ஒரு மனிதருக்கு கொஞ்ச நாளாகவே ஒரு சந்தேகம்.. தன் மனைவிக்கு சரியாக காது கேட்கவில்லையோ என்று. அதை நேரடியாக அவளிடம் கேட்பதற்கும் அவருக்கு தர்ம சங்கடமாக இருந்தது. குறைபாடு இருக்கிறதா, இல்லையா என்று தெரிந்தால்தானே அதற்கு ஏற்ற வைத்தியம் பார்க்க முடியும் என்றும் அவருக்கு குழப்பமாக இருந்தது.
ஒன்றும் புரியாமல் தனது குடும்ப டாக்டரிடம் ஆலோசனை கேட்டு போனார் அந்த மனிதர். டாக்டர் ஒரு எளிய பரிசோதனை செய்து பார்க்கும்படி அவரிடம் சொன்னார். “உங்க மனைவியிடமிருந்து சுமார் 50 அடி தூரத்தில் நின்று சாதாரண குரலில் அவரிடம் ஏதாவது பேசுங்கள். அதை அவர் காதில் வாங்கிக் கொண்டு பதில் சொல்கிறாரா என்று பாருங்கள். இல்லையென்றால், 10 அடி நெருங்கி 40 அடி தூரத்தில் நின்று பேசுங்கள். அதற்கும் பதில் இல்லை என்றால், இன்னும் 10 அடி நெருங்கி சென்று பேசுங்கள். இப்படியாக தூரத்தை குறைத்துக் கொண்டே சென்று, எவ்வளவு தூரத்தில் இருக்கும்போது அவர் பதில் சொல்கிறார் என்பதை கவனித்து, என்னிடம் சொல்லுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.
அன்று மாலை அந்த மனிதர் வீட்டிற்கு சென்றபோது அவரது மனைவி சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தாள். ‘இதுதான் சரியான சந்தர்ப்பம்’ என்று நினைத்த அவர், 50 அடி தூரத்தில் நின்று, சாதாரணமாக பேசும் குரலில், “இன்னைக்கு ராத்திரி வீட்டில என்னம்மா சாப்பாடு?” என்றார். பதில் வரவில்லை.
40 அடி தூரத்திற்கு நெருங்கி சென்று, மீண்டும், “இன்னைக்கு ராத்திரி வீட்டில என்னம்மா சாப்பாடு?” என்றார். பதில் வரவில்லை.
30 அடி தூரத்திலும் அதே கேள்விக்கு பதிலில்லை.
கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிச் சென்று, அவர் மனைவியின் முதுகிற்கு பின் நின்று கொண்டு “இன்னைக்கு ராத்திரி வீட்டில என்னம்மா சாப்பாடு?” என்றார்.
கோபத்துடன் திரும்பிய அவரது மனைவி சொன்னாள், “இதோட அஞ்சு தடவை சொல்லிட்டேன், கோழிக்கறி சாப்பாடு என்று. என்னாச்சு உங்களுக்கு?”
இதனால் அறியப்படும் நீதி யாதெனில், மத்தவங்க கிட்ட குறை கண்டுபிடிக்க போகுமுன்னாலே நம்ம கிட்டே அதே குறை இருக்கா என்று பார்த்துக் கொள்வது நல்லது.
Add comment