்து அறிந்த, கற்ற விஷயங்கள் யாவும் நம்முள் எங்கேனும் பதிவுகளாய் இருக்கவே வேண்டும். அதனால் தான், ஒரு விஷயம் பற்றி நாம் சிந்திக்கும் போது, அது குறித்த நம் அனுபவங்கள் யாவும், நமக்கு நினைவுக்கு வருகின்றன. இப்படி நம் அனுபவங்களும், நினைவுகளும், ஒருங்கே சேகரிக்கப்பட்டு, வரிசைக் கிரமமாக வைக்கப்பட்டு இருக்கும் நினைவாற்றலே சித்தம். ‘சிந்தன கர்த்ரு சித்தம்’ என்றது தத்வபோதம். பதிவுசெய்து வைத்துக் கொண்டு நினைவுகூறும் இந்த சிந்திக்கும் ஆற்றலை சித்தம் என்று அழைக்கின்றோம்.

அது இந்திரியங்களால் உள்வாங்கப்படும் விஷயங்களைப் பதிவு செய்து கொள்கின்றது; மனதில் எழும்பும் கேள்விகளைப் பதிவு செய்து கொள்கின்றது; புத்தியின் துணை கொண்டு மனம் அறியும் பதில்களையும் பதிவு செய்து கொள்கின்றது. விஷயங்களையும், சலனங்களையும், விளக்கங்களையும், இவை சார்ந்த எண்ணங்களையும், எண்ணங்களின் விளைவுகளையும் என எல்லாவற்றையும் பதிவு செய்து கொள்கின்றது. பதிவு செய்து கொள்வதும், மனமோ, புத்தியோ அந்தப்பதிவுகளை மீட்டெடுத்துக் கொள்ள வசதியான தளமாக விளங்குவதும் மட்டுமே சித்தத்தின் தன்முனைப்பற்ற காரியங்கள். இது தன் செயல்பாட்டில் ஒரு பௌதீகக் கருவியைப் போலவே செயல்பட்டாலும், அறிவியல் ஆய்வின்படி, இது ஸ்தூலமான மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை ஆதாரமாகக் கொண்டிருந்தாலும், பதிவு செய்து கொள்வது, தளமாக விளங்குவது ஆகியப் பண்புகள் வெறும் எண்ணங்களாக, ஸ்தூலமாக இன்றி, நுண்ணிய வடிவில், சூக்ஷமமாகவே விளங்குகின்றன. நினைவு சார்ந்த இந்த எண்ணத்தொகுப்புகளே சித்தம்.

அஹங்காரமோ, மனமோ, புத்தியோ அவ்வாறு தன்முனைப்பற்ற கருவிகளாய் இல்லாது, தானே முனையும் கருவிகளாய் விளங்குவதை, மேலும் விரிவாய் புரிந்து கொள்ள, நமது ஒரு செயல் திறன்களை ஆராய்வோம். நாம் ஏதேனும் ஒரு செயலிலோ, சிந்தனையிலோ ஆழ்ந்திருக்கும் போது, நம் புலன்கள் உள்வாங்கும் விஷயங்களை கவனிக்காமல் தவறவிடுகின்றோம். நம் ‘மனம்’ ஆதாரமாக இருந்து புலன்களின் வழி வரும் உள்ளீடுகளை கவனிக்காவிடில், அவை பதிவாவதை நாம் கவனிப்பதே இல்லை. ஆழ்ந்த சிந்தனை வசப்பட்டிருக்கும் போது, மனம், கேட்கும் சப்தத்தை தவற விடுகின்றது; காணும் காட்சிகளை, வீசும் நறுமணத்தை, உடலில் படும் ஸ்பரிசத்தை என எதையும் பதிவு செய்யத் தவறுகின்றோம். மனதை துக்கமோ, சுகமோ பாதித்திருக்கும் போது, உண்ணும் உணவின் ருசியும் கூடத் தெரிவதில்லை. மனதின் உதவியுடனேயே, நம்மால், புலன்கள் வழி உள்வாங்கப்படும் விஷயங்களை, கிரஹித்து, உணர முடிகின்றது. ஆக, ‘ஞான இந்த்ரியங்களுக்கு ஆதாரமாக இருப்பது’ மனதின் பண்புகளில் ஒன்றாக இருக்கின்றது.

இந்த எண்ணங்கள், புலன்களில் இருந்து விளைவதில்லை என்பதை நாம் அனுபவத்தில் அறிகிறோம். ஆக, புலன்களுக்கு, தானாகவே விஷயங்களை அறிந்து கொள்ளும் திறனோ, உணரும் ஆற்றலோ, விஷயங்களாலான அனுபவமோ இல்லை என அறிகிறோம். விஷயானுபவங்கள், நம்முள் வேறெங்கோ எண்ணங்களை விளைக்கின்றன. அந்த எண்ணங்களே விஷயங்களை உணர, நமக்கு ஹேதுவாக இருக்கின்றன. அந்த எண்ணங்கள் வேறெந்த விஷயத்திலோ, உணர்விலோ ஒன்றி, அதையே பற்றி நிற்கும் போது, இந்த்ரியங்கள் முன்னிற்கும் விஷயங்களை, (இந்த்ரியங்கள் உள்வாங்கியவாறே இருந்தாலும்), நாம் அறிவதில்லை. காதுகளும், அவற்றிற்கு ஆதாரமாக மனமும் ஒருங்கே இணைந்தே சப்தத்தை கிரஹிக்கின்றன. கண்களும், அவற்றிற்கு ஆதாரமாக மனமும் ஒருங்கே இணைந்தே காட்சியை கிரஹிக்கின்றன. தோல், நாக்கு, மூக்கு ஆகிய இந்த்ரியங்களும், இவ்வண்ணமே மனதுடன் ஒருங்கிணைந்து விஷயங்களை கிரஹிக்கின்றன.

நமக்குள், தொடர்ந்து புலன்கள் வழியாக விஷயங்கள் கிரஹிக்கப்பட்டு, அவை சார்ந்த எண்ணங்கள் வளர்ந்தவாறே இருக்கின்றன. நம்முள் வளரும் எண்ணங்கள், இந்த்ரியங்களைக் காரியமாற்றவும் தூண்டுகின்றன. தானே உள்ளிருந்து எழும் எண்ணங்கள், புற விஷயங்களால் உள்ளே எழும் எண்ணங்கள் ஆகியனவற்றின் தொகுப்பே மனமா?

ஆகாயத்தின் ஸத்வகுணமே சப்தத்திற்கும், சப்தத்தை உள்வாங்கும் கருவியான காதுக்கும் ஆதாரமாக விளங்குவதை ஏற்கனவே கண்டோம். உள்வாங்கப்படும் சப்தம், மனதினாலேயே உணரப்படுகின்றது; விளங்கிக் கொள்ளப்படுகின்றது. இதே போல, வாயுவின் ஸத்வ குணமே ஸ்பரிசத்திற்கும், ஸ்பரிசத்தை உள்வாங்கும் கருவியான ‘த்வக்’ எனப்படும் தோலுக்கும் ஆதாரமாக விளங்குகின்றது; நெருப்பின் ஸத்வகுணமே ரூபத்திற்கும், ரூபத்தை உள்வாங்கும் கருவியான கண்ணிற்கும் ஆதாரமாக விளங்குகின்றது; நீரின் ஸத்வகுணமே ரஸத்திற்கும், ரஸத்தை உள்வாங்கும் கருவியான நாக்கிற்கும் ஆதாரமாக விளங்குகின்றது; ‘ப்ருத்வி’யான நிலத்தின் ஸத்வகுணமே கந்தத்திற்கும், கந்தத்தை உள்வாங்கும் கருவியான மூக்கிற்கும் ஆதாரமாக விளங்குகின்றது. உள்வாங்கப்படும் ஸ்பரிசம், ரூபம், ரஸம் மற்றும் கந்தம் ஆகியன மனதினாலேயே உணரப்படுகின்றன; விளங்கிக் கொள்ளப்படுகின்றன. இந்த உணர்வுகள் நம் மனதில் எண்ணங்களை விளைக்கின்றன. அந்த எண்ணங்கள், சித்தத்தின் பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு ஆராயப்பட்டு, இவற்றின் மேல் எழும் விருப்பு வெறுப்புகள் புத்தியின் துணையுடன் சுகமா துக்கமா என முடிவெடுக்கப்பட்டு, அஹமர்த்தம்-மனம் கூட்டால் அனுபவிக்கப்படுகின்றன். இந்த அனுபவங்களும், மேலும் சித்தத்தில் பதிவாகின்றன.

ஐந்து ஞானக் கருவிகள் (ஞானேந்திரியங்கள்) இருக்கின்றனவே. மனம் ஏதோ ஒரு இந்திரிய விஷயத்தில் லயித்திருக்கும் போது மற்ற இந்திரியங்கள் உள்வாங்கும் விஷயங்கள் என்னவாகின்றன? ஏக நேரத்தில் எல்லா இந்திரியங்களால் உள்வாங்கப்படும் விஷயங்களை உணரும் சக்தி உள்ளதே மனது. ஏதோ ஒரு தருணத்தில், ஏதாவது ஒரே விஷயத்தில் மனதின் முழுக்கவனமும் ஒருமுகப்படும்போது மற்ற விஷயங்களை மனம் பொருட்படுத்தாமல் விடுவதும் உண்டு. அப்போதும் ஞானேந்திரியங்கள் விஷயங்களை உள்வாங்கியவாறே தான் இருக்கின்றன. பல நேரங்களில் ஞானேந்திரியங்கள் மனதினால் தூண்டப்பட்டும், விஷயங்களில் பிரவ்ருத்திக்கின்றன. கண்கள் திரைப்படம் போன்ற காட்சிகளில் நிலைப்பதும், தொடர்ந்து புத்தகம் படிப்பதும் போன்ற காரியங்கள், மனதால் தூண்டப்பட்டு இந்திரியங்கள் செயல்படுவதன் உதாரணங்கள்.

உள்வாங்கும் சப்தத்தின் இயல்பு அறியாமலே காது அதை உள்வாங்குகின்றது. ஸ்பரிசத்தின் இயல்பு அறியாமலே தோலும், காட்சியின் இயல்பு அறியாமலே கண்ணும், ரஸத்தின் இயல்பு அறியாமலே நாக்கும், கந்தத்தின் இயல்பு அறியாமலே மூக்கும் விஷயங்களை உள்வாங்குகின்றன. இந்தக் கருவிகள் விஷயங்களை தாங்கும் (பொறுத்துக் கொள்ளும்) அளவீட்டிற்கும் வரையறை இருக்கின்றது. உடலின் ஏதோவொரு அங்கம் தீயின் மீது பட்டதும் நாம் உடனே விலகுகின்றோம். தாங்கவொண்ணா ப்ரகாசத்தைக் காண நேர்ந்தால், நாம் கண்களை அனிச்சையாக மூடிக்கொள்கின்றோம். ஆக நம் இந்திரியங்களாகிய கருவிகளின் தாங்கும் தன்மை என்ற வரையறை அளவீட்டை மீறும் போது உடல் அனிச்சை உணர்வை வெளிப்படுத்துகின்றது. பசி, தாகம், தூக்கம், மைதுனம் போன்று, அனிச்சை உணர்வும் மனிதர்களுக்கும் மற்ற மிருகங்களுக்கும் பொதுவானதே. ஆக அனிச்சை உணர்வு மனதின் வியாபகம் இன்றி, உடலின் பௌதிக விளைவாகின்றது. இந்த அனிச்சை செயல்களைத் தவிர்த்து, மற்ற எல்லா நேரங்களிலும், எல்லா விஷயங்களை உள்வாங்கும் போதும், இந்திரியங்கள் மனதை ஆதாரமாகவே கொண்டு, மனதுடன் இயைந்தே காரியமாற்றுகின்றன. ஆக நம் ஞானேந்திரியங்களான அறிவுக்கருவிகளுக்கு மனமே தூண்டுதலாகவும், உணர்தளமாகவும், ஆதாரமாகவும் விளங்குகின்றது.

ஒருங்கிணைந்து பணிசெய்யும் ஞான இந்த்ரியங்களும் மனமும், ஒருங்கேமனோமய கோசம் என்று அழைக்கப்படுவதாக, தத்வ போதம், ‘மனஸ்ச ஞானேந்த்ரிய பஞ்சகம் மிலித்வா யோ பவதி ஸ மனோமய: கோச:’ என்றது. இந்த்ரியங்கள், கருவிகளாய் இருந்து உள்வாங்கும் விஷயங்களை ஆதாரமாக இருந்து கிரஹிக்கும் கருவி மனம்; அது நம் மற்ற உடல் அங்கங்களைப் போல பௌதீக, ஸ்தூல வடிவுடன் இல்லை; வெறும் எண்ணங்களின் தொகுப்பாகவே இருக்கின்றது. விஷயங்களால் விளையும் எண்ணங்கள் மட்டுமா? நம் கர்ம இந்த்ரியங்களை, ஞான இந்த்ரியங்களை விஷயங்களில் செலுத்துவதும், கர்ம இந்த்ரியங்களை செயல்களில் நடத்துவதும் மனமே. எப்படி?

நாம் செய்யும் செயல்கள் யாவுமே, செயல்களாக பரிணமிக்கும் முன், எண்ணங்களாகவே விளங்குகின்றனவா? இதயம், சிறுநீரகம் போன்ற உப உறுப்புகளின் செயல்பாடுகள் நம் கட்டுப்பாடின்றி, அதாவது எண்ணங்களின் தூண்டுதலே இன்றி நிகழ்வன. இமைப்பது, கொட்டாவி விடுவது, தும்மல் போன்ற வெளிப்பாடுகளும் அவ்வாறே. இவை யாவும் பிராணனால் நிகழ்த்தப்பெறும் செயல்கள். பிராணனில் எண்ணங்களோ, அறிவோ இல்லை என்று மேலேயே கண்டோம். இவை, மனதின் ஆதாரமோ, மனதின் தூண்டுதலோ, மனதின் வியாபகமோ ஏதுமின்றி நிகழும் இயக்கங்களே.

அடுத்து பசி, தாகம், அசதி, காமம், ஆகிய உடலின் வேட்கைகளையும் காணலாம். நம் உடலில் நீரின் அளவு குறைந்ததும், உடல் எழும் தாகம் என்னும் வேட்கையை சார்ந்த எண்ணங்கள் மனதின் அங்கமாகின்றன. நம் எண்ணங்கள் நம்மை நீர் தேடி, நீரின் தரமறிந்து நீரருந்தத் தூண்டுகின்றன. நமக்கு உகந்த நீர் கிடைத்ததும், நாமும் நீரருந்தி தாகம் தணிகிறோம். அன்னத்திலிருந்து, உடலின் இயக்கத்திற்குத் தேவையான சக்தியை, பிராணன், தனக்கும், ஸ்தூல உடலின் பிற பாகங்களுக்கும், ஏற்றுப் பகிர்ந்தளிப்பதைக் கண்டோம். நம் உணவுப் வழக்கங்களுக்கு ஏற்ப, நம் உடல், தனக்கு உணவு கிடைக்கும் காலப்பட்டியலுக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்கின்றது. அதற்கேற்ப, உணவு நேரங்களில், பசியாகிய வேட்கை சார்ந்த எண்ணங்கள் நம் மனதின் அங்கமாகின்றன. நாம் பசியாறும் வரை, பசி குறித்த எண்ணங்கள், தொடர் எண்ணங்கள், அவை தூண்டும் செயல்கள் ஆகியனவை விளைகின்றன. அசதியும், ஓய்வு சார்ந்த எண்ணங்களையே மனதில் விளைக்கின்றது. இவை யாவும் பிராணன், மனதின் துணையின்றி உடலில் விளைக்கும் வேட்கைகள் எனினும், இவ்வேட்கைகளால் எண்ணங்கள் விளைந்து, எண்ணங்கள் சில செயல்களைத் தூண்டி, அந்த செயல்கள் இவ்வேட்கைகளை நிவ்ருத்தி செய்கின்றன.

பசி, தாகம், அசதி ஆகியன பிராணனால் விளையும் இயற்கையான வேட்கைகள். அடுத்து, காமத்தை ஆராய்வோம். மனதில் எழும் இச்சை உடலை தூண்டுவதும், உடலின் வேட்கை மனதில் காமம் சார்ந்த எண்ணங்களை விளைப்பதும், அந்த எண்ணங்கள் உடலைத் தூண்டுவதும் ஆக, எது காரணம், எது காரியம் என்று அறியவொண்ணா வளையமாக, உடலும், மனதும், ஒன்றிற்கொன்று துணையாகவும், தூண்டுதலாகவும் இருக்கின்றன. நனவிலும், கனவிலும், காம இச்சை நிறைவு பெறுவதற்கு, மனமே ஆதாரமாக இருப்பதை, பின்னர் விளக்கலாம். இப்போதைக்கு, காம வேட்கைக்கும், காம நிவ்ருத்திக்கும், மனம் ஆதாரமாக இருக்கின்றது என்பது விளங்குகின்றது. காம வேட்கை, பிராணனின் செயல். வேட்கை வ்ருத்தியாவது மனதின் ஆதாரத்தால். வேட்கை நிவ்ருத்தியாவது, மனது லயித்திருக்கும் நிலையில், கர்ம இந்த்ரியமான கருவாயின் செயலால். ஆக, பசியை பிராணன் விளைக்கும் போது, பசியாறலுக்கு, எண்ணங்கள், மனது ஆதாரமாகின்றது. தாகம், பிராணனால் விளைகின்றது; தாகம் தணிதலுக்கு, மனதும், எண்ண வ்ருத்திகளும் காரணமாகின்றன. காமம், பிராணனின் விளைவாகவோ, மனதின் விளைவாகவோ நிகழ்ந்தாலும், காம வ்ருத்திக்கும், நிவ்ருத்திக்கும் எண்ணங்கள் ஆதாரமாகின்றன. ஆகபிராணனால் எழும் வேட்கைகளின் நிவ்ருத்திக்கு ஆதாரமாக இருப்பது, மனதின் பண்புகளில் ஒன்றாக இருக்கின்றது.

கர்மேந்த்ரியங்களின் செயல்கள் ஒவ்வொன்றுக்குமே மனம் ஆதாரமாக இருப்பதையும் ஆராயலாம். முதலில், வாக்கு அல்லது பேச்சு. வாக்கு என்பது, நம் எண்ணங்களின் சப்த வெளிப்பாடே. மனதில் எழும்பும் எண்ண அலைகளே சப்தமாக வெளிப்படும் போது பேச்சாக, வாக்காக அறியப்படுகின்றதா? விழித்திருக்கும் ஒவ்வொரு கணமும், ஏதாவதொரு சப்தத்தின் ஆதிக்கத்திலேயே இருக்கும் நாம், ‘சப்தம்’ என்றால் என்ன என்று ஆராய்ந்ததே இல்லை. நாம் காதின் வழி உள்வாங்கி பகுத்து அறிவது மட்டுமே சப்தமா? இல்லை, சப்தத்திற்கு, நாம் நம் புலன்களால் உணர முடியாத சூக்ஷம நிலையும் உள்ளதா?

முதலில், சாஸ்திரங்கள் நம்முள் எழும் ‘சப்தம்’ பேச்சாகவோ, வாக்காகவோ வெளிப்படும் முன் அதன் நிலைகள் குறித்து கூறுவதைக் காண்போம்.

சப்தமானது, வியக்தமாகாத அதாவது இன்னும் வெளிப்படாத, இந்திரியங்களுக்குப் புலப்படாத விதை வடிவில் நம்முள் உறைகின்றது. பிறகு அது மெல்லிய அதிர்வாக மூலாதாரத்தில், மிகவும் நுண்ணியதாக உருவெடுக்கின்றது. சற்றே திடப்படும் போது அது புத்தியால் உணரும்படியான, உருவங்களும் நிறங்களும் கொண்ட அதி சூக்ஷமமான எண்ணமாக வடிவெடுக்கின்றது. மேலும் திடப்படும் போது அது மனதால் உணரும்படியான சூக்ஷம உருவம் கொண்ட காரியமாக, திடமான எண்ணமாக வடிவெடுக்கின்றது. மேலும் திடப்படும் போது, அதே சப்தம், ஒரு உணர்வின் வெளிப்பாடாக அர்த்தமற்ற சப்தமாகவோ அல்லது எழுத்து வடிவில், இலக்கண விதிகளுக்குக் கட்டுப்பட்டு பேச்சாகவோ வெளிப்படுகின்றது.

நம்முள் இருந்து வெளிப்படும் ஒவ்வொரு சப்தத்தையும் இவ்வாறு படிப்படியாக நாம் உணருகின்றோமா? இல்லையெனில் ஏன்? நம் பேச்சு பொதுவாக அர்த்தமுள்ளதாக, எழுத்துக்களாலும் பிற இலக்கண விதிகளாலும் வரைமுறைக்கு உட்பட்டதாகவே விளங்குகின்றது. அங்ஙனம் பகுத்து உணரத்தக்கதாய் வெளிப்படும் சப்தங்களை ‘வர்ணம்’ என்று அழைக்கின்றோம். அர்த்தமற்ற சிரிப்பு, அழுகை, தேம்பல், விசும்பல், வியப்புச் சொற்கள், அச்சக் குறிப்புகள், பதட்டத்தின் வெளிப்பாடுகள் ஆகிய சப்தங்களை ‘த்வனி’ என்று அழைக்கின்றோம்.

ஆக, எழும் சப்தங்களில், எழுத்து மற்றும் இலக்கண விதிகளால் கட்டுப்படுத்தப் படும் முன்னரே, வெளிப்படும் சப்தங்கள் ‘த்வனி’ ஆகின்றன. மனதும் புத்தியும் அந்த சப்தங்களை எழுத்து மற்றும் இலக்கண விதிகளால் நெறிப்படுத்தும் போது அவை ‘வர்ணம்’ அல்லது வாக்கு ஆகின்றன.

‘த்வனி’ மற்றும் ‘வர்ணம்’ ஆகிய சப்தங்கள், நம் பிரயத்தனத்தால், முயற்சியால் எழுப்பப்படுவன. அவற்றை ஒருங்கே ‘ஆஹத சப்தங்கள்’ என்றோ ‘வைகரி’ என்றோ அழைக்கின்றோம். ‘ஆஹத சப்தங்கள்’ முயற்சியால் விளைவன. ‘அனாஹத சப்தங்கள்’ தன் முயற்சியின்றி விளைவனவா?

நம்முள், நம் முயற்சியின்றியும் சப்தம் விளைகின்றதா? முதலில் சப்தத்தின் இயல்பைப் பகுப்போம். சப்தம், நாம் உணரும் வடிவில், பருவாக, ஸ்தூலமாக விளங்குவதை அறிவோம். நாம் காதுகளால் கேட்டு உணர இயலாத வடிவில் சூக்ஷமமாகவும் சப்தம் விளங்குகின்றது. மனதில் விளையும் எண்ணங்களும், அந்த எண்ணங்களுக்கு ஆதாரமாக புத்தி உணரும் அதிர்வுகளும், அந்த அதிர்வுக்கு ஆதாரமாக விளங்கும் அவ்யக்தமான விதைகளும் கூட சப்தங்களே.

இவற்றுள், வர்ணமும் த்வனியும் காது என்ற புலனால் உள்வாங்கப்படுவது போல, எண்ணங்கள் மனம் என்ற புலனாலும், எண்ணங்களுக்கு ஆதாரமான அதிர்வுகள் புத்தி என்ற புலனாலும் உள்வாங்கி இயல்பு அறியப்படுவதைப் பின்னர் காணலாம்.

நாம் கேட்கும் எல்லா சப்தங்களும், ஆராய்ந்து பார்க்கின், காற்றில் அதிர்வுகளாகவே உருவாகி, அதிர்வுகளாகவே பயணித்து, அதிர்வுகளாகவே நம் காதுகளால் உள்வாங்கப்படுகின்றன. உலோகம் போன்ற திடப்பொருள்களில் உருவாகும் அதிர்வுகளும், சுற்றியிருக்கும் காற்றை அதிர வைத்து, சப்தமாக உருவாகின்றன. வெளியில் காற்றின் அதிர்வுகளாய் சப்தம் உருவாவது போலவே, நம் ‘வாக்’ இந்திரியத்திலும், காற்று அதிர்ந்து சப்தமாக, பேச்சாக வெளிப்படுகின்றது. அது ஸ்தூல சப்தம். சுவாசத்தால் உள்ளும் புறமும் செல்லும் காற்றை நம் ‘வாக்’ இந்திரியம் அதிர்விப்பது போலவே, (நம் மூலாதாரத்தில்) பிராணன் அதிர்வது, வெளியில் கேட்காத இனிய முணுமுணுப்பாக உணரப்படுகின்றது. அது சூக்ஷம சப்தம்.

மனிதக்குரலில், நம்மால் கேட்கத் தக்கதாயுள்ள சப்தம், பேச்சாகவோ வேறு சப்தமாகவோ வெளிப்படும் முன்னர், ஆழ்நிலையில் மட்டுமே உணரும் வண்ணம் உருவாகின்றது; அது ‘பரா’ என்று அழைக்கப்படுகின்றது. இது நம் காதுகளாலோ, மனதாலோ, புத்தியாலோ உணர இயலாத வண்ணம், மிகவும் நுண்ணியதாய், அவ்யக்தமாய் – அதாவது, விதையைப் போல வளர்ந்து வெளிப்படாமல் இருக்கின்றது. இதை உணர்வு நிலை என்று குறிக்கலாம். இது நம் மூலாதாரத்தில் ஒரு உணர்வு விதை வடிவில் இருந்து எண்ணமாக உருவாகும் க்ஷணத்திற்கு முந்திய நிலை.

இந்த உணர்வு, மேலும் உருப்பெற்று, நம் புத்தியால் மட்டுமே உணரும் வண்ணம் பரம சூக்ஷம நிலைக்கு வளர்கின்றது; அது ‘பச்யந்தி’ என்று அழைக்கப்படுகின்றது. அந்த உணர்வின் நிறம், உருவம் ஆகியனவற்றை புத்தியால் ‘காண’ இயலும் என்பதால், பார்க்கப் படும் அல்லது பச்யந்தி சப்தம் என்று பெயர்.

அந்த உணர்வு, மேலும் திடப்படும் போது, அது நம் மனதாலும் உணரும் வண்ணம் சூக்ஷம உருவெடுக்கின்றது; அது ‘மத்யமா’ என்று அழைக்கப்படுகின்றது. நாம், நம் கனவில் கேட்கும் சப்தங்கள் இந்த வகையைச் சார்ந்தவையே.

ஆக சப்தம் ‘பரா’ என்னும் விதை வடிவில் இருந்து, அதிர்ந்து, புத்தியால் நிறம் மற்றும் உருவம் புரியும் வண்ணம் ‘பச்யந்தி’யாக உணரப்பட்டு, மனதால் ‘மத்யமா’ என்ற எண்ணமாக வடிவெடுத்து, செவியால் உள்வாங்கத்தக்க உணர்வுக் குறிப்பாக ‘த்வனி’யாகவோ அல்லது எழுத்து மற்றும் இலக்கண விதிகளுக்குக் கட்டுப்படும் ‘வர்ணம்’ ஆகவோ வெளிப்படுகின்றது. இவை சப்தத்தின் ஐந்து நிலைகள். இவற்றில், முற்றிலும் முதிர்ந்து உணரத்தக்கதாக வெளிப்படுவதை ‘வாக்கு’ அல்லது ‘பேச்சு’ என்று அழைக்கின்றோம். ஆக, வாக்குக்கு ஆதாரமாக விளங்குவது, மனதின் பண்புகளில் ஒன்றாகின்றது. வாக்கு மட்டுமல்ல, எல்லாச் செயல்களுமே, எண்ணங்களாய் விளைந்து, இந்த்ரியங்கள் வழி பிரவர்த்தித்த (செயல்களாய் வெளிப்பட்ட), எண்ணங்களால் தூண்டப்பெற்ற இந்த்ரியங்களின் காரியங்களே. கைகளாலும், கால்களாலும் நாம் ஆற்றும் செயல்கள் யாவுமே மனதில் எண்ணமாக விளைந்து, செயல்களாய் பரிணமிப்பது நமக்கு வெளிப்படையாகத் தெரியும் உண்மையே. காமம் கடக்க இன்பம் துய்ப்பதும் மனதை ஆதாரமாகக் கொண்ட செயலே எனப் பர்ர்த்தோம். உடலின் கழிவுகள் சேர்ந்ததும், மலமாகவோ, ஜலமாகவோ கழிப்பது என்னும் செயலுக்கும், பிராணன், உந்துதல் தரும் ஆதாரமாக இருக்கின்றது; மனதில் விளையும் எண்ணங்கள் துணை புரிகின்றன. ஆக,கர்ம இந்த்ரியங்கள் ஆற்றும் செயல்களுக்கு ஆதாரமாக இருப்பது, மனதின் பண்புகளில் ஒன்றாகின்றது.

ஆக ஞான இந்த்ரியங்கள் உள்வாங்கும் விஷயங்களை ஆதாரமாக இருந்து கிரஹித்து, பகுத்து, பதிவு செய்து கொள்ள துணை நிற்பது; ஞான இந்த்ரியங்களைத் தூண்டி, ஒரு விஷயத்தில் நிலைபெற வைப்பது; பிராணன் விளைக்கும் வேட்கைகளின் நிவ்ருத்தி காரியங்களுக்கு ஆதாரமாக இருப்பது; கர்ம இந்த்ரியங்கள் ஆற்றும் காரியங்களுக்கு ஆதாரமாக இருப்பது ஆகிய எண்ணங்களின் தொகுப்பு மட்டுமே மனமா?

‘ஸங்கல்ப விகல்பாத்மகம் மன:’ என்றது தத்வபோதம். நம் இந்த்ரியங்கள், விஷயங்களை, அவை இன்னவைதான் என்ற தீர்மானமான நிர்ணயம் இல்லாமலே உள்வாங்குகின்றன. அவை நமக்கு ப்ரியமானவையா, ப்ரியமற்றவையா என்ற பேதமும் இல்லாமலே உள்வாங்குகின்றன. அவை இன்னதென்று அறியும் திறன் புத்தி என்று அழைக்கப்படுகின்றது என்பதை பின்னர் விவரிப்போம். அவை இன்னதா, வேறு வகையானதா என ஆராயும் எண்ணங்கள் மனதின் அங்கமே. விகல்பங்களை, வேற்றுமைகளை குறித்து வினா எழுப்புவதும், புத்தி அறுதியிட்டுக் கூறும் முடிவுகளின் மேல், மேலும் வினா எழுப்புவதும் மனதின் இயல்புகளாகின்றன. மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பே என்றாலும், இனி எளிமை கருதி, ‘மனம்’ என்னும் குறியீட்டுச்சொல்லையே உபயோகிப்போம்.

இதுவரை நாம் கேள்விப்பட்டேயிராத ஒரு விஷயம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். நம் சித்தத்தில் அது குறித்த பதிவுகளே இருக்காது. அந்த விஷயம் நமக்குப் பிரியமானதா, பிரியமற்றதா என்றோ, அதை நாம் அனுபவிப்பது தர்மமா, தர்மமில்லையா என்றோ புத்திக்குத் தெரியாது. நம் மனமோ, அந்த விஷயங்கள் குறித்த எண்ணங்களே இன்றி இருக்கின்றது. இது மனதின் நிர்விகல்பமான நிலை. அந்த விஷயத்தைக் குறித்து கேட்டோ, படித்தோ அறிந்ததும், மனம் அது குறித்த கருத்துகளை உருவாக்கிக் கொள்கின்றது. இவை சங்கல்பங்கள் (முடிவான கருத்துகள்) என்று அழைக்கப்படுகின்றன. கருத்துக்கள், அந்த விஷயத்தின் (நிறம், உருவம், எடை போன்ற) தன்மைகள் குறித்தும் இருக்கலாம்; அந்த விஷயத்தின் (நமக்குப் பிரியமானதா, இல்லையா என) விளைவுகள் குறித்தும் இருக்கலாம்; அந்த விஷயத்தின் (நியாய, அநியாயம் போன்ற) அனுபவ தர்மங்கள் குறித்தும் இருக்கலாம். அந்த விஷயம், சித்தத்தில் ஏற்கனவே பதிவாகியிருக்கும் வேறெதாவது விஷயத்துடன், இயல்புகள் பொருந்தி இருக்கின்றதா என்பதை புத்தி ஆராய, மனம் மேலும் எண்ணங்களை வளர்க்கின்றது. இவை அந்த விஷயம் குறித்த கேள்வி ஞானமே.

அடுத்து, அந்த விஷயத்தை நாம் கண்டு, உபயோகித்து அனுபவிப்பதாக வைத்துக் கொள்வோம். இப்போது, மனம் அந்த விஷயத்தின் இயல்புகள் குறித்து எண்ணங்களை விளைத்தவாறே இருக்கின்றது. புத்தி அந்த எண்ணங்களில் இருந்து சில தீர்மானங்களைச் செய்து, சித்தத்தில் பதிவு செய்கின்றது. இவ்வாறு, கிரஹிக்கப்பட்ட இயல்புகள், முன்னரே பதிவான சங்கல்பங்களுக்கு மாறானதாக இருந்தால், அந்த விகல்பங்கள் (மாறுபட்ட சங்கல்பங்கள்) புதிய சங்கல்பங்களாகின்றன. சித்தம் இவற்றையும் பதிந்து கொள்கின்றது. அதே நேரத்தில், மனம், அந்த விஷயத்தின் அனுபவம், பிரியமானதா, பிரியமற்றதா என்றும் உணர்கின்றது. மனம் இவ்வாறு பிரியமாகவோ, பிரியமற்றோ அறியும் உணர்வுகளும் (எண்ணங்களும்) புத்தியால் தீர்மானிக்கப்பட்டு, சித்தத்தில் பதிவு செய்யப்படுகின்றன. மனம், (அனுபவத்திற்கு முன்னமே இருந்த) சித்தத்தின் பதிவுகளின் ஆதாரத்தில், இந்த விஷய அனுபவம், தர்மமா, அதர்மமா என்பது குறித்தும் எண்ணங்களை எழுப்புகின்றது. அவையும் புத்தியால் தீர்மானிக்கப்பட்டு, சித்தத்தில் பதிவு செய்து கொள்ளப்படுகின்றன. இந்த புதிய அனுபவங்கள், ஏற்கனவே மனம் செய்த சங்கல்பங்களுக்கு மாறாக இருப்பின், அவையும் புதுப்பிக்கப்படுகின்றன.

எந்த ஒரு விஷயமும், புலன்களுக்கு, முதன்முறையாகப் பரிச்சயம் ஆகும் வரை, மனம் அது குறித்த எண்ணங்கள் இன்றி, சித்தம் அது குறித்த பதிவுகள் இன்றி நிர்விகல்பமாக இருக்கின்றன. புலன்களால், தானாக இன்னதென்று அறிய முடியாத விஷயத்தை, மனம் பல்வேறு கோணங்களிலும் கேள்விகளை எழுப்பி, சித்தத்தில் உள்ளப் பதிவுகளின் துணை கொண்டு, புத்தியின் முடிவெடுக்கும் திறனால் தீர்மானித்து, அறிகின்றது; உணர்கின்றது. இந்த அறிவு, உணர்வு சார்ந்த தீர்மானங்களே சங்கல்பங்கள். மென்மேலும் விளையும் அனுபவங்களால் இந்த சங்கல்பங்கள் புதுப்பிக்கப் படுகின்றன. புதிய அறிவால், மனம் ஏற்கனவே இருந்த அறிவை புதுப்பித்தவாறே இருக்கின்றது; புதிய உணர்வால், மனம் ஏற்கனவே விளைந்து பதிந்த உனர்வுகளை தெளிவுபடுத்திக் கொண்டே இருக்கின்றது. இது ஒரு தொடர் நிகழ்வே. எக்காலத்தும் நின்று போவதில்லை. சங்கல்பம் தான் மனம்; மனமே சங்கல்பம் என்ற்துமஹோபநிஷத்து. சங்கல்பம் மனதிலேயே உள்ளது; எங்கு சங்கல்பம் உள்ளதோ, அங்கு மனம் உளதென்று அறியப்படுகின்றது. ஒரு பொழுதும், எக்காலத்தும், சங்கல்பமும் மனமும் பிரிவதில்லை. ‘ஸங்கல்பனம் மனோ வித்தி ஸங்கல்ப ஸ்தத்ர வித்யதே | யத்ர ஸங்கல்பனம் தத்ர மனோ அஸ்தீத்யவ கம்யதாம் | ஸங்கல்ப மனஸீ பின்னே ந கதாசன கேநசித் |’ என்பது மஹோபநிஷத்து மூலம்.

ஒரு உதாரணத்தைக் காண்போம். மன்னர்கள், ‘வாள்’ கொண்டு போரிட்டார்கள் என்று அறியும் முன் நம் மனம் ‘வாள்’ என்ற வஸ்து குறித்து நிர்விகல்பமாக இருந்தது. வாள் குறித்து கற்றோ, கேட்டோ அறிந்தது மனதின் முதல் சங்கல்பத்திற்கு ஆதாரமாகின்றது. வாளை நேரில் காண்பது, கண்டறிதல் கேட்டறிதலை விட துல்லியமானதால், முதல் சங்கல்பம் புதுப்பிக்கப்படுவதற்கு ஆதாரமாகின்றது. வாளைக் கையாள்வது, கையாளுதல் கண்டோ கேட்டோ அறிதலின் துல்லியமானதால், அந்தச் சங்கல்பமும் புதுப்பிக்கப்படுவதற்கு ஆதாரமாகின்றது. வாளொன்றை நம்முடனேயே வைத்திருந்து, நாமே போட்டிகளிலோ, யுத்தங்களிலோ கலந்து கொண்டு, வெற்றி தோல்விகளை அனுபவித்தல், தாக்குதலுக்காகவோ, தற்காப்புக்காகவோ வாளைச் சார்ந்திருத்தல் ஆகியன விளைக்கும் உணர்வுகளையும் ஆராய்வோம். வெற்றியால் சுகமும், தோல்வியால் துக்கமும், தாக்குதலால் வீரமும், தற்காப்பால் பாதுகாப்புணர்வும் போன்ற உணர்வுகள், மேலும் புதிய சங்கல்பங்களை உருவாக்குகின்றன. அவை அறிவுமயமாக மட்டுமன்றி, உணர்வுமயமாகவும் இருக்கின்றன.

ஆக, ஒரு விஷயத்தையோ, அனுபவத்தையோ, அது எத்தன்மையானது என்று எழும்பும் (எண்ணமயமான) வினாக்களும், அவற்றுக்கான விடைகளுமாக மனதுக்கு ஒரு இருப்பு வருகின்றது. இவை அறிவுமயமான அல்லது உணர்வுமயமான எண்ணங்கள். உணர்வுகளைப் பற்றிப் பின்னர் விரிவாக ஆராயலாம். இப்போதைக்கு, எண்ணங்களுக்கு, அறிவு அல்லது ஞானமும், உணர்வுகளுமே ஆதாரம் என்பதை அறிவோம். ஆக மனது, ஞான இந்திரியங்களுக்கு ஆதாரமாகவும், பிராணனின் சில செயல்களின் விளைவுகளுக்கு ஆதாரமாகவும், கர்ம இந்த்ரியங்களின் செயல்களுக்கு ஆதாரமாகவும் தூண்டுதலாகவும் இருக்கின்றது; ஒவ்வொரு விஷயத்தின், அனுபவத்தின் தன்மைகளைக் குறித்து ‘இத்தன்மையதா, அத்தன்மையதா’ என வினாவெழுப்பி, விவாதித்தவாறே இருப்பதும் மனதின் செயல்பாடுகளில் ஒன்றாகின்றது.

இவ்வாறு தொடர்ந்து எழும் எண்ணங்களெல்லாம், மனதின் மற்றோரு பரிமாணமான ‘அஹமர்த்தம்’ என்ற எண்ணத் தொகுப்பை ஆதாரமாகக் கொண்டே விளைகின்றன. நான் இன்னார் என்ற உணர்வுஅஹந்தை அல்லது அகந்தைஎனப்படுகின்றது. இது என்னுடையது என்ற உணர்வு மமதைஎனப்படுகின்றது. இந்த இரண்டு கற்பனைகளும் விளைவது மனதிலேயே. இந்த இரண்டு எண்ணங்களே, மற்ற எல்லா எண்ணங்களுக்கும் ஆதாரமாக இருக்கின்றன. ‘அஹம் கர்த்தா அஹங்கார:’ என்றது தத்வ போதம். நான் காரியமாற்றுபவனாக இருக்கின்றேன் என்னும் எண்ணமே அஹமர்த்தம் என்பது பொருள்.

அந்தக்கரணங்களில், ‘நான்’ என்ற ஸ்புரணம்(அகந்தை), அது சார்ந்தெழும் ‘எனது’ உள்ளிட்ட விருத்திகளைத் தொகுத்து ‘அஹம் ப்ரத்யாய’ அல்லது ‘அஹமர்த்த:’ (‘I’ factor or the EGO Faculty) என்று அழைக்கலாம். வேதாந்த நூல்களில் பரவலாக அஹங்காரம் என்ற வார்த்தையையே உபயோகிப்பதைக் காணலாம்.(‘அஹங்காரம்’ என்ற பதம் ‘அஹமர்த்தம்’ மற்றும் சித்-ஆபாஸம் ஆகியனவற்றின் தொகுப்பையே குறிப்பது பின்னர் விளங்கும்.) நாம் ‘அஹமர்த்தம்’ என்னும் வார்த்தையையே உபயோகிப்போம்.

கூர்ந்து கவனித்தால், நமக்கு, எந்நேரமும், நாம் இன்னார் என்ற எண்ணம் இருந்தவாறே இருப்பதை அறியலாம். நாம் மேற்கொள்ளும் ஆய்வில், மேலும் பல தத்துவங்களை அறிந்த பின் இது எளிதாய் விளங்கும். நான் கண்ணன், நான் குமரன் என்று ஒரு பெயருடன் மட்டும் நம்மை இணைத்துக் கொள்வதில்லை; நான் அழகன், நான் சிறந்தவன், நான் மேலானவன், நான் அறிவாளி போன்ற பல பண்புகளையும் சேர்த்து, நமக்கு நாமே ஒரு நாம ரூபத் தொகுப்பை உருவகப்படுத்திக் கொள்கின்றோம். அந்த நாம, ரூப, குண, திறன் தொகுப்பே நாம் என்று நம்புகின்றோம். இவ்வாறு, நான் இன்னார் (ஏதோவொரு நாம ரூபத் தொகுப்பு), நான் இன்ன மாதிரியானவன் (ஏதோவொரு குண திறன் தொகுப்பு) என்ற எண்ணங்கள், நாம் விழித்தவுடன், நம்மோடு எழுகின்றது. நாம் விழித்திருக்கும் போதெல்லாம் அந்த எண்ணங்களை ஆதாரமாகக் கொண்டே மற்ற எண்ணங்கள் உருவாகின்றன.

நமக்கு நாமே ஒரு உருவகம் தந்து கொள்வது மட்டுமின்றி, நாம் நம்மைச் சுற்றி உள்ள பலவற்றுடன் ஒரு தொடர்பை, பந்தத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டே, எண்ணங்களை வளர்க்கின்றோம். நம் நாடு, நம் மொழி, நம் இனம், நம் ஊர், நம் வீடு, நம் குடும்பம் என்றும், என் மனைவி, என் குழந்தை, என் தொழில், என் பெற்றோர் என்றும் நம்மை ஆதாரமாகக் கொண்டே எல்லாவற்றையும் அணுகுகின்றோம். நம் வீடு என்பது குறியீடு தானே என்னும் கேள்வி எழுகின்றதா? மேலும் ஆய்வில் ‘நான்’ என்றும், ‘எனது’ என்றும் நாம் குறிப்பிடுவனவற்றின் உண்மை இயல்பு விளங்கும். ‘நான் இன்னார்’ என்ற எண்ணமும், ‘இது என்னுடையது’ என்ற எண்ணமும், நம்மில் எந்த நேரமும் விளங்குகின்றது என்பதை ஏற்று மேற்செல்வோம்.

ஆராய்ந்தால், ‘நான் இன்னார்’ என்ற எண்ணமான அகந்தையே, ‘இது என்னுடையது’ என்ற எண்ணமான மமதைக்கு மூலமாக விளங்குகின்றது. அதுவே ‘இதை நான் செய்கின்றேன்’ என்ற எண்ணத்திற்கும் மூலமாகின்றது. ‘நான்’ என நமக்கு ஒரு (நாம, ரூப, குண, திறன் சேர்ந்த) இருப்பு இருப்பதான கற்பனையே, சுற்றிலும் உள்ளனவற்றுடன் நம்மைத் தொடர்புபடுத்தி, ‘இது என்னுடையது’ என்ற கற்பனையை விளைக்கின்றது. அந்தக் கற்பனையே, நம்மைச் சுற்றிலும் நிகழும் செயல்களில் நம்மை இணைத்துக் கொண்டு, ‘நான் இந்தச் செயல் புரிகின்றேன்’ என்ற கற்பனையை விளைக்கின்றது. அந்தக் கற்பனையின் வ்ருத்தியே, இந்தச் செயலின் விளைவால், ‘நான் சுகமடைகின்றேன்’ அல்லது ‘நான் துக்கப்படுகின்றேன்’ என்ற கற்பனைகளை விளைக்கின்றது. இவை யாவும் வெறும் எண்ணங்களே. நாம் ‘எனக்கு ஒரு இருப்பு உண்டு’ என்று, நம் மனதோடு நம்மைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளும் போது, நான் இந்தச் செயலை செய்கின்றேன் என்று பாவித்துக் கொள்கின்றோம். அதனால், ‘ நான் இன்பத்தை (அல்லது துன்பத்தை) அனுபவிக்கின்றேன்’ என்றும் பாவனை செய்து கொள்கின்றோம்.

‘நான்’ இல்லையேல், ‘எனது’ இல்லை. நான் (இன்னாராக, இக்குணங்களுடன், இத்திறன்களுடன்) இருக்கின்றேன் என்ற கற்பனை முதலில் விளைகின்றது. அது, நமக்கு புறத்தில் உள்ள ஒரு பொருளைக் கண்டவுடன் (அல்லது பொருளைப் பற்றி நினைத்தவுடன்), அந்தப் பொருளில் பரவி வியாபிக்கின்றது. அந்த வியாபகத்தின் பிரதிபலிப்பே, விளைவே, ‘இது என்னுடையது / இது என்னுடையதல்ல’ என்னும் கற்பனை.

நம் இந்த்ரியங்கள் மீதும், நம் உடல் மீதும், ‘இதுவே நான்’ அல்லது ‘இவை என்னுடையவை’ என்ற அபிமானமாக விளையும் மூல எண்ணமே அஹமர்த்தம். இதன் ஆதாரத்தில் விளையும் அபிமானங்களே, ‘நான் (இவற்றால்) செயல் புரிபவன்’, ‘நான் (இவற்றால்) அனுபவிப்பவன்’ ஆகிய எண்ணங்கள். ‘நான் கர்த்தா (காரியமாற்றுபவன்)’, ‘நான் போக்தா (அனுபவிப்பவன்)’ என்று பொருள்பட, ‘கர்த்தா போக்தாபிமான்யயம்’ என்றது விவேக சூடாமணி.

இந்த அஹமர்த்தமே, நான் விழித்திருப்பவன், நான் கனவு காண்பவன் என்று கருதிக் கொள்கின்றது. ஆழ்ந்து உறங்கும் போது, அஹமர்த்தம் ஓய்ந்து, செயலிழந்து விடுகிறது. விழித்தவுடன், நான் இதுவரை உறங்கிக் கொண்டு இருந்தேன் என கருதிக் கொள்வதும் இந்த அஹமர்த்தமே. ஒரே அஹமர்த்தத்திற்கு, மூன்று நிலைகளிலும் ஒரே தன்மையுடன் ஆன இருப்பு இருக்கின்றதா? அவ்வாறு இல்லை.

பஞ்சபூதங்களுக்கு, மூன்றுவிதமான குணங்கள் இருப்பதாக முன்னர் பார்த்தோம். ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களே அவை. (இவை குறித்துப் பின்னர் இன்னும் விரிவாய்ப் பார்க்கலாம்.) சுத்த நிலையில் உள்ள பஞ்ச பூதங்களால், தன்மாத்திரைகளால், ஆனதே அஹமர்த்தம் என்பதையும் அறிவோம். நாம் விழிப்பு நிலையில் இருக்கும்போது, அஹமர்த்தத்தில் ரஜோகுணம் மேலோங்கி இருக்கிறது. நாம் கனவு நிலையில் இருக்கும்போது, அஹமர்த்தத்தில் ஸத்வ குணம் மேலோங்கி இருக்கிறது. நாம் ஆழ்ந்த உறக்கத்தில், ஸுஷுப்தியில் இருக்கும்போது, அஹமர்த்தத்தில் தமோகுணம் மேலோங்கி இருக்கிறது. இதையே, விவேக சூடாமணி, ‘ஸத்வாதி – குண – யோகேன சாவஸ்தா – த்ரய – மச்னுதே ||’ என உரைக்கிறது.

அஹமர்த்தத்தின் இரு இயல்புகள் கர்த்ருத்வமும், போக்யமும். இது நான், இவை என்னுடையவை, இதை நான் செய்கிறேன் எனக் கருதும் இயல்பு கர்த்ருத்வம். அதாவது இந்த உடலுக்கு, இந்த்ரியங்களுக்கு, செயல்களுக்கு, நான் சொந்தக்காரன் என்ற எண்ணம். செயல்களுக்கு நான் அதிகாரி என்ற ஆதாரத்தில், செயல்களால் விளையும் சுக துக்கங்களுக்கு நான் உரிமையாளன் என்றும் கருதுகிறது. சுகங்களையும், துக்கங்களையும் தானே அனுபவிப்பதாகக் கருதுகிறது. இது போக்யம். ஆக, நம் அஹமர்த்தத்தின் விளைவாகவே, நாம் சுக துக்கங்களை அனுபவிப்பதாகக் கருதுகிறோம்.

விஷயங்கள் நமக்கு அனுகூலமாக, பிரியமானதாக இருப்பின், நாம் சுகம் அனுபவிப்பதாகக் கருதுகிறோம். விஷயங்கள் நமக்கு பிரதிகூலமாக, பிரியமற்றதாக இருப்பின், நாம் துக்கம் அனுபவிப்பதாகக் கருதுகிறோம். அஹமர்த்தத்தின் இயல்பாலேயே நாம் சுக துக்கங்களை அனுபவிப்பதாக உணர்கிறோம். இதை விவேக சூடாமணியும், ‘விஷயாணா – மானுகூல்யே ஸுகீ து:க்கீ விபர்யயே | ஸுகம் து:க்கஞ்ச தத்தர்ம:’ என விளக்குகிறது. சுக துக்கங்களுடன் நம்மை தொடர்பு படுத்திக் கொள்வது ‘பந்தம்’ ஆகும். அவ்வகையான பந்தங்களில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்வது ‘மோக்ஷம்’ ஆகும்.

அஹந்தையும், மமதையும் நீங்குதல் மோக்ஷம் என்னும் பொருள்பட,

‘யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்

குயர்ந்த வுலகம் புகும்’

என்றார் திருவள்ளுவ நாயனார்.

தான் இருப்பதாக, தனக்கு ஒரு இருப்பை கற்பனை செய்து கொண்டு, தனக்கு நாம ரூப குண திறன்களை வரையறுத்துக் கொள்வது; தன்னைச் சுற்றி உள்ள எல்லாவற்றுக்கும், நாம பேதங்கள், ரூப பேதங்கள், குண பேதங்கள், திறன் பேதங்களை உரித்தாக்கி பகுப்பது; காலம், செயல், சம்பந்தம் ஆகியனவற்றை கற்பிப்பது என்னும் யாவும் மனதின் செயல்களே. மனம் அழியும் போது, மற்ற எல்லாம் அழிகின்றன. மனம் எழும்போது, மற்ற எல்லாம் எழுகின்றன என்றார் ஆதிசங்கரர். ‘தஸ்மின்விநஷ்டே ஸகலம் விநஷ்டம் விஜ்ரும்பிதே அஸ்மின் ஸகலம் விஜ்ரும்பிதே’ என்பது விவேக சூடாமணி மூலம். இம்மாதிரியான மனதின் ப்ரவ்ருத்திகளின் தொகுப்பே மனோமய கோசம் ஆகும்.

கண், காது, சருமம், நாக்கு, மூக்கு ஆகிய ஞான இந்த்ரியங்கள் ஐந்தும், அவற்றில் வியாபித்து இயங்கும், இயக்கும், மனதும், மனோமய கோசம் எனப்படுகின்றது. இது நான், இது என்னுடையது, என்ற எண்ணம் வருவதாலேயே, விஷயங்களுக்கு பெயர், உருவம், குணங்கள், திறன்கள் ஆகியன கற்பிக்கப்படுகின்றன. இதனாலேயே, ஒரு விஷயத்திற்கும், மற்றொரு விஷயத்திற்கும் உள்ள வேறுபாடும் கற்பிதமாகின்றது. இந்த மனோமய கோசம் மிகவும் வலிமையானது; நாம, ரூப, குணங்களைத் தோற்றுவிப்பது; பிராணமய கோசத்தில் முழுமையாக நிரம்பி விரிந்து நிற்கின்றது. இவ்வாறு பொருள்பட, விவேக சூடாமணி,

‘ஜ்ஞானேந்த்ரியாணி ச மனச்ச மனோமய: ஸ்யாத கோசோ மமாஹமிதி வஸ்து விகல்பகேது: | ஸம்ஜ்ஞாதி பேத கலனோகலிதோ பலீயாம் ஸ்தத்பூர்வகோச மபிபூர்ய விஜ்ரும்பதே ய: ||’ என்றுரைத்தது.

நம் கையில் பலஹீனம் ஏற்படும்போது, நாம் நம்மை உடலாக பாவித்து, ‘என் வலது கை செயலிழந்துவிட்டது’ என்று கூறுகிறோம். என் கை, என் தலை, என் கால்கள் என்று நம்மை நம் உடலாக பாவித்துப் பேசுவதைப் போல, பல நேரங்களில் நாம் நம்மை, நம் மனமாக பாவித்தும் பேசுகின்றோம்; செயல்படுகின்றோம். நம்மை மனதோடு சம்பந்தப்படுத்திக் கொள்கின்றோமா? நாம் மனமே என்று பாவித்துக் கொள்கின்றோமா? நாம் ‘என் கை’ என்று சொல்லும்போது, நம் உடலின் இயல்புகளே நம் மொத்தப் பண்புகள் என்பது போலப் பேசுகின்றோம். அதேபோல, நம்மை மனமாக பாவனை செய்து கொள்ளும் போது, நம் மனதின் இயல்புகளே, நம் மொத்தப் பண்புகள் என பாவித்துக் கொள்கின்றோம். அப்போது மனதின் விகாரங்களை, நாம் அனுபவிப்பதாகவும் பாவனை செய்து கொள்கின்றோம். சுகம், துக்கம், மோகம், இச்சை, காமம், குரோதம், விறுப்பு (இராகம்), வெறுப்பு (துவேஷம்) போன்ற உணர்வுகளையே மனதின் விகாரங்கள் என்றோம். நாம் சுகப்படுவதாகவோ, துக்கப்படுவதாகவோ உணர்தல் (எண்ணுதல்), மனோமய கோசத்தினால் தான். நான் உயர்ந்தவன் (அல்லது தாழ்ந்தவன்) என்ற எண்ணங்களும் அவ்வாறே.

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: