சிறப்பு தரும் அமாவாசை
சிராத்தம், தர்ப்பணம், பித்ரு காரியம், படையல் என்றெல்லாம் பல்வேறு வார்த்தைகள் புழக்கத்தில் இருந்தாலும், அவை அனைத்தும் ஒன்றையே குறிப்பன ஆகும். நதிகள் பல இடங்களில் உற்பத்தியாகி, பல ஊர்களின் வழியாக வரும்போது, அவை ஆறு என்று பெயர் பெற்று சமுத்திரத்தில் கலக்கின்றன. அதுபோல், நாம் செய்கிற சிராத்தம், ஒவ்வொரு வருடமும் நம் முன்னோர் இறந்த திதியில் செய்யப்படுவது. தர்ப்பணம் என்பது ஒவ்வொரு அமாவாசை அன்றும் செய்யப்படுகிறது. படையல் என்பது வருடத்துக்கு ஒருமுறை செய்யப்படுவது. ஆனால் இவை அனைத்துமே இறந்த முன்னோர்களுக்காகச் செய்யப்படுகிற சடங்குகள். இவை நம் முன்னோர்களைச் சென்றடைந்து, அவர்களின் ஆத்மாக்களைக் குளிர்வித்து, நமக்கு அவர்களின் ஆசிகளைப் பெற்றுத் தரும் என்பது சத்திய வாக்கு.
நவீன உலகம், விஞ்ஞான யுகம், கணினி யுகம் என்று காலம் வேகமாக மாறிவிட்டது. ‘என் வாழ்க்கையே இயந்திரமயமாகிவிட்டது. தர்ப்பணம் செய்யவே நேரம் இல்லை’ என்று அங்கலாய்க்கிறார்கள் பலர். மாதத்தில் ஒரே ஒருமுறை வருகிற அமாவாசைக்கே இப்படிச் சொல்கிறார்கள். ஆனால், வருடத்துக்கு 96 முறை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்கிறது வேதம். ஆகவே, எந்தச் சாக்குப் போக்கும் சொல்லாமல், தட்டிக் கழிக்காமல் முன்னோரை உரிய காலத்தில் வழிபடுவது நமக்கு நன்மை பயக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
இவை அனைத்தையும் செய்ய முடியவில்லை என்றாலும், ஆடி மாத அமாவாசை தர்ப்பணமும், தை மாத அமாவாசை தர்ப்பணமும் அவசியம் செய்ய வேண்டும். ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டிய சிராத்தம் விட்டுப்போனால் (தீட்டு ஏற்படுவதால்) மஹாளயபட்சம் அன்று தர்ப்பணம் செய்ய வேண்டும்.
இந்தப் புனிதமான தர்ப்பணங்களை உத்தராயன, தட்சிணாயன காலங்களில் செய்யாமல் இருந்தால், குழந்தையின்மை, கருக்கலைவு, குடும்பத் தகராறு, ஆரோக்கியக் குறைபாடு, அகால மரணம், திருமணத் தடை, தீய பழக்கங்கள், ஊனமுற்ற குழந்தைப் பிறப்பு, மூளை வளர்ச்சிக் குறைவுள்ள குழந்தைப் பிறப்பு போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குடும்பத்தில் நடைபெற்று, நம் நிம்மதியைக் குலைத்துவிடும் என்கிறது சாஸ்திரம். இவை பித்ரு தோஷம், மாத்ரு தோஷம், நாதி தோஷம், பந்து தோஷம், புத்ர தோஷங்களாகத் திகழ்கின்றன. இவை முறையற்ற வாழ்க்கை, தேவையற்ற கோபம், மன உளைச்சல், மன அழுத்தம், தற்கொலைச் சிந்தனை, உடல்வலி போன்றவற்றை உருவாக்கி, நிம்மதியற்ற வாழ்க்கையைத் தந்துவிடும்.
ஆத்மகாரகனாகிய சூரியனும், மனோகார கனாகிய சந்திரனும் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் இணைவார்கள். இதையே அமாவாசை என்கிறோம். சூரியன் என்பதை பித்ருகாரகன் என்றும், சந்திரன் என்பதை மாத்ருகாரகன் என்றும் சொல்கிறது ஜோதிடம். ஆகவே சூரியன், சந்திரன் இணைகிற அமாவாசையில், இறந்த தாய், தந்தை மற்றும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஆராதிப்பது சிறப்பு என்கிறது சாஸ்திரம்.
கிட்டத்தட்ட, நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம்.
பூலோகம் வந்த முன்னோர்கள் மீண்டும் பிதுர்லோகம் செல்லும் தை அமாவாசை நாளில் புனித நீராடி, அவர்களுக்கு எள்ளும் நீரும் அளித்தால் எண்ணற்ற பலன்களும், தலைமுறைக்கும் புண்ணியம் சேரும் என்கின்றன புராணங்கள்.
பூமியில் பிறந்தவர்கள் பாவ புண்ணியத்திலிருந்து தப்பமுடியாது. பாவங்களில் மகா பாவமாக கூறப்படுவது பித்ரு கர்மாவை நிறை வேற்றாமல் இருப்பதுதான். உயிருடன் இருக்கும் பெரியவர்களை மதிக்காமல், பலர் உள்ளனர். அந்த உயிர்கள் படும் துன்பம், பாவங்கள் ரூபத்தில் கவனிக்க தவறியவர்களையே வந்து சேரும். நாம் எங்கு சென்றாலும் உடன் வருவது பாவபுண்ணியங்கள் மட்டுமே. பித்ரு பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்ய ஏற்படுத்தப்பட்டது நம் முன்னோர்களுக்கு மறக்காமல் காரியம் நிறைவேற்றவேண்டும்.
தேவர்களின் தேவன்
அதிதியின் புதல்வரான ஆதித்யன் அதாவது சூரியன் தேவர்களில் முக்கியமானவர். கண்களுக்குப்புலப்படும் தேவன் சூரியன் ஆகையால் ஒட்டு மொத்த தேவர்களின் பிரதிநிதியாக அவரைப்போற்றுகிறோம்.
அமாவாசை தினத்தில் அவருக்குப்பெருமை அதிகம் அது சந்திரனோடு அவர் சேர்ந்திருக்கும் நாள் என்கின்ற வேதங்கள்.
சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு தட்சிணாயனம் என்றும் வடக்கு நோக்கிய நகர்வு உத்தராயணம் என்றும் கூறப்படுகிறது. உத்தராயணத்தில் பகல் பொழுது அதிகமாக இருக்கும். வேதம் சொல்லும் அத்தனை விஷயங்களுக்கும் உலக நன்மையை ஏற்படுத்துவது என்பதோடு மட்டுமல்லாமல் திருமணம் முதலிய அன்றாட வாழ்க்கையின் செழிப்பை ஏற்படுத்தும் செயல்களையும் உத்தராயணகாலத்தில் செய்யவேண்டும். என்று தர்மசாஸ்திரம் வலியுறுத்துகிறது.
ஒவ்வொரு மனிதனும், தேவகடன், பித்ருகடன், ரிஷிகடன் ஆகியவற்றைச் சரிவர நிறைவேற்ற வேண்டும். முறையான இறைவழிபாடு, குலதெய்வ வழிபாடு ஆகியவற்றைச் செய்வதன் மூலம், தேவகடனிலிருந்தும், தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றைத் தக்க காலங்களில் செய்வதன் மூலம் பித்ருகடனிலிருந்தும், முனிவர்கள் அருளிய உயர்ந்த படைப்புகளை பாராயணம் செய்து உபாசிப்பதன் மூலமும், குருமார்களையும் ரிஷிகளையும் ஆராதித்தல், வீடு தேடி வரும் சன்யாசிகளுக்கு உணவளித்தல், அவர்களுக்கு வேண்டுவனவற்றை அளித்தல் போன்றவற்றின் மூலமும், ரிஷிகடனிலிருந்தும் நிவர்த்தி அடையலாம்.
பித்ரு லோகத்தில் வசிப்பவர்கள், மாதப்பிறப்பு, அமாவாசை, மஹாளய பட்சம், அவரவர் மறைந்த திதி ஆகிய நாட்களில் மட்டுமே பூலோகப் பிரவேசம் செய்ய இயலும். அதில், மஹாளய பட்சம், ‘பித்ருக்களின் பிரம்மோற்சவம்’ என்று சிறப்பிக்கப்படுகிறது. ஏனேனின், இந்த 15 நாட்கள் அவர்கள் தொடர்ச்சியாக பூலோக வாசம் செய்ய இயலும். அவர்கள், இவ்வாறு வாசம் செய்ய பூலோகம் வரும் போது, அவர்களை நினைத்துச் செய்யப்படும் சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றுக்கு அதிக பலன் உண்டு.
மிகுந்த தெய்வ பக்தி உடையவர்கள், வேதம், தமிழ் மறைகள் ஓதியவர்கள், நீதி நேர்மையுடன் வாழ்ந்தவர்கள், பித்ரு சரீரம் அடையும் போது, மிகுந்த நன்மை செய்பவர்களாகிறார்கள். அவர்களுடைய சரீரம் ஒளி பொருந்தியது. அவர்களுக்குச் செய்ய வேண்டிய சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றைச் சரியாகச் செய்யும் போது, குடும்பத்தில் இருக்கும் தீராத நோய், கடன், பகை, எதிர்பாராத விபத்துக்கள், குழந்தையின்மை போன்ற பல ப்ரச்னைகள் நீங்குகின்றன. மாறாக, இது தவிர்க்கப்பட்டால், தலைமுறைகள் தாண்டியும் ப்ரச்னைகள் தொடரும். இறைவழிபாட்டின் மூலம் கிடைக்கும் வரங்களை, பித்ரு சாபம் தடுக்கும் வல்லமையுடையது.
இவ்விடத்தில் ஒன்றை நினைவு கொள்ள வேண்டும். நம்மை பெற்றவர்களும், வளர்த்து ஆளாக்கியவர்களுமான, நமது முன்னோர்கள் ஒரு போதும் நம்மைச் சபிக்க மாட்டார்கள். இப்பூவுலகில், ஒருவர் செய்ய வேண்டிய சிரார்த்தம் தடைபட்டால், அதனால், பித்ருக்களுக்குக் கிடைக்க வேண்டிய உணவு கிடைக்காமல் போகும். அதனால் அவர்கள் அடையும் இன்னலே சாபமாக மாறி நம்மை அடைகிறது.
“சிரத்தையுடன் செய்ய வேண்டும்” என்பதாலேயே, சிரார்த்தம் என்ற பெயர் வந்தது. சிரார்த்தம், முன்னோர்கள் இறைவனடி சேர்ந்த தினத்தன்றும், மஹாளய பட்சத்தின் போதும் செய்ய வேண்டும். மேலும், ஒவ்வொரு மாத அமாவாசை, மாதப்பிறப்பு( இயலாதவர்கள், விஷூப்புண்ய காலம் என்று சொல்லப்படும், சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகிய மாதப்பிறப்புகளிலாவது) தர்ப்பணம் செய்யவேண்டும். பித்ருக்களுக்கு, மானிட சரீரமில்லாததால், அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் நீரை, இந்த சிரார்த்தம் தர்ப்பணம் ஆகியவற்றின் மூலம் பெறுகிறார்கள்.
இங்கு நாம் செய்யும் கர்மாக்களில் அளிக்கப்படும் பொருட்கள், பித்ருக்களின் தேவியாகிய ‘சுவதா தேவி’யால், அவர்களிடம் அளிக்கப்படுகின்றன.
சுவதா தேவி அவதரித்த புராணம்:
பிரம்மதேவர், ஆதியில், ஏழு பிதுர்க்களை உருவாக்கினார். இவர்களில் நால்வர், சரீரமுள்ளவர்கள். மூவர் தேஜோ ரூபமாக இருப்பவர்கள். அவர்களுக்கு, உணவாக, ஸ்ரார்த்த காலத்தில் கொடுக்கப்படும் தர்ப்பணத்தையும், ஸ்நான காலத்தில் செய்யும் தர்ப்பணத்தையும்(அர்க்யம்), தேவ பூஜை செய்யும் முன்பாக செய்யும் ஸ்ரார்த்தத்தையும் (நாந்தி முதலியவை) நியமித்தார்.
ஆனால், பூலோகத்தில், இதைச் செய்யும் போது, பித்ருக்களால் அவற்றைப் பெற முடியவில்லை. அவர்கள், பசி தாகத்தால், துன்புற்று, பிரம்மாவிடம் முறையிட்டனர். பிரம்மதேவர், பிரகிருதி தேவியின் அம்சமாக, நூறு சந்திரப் பிரகாசத்துடன், செண்பகப்பூவின் நிறத்துடன், புன்சிரிப்புடன் கூடியவளாகவும், அனைவருக்கும், வேண்டியதை அளிக்கும் சக்தி உள்ளவளாகவும், நூறு இதழ்கள் கொண்ட தாமரைப்பூவில் திருவடிகளை வைத்தவளாகவும் உள்ள ‘சுவதா’ என்ற பெண்ணைத் தோற்றுவித்து, பித்ரு தேவதைக்குப் பத்னி ஆகுமாறு (சில புராணங்களில், இந்த தேவி, தக்ஷப் பிரஜாபதியின் மகள் எனவும் வருகிறது) செய்தார்.
அதன் பின், ஸ்ரார்த்தம் முதலியவை செய்யும் போது, சுவதாவோடு கூடிய மந்திரத்தை உச்சரித்துச் செய்யலாயினர். அதன் பலனாக, ஸ்ரார்த்தக் காலத்தில் கொடுக்கப்பட்டவை, எந்த இடையூறும் இல்லாமல் பித்ரு லோகத்தை அடையலாயிற்று.
தேவர்களுக்கு, சுவாஹா மந்திரமும், பிதுர்க்களுக்கு சுவதா மந்திரமும் முக்கியமானவை. இவற்றை உச்சரிக்காமல், செய்யும் கர்மாக்களுக்கும் பலன் இல்லை. அது போல், சுவதா தேவியைப் பூஜிக்காமல் ஸ்ரார்த்தம் செய்தால், அவ்வாறு செய்தவன், ஸ்ரார்த்தம் செய்த பலனை அடையமாட்டான். இந்தப் புராணம் தேவி பாகவதத்திலும் இன்னும் பல புராண நூல்களிலும் வருகிறது.பித்ரு தேவதைகளுக்கு நாம் அளிப்பவை, சுவதா தேவியால் அவர்களிடம் சேர்ப்பிக்கப்படுகின்றன.
அவர்கள் வேறு பிறவி எடுத்திருந்தால் கூட, அவர்களிடம், அவர்களுக்குத் தேவையான பொருள்களாக மாற்றி அவற்றைச் சேர்ப்பிக்கிறாள் சுவதா தேவி. உதாரணமாக, அவர்கள் வினைப்பயனால் உணவுக்குக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால் நமது ஸ்ரார்த்த பலன், தக்க நேரத்தில் அவர்களுக்கு உணவாக யார் மூலமாவது கிடைக்கும்படி செய்வாள். அப்போது, அவர்கள் அடையும் திருப்தியால் ஏற்படும் புண்ணிய பலனை, நமக்குக் கிடைக்கும்படியும் செய்வாள். ஆகவே, பித்ரு காரியங்களை விடாமல் செய்ய வேண்டும்.
நம் முன்னோர்களில், யார் முக்தி அடைந்திருக்கிறார், யார் மறு பிறவி எடுத்திருக்கிறார், யார் பித்ருலோகத்தில் இன்னமும் வாசம் செய்கிறார்கள் என்பதை நாம் அறிய மாட்டோம். ஆகவே, கண்டிப்பாக, பித்ருகர்மாக்களை, முக்கியமாக, மஹாளய சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும்.
நமது முன்னோர்கள் யாராவது முக்தி அடைந்திருந்தால், நமது சிரார்த்தத்தின் பலனை அந்த இறைவனே ஏற்று அருள் புரிகிறார். பொதுவாக, நாம் செய்யும் தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றின் புண்ணிய பலன், சேமித்து வைக்கப்பட்டு, தக்க நேரத்தில் நம்மை வந்தடையும். ஆனால், மஹாளய பட்சத்தில், நமது முன்னோர்களின் ஆத்மாக்கள், ஒன்று சேர்ந்து, நம்மை ஆசீர்வதிக்க வருவதால், அந்த நேரத்தில் செய்யும் சிரார்த்த கர்மாக்களின் பலன்கள், உடனடியாக அவர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டு, பலனும் உடனடியாக நமக்குக் கிடைத்து, நம் தீராத, நாள்பட்ட ப்ரச்னைகள் உடனடியாகத் தீர்வுக்கு வருவதை நம் கண்முன் காணலாம்.
இந்த மஹாளய பட்சத்தில், ஒருவர், மறைந்த, தம் தாய் தந்தையர், தாத்தா,பாட்டி ஆகியோர்களுக்கு மட்டுமில்லாமல், குழந்தை இன்றி இறந்து போன தம் தாயாதிகளுக்கும் சேர்த்துத் தர்ப்பணம் செய்யலாம். அதன் பலனாக அவர்களின் ஆசிகளையும் பெறலாம்.
தட்சிணாயன காலத்தில் வரும் ஆடி அமாவாசை, நம் இதயத்தில் நீங்காத இடம் பெற்று வாழ்ந்துகொண்டிருக்கும் முன்னோருக்கு முக்கியமான நாள். முன்னோர் வழிபாட்டை ஆடி அமாவாசையன்று காலையே துவங்கிவிட வேண்டும். ஏதாவது ஒரு தீர்த்தக்கரைக்குச் சென்று தர்ப்பணம் செய்துவரவேண்டும். மதியம் சமையல் முடிந்ததும், மறைந்த முன்னோர் படங்களுக்கு மாலையிட்டு திருவிளக்கேற்ற வேண்டும். ஒரு இலையில், அவர்கள் வாழ்ந்த காலத்தில் விரும்பிச் சாப்பிட்ட உணவு வகைகளைப் படைக்கவேண்டும். படங்களுக்கு தீபாராதனை செய்தபிறகு, காகத்திற்கு உணவிடவேண்டும். இலையில் படைத்த படையலை வீட்டில் மூத்தவர் சாப்பிடவேண்டும்; அவர் சாப்பிட்டதும் மற்றவர்கள் சாப்பிடலாம். இவ்வாறு செய்தால் முன்னோர் மகிழ்ந்து, நம்மை ஆசீர்வாதம் செய்வதாக ஐதீகம்.
Add comment