தமிழ்library
, தமிழ் பண்பாட்டு அசைவுகள், தமிழ்library

தமிழ் பண்பாட்டு அசைவுகள்

நெல்லை மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம். 28 வயது இளைஞன் விபத்தில் மரணமடைந்தான்.

மனைவிக்கு 23 வயது. 3 வயதில் பெண் குழந்தை. மதிய வேளையில் இறுதிச் சடங்கு நடந்து கொண்டிருக்க, வீட்டின் உள்ளே பெண்களின் ஒப்பாரி, வெளியே மேள சத்தம்.

திடீரென ஒரு கிழவி. இடக்கையில் சொம்பு தண்ணீருடன் வெளியே வந்தாள். வலது கையில் உதிரிப்பூக்கள். கிழவியைப் பார்த்ததும் மேளம் நிறுத்தப்பட்டது. கூடிய ஊர் மக்களிடமும் மயான அமைதி.

கிழவி ஒரு உதிரிப்பூவை சொம்பு தண்ணீரில் இட்டாள். கூட்டம் மூச்சடங்கியது போல் அமர்ந்திருந்தது. பின்னர் இரண்டாவது பூவை. போட்டாள். கூட்டம் ச்சூ… ச்சூ.. என்று அனுதாப ஒலி எழுப்பியது. கிழவி மூன்றாவது பூவைப் போட்டாள். கூட்டம் அதே போல ச்சூ… ச்சூ… என்று அனுதாப ஒலி எழுப்பியது.

பின்பு கிழவி சொம்பை எடுத்துக் கொண்டு வீட்டினுள் சென்று விட்டாள்.

இதைப் புரியாமல் ”இது என்ன சாங்கியம் ?” என. அருகிலிருந்த பெரியவரிடம் கேட்டேன். அதற்கு அவர் சொன்னார்.

“இறந்தவனின் மனைவி 3 மாத கர்ப்பிணி” என்று ஊருக்கு அறிவிக்கிறார்கள் என்று.

நான் கேட்டேன், அதை ஏன் ஊருக்கு சொல்ல வேண்டும் என்று.

அதற்கு பெரியவர் “அட, மவனே.. 7 மாதம் கழித்து பிள்ளை பெறும் போது பிள்ளையின் அப்பன். யாருனு இந்த ஊர் தப்பா பேசிட கூடாதுல” என்றார்.

அதிர்ந்துபோனேன். ஏழு மாதம் கழித்துப் பிறக்கப்போகும் குழந்தைக்கு இன்று இறந்து போனவன் தான் தந்தை என்று ஊரும் உலகும் அறிய இந்த சடங்கு.

பிறக்கின்ற எந்த மனித உயிரும் தாய் தந்தை பெயர் தெரியாமல் பூமிக்கு வரக்கூடாது என்ற. சமூகக்கட்டுப்பாடு புரிந்தது.

ஒரு பண்பாடு பேச்சே இல்லாமல் ஒரு சின்ன அசைவின் மூலம் எவ்வளவு நுட்பமாக, மென்மையாக சோகத்தினூடே சிறிய மகிழ்ச்சியை அடையாளம் காட்டிக் கொள்கிறது .. !

தமிழ் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்…

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: