தமிழ்library
, காட்டுச்செடியின் அனுபவம், தமிழ்library

காட்டுச்செடியின் அனுபவம்

ஒருகாட்டில் செடி ஒன்று இருந்தது. அது தினமும் அழகிய மலர்களைப் பூக்கச் செய்தது. இருந்தும் என்ன பயன்? யாரும் அந்தச்செடியின் பெரிய வண்ணப்பூக்களின் அழகை நின்று இரசித்ததில்லை. அதன் நறுமணத்தை நுகர்ந்து கிளர்ச்சி கொண்டதுமில்லை. தினமும் காலையில் பூக்க வேண்டியது, மாலையில் உதிர்ந்து சருகாக வேண்டியது. இப்படி வாழ்க்கை எந்தஒரு மாற்றமுமில்லாமல் சென்றுகொண்டிருந்தது. இத்தனைக்கும் இந்தக்காட்டில் ஏராளம் பறவைகள், மிருகங்கள் இருக்கத்தான் செய்தன. இருந்தும் ஒன்றிற்குக்கூடவா இரசிக்கும் மனோபாவம் இல்லாமல் போய்விட்டது?. பாராட்டுக்களுக்காக ஏங்கிக்கிடந்தது அந்தக் காட்டுச்செடி.

ஒருநாள் அந்தச்செடி இருக்கும் பாதைவழியாக ஒட்டகச்சிவிங்கி ஒன்று வந்தது. உணவுக்காக இலைதழைகளைத் தேடி சிவிங்கி இப்படி வருவது வழக்கம்தான். ஆனால் இந்தமுறை அது தனது குட்டியடன் வந்திருந்தது. செடியின் அழகு குட்டியை ஈர்த்திருக்க வேண்டும். குட்டிகளுக்குத்தானே அழகான விஷயங்கள் பிடிக்கும். அதுசெடியின் அருகில் வந்து பார்த்தது.

“இந்தப்பூக்கள்ல்லாம் அழகா இருக்குலமா?”– என்று கேட்டது. பெரிய சிவிங்கி ஒருமலரைப் பறித்துக் குட்டியின்தலையில் வைத்துப் பார்த்தது.

“ஆமா ரொம்பஅழகா இருக்கு!”– என்றபடி நிறைய மலர்களைப் பறித்தது. எங்கிருந்தோ தையல்சிட்டு ஒன்று வந்தது. அது பெரியசிவிங்கி பறித்தமலர்களை ஒருமாலையாகக் கோர்த்துத் தந்தது. அதைக்குட்டியின் கழுத்தில்போட்டு அழகு பார்த்தது பெரியசிவிங்கி. குட்டிக்குக் குஷி தாளவில்லை. அது சந்தோஷத்தில் அங்குமிங்கும் துள்ளிக்குதித்தது. செடிக்கும் சந்தோஷம்.

“நன்றி சிவிங்கியே!”– என்றது அது.

“மலர்கள் தந்ததுக்காக நாங்கதான் உனக்கு நன்றி சொல்லனும்!”– என்றது பெரியசிவிங்கி.

“இத்தனை நாளா இங்க இருக்கேன்! யாருக்கும் என்னோட அருமை தெரியல! உங்களுக்குத்தான் தெரிஞ்சது!”– என்றது செடி. பதிலுக்கு ஒட்டகச்சிவிங்கியும் நன்றி சொல்லிவிட்டுப் போனது.

அந்தச்செடி இருந்த வரிசைக்கு எதிர்வரிசை மரத்தில் ஒரு பெரியகுரங்கு ஒன்று இருந்தது. இதுநாள் வரை அது செடியைக் கொஞ்சமும் கண்டுகொண்டதில்லை. ஆனால் குட்டிச்சிவிங்கி அவ்வப்போது வருவதையும், அது அந்தச்செடியின் மலர்களை மாலையாக்கிப் போட்டுக்கொள்வதையும் பார்த்தது. அதற்கு என்ன தோன்றியதோ? ஒருநாள் அது செடியிடம் வந்தது.

“இப்பவாவது என்னோட அருமை உனக்குப் புரிஞ்சதே?”– என்று மனத்தில் எண்ணிக்கொண்டது செடி. குரங்கு ஒரேஒரு மலரைமட்டும் பறித்துக்கொண்டு போனது. “மாலைதொடுக்க குறைந்தது பத்துப்பதினைந்து மலர்களாவது வேண்டும்! ஒற்றைமலரைப் பறித்துக் கொண்டுபோய் இவன் என்ன செய்யப்போகிறான்? தலையில் சூடிக்கொள்ளப் போகிறானா?”– ஆச்சரியத்துடன் பார்த்தது செடி. மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டது குரங்கு. முதலில் மலரை முகர்ந்து பார்த்தது. அதன் முகம் எட்டுக்கோணலாகியது.

“என் பூவோட மணம் இவனுக்கு என்ன நாத்தமாவா தெரியுது? இப்படி முகத்தைச் சுழிக்கிறான்?”– எண்ணிக்கொண்டது செடி. அப்புறம் குரங்கு அந்தப்பூவின் இதழ்களை ஒவ்வொன்றாகப் பிய்த்துப்போட ஆரம்பித்தது. இடையிடையே செடியைப்பார்த்து கேலிசெய்வது போல் விகாரமாகப் பல்லை வேறு காட்டியது. அதோடு நிற்கவில்லை, அவ்வப்போது வருவதும் செடியின் மலரைப் பறித்துக்கொண்டு போய் பிய்த்துப்போட்டு விளையாடுவதையும் வழக்கமாகக் கொண்டது. இதனால் செடி மிகவும் மனம் நொந்துபோனது.

செடிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. “அருமை தெரியாதவன்! அரைக்கிறுக்கன்!”– என்று அது குரங்கைத்திட்டியது. தனதருகே படர்ந்துகிடந்த ஒருகொடியிடம் “என் கண்ணு முன்னாடியே என்னோடஅழகான மலர்களைப் பிச்சுப்போடுறான் பாரு! நாளைப்பின்ன உன்பக்கத்துல வரும்போது அவன்கழுத்தைச் சுத்தி இறுக்கு கொடியே! குரங்கன் ஒழிஞ்சு தொலையட்டும்!” – என்றது. அதற்கு அந்தக்கொடி “உயரமான மரங்கள்ல்ல நான்படர்றதுக்கு அவன்தான் எனக்குஉதவி பண்ணுறான்! என்னோட கிளைகளை இழுத்துட்டுப்போயி மேல கொண்டுபோயி விடுறான்! குரங்கன் எனது நண்பன்! அவனுக்கு எப்படி நான் கெடுதல் செய்யமுடியும்?”– என்றது. “சே… போயும்போயும் இந்தக்கொடிகிட்ட போயி சொன்னோமே!”– என்று எண்ணிக் கொண்டது அந்தச்செடி.

ஒருநாள் பெரியசிவிங்கி அந்தப்பக்கம் வந்தது. செடி அதனிடம் குரங்கு செய்வதைச் சொன்னது. “தினசரி என்பூவைப் பறிச்சுட்டுப் போயி அதைப் பிச்சுப்போட்டு விளையாடுறான்! என்னைப்பார்த்து பல்லைக்காட்டிக் கிண்டல்வேற பண்ணுறான்! நீ உன்னோட வலிமையான கால்களால குரங்கனுக்கு ஓங்கி ஒரு உதைகொடு சிவிங்கியே!”– என்றது. அதற்கு ஒட்டகச்சிவிங்கி சிரித்தது. “கொஞ்சம் மேல பாரு”– என்றது அது. செடி அண்ணாந்து பார்த்தது. பெரியபறவை ஒன்று தனதுகுஞ்சுகளை ஒருமரத்திலிருந்து வேறொரு பாறைப்பொந்திற்கு அவசரஅவசரமாக இடம்மாற்றிக் கொண்டிருந்தது.

“இது ஏன் இப்படி பண்ணுது?”– கேட்டது செடி.

“என்னைப் பாத்து பயந்துதான்! போனதடவை அது கூடுகட்டுன மரத்தோட கிளையைப் பிடிச்சுஇழுத்ததுல கூடு கலைஞ்சுபோயி அது அடைகாத்த முட்டைலாம் கீழவிழுந்து உடைஞ்சுபோச்சு! நான் வேனும்னு பண்ணல! இருந்தாலும் இந்தத்தடவை அதுமாதிரி நடந்துரக்கூடாதுன்னு பயப்படுது! கூடு கலைஞ்சா குஞ்சுகளுக்கு ஆபத்தில்லையா? அதான் அவசரஅவசரமா எனக்கு எட்டாத உயரத்துக்குக் குஞ்சுகளை இடம்மாத்துது! அதுகிட்ட போயிகேட்டா என்னை நல்லவன்னு சொல்லுமா?”– கேட்டது ஒட்டகச்சிவிங்கி.

“கண்டிப்பா கெட்டவன்னுதான் சொல்லும்!” – இது செடி.

“உனக்கு நான் நண்பன்! ஆனா பறவைக்கு எதிரி! குரங்கன் உனக்கு எதிரி! ஆனா கொடிக்கு நண்பன்! இதுதான் வாழ்க்கை! இதுல நட்பும் பகையும் மாறிமாறித்தான் வரும்! நல்லவங்களும் கெட்டவங்களும் மாறிமாறி வருவாங்க! குரங்கன் செய்யுறது உனக்குப் பிடிக்கலைனா பேசாம ஒதுங்கிக்கோ! இந்தப்பறவை என்னைப்பாத்து ஒதுங்குற மாதிரி!”– என்றது ஒட்டகச்சிவிங்கி. அப்போது செடி குறுக்கிட்டது.

“பறவையால ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு இடம் மாறமுடியும்! ஆனா நான் அப்படி இல்லையே? ஒரே இடத்துல இருக்குறவன்! நான் எப்படி குரங்கன்ட்ட இருந்து ஒதுங்க முடியும்?”– கேட்டது செடி. அதற்கு ஒட்டகச்சிவிங்கி அதன் காதில் ஏதோ கிசுகிசுத்து விட்டுப்போனது.

மறுநாள் குரங்கு செடியில் மலர்களைப் பறிக்க வந்தது. குரங்கைக் கண்டவுடன் தொட்டாற்கிணுங்கி மரம் தனது இலைகளைச் சுருக்கிக்கொள்ளுமே? அது போன்று செடி தனது உடலைக் குறுக்கிக்கொண்டது. அதன் மலர்கள் கூம்பிப்போய் தொங்கியபடி இருந்தன. குரங்கு மலர்களை உற்றுப்பார்த்தது. பிறகு செடியை ஆய்ந்து பார்த்தது. உதட்டைப் பிதுக்கியபடி போய்விட்டது. குரங்கு அருகில் வரும்போதெல்லாம் செடி இவ்வாறு நடந்துகொண்டது. செடி தனது செய்கையை விரும்பவில்லை என்பதைக் குரங்கு புரிந்து கொண்டது. அது செடியிடம் வருவதை நிறுத்திக்கொண்டது. அதை கேலிசெய்வதையும் விட்டுவிட்டது. இப்போதும் அந்தக்காட்டுச்செடி பூக்களைப்பூக்கச் செய்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அது தன்னைப் பாராட்டுபவர்களை மட்டுமல்ல தன்னை தூற்றுபவர்களையும் எதிர்கொள்ளும் மனநிலையிலேயே இருந்து வருகிறது.

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: