தமிழ்library
, கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும், தமிழ்library

கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்

எலே இந்த கழுதைய ஏமாத்தனும்னு நினைக்கிறானா? பிச்சுப்புடுவேன் பிச்சு, நீ போய் அவனை இழுத்தாம்லே, பணத்தை வாங்கிட்டு இந்தா அந்தான்னுட்டு இழுத்துட்டு திரியறான், பேசுன பேச்சு பிரகார நடக்காத பய, அவனையெல்லாம் இழுத்து வச்சு கடினமான வார்த்தைகளை வீசினார்.

அண்ணாச்சியின் வசவுகள் எனக்கு புதிதல்ல. நான் அவரிடம் கணக்கு புள்ளையாக வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்கள் ஆகி விட்டது. இந்த ஐந்து வருடங்களில் அவருடைய குணநலன்கள் எனக்கு அத்துப்படி, தொழிலில் கறார், ஒப்பந்த தொழில்களின் நெழிவு சுழிவுகளை, விரல் நுனியில் வைத்திருப்பார். யார் யாரை எங்கு பிடித்தால் வேலை நடக்கும் என்பதை தெரிந்து வைத்திருப்பார். இந்த கட்டிட வேலைக்கு தரை கடினமாக இருப்பதால் “டிரில்லிங்க்” முறையில் துளையிட்டு வேலை செய்ய வேண்டும், இந்த வேலைக்கு நன்கு தெரிந்தவர்கள் செய்தால் வேலை வேகமாகவும் விரைவிலும் நடக்கும். அதற்காக இந்த மாதிரி வேலை செய்பவர்களுக்கு மேஸ்திரி போன்று ஒருவன் இருப்பான், அவனிடம் அண்ணாச்சி பதினைந்தாயிரம் அட்வான்ஸ் ஆக கொடுத்திருந்தார். நாளையே வேலை தொடங்குவதாக கூறிச்சென்றவன் இரண்டு மூன்று நாட்களாக போக்கு காட்டிக்கொண்டிருக்கிறான்.

பொதுவாக இந்த மாதிரி பெரிய முதலாளிகளிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டால் இழுத்தடிக்க மாட்டார்கள். அதுவும் அண்ணாச்சி போனறவர்களிடம் இப்படி செய்வது என்பது பெரிய ஆச்சர்யம்தான். என்னுடைய அனுபவத்தின்படி அவரை விட்டு விட்டு நாம் தள்ளி சென்று விடவேண்டும். அவரது கோபம் தானாக அடங்கி விடும்.

எப்படியோ அண்ணாச்சியின் ஆட்கள் அவனை பிடித்துக்கொண்டு வந்து விட்டார்கள். ஏலே கூறு கெட்ட பயலே, ஆளைகூட்டிட்டு வர்றேன்னு பதினைஞ்ச்சாயிரம் வாங்கிட்டு போன, இந்தக்கழுதைய ஏமாத்தணும்னு நினைச்சிட்டியா? இந்த கழுதைய ஏமாத்திட்டு எங்கடா நீ ஓட முடியும்? நாளைக்காலையில் நீ ஆளுங்களோட வர்றே/? ஏமாத்த நினைச்சியோ உன்னை எங்கிருந்தாலும் புடுச்சி இழுத்துட்டு வந்து மரத்துல கட்டி வச்சு தோலை உறிச்சுடுவேன். நாளைக்கு கண்டிப்பா வந்துடறேன், அவன் விட்டால் போதுமென ஓட்டம் பிடித்தான்.

அண்ணாச்சி செய்தாலும் செய்வார். அவரை பொருத்தவரை வேலை செய்பவனுக்கு கூலி தாராளமாய் தருவார். ஆனால் ஏமாற்றினான் என்று தெரிந்தால் முடிந்தவரை அவனை விலக்கி விட முயற்சிப்பார், ‘சாம’ ‘பேத’ ‘தான’ தண்டம் எனபது போல கடைசி ஆயுதத்தை இறுதியில்தான் எடுப்பார். அதைப்பார்த்த அனுபவமும் எனக்கு உண்டு. ஒருவனை கட்டி வைத்து அடித்ததையும் அதன் பின் அவனுக்கு உடல் நிலை சரியாகும் வரை இவர்தான் சோறு போட்டார். என்பதும் வேறு விசயம். அந்த ஊழியர்களுக்கு அண்ணாச்சி கண்டிப்பான தகப்பன், முதலாளி எல்லாம்.

அவர் தன்னை கழுதை கழுதை என சொல்லிக்கொள்வதற்கு கூட ஒரு கதை உண்டு. திருநெல்வேலி அமபாசமுத்திரத்தில் உள்ள பள்ளியில் இவரை படிக்க வைக்க இவர் அப்பா படாத பாடுபட்டுக்கொண்டிருக்க வாத்தியார் ஒரு நாள் வேடிக்கையாக ஏலேய் நீ ‘கழுதையாட்டம்ல’, அதுக்குத்தான் கற்பூர வாசனை தெரியாது, ஆனா ந்ல்லா உழைக்கும்டே நீ உங்கப்பனுக்கு நல்லா உழைச்சுப்போடத்தான் லாயக்கு, ஆனா படிக்கிற விசயம் உனக்கு கற்பூர வாசம்தான்லே’ என்று கிண்டலடித்திருக்கிறார். அதைக்கேட்டு ரோசப்பட்டு எழுந்த அண்ணாச்சி ஆமா சார், நான் கழுததான், எனக்கு படிக்கிற வாசம்னா என்னான்னு தெரியாது, என்று சொல்லிவிட்டு வந்தவர் தான், அதற்குப்பின் அவர் அப்பா எவ்வள்வோ சொல்லியும் பள்ளிக்கு போக மறுத்து விட்டார்.

கொஞ்சம் பணம் கொடு நான் அசலூர்ல போய் பொழச்சு காட்டறேன் என்று இங்கு வந்தவர்தான், கல்லுடைத்து, மண் சுமந்து பின் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று பெரிய ஒப்பந்தக்காரார் ஆகி விட்டார். இருந்தாலும் அவருக்கு படிப்பு வரவில்லை என்பது ஒரு குறையாகவே தெரிந்ததால் தன்னை ‘கழுதை’ ‘கழுதை’ என்று சொல்லி தன் ஆற்றாமையை தீர்த்துக்கொள்வார்.

மறு நாள் வேலை செய்ய ஆட்கள் எல்லோரும் வந்து விட்டார்கள். அண்ணாச்சியும் வந்து உட்கார்ந்திருந்தார். நான், மேஸ்திரி, இருவரும் இவருடைய மனநிலையை குறித்த பயத்தில் இருந்தோம். நேரம் ஆக ஆக இவர் முகம் செம்மை படர ஆரம்பித்த்து. தூரத்தில் ஒரு பெண் ஓட்டமும் நடையுமாக வருவது தெரிந்தது. விறு விறுவென வந்தவள் உட்கார்ந்திருந்த அண்ணாச்சியின் கால்களில் விழுந்து ஐயா, என் வீட்டுக்காரரை மன்னிச்சிருங்கையா, இவள் விழுந்ததை கண்ட அண்ணாச்சி சடாரென எழுந்து தள்ளிப்போய் முகத்தை திருப்பி நின்று கொண்டார்.

உன் புருசனுக்கு நீ வக்காலத்து வாங்கிட்டு வந்திருக்கியா? அவன் உன்னை விட்டு ஒளிஞ்சுகிட்டானா? எச்சக்கலை…என்று கெட்ட வார்த்தைகளை வீசினார் ஐயா என் வீட்டுக்காரர் செஞ்சது தப்புத்தாங்கய்யா, எங்களுக்கு வேற வழி தெரியலையா? நீங்க கொடுத்த பணத்தை எங்க பொண்ணுக்கு பரீட்சைக்கு கடைசி நாளுங்கறதுன்னால அப்படியே கொண்டு போய் காட்டிட்டம்யா. ஒரு வாரம் டைம் கொடுங்கய்யா அது வரைக்கும் நானும் என்புருசனும் இங்கேயே வேலை செய்யறோம்யா, எங்களை ஒண்ணும் செஞ்சுடாதீங்கய்யா.

இப்ப என் முன்னாடி வந்து நிக்காத, போயிடு அண்ணாச்சியின் குரல் உயரத்தொடங்க, அவர் சுபாவம் தெரிந்த நான் அந்த பெண்ணிடம் இப்ப நீ கிளம்பு என்று கிளப்பி விட்டேன். அவள் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றாள்.

ஐந்து நிமிடங்கள் ஓடியது. அண்ணாச்சி மெல்ல மேஸ்திரியிடம் திரும்பி நம்ம சுப்பனையும், சண்முகத்தையும் ‘டிரில்லிங்’ வேலைக்கு கூட்டி வர சொல்லிடுங்க, அப்புறம் இந்த பெண்ணையும், அவள் புருசனையும் வேலைக்கு வர வேணாமுன்னு சொல்லிடுங்க, ஒரு வாரம், இல்லை ஒரு மாசம் ஆனாலும் பணத்தை விரட்டி வாங்கிடுங்க. ஏன்னா படிப்புக்குத்தான்னாலும் அடுத்தவன் பணத்தை எடுத்து கொடுத்தது தப்புன்னு அப்பத்தான் அவனுக்கு புரியும்.

“படிப்பு” என்றவுடன் அவர் கோபம் தணிந்திருந்த்தையும், ஆனாலும் படிப்பு என்றாலும் தவறு தவறுதான் என்ற அவரின் கருத்து எனக்கு ஒரு பழமொழியை மாற்றி சொல்ல தோன்றியது.

“கழுதைக்கும் தெரியும் கற்பூர வாசனை”

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: