1. மனஸ்: 2. புத்தி 3. சித்தம்; 4. அகங்காரம் இவை தமிழில் முறையே 1. மனம்; 2. அறிவு; 3. நினைவு; 4. முனைப்பு என வகுக்கப்பட்டு அகக் கருவிகள் நான்கு என வழங்கப்படும்.
இவற்றின் இயல்புகள்:
மனம் நினைக்கும் புத்தி நிச்சயிக்கும்; அகங்காரம் கொண்டெழுப்பும்; சித்தம் மூன்றுக்கும் காரணமாக இருக்கும்.
1. மனம் – இது வாயுவின் அம்சமாகையால் தன் சொரூப குணமான நினைப்பு மறப்பு என்னும் சங்கல்ப விகல்பங்களைச் செய்து கொண்டு வாயுவைப் போலவே அலைந்து திரியும். இதற்கு அதிதேவதை-சந்திரன்; ஸ்தானம் – நாபி- (கொப்பூழ் உந்தி)
2. புத்தி – இது தேயுவின் (நெருப்பின்) அம்சமாகையால் பொருட்களின் சுய உருவை நிச்சயிக்கும் உருவ விருத்தியே புத்தியாகும். மேலும் இது செயல்களையும் பொருள் வகைகளையும் நன்மை தீமைகளையும் ஆராய்ந்து நிச்சயித்து உணரும். இதற்கு அதிதேவதை – பிரமன், ஸ்தானம் – முகம்.
3. சித்தம் இது அப்புவின் (நீரின்) அம்சமாகையால் பொருளின் நினைப்பே சித்தமாகும். இது பொறிகளுக்கு சலனத்தை விளைவித்து அதன் வழியே விஷயங்களுக்கு இழுத்துச் செல்லும் சித்தமே மனம், இவ்விரண்டும் ஒரே பொருளாக இருப்பதால் இதற்கும் ஸ்தானம் நாபியாகும். இதற்கு அதிதேவதை திருமால்.
4. அகங்காரம் – இது பிருதிவியின் (மண்ணின்) அம்சமாகையால் ஊனுடலை நான் என்று அபிமானிக்கும் விடிவவிருத்தியே அகங்காரமாகும். இது செயல்களை ஆழ்ந்தாலோசிக்காமல் நான் எனது என்று அபிமானித்து முனைப்புக் கொண்டு புண்ணிய பாபங்களைச் செய்து கொண்டிருக்கும். இதற்கு அதிதேவதை – ருத்திரன், ஸ்தானம் – இருதயம்.
இந்நான்கும் உடலில் வியாபித்து ஞானேந்திரியங்களையும் கர்மேந்திரியங்களையும் அவ்வவ் விருத்திகளில் புகுத்துகின்றன.
தாதுக்கள் 7
1. இரசம்; 2. இரத்தம் (உதிரம்); 3. மாமிசம் 4. மேதஸ்; 5. அஸ்தி 6. மச்சை; 7. ஆணின் சுக்கிலம் அல்லது பெண்ணின் சுரோணிதம் ( ஆண் பெண் இன்பச் சுரப்பு) இவை தமிழில் முறையே. 1. சாரம்; 2. செந்நீர், 3. ஊன்; 4. கொழுப்பு; 5. எலும்பு அல்லது என்பு; 6. மூளை; 7. வெண்ணீர் என வழங்கும்.
பஞ்ச கோசங்கள் (ஐவுடம்புகள்)
1. அன்மைய கோசம் 2. பிராணமய கோசம் 3. மனோமய கோசம் 4. விஞ்ஞானமய கோசம் 5. ஆனந்தமய கோசம் இவை தமிழில் முறையே, 1. உணவுடம்பு அல்லது பருவுடம்பு; 2. காற்று உடம்பு அல்லது வளியுடம்பு; 3. மனவுடம்பு; 4. அறிவுடம்பு 5. இன்ப உடம்பு என வகுக்கப்பட்டு ஐந்து உடம்புகள் என வழங்கப்படும்.
இவற்றின் இயல்புகள்:
ஏழு தாதுக்களால் எடுத்தது அன்னமயகோசமாகும். அன்ன சாரத்தினால் பிராணனும் பலமும் அடங்கியிருப்பது பிராணமய கோசமாகும். பிராண பலத்தினால் வந்து தோன்றியிருப்பது மனோமய கோசமாகும். அந்த மனதில் (வித்தை) விஞ்ஞானம் தோன்றுவதினால் ஏற்படுவது விஞ்ஞானமய கோசமாகும். அந்த விஞ்ஞானத்தால் (வித்தையால்) ஆனந்தம் தோன்றும் போது ஆனந்தமய கோசமாகும்.
1. அன்னமய கோசம் – தாய் தந்தையர் அருந்திய அன்னத்தினால் ஆண் பெண் இன்ப உறவு சுரப்பிகளான சுக்கில சோணிதங்கள் உண்டாகி அவற்றால் தாயின் உதிரத்தில் கருத்தரித்து குழந்தை பிறந்து அன்னம் பால் முதலான உணவுகளால் நாள் தோறும் வளர்ந்து தூலமான கை கால்கள் நீண்டு. உடல் அவ்வப்போது மாறுபாடுகள் வளர்ச்சி குன்றல் குறைதல், நலிதல், நசித்தல் முதலான விகாரங்களுக்கு இலக்காகி சப்த தாதுமயமாய் தோன்றும். ஆதலின் இந்த தூலசரீரம் (பருவுடல்) அன்னமய கோசம் என வழங்கப்படுகிறது. இது மரணமடைந்தப் பிறகு அன்னமயமான பிருதிவியில் (மண்ணில்) ஒடுங்கும். இதற்கு இஷ்டமானவை ஜீவாத்ம மனுஷ்யத்வம் முதலான தர்மங்கள்.
2. பிராணமயகோசம் – வாக்கு, பாணி, பாதம், பாயுரு, உபஸ்தம் என்னும் பஞ்சகர்மேந்திரியங்களும், அபானன், உதானன், சமானன், வியானன் என்னும் பஞ்ச பிராணன்களும் சேர்ந்தது பிராணமய கோசம், பிராணவாயு முதலான பத்துவித வாயுக்களும் அன்னமய கோசத்தில் சஞ்சரிக்கும்போது பிராணமய கோசத்திற்கும் பரமாத்மாவிற்கும் சேர்க்கை உண்டாகும். பரமாத்மாவில் உள்ள சத்து, சித்து, ஆனந்தம் என்னும் குணங்கள் பிராணமய கோசத்தில் உண்டாகியிருப்பதால் மனிதன் பிராணன் உடையவனாகிறான். நான் பசியும் தாபமும், ஆசையும், சாமர்த்தியமும், பலமும், வீரதீரமும் உள்ளவன். நான் வாயாடி, ஊமை, முடவன், குருடன் என்னும் இவை போன்றவை பிராணமய கோசத்தின் குணங்களாகும். இது உடலில் உச்சிமுதல் உள்ளங்கால் வரை எங்கும் அந்தரங்கமாய் வியாபித்து கண் முதலான இந்திரியங்களுக்கு பலத்தை உண்டாக்கி அவற்றை நல்வழியிலோ தீய வழியிலோ நடத்திச் செல்கிறது.
3. மனோமய கோசம் – மனதோடு மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் பஞ்சஞானேந்திரியங்களும் சேர்ந்து சப்தம் முதலான விஷயசங்கல்ப தர்மங்களைச் செய்யும் போது மனோமய கோசம் என வழங்கப்படும். இதன் விருப்பம் – சங்கற்பம் முதலான தர்மங்களாகும். ஆத்மா என்னும் சச்சிதானந்தம் மனோமய கோசத்திலும் சேர்ந்திருப்பதால் இந்த மனோமய கோசத்திற்கும் ஆத்மாவிற்கும் சேர்க்கை உண்டாகிறது. இது பிராணமய கோசத்திற்கு வேறாக இருந்து காமக்குரோதம் முதலான வியாபாரங்களை உண்டாக்கி, நான் எனது என்னும் விகாரங்களை உடையதாக விளங்குகிறது.
4. விஞ்ஞானமய கோசம் – புத்தியோடு ஞானேந்திரியங்களான ஐம்பொறிகளும் சேர்ந்து அன்னமய பிராணமய மனோமய கோசங்களோடு கூடி, அந்தக்கரணத்திலுள்ள தியானம் மனம் முதலானவற்றின் விருத்தி எப்போது உண்டாகிறதோ அப்போது விஞ்ஞானமய கோசம் எனப்படும். நான் புத்திசாலி பக்தன், செயலாற்ற வல்லவன், ஆசையற்றவன் என்பன போன்றவையெல்லாம் இந்தக் கோசத்தின் கர்த்துருத்துவாதி குணங்களாகும். மேற்குறிப்பிட்ட பிராணமயம் மனோமயம் விஞ்ஞானமயம் என்னும் மூன்று கோசங்களாலும் சூக்ஷ்ம சரீரம் (நுண்ணுடல்) நிலைத்து நிற்கும்.
5. ஆனந்தமய கோசம் – மேற்கூறிய நான்கு கோசங்களும் அஞ்ஞானத்தோடு (அறியாமையோடு) சேர்ந்து நுட்பமான ஆல விதைக்குள் பெரிய ஆலமரம் அடங்கியிருப்பது போல் சொரூப சுகத்தில் தன் காரண ஞானம் அடங்கியிருக்கும் போது ஆனந்தமய கோசம் என வழங்கப்படும். பிரியம், மோதம், பிரமோதம் என்னும் விருத்திகளோடு கூடிய அஞ்ஞானம் முதன்மையாகவுள்ள அந்தக்கரணமாகும். இது பிரியம் என்பது விருப்பமான பொருளைப் பார்த்ததும் உண்டாகும். ஆனந்தம், மோதம் என்பது அப்பொருள் தன் கைக்குக் கிடைத்ததும் உண்டாகும் ஆனந்தம், பிரமோதம் என்பது தன் கைக்குக் கிடைத்த பொருளை தான் அனுபவித்ததும் உண்டாகும் ஆனந்தம். ஆத்மா சச்சிதானந்தத்தோடு இருப்பதால் ஆனந்தம் தோன்றுகிறது. எனவே ஆனந்தமய கோசத்திற்கும் பரமாத்மாவுக்கும் சேர்க்கை உண்டாகிறது. இதற்கு இஷ்டமானவை போகத்துருத்வாதி விகாரங்களாகும்.
இவ்வைந்து கோசங்களோடு ஆத்மா சேர்ந்திருந்தாலும் பஞ்சகோசங்களுக்கு ஆத்மா வேறானதாகும். புளியை அதன் ஓடு மூடிக்கொண்டிருப்பது போல் இவ்வைந்து கோசங்களும் பரமாத்மாவையும் ஜீவாத்மாவையும் மூடிக் கொண்டு அவற்றைக் காணப்படாமல் செய்வதினால் இவை கோசங்கள் எனப்படுகின்றன.
குணங்கள் 3 (திரிகுணங்கள்)
1. ராஜஸம் 2. தாமஸம், 3. ஹாத்வீகம் அல்லது சத்துவம் இவை தமிழில் முறையே 1. மனவெழுச்சி 2. மயல் அல்லது மயக்கம்; 3. நன்மை அல்லது அமைதி என வகுக்கப்பட்டு மூன்று குணங்கள் என வழங்கப்படும்.
இவற்றின் இயல்புகள்:
மாயையினால் உண்டான இம்மூன்று குணங்களும் உடலை மூடிக்கொண்டு எந்த விகாரமுமற்ற நாசரஹிதனான ஆத்மாவை மறைக்கின்றன. (கீதை)
1. ராஜஸம் – நானே கர்த்தா, நானே பிரபு என்று அகங்காரம் கொண்டிருப்பவன் ராஜஸன், அதிகக் களிப்பு, அகங்காரம் போகம் இடும்பை, கவிதசேதம் புகழ், வீரம், ஈகை முதலானவை இதன் தன்மைகளாகும்.
2. தாமஸம் – தூக்கம், சோம்பல், அலட்சியம், ஆலஸ்யம், மோகம், சம்போகம் ( ஆண், பெண், கலவியின்பம்) திருட்டுத்தனம் கள்ளுண்ணல், மோசம், கோபம் முதலான குணங்களை உடையவன் தாமஸனாவான்.
3. ஸாத்வீகம் (சத்துவம்) – வாய்மை (சத்தியம் ) கருணை, பொய்யாமை, கொல்லாமை, – (அஹிம்சை) களவின்மை, கோபமின்மை, ஆடம்பரமின்மை, பொறுமை, ஜீவகாருண்யம், விரதம், அடக்கம் ஆனந்தம் முதலான குணங்களை உடையவன் ஸாத்வீகன்.
இவற்றில் ஸாத்வீகக் குணம் உத்தமம், ராஜஸ குணம் மத்திமம், தாமஸகுணம் அதமம்.
ஸாத்வீகக்குணம் – பரிசுத்தம் , குணம் உண்டாகி நிவர்த்தி மார்க்கத்தில் செலுத்தும், சலிக்காத பகவத் பக்தியும், குருபக்தியும் நல்லவர்களிடம் பற்றுதலும், அபேத (பேதமற்ற) பிரமஞானமும் உண்டாக்கும்.
ராஜஸ குணம் – பிரவர்த்தி மார்க்கத்தில் செலுத்தும் அதாவது, காமிய கர்மா அனுஷ்டானங்கள் அதன் சம்பந்தப்பட்ட தேவதா உபாசனைகள் முதலானவற்றை உண்டாக்கும்.
தாமஸ குணம் – இறைவனை மறுக்கும் நாஸ்திக புத்தி, தீய அகங்காரம் அறியாமை, அந்தகாரம் முதலானவற்றை உண்டாக்கும்.
இவை ஒவ்வொன்றும் மும்மூன்று குணங்களாகவும் வீரியும். அவையாவன:
தாமஸ ராஜஸம்: தாமஸ தாமஸம்: தாமஸ ஸாத்வீகம்: இவை தாமஸ குணத்தின் விரிவுகள்.
ஸாத்வீக தாமஸம் , ஸாத்வீக ராஜஸம் ஸாத்வீக ஸாத்வீகம், இவை ஸாத்வீகக் குணத்தின் விரிவுகள்.
ராஜஸ தாமஸம்: ராஜஸ ராஜஸம் ராஜஸ ஸாத்வீகம்: இவை ராஜஸ குணத்தின் விரிவுகள்.
மலங்கள் 3 (திரிமலம்)
1. ஆணவம்: 2. மாயை: 3. கன்மம் அல்லது காமியம் இவை திரிமலம் எனப்படும். தமிழில் முறையே 1. ஆணவம் 2. மாயை; 3. வினை என வகுக்கப்பட்டு மும்மலம் என வழங்கப்படும்.
இவற்றின் இயல்புகள்:
1. ஆணவம் – ஆத்மாவின் அறிவை மறந்து நான் எனது என்னும் அறியாமைகளை (அஞ்ஞானங்களை) விளைவித்து, தன்னுடமையிலும் மனைவி மக்கள் முதலானவர்களிடமும் பிரியமூட்டி அவற்றில் மயங்குகிறோம். என்பதை ஆத்மா அறியாதபடி சிதைத்து ஆசைகளை உண்டாக்கிக் கொண்டே தன்னது என்று இருந்து வரும்.
2. மாயை – பிறர் உடமைகளை தனதென்று இடையூறு விளைவிப்பதும், தொல்லைகள் புரிய முயல்வதும் இதன் தன்மைகளாம்.
3. கன்மம் (காமியம்), முன் இரண்டு மலங்களுக்கும் அனுசரித்திருக்கும் இதாகிதத்தினால் புண்ணிய பாவங்களை விளைவிக்கும்.
இம்மூன்று மலங்களைத் தவிர மகா மாயை என்னும் திரோதானம் என்னும் இரண்டு மலங்கள் உண்டு.
மகாமாயை – தனு கரண புவன போகங்களை (உடம்பு- உறுப்பு, உலகம், நுகர் பொருள்களைக்) கொடுத்து ஒன்றோடு ஒன்று ஒவ்வாதபடி செய்து புசிப்புகளும் வெவ்வேறாகி அனாதியாக இருக்கும் ஆத்மாவுக்கு என்ன போகம் தவிர்த்தாலும் இத்தன்மை இரண்டு காலங்களிலும் ஒத்திருக்கும். ஆத்மாவை தன்னிடத்திலும் களைப்பாற்றிக் கொள்ள இடந் தந்து பிறகு ஜீவன்களுக்குப் பக்தியாகவும் விளங்கும்.
திரோதானம் – சிவசக்தியின் பதவியைத் திரோபவித்து (மறைத்துக் கொண்டு) நின்று ஆத்மாக்களுக்குப் புண்ணிய பாவங்களை மட்டும் ஊட்டி சிவசக்தியோடு கூட்டுவிக்கும்.
பிணிகள் 3 (ரோகங்கள்)
1. வாதம் 2. பித்தம் 3. சிலேத்துமம் (கபம்). இவை திரிதோஷங்கள் (முக்குற்றங்கள் ) எனவும் வழங்கப்படும்.
வாதம் – வாயுவினால் உற்பத்தியாகி, பிராணவாயு மிகுந்து வலிவுற்று நீரும். நெருப்பும் (அப்புவும், தேயுவும்) கலந்தால் அது வாதமாகும்.
பித்தம் – அக்னி திசையில் வாயுக்களும் ஆதாரத்தைப் பற்றிப் பெரிதும் அனுசரித்து இருதய கமலத்தில் ஊன்றினால் அது பித்தமாகும்.
சிலேத்துமம் – அப்பு, வாயு, தேயு (நீர் காற்று நெருப்பு) இம்மூன்றும் உடலில் கலவாமல் கலங்கினால் அது சிலேத்துமமாகும்.
ராகங்கள் அல்லது விகாரங்கள் 8
1. காமம். 2. குரோதம் 3. லோபம்; 4. மேகாம்; 5. மதம்; 6. மாற்சரியம், இவை மாயா சக்திகள் ஆறு எனவும் கூறப்படும். இவை தமிழில் முறையே 1. அவர் அல்லது ஆசை; 2. வெகுளி அல்லது சினம்; 3. பற்றுள்ளம் அல்லது கருமித்தனம் ; 4. மருள் அல்லது மயக்கம் ; 5. செருக்கு அல்லது வெறி; 6. பொறாமை என வகுக்கப்பட்டு உட்பகைகள் ஆறு என வழங்கப்படும். இவற்றோடு இடம்பம், அகங்காரம் என்னும் இரண்டையும் சேர்த்து விகாரங்கள் எட்டு என்பார்கள். இவற்றோடு தர்ப்பம், ஈர்ஷை என்னும் இரண்டையும் சேர்த்து தசவர்க்கம்என்றும் கூறுவதுண்டு.
நம் மூச்சு
நாம் தினந்தோறும் நிமிஷத்திற்கு பதினைந்து மூச்சுகள் வீதம் மூச்சு விடுகிறோம். மூக்கின் வலது துவாரம் வழியாகவும் இடது துவாரம் வழியாகவும் நம் சுவாசம் நடந்துகொண்டிருக்கும். உள்ளுக்கு இழுக்கும் மூச்சுக்கு நிஸ்வாஸம் (பூரகம்) என்றும் வெளிவிடும் மூச்சுக்கு உஸ்வாஸம் (ரேசகம்) என்றும் பெயர் வழங்கப்படுகின்றன. மூச்சைக் கட்டுதல் அல்லது மூச்சை அசைவற நிறுத்துதல் கும்பகம் எனப்படும். பூரகம், ரேசகம் என்னும் மூச்சுகள் இரண்டையும் யோகவலிமையால் எவரால் நிறுத்தி வைக்க முடிகிறதோ, அவருக்கு மனம் புத்தி, சித்தம், அகங்காரம் என்பனவற்றின் விகாரங்கள் ஒடுங்கிவிடும். இவ்வாறு இருப்பதே லயம் எனப்படும். இந்தலயம், யோகாப்பியாசசித்தி பெற்றவர்களுக்கு ஏற்படுமே ஒழிய, மற்றவர்களுக்கு ஏற்படாது. நாம் மூச்சு வாங்கி விடும் நிஸ்வாஸ உஸ்வாஸங்களுக்கு ஹம்ஸ என்ற பெயரும் வழங்கப்பெறும். இந்த நிஸ்வாஸம் உஸ்வாஸங்கள் (பூரக ரேசகங்கள்) ஒவ்வொரு ஜீவனின் உடம்பிலும் உள்ள மூலாதாரம், சுவாதிஷ்டானம். மணிபூரகம், அநாகதம், விசுத்தம், ஆக்ஞேயம் என்னும் ஆறு ஆதாரங்களிலும் ஸஹஸ்ராரம் என்பதிலும் ஆக ஏழு சக்கரங்களிலும் திரிந்து கொண்டு அந்தந்த ஜீவனின் ஆயுள் பிரமாணத்தைக் காட்டிக் கொண்டு வருகின்றன.
ஆறு ஆதாரங்கள்
1. மூலாதாரம்; 2. சுவாதிஷ்டானம் ; 3. மணிபூரகம்; 4. அநாகதம் ; 5. விசுத்தம்; 6. ஆக்ஞேயம் . இவை தமிழில் முறையே 1. மூலம் 2. கொப்பூழ்; 3.மேல் வயிறு; 4. நெஞ்சம் 5. மிடறு; 6. புருவநடு என வகுக்கப்பட்டு ஆறுநிலைகள் என வழங்கப்படுகிறது.
மூலாதாரம்
இது குதஸ்தானம் குதம் என்றால் உடம்பிலுள்ள மலவாய். இது உடலுக்கு முதல் ஆதாரம் ஆனதால் மூலாதாரம் என்ற பெயர் உண்டாயிற்று. இது பிருதிவி (மண்) தத்துவமாகும். கால எலும்புகள் இரண்டும் கதிரெலும்பும் கூடும் குய்யத்திற்கும். (அதாவது ஆண்குறி அல்லது பெண்குறி எனப்படும் உடம்பின் மர்மஸ்தானத்திற்கும்) குதத்திற்கும் (மலவாய்க்கும்) நடுவே, குண்டலி வட்டமாய், அந்த வட்டத்துக்கு நடுவே திரிகோண வடிவமாய். அந்தத் திரிகோணத்துக்கு நடுவே நான்கு இதழ்களுள்ள ஒரு மலர்வட்டமாக கடப்பம்பூ போல் அமைந்திருக்கும் அந்த மலருக்கு நடுவில் ஓங்கார எழுத்து மலர்ந்து நிற்கும். அந்த ஓங்காரத்தின் நடுவே விக்கினேஸ்வரரும் வல்லபை சக்தியும் வீற்றிருப்பார்கள். இதைப் பொன்னிறமும் நான்கு அட்சரங்களோடு கூடிய நான்கு இதழ் கமலமாகவும் தியானிக்கவேண்டும்.
இவையெல்லாம் அவ்வவ்விடத்தில் தோன்றுவது போலிருக்கும்.
சுவாதிஷ்டானம்
மூலாதாரத்திற்கு இரண்டு விரற்கடைக்குமேலே நெருப்பைப்போல் செந்நிறம் உடையதாய் ஆறு இதழ்களோடு சுவாதிஷ்டானம் என்ற கமலம் ஒன்று இருக்கிறது. இது பிரஜாபதியைக் குறிக்கும். பிரஜாபதி என்றால் பிரஜைகளை உற்பத்தி செய்வது. இது அக்கினி தத்துவமாகும். ஸ்வ என்கிற சொல் பரமான லிங்கம் என்னும் அர்த்தத்தைக் கொடுப்பதாலும் தான் அனுஷ்டிப்பதற்கு இடமாக விளங்குகிறதாகையாலும் இது சுவாதிஷ்டானம் என்னும் பெயர் பெறும். இது நாற் சதுரமும் அச்சரத்தின் நடுவே ஆறு இதழ்களுள்ள ஒரு மலர் வட்டமும் கொண்டு, அதன் மத்தியிலே லிங்க பீடமும் வீணாத்தண்டின் அடியுமாகப் பிரகாசித்து, அதன் நடு மத்தியில் நகார எழுத்து நிற்கும். அந்த நகாரத்தின் நடுவில் பிரும்மாவும் சரஸ்வதியும் வீற்றிருப்பார்கள். இதை ஆறு அட்சர உருவங்களோடு ஆறு தளங்கள். உடையதாய்த் தியானிக்க வேண்டும்.
இவையெல்லாம் அவ்வவ்விடத்தில் தோன்றுவது போல் இருக்கும்.
மணிபூரகம்
சுவாதிஷ்டானத்திற்கு எட்டு விரற்கடைக்கு மேலே அதாவது நாபிஸ்தானத்தில் (கொப்பூழ் அல்லது தொப்புளின் இடத்தில்) இருப்பது மணி பூரகமாகும். இது ஆயிரத்து எட்டு நரம்பு நாடிகளும் சூழ. நாடிக்கெல்லாம் வேராக உள்ளது. இதை உந்திக் கமலம் என்றும் சொல்லுவார்கள். இது அப்புவின் ( நீரின்) தத்துவமாகும். இது பிளவுபட்ட ரத்தினம் போல் பிரகாசிப்பதால் மணிபூரகம் எனப் பெயர் பெற்றது. மின்னலைப் போல் மிகவும் பிரகாசத்தோடும், பத்து இதழ்களோடும் விளங்கும் இந்தக் கமலத்தில் பத்து அட்சரங்களோடு தியானிக்க வேண்டும். இதன் சக்கர அமைப்பு: பெட்டியில் பாம்பு சுருணையாய் சுருட்டிப்படுத்திருப்பது. போல், மணிபூரகம் என்னும் சக்கரத்தில் மூச்சுக்குத் தாயான பெரும் பாம்பு அந்தக் கொப்பூழில் படுத்திருக்கும். அந்த இடத்தில் ஜலம் இருப்பதாலும். சாந்த குணரான மகாவிஷ்ணு நீர் இருக்குமிடத்தில் வசிப்பவராகையாலும் அந்த ஸ்தானத்திற்கு அதிபதியாக விளங்குகிறார். அவரைக் காண்பதற்கு அந்த ஸ்தானம் ஏற்ற இடமாகும். இதன் சக்கர அமைப்பு; தொப்புளுக்கு நேரே அப்பு ஸ்தானத்தில் பத்து இதழ்களுள்ள ஒரு கமலம் வட்டமாக இருக்கும். அந்தக் கமலத்தின் நடுவில் மகார எழுத்து நிற்கும். அந்த மகாரத்திற்கு நடுவில் மகாவிஷ்ணுவும், மகாலக்ஷ்மியும் வீற்றிருப்பார்கள்.
இவையெல்லாம் அவ்வவ்விடத்தில் தோன்றுவது போலிருக்கும்.
அநாகதம்
மணிபூரகத்திற்குப் பத்து விரற்கடை அளவு மேலே உதயசூரியன் போன்ற பிரகாசத்தோடு உள்ளது. அநாகதமாகும். இதை இருதய கமலம் என்பார்கள். இது வாயுவின் (காற்றின்) தத்துவமாகும். வாயுஸ்தானமான இருதயத்தின் இடத்தில் அதாவது மார்பில் லிங்கஹாரம் போன்ற ஒரு கமலம் தலைகீழாய்த் தொங்கிக் கொண்டிருக்கும். இந்தக் கமலம் பன்னிரண்டு இதழ்கள் உடையதாக விளங்கி அவ்விதழ்களில் பன்னிரண்டு அட்சரங்கள் சப்த சொரூபமாய் உருவங்களற்று இருக்கும். இது அட்சர உருவங்களற்று சப்த பிரும்ம மயமாய் இருப்பதால் அநாகதம் எனப் பெயர் பெறும். இதன் மத்தியில் பதினாயிரம் சூரியகாந்தியோடு கூடிய பாணலிங்கம் இருப்பதோடு ஆனந்தத்திற்கும் இடமாக விளங்குகிறது. இந்தக் கமலத்தின் மத்தியில் சோதி சொரூபமான ருத்திரர் எல்லாவற்றையும் பஸ்மம் செய்பவராகையால் எல்லா ஜீவன்களின் இருதய கமலத்தில் இருந்து கொண்டு உண்ணும் ஆகாரங்களை யெல்லாம் பஸ்மம் செய்கிறார். இதன் சக்கர அமைப்பு: வாயு (காற்று) ஸ்தானத்தில் முக்கோணமாய் இருக்கும். அம்முக்கோணத்தின் நடுவில் பன்னிரண்டு இதழ்களையுடைய ஒரு கமல வட்டம் இருக்கும். அந்தக் கமல வட்டத்தின் நடுவில் சிகார எழுத்து நிற்கும் அந்தச் சிகாரத்தின் நடுவில் ருத்திரனும் பார்வதியும் வீற்றிருப்பார்கள்.
இவையெல்லாம் அவ்வவ்விடத்தில் தோன்றுவது போல் இருக்கும்.
விசுத்தம்
அநாகதத்திற்கு மேலே கண்டஸ்தானம் எனப்படும் நெஞ்சுக்குழி இடத்தில் தூம்பரவர்ணமான பெரும் ஒளியோடு விசுத்தம் என்னும் கமலம் இருக்கிறது. ஆத்மஸ்தானமான இதில் ஜீவன் இருந்து வலது நாசியிலும் இடது நாசியிலும் சுழுத்தி என்கிற நாடியிலும் மூச்சை உள்ளுக்குள் இழுக்கும் படியும் மறுபடி வெளிவிடும்படியும் செய்கிறார். இது ஆகாசத்தின் தத்துவமாகும். இதுபிரம்தரிசனத்தால் ஜீவாத்மாவுக்கு சுகத்தை தருவதால் விசுத்தம் என்று பெயர் பெறும். இதன் சக்கர அமைப்பு ஆறு கோணமாய் அதன் நடுவே பதினாறு இதழ்கள் அமைப்பு: ஆறு கோணமாய் அதன் நடுவே பதினாறு இதழ்கள் அமைப்பு. ஆறு கோணமாய் அதன் நடுவே பதினாறு இதழ்கள் உள்ள ஒரு கமல வட்டமாய் இருக்கும். அந்தக் கமலத்தின் நடுவே வகார எழுத்து நிற்கும். அந்த வகாரத்தின் நடுவில் மகேஸ்வரனும் மகேஸ்வரியும் வீற்றிருப்பார்கள். கருநிறமுள்ள இந்த கமலத்தின் பதினாறு தளங்களிலும் வடமொழி அ என்கிற அட்சரம் முதல் அஹ் என்கிற அட்சரம் வரை பதினாறு உயிரெழுத்துகளும் உருவங்களாக அமைந்திருக்கும்.
இவையெல்லாம் அவ்வவ்விடத்தில் தோன்றுவது போல் இருக்கும்.
அக்ஞேயம்
விகத்தத்திற்கு மேலே, லலாபீடத்தில் இரண்டு கண் புருவங்களுக்கு மத்தியில் ஞானக் கண் தீபம் போல் ஒளி வீசிக் கொண்டிருக்கும். இது வீணாத்தண்டின் முடியாகவும் ஊடுருவி நிற்கும். இது மனோதத்துவமாகும். இது ஆஞ்ஞையின் சம்பந்தம் உடையதாகையால் ஆஞ்ஞா சக்கரம் எனப்பெயர் பெறும். இதன் அமைப்பு மூன்று இதழ்களுள்ள கமலத்தின் நடுவே யகார எழுத்தோடு இணங்கி நிற்கும். அந்த யகாரத்தின் நடுவே சதாசிவமும் மனோன்மணியும் வீற்றிருப்பார்கள். இது ஹ, க்ஷ என்னும் அக்ஷரங்களோடு கூடியது.
இவையெல்லாம் அவ்வவ்விடத்தில் தோன்றுவது போலிருக்கும்.
ஏழு சக்கரங்கள்
ஆறு ஆகாரங்களோடு ஸஹஸ்ராரம் என்பதையும் சேர்த்து ஏழு சக்கரங்கள் என்பார்கள். ஸஹஸ்ராரம் என்பது ஆகஞேய சக்கரத்திற்கு மேலே, தலையில் பிரம்ம கபாலத்தில் ஆயிரம் இதழ் கமலமுள்ள பிந்து ஸ்தானமாக இருப்பது இதைப் பிந்துசக்கரம் என்று கூறுவதுண்டு. இது சிவசக்தி ஐக்கிய பாவனைக்கு உரியது. பூரகயோகத்தினால் வாயுவை ஆதாரத்தில் சேர்த்து குதத்திற்கும் (மலவாயுக்கும்) குறிக்கும் நடுவேயுள்ள சக்தியை சிவக்குறியினால் கிரமமாகத் தட்டியெழுப்பி பிந்து சக்கரத்தை அடைவிக்கும்போது பரமசிவனையும் பராசக்தியையும் ஒன்று சேர்ந்திருப்பதாகப் பாவிக்க வேண்டும். அப்போது உண்டாகும் திராட்சாரஸம் போன்ற அமுதத்தை அச்சக்திக்கு ஊட்டி விட்டு ஆறு ஆதார சக்திகளையும் அந்த அமுதப் பொழிவால் திருப்தி செய்து அதே வழியில் மூலாதாரத்தை திரும்பி அடையச் செய்ய வேண்டும் என்று தேவி பாகவதம் கூறுகிறது.
Add comment