பேருந்து, அண்ணாசாலை வழியே சென்று கொண்டிருந்தது. சாலையில் சில பள்ளி மாணவிகள் சிரித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் செல்கின்றனர். ஒரு வயதான தாத்தா பேரனை பள்ளிக்கு அழைத்துக்கொண்டு போகிறார். இளவயது தாய் ஒருவர் தோளில் ஒரு பையுடன், தன் குழந்தையை தூக்கியபடி வேகமாக நடந்து கொண்டிருக்கிறார். எங்கோ மெலிதாக, ‘நான் தேடும் செவ்வந்திபூவிது’ என்ற இளையராஜாவின் மெலடி பாடல் கேட்கிறது… இவைகளை எல்லாம் கடந்து, பேருந்து சென்று கொண்டிருக்கிறது. இத்தனையும் தாண்டி, தனக்கு பிடித்த சன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாலும், பூங்குழலிக்கு மனம் சாலையில் லயிக்கவில்லை. கண்களில் கண்ணீர் வருவதற்குத் தயாராக உள்ளது… காலையில் வீட்டில் நடந்த சம்பவமே மீண்டும், மீண்டும் மனதில் வந்து தொல்லைப்படுத்துகிறது. அதன் தொடர்ச்சியாக அவளுடைய நினைவலைகள் பின்னோக்கிச் செல்கின்றன.
பூங்குழலி செல்லப்பெண், இரண்டாவது மகள். அக்காவிற்கு திருமணம் முடிந்து டெல்லியில் இருக்கிறாள். ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. இவள் பட்டப்படிப்பு படித்து முடித்த ஓராண்டிற்குள், ஒரு நல்ல தனியார் நிறுவனத்தில் கணக்காளர் பணியும் கிடைத்து, கை நிறைய சம்பாதிக்கிறாள். அங்கு தான் முதன்முதலாக கலையரசனை சந்தித்தாள். ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாகத் தான் இருவரும் பழகினர். முற்போக்குச் சிந்தனை , சமூகம் சார்ந்த பிரச்சினைகள் என இருவருக்கும் ஒத்த கருத்துகள் இருந்த படியால், நட்பு காதலாக மாறியது.
‘ நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா’
என்று முதலில் அவன் தான் கேட்டான். இவளுக்கும் பிடித்திருந்ததால், உடனே சரி என்று சொல்லி விட்டாள். அழகான காதலுடன் சிலமாதங்கள் ஓடின. நல்ல வரன் வருகிறது என்று பூங்குழலியின் அம்மா தான் திருமணப்பேச்சை எடுத்தார். அன்று தான் பெரிய பூகம்பமே வெடித்தது. அவளின் அப்பாவிற்கு சாதிப்பற்று அதிகம். வேறு சாதி மாப்பிளையை ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை. தன் மகளின் பிடிவாதத்தைத் தாக்குப் பிடிக்கமுடியாமல்,
‘எங்கு வேண்டுமானாலும் போய் தொலை, என் கண் முன்னே நிக்கதே, ஆனா ஒன்னு, எனக்கும் உனக்கும் இனி எந்த உறவும் இல்ல. நாளை பிரச்சனை என்று என் முன்னாள் வந்து நிற்கக்கூடாது. ‘
என்று சினிமாக்களில் காட்டப்படும் அப்பாக்கள் போல் சொல்லிவிட்டார். அவள் அம்மாவும் செய்வதறியாது, அப்பாவின் முடிவே தன் முடிவு என்று தள்ளி நின்று கொண்டார்!.
பிறகென்ன… தான் காதலித்த கலையரசனை அவனின் பெற்றோர் சம்மதத்துடன் ஒரு கோவிலில் கரம் பிடித்தாள் பூங்குழலி. அவனுடைய உறவினர்கள், நண்பர்கள் சூழ வரவேற்பும் சிறப்பாக நடந்தேறியது. வந்தவர்கள் எல்லாம் அழகான சோடி என்று வாழ்த்தினார்கள். இரண்டு ஆண்டுகள் இருவரும் ஒருவருக்கொருவர் காதலை, அன்பை போட்டிபோட்டுக் கொண்டு பரிமாறினார்கள். மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்தினர். அவனும் சரி, அவன் பெற்றோர்களும் அன்பை வாரித்தான் வழங்கினர். திருமணத்திற்குப் பிறகு கலையரசன் வேறு ஒரு அலுவலகத்திற்கு மாறி இருந்தான். இரண்டாண்டுகள் கடந்தப்பின்னர் தான் குழந்தை என்ற வடிவில் பிரச்சினை தலைத் தூக்கியது.
மாமியார் தான் முதலில் ஆரம்பித்தார். தனக்கு தெரிந்த ஒருவர், இதற்கு வைத்தியம் செய்யும் சிறந்த டாக்டரின் முகவரியை கொடுத்தாகவும் சொன்னார். முதலில் பூங்குழலிக்கும், அவளது கணவனுக்கும் இதில் விருப்பமில்லை அடிக்கடி தன் அம்மா சொல்லிக் கொண்டே இருப்பதால்,
‘ ஒரு தடவை போய் தான் பாப்போமே குழலி’ என்றான்.
ஒருநாள் இருவரும் போனார்கள். பல பரிசோதனைகள் செய்து விட்டு சிக்கல் பூங்குழலிக்குத் தான் என்று தெரிய வந்தது.
பிறகென்ன.. ஒரே மாத்திரை, மருந்து மயம் தான்.
இரண்டாண்டுகள் ஓடி விட்டன. ஒரு பலனுமில்லை. குழலியின் ஆர்வம் குறைந்து கொண்டே வந்தது. முன்பு போல் சுறுசுறுப்பாக இருக்க முடியவில்லை, உடல் எடை வேறு கூடுகிறது. டெஸ்ட் டியூப் மருத்துவத்திலும் அவளுக்கு விருப்பமில்லை, அதற்கு பதில் ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கலாம் என்று சொன்னாள். ஒரு மருந்தும் வேண்டாமென்று நிறுத்தியும் விட்டாள். ஆனால் அவனுடைய பெற்றோர்களுக்கு தத்து எடுப்பதில் சம்மதமில்லை. கணவனிடம் இதைப்பற்றி பேசினால் பிடிகொடுத்தே பேசமாட்டேன் என்கிறான். இப்படியே சில மாதங்கள் சென்றன.!
அதிலிருந்து அவள் மாமியார் தினமொரு குறை, சண்டை என வீட்டில் ஏதாவது பிரச்சினையைக் கிளப்பிக் கொண்டே இருந்தார். கலை, குழலி வாழ்க்கை ஒரு வெறுமையை ஆட்கொண்டிருந்தது. சரியாக பேசியே மாதக்கணக்காகிறது. ஏதோ இயந்திரம் போல் ஒரு வாழ்க்கை. இதற்கிடையில், அடிக்கடி அவனின் அம்மாவும், அப்பாவும் தன் தூரத்து சொந்தத்தில், வசதியில்லாத குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருமணம் ஆகாமல் இருக்கிறாள் என சாடைமாடையாக சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அதனுடைய உச்சம் தான் இன்று காலை நடந்தேறிய சம்பவம்.
குழலி சமைத்துக் கொண்டிருந்தாள். கலை சமைலறைக்குள் வந்தான். ஒன்றுமே பேசாமல், தானே காப்பி கப்பை எடுத்து, டிகாக்சன், சர்க்கரை, பால் ஊற்றி, கலந்து பொது அறைக்குச் சென்றான். அப்போது தான், அவனுடைய அம்மா,
‘இங்க பாரு கலை, இதுக்கு மேல எங்களால பொறுத்துக்க முடியாது… ஒண்ணு உன் பொண்டாட்டிய டெஸ்ட் டியூப் டிரீட்மெண்ட்க்கு ஒத்துக்க சொல்லு, இல்லனா, உனக்கு நாங்க வேற பொண்ணு பாக்குறோம்.. இதுக்கும் நீங்க ஒத்துக்கலைனா, நாங்க இரண்டு பேரும் எங்கேயாவது விழுந்து சாக வேண்டியது தான் ‘ என்றார்.
உடனே கலை கோபமாக ,
‘ஏன் இப்படி பேசுறீங்க.. நீங்க ஏன் சாகனும், நான் தான் சாகனும்… போற வழியிலே அக்சிடெண்ட் ஆகி அப்படியே போக வேண்டியது தான், மனுஷனுக்கு நிம்மதியே இல்ல… என்ன வாழ்க்கை இது.!’
என்று கத்திவிட்டு, கொடியில் இருந்த சட்டையை எடுத்து போட்டுக்கொண்டு வேகமாக வெளியே போய்விட்டான்.
பிறகு அவனின் அம்மா ஒரே அழுகை.. அப்பா, அவரை சமாதானம் செய்து கொண்டிருந்தார்.
குழலி சமையல் செய்து முடித்தப்பிறகும் கலை வரவில்லை. அவளுக்கு சாப்பிடப் பிடிக்கவில்லை. மதியம் எடுத்துக்கொள்ளவும் தோன்றவில்லை. அலுவலகத்திற்கு தயாரானாள். வெளியில் வந்து செருப்பு போடும் போது தான் கலை வாயிற்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான். நிமிர்ந்துகூட குழலியைப் பார்க்கவில்லை. சட்டென்று உள்ளே போய்விட்டான்.
நடத்துனர், அவள் இறங்கும் நிறுத்தத்தின் பெயரைச் சொன்னவுடன், நினைவிற்கு வந்தவளாய், உடனே இறங்கி, அலுவலகத்திற்கு நடந்தாள். உள்ளே நுழைந்ததுமே, அவளின் தோழி நளினி,
‘என்ன குழலி, ஒரு மாதிரி இருக்க, வீட்டுல ஏதாவது பிரச்சனையா?’ என்றாள்.
‘ஆமாம், பிரச்சனைதான்.. நான் அப்புறம் சொல்றேன்..’
என்று சொல்லிவிட்டு, அந்த அலுவலகத்தின் அடுத்த அறையான உதவி மேலாளர், ரகுவரனின் அறைக்குள் சென்றாள்.
ரகு, கலையின் நண்பன், இவர்கள் காதலித்த நாளிலிருந்தே இவர்களுக்கு ஆதரவாக இருந்தவன். கலையின் பெற்றோரிடம் இதற்காக பேசியவனும் கூட.!
‘என்ன குழலி, காலையில் வந்தவுடன் இங்கே. அது சரி ஏன் உன் முகம் வாடி இருக்கிறது? என்றான்.
‘ரகு.. உங்கக்கிட்ட ஒன்னு கேக்கணும். சில மாதங்களாக நம்ம அலுவலகத்தில் நிதி திரட்டி, ஏதோ ஆசிரமத்திற்குக் கொடுப்பீங்களே. அது என்ன என்று எனக்கு சொல்றீங்களா, எனக்கு அதைப்பற்றி தெரிஞ்சுக்கணும்,’ என்றாள்.
‘ என்ன திடீரென்று..? ”
‘ நான் அங்கே போகணும். முகவரி கொடுங்களேன்,’
‘ நானும் வருகிறேன் பா, என்னனு சொல்லு’
‘ நான் ஒரு குழந்தையை தத்து எடுக்கலாம்னு இருக்கேன்.. அதான்…’
‘ ஓ.. அப்படியா, நல்ல விசயம் தானே, கலையும் வரானா?’
‘அதெல்லாம் அப்புறம் சொல்றேன். இன்னைக்கு சாயந்திரம் போகலாமா..’
‘ஓகே … போகலாம்.’ என்றான் ரகு.
மகிழ்ச்சியுடன் தன் இருக்கைக்கு வந்தமர்ந்தாள் குழலி.
சில மாதங்களாகவே ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்க்க வேண்டுமென்று அவளுக்கு ஆசை. இதற்கு அவள் கணவன் வீட்டில் நிச்சயம் ஆதரவு இருக்காது. இன்று நடந்த சம்பவம் அவளை மிகவும் பாதிக்கத்தான் செய்தது.
மனம் திரும்ப, திரும்ப சொல்லிக்கொண்டது என்னவென்றால் , ‘ என்னுடைய கலை இப்படி மாறுவான் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லையே. அவ்வளவு முற்போக்குச் சிந்தனையுடையவன். தனக்கு என்று வந்தவுடன் எப்படி, இந்தளவிற்கு மாறிப்போனான். அவனுடைய பெற்றோர்கள் பழமைவாதிகள், தன்னுடைய ஒரே மகனுக்கு தங்கள் குடும்ப வாரிசு, தன்னுடைய இரத்தத்தில் தான் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அவர்களை சொல்லிக் குற்றமில்லை, அவர்களை கலையால் சமாளிக்க முடியும். ஆனால் அவன் அதை விரும்பவில்லை. அவன் மனம், அவனுடைய உதிரத்தில் பிறக்கும் குழந்தையைத்தான் தேடுகிறது. அவர்களை இனிமேலும், நாம் வருத்தப்பட விடக் கூடாது.
என்னுடைய வாழ்க்கையை நான் வாழ வேண்டும். அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழட்டும். இதற்குப் பிரிவு தான் ஒரே வழி என்றால் அதனை ஏற்றுக் கொள்வது தான் சிறந்த வழி.!’
என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள் பூங்குழலி.
மாலை, ரகுவுடன் ஆசிரமம் நோக்கி பயணப்பட்டாள்.
‘ நான் ஒண்ணு தெரிந்து கொள்ளலாமா குழலி?’
‘ ம்ம்ம் … கேளுங்கள்… ரகு’
‘ இது கலைக்கு தெரியுமா…?’
‘தெரியாது… உங்களுக்கு மட்டும் சொல்கிறேன். ஒரு பெண் குழந்தையைப் பார்த்து, எல்லாமே சரியானதாக இருந்தால் முடிவு செய்துவிட்டு வரலாம். ஒரு மாத காலத்திற்குள், ஒரு வீடு வாடகைக்கு பார்க்கணும். எல்லாம் ரெடியான பிறகு, கலையிடமும், அவன் அம்மா, அப்பாவிடமும் சொல்லி விட்டு, வெளியே வந்து, என் மகளுடன் எனக்கான வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் ரகு.!’
‘குழலி, அவசரப்பட வேண்டாம். கடைசியாக ஒரு தடவை பேசிப்பார்க்கலாமே!.’
‘வேண்டாம் ரகு, நிறைய தடவை பேசிட்டேன். அவர்களின் விருப்பம் வேறு. சுதந்திரமென்பது அவரவர் வாழ்க்கைக்கானது. அவர்கள் விருப்பப்படி அவர்கள் வாழட்டும். எனக்கு ஒத்து வரவில்லை. என்னுடைய விருப்பம் வேறு. நான் யாரையும் கஷ்டப்படுத்த விரும்பல.’ என்றாள்.
மேலும், ‘ஒரு விசயம் மட்டும் விளங்கல ரகு, பெரும்பாலான ஆண்கள் இருபது வயதில் பேசும், சிந்திக்கும், முற்போக்குத்தனங்கள் அனைத்தும் முப்பது வயதிற்கு மேல், குறைந்து போய் விடுகிறது. ஆனால் அதுவே முற்போக்குச் சிந்தனையுள்ள பெண்களுக்கு வயதாக, வயதாக இந்த முற்போக்குச் சிந்தனைகள் கூடிக் கொண்டே போகிறது.!’ என்றாள்.
‘உண்மைதான் குழலி… முற்போக்குச் சிந்தனையுள்ள பெண்களிடம் ஆண்கள் வாதம் செய்யவும், விவாதிக்கவும், விரும்புவார்கள். அதே, அவர்கள் வாழ்க்கையில் வரும் போது, அவர்களின் ஆதிக்க மனப்பான்மை தான் இதனைத் தடுக்கிறது. எப்படியோ, நீ புத்திசாலிப்பெண். எதையும் சமாளிக்கும் திறன் உன்னிடம் இருக்கிறது. வாழ்த்துகள்.!’ என்றான் ரகு.
‘நன்றி ரகு.’ என்றாள் குழலி சிரித்துக்கொண்டே.!
அதே சமயத்தில், ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தின் வாயிலை நெருங்கியது அவர்கள் சென்ற ஆட்டோ.
முற்றும்.
Add comment