போஜராஜனின் அவையில் காளிதாசர், பவபூதி, தண்டி என்னும் மூன்று புலவர்கள் இருந்தனர். இதில் யார் சிறந்தவர் என்ற போட்டி எழுந்தது. காளியிடம் வணங்கி, இதற்கான பதில் அளிக்கும்படி போஜராஜன் முறையிட்டான்.
உடனே காளி அங்கு தோன்றினாள்.
“போஜராஜனே! தண்டி நல்ல கவிஞன்; பவபூதி நல்ல அறிஞன்,” என்றாள். உடனே அங்கு நின்ற காளிதாசருக்கு கோபம் வந்தது. அவர், “அப்படியானால்… நான் யாரடி?” என்று காளியைப் பார்த்து கேட்டார்.
புன்னகைத்த காளி, “காளிதாசா! நீயே நான்; நானே நீ! என்னைப் போல் பெருமையுடையவன் அல்லவா நீ!” என்றாள்.
இதை கேட்ட காளிதாசர் தலைக்கனத்துடன் நடக்கத் தொடங்கினார். அதைப் போக்க விரும்பிய காளி, ஒருநாள் பவபூதிக்கும், காளிதாசருக்கும் இடையே சண்டை வரும்படி செய்தாள்.
மீண்டும் போஜனின் தலைமையில், காளி சன்னிதியில் ஒன்று கூடினர். காளிதாசரும், பவபூதியும் பனை ஓலையில் கவிதை எழுதி, தராசுத் தட்டில் வைத்தனர். பவபூதியின் தட்டை விட காளிதாசரின் தட்டு வேகமாக கீழிறங்கியது. இதைக் கண்ட காளிதாசர் தனக்கே புலமை அதிகம் என மகிழ்ந்தார்.
உடனே, காளி தான் சூடியிருந்த பூவைச் சரி செய்வது போல கையால் அழுத்தினாள். பூவில் இருந்த தேன் துளி பவபூதியின் ஓலை மீது தெறித்தது. இதன்பின், அந்த தட்டு கீழிறங்க ஆரம்பித்தது. இதைக் கண்ட பவபூதி மகிழ்ச்சியில் குதித்தார். காளிதாசருக்கு இப்போது தான், தன் கர்வம் பற்றி உணர முடிந்தது.
“தாயே! நீ சூடிய மலரிலுள்ள தேன் மூலம் பவபூதியின் கவிதைக்கு கனம் கொடுத்தாய். இதனால் என் தலைக்கனம் நீங்கியது,” என்னும் பொருள்பட கவிதை பாடினார். இதன்பின் காளிதாசரும், பவபூதியும் நண்பர்கள் ஆயினர்.
Add comment