தமிழ்library
, திருப்பம், தமிழ்library

திருப்பம்

“மாதவா,  மாதவா என்று அழைத்துக் கொண்டே, தன் மீசையை நீவிவிட்டபடி அன்றைய தினசரியை புரட்டிக் கொண்டிருந்தார்  குமாரவேலன் .”

“இதோ வந்துட்டேன் சார்”, என்று கூறிக்கொண்டே வழக்கு கோப்புகளை அடுக்கி எடுத்துக் கொண்டு ஓடினான் எழுத்தர் மாதவன்.

“என்ன மாதவா? நாளைக்கு திங்கட்கிழமை செங்கல்பட்டில் அந்த வேலனின் கொலை வழக்கு வருது, ஞாபகம்  இருக்குல்ல. அந்த கோப்பெல்லாம் எடுத்து வைச்சிட்டியா? காலைல பத்து மணிக்கெல்லாம் அங்க இருக்கணும்.”

“எல்லாம்  சரியா வச்சிருக்கேன் சார். நீங்க கவலைப்படாதீங்க. நாளைக்கு சைதாப்பேட்டையில் அந்த நாராயணின் பிணை வழக்கு வருது. அத நான் நம்ம ரவி வக்கீல்கிட்ட சொல்லிப் பாத்துக்கறேன் சார். நீங்க செங்கல்பட்டு போயிட்டு வாங்க.”

“சரி, சரி, ஆமா நீ வீட்டுக்கு மதியம் சாப்பிட போகலையா? இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமையாச்சே, என்ன சமையல் வீட்ல? “, என்று சிரித்துக் கொண்டே கேட்டார் குமாரவேலன்.

“காலைல மீன் வாங்கிக்கொடுத்துட்டுத்தான் சார் வந்தேன். மீன் குழம்பு தான் வச்சிருக்கும்.”

“அடடே மீன் குழம்பா? எனக்கும் கொஞ்சம் எடுத்துட்டு வாயேன் மாதவா.”

“இதோ சார், போய் அரைமணி நேரத்துல எடுத்தாரேன்.” என்று கூறிவிட்டு ஓடினான் மாதவன்.

அவன் போவதை பார்த்துக்கொண்டே நாற்காலியில் சாய்ந்தார். குமாரவேலன் ஒரு சிறந்த கிரிமினல் வழக்கறிஞர். குற்றவாளி எத்தனை கொலை செய்திருந்தாலும் அவனுக்கு விடுதலை வாங்கித் தந்து விடுவார். அவர் ஆறடி  உயரம். அதற்கேற்ற உடல்வாகு. அவரது சிவப்பு முகத்தில் கருப்பும், வெள்ளையும் சேர்ந்த மீசை முடி அடர்த்தியாக இருக்கும். தன் குரலை செருமி தன் வாதத்தை ஆரம்பித்தால், நீதிமன்றத்தில் அனைவரும் அவரையே அமைதியாக கவனித்துக் கொண்டிருப்பார்கள். அந்த அளவுக்கு கம்பீரம், சட்ட ஞானம்.

பக்கத்து வீட்டிலிருந்து சத்தம், “ஏண்டா இப்படி சாப்பிடாம விளையாட்டு காட்ற, ஒழுங்கா சாப்பிடுடா”, என்று தன் பத்து வயது மகனை அவன் அம்மா கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

குமாரவேலனுக்கு நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன. அவரது மகன் ரமேஷ், மகள் ராதா இருவரும் இப்படித்தான் சாப்பிடாமல் அடம் பிடிப்பார்கள். அவர் மனைவி கோமதி இதே போலத்தான் கெஞ்சிக் கொண்டிருப்பாள். கோமதி ஒரு அரசாங்க அதிகாரி. மிகவும் கண்டிப்பானவள். திருமணமான ஆறு வருடங்கள் எல்லாம் இன்பமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. கோமதியின் அலுவலகத்தில் வேலை செய்யும் மித்ரா என்ற பொறியாளரை குடும்பச் சண்டையில் மித்ராவின் கணவன் அடித்துக் கொன்றுவிட்டான். அந்த வழக்கில் மித்ராவின் கணவனுக்காக வாதாடி அவனுக்கு விடுதலை வாங்கித்தந்தார் குமாரவேலன்.

கோமதியால் தன் தோழிக்கு நடந்த அநீதியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

“இப்படி மனசாட்சி இல்லாமல் வாதாடி, வெற்றி பெறுவதில் என்ன லாபம்,” என்று கோபமாக கத்தினாள் கோமதி.

“இங்க பாரு கோமதி, என் தொழிலில் எங்கிட்ட வர கட்சிக்காரன்தான் எனக்கு முக்கியம். அவனைக் காப்பாற்றுவதுதான் என் தொழிலுக்கு நான் செய்யும் நியாயம், மரியாதை எல்லாம்.”

“இப்படி, சம்பாதிச்சா நம்ம குடும்பமும், குழந்தைகளும் நல்லாவே இருக்க மாட்டாங்க.”

“தேவை இல்லாமல் கோபப்படற, இவ்வளவு நாள் இல்லாத ஞானோதயம் இப்ப என்ன புதுசா?”

– சுருக்கென்றது கோமதிக்கு

“ஆமா , என் தோழிக்கு நடக்குற வரைக்கும் இதெல்லாம் எனக்கு பெருசா தெரில. ஆனா இப்ப புரியுது. பொய் சொல்லி, குற்றவாளியை விடுவிச்சுத் தான் தொழில் செய்யணும்னா, அதுக்கு நீங்க…” நாக்கை கடித்துக் கொண்டாள்  கோமதி.

“உனக்கு என்ன திமிரடி”, என்று தன்  மனைவியை அறைந்தார் குமாரவேலன்.

“உங்கள மாதிரி மனசாட்சியை அடகு வச்ச ஆள் கூட வாழறதுக்கு நான் தனியாவே வாழ்ந்திடுவேன்.”

“போடி,போ, இவ  இல்லனா என்ன? நான் செத்தா போயிருவேன்?” என்று குமாரவேலன் கூற, தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அன்று வீட்டைவிட்டு வெளியேறியவள்தான் கோமதி.

குமாரவேலனின் அகந்தை இந்த இருபது வருடங்களாக கோமதியைச் சென்று பார்க்கவிடவில்லை. தன் பிள்ளைகள் இருவரும் வளர்ந்து மகன் பொறியாளராக, மகள் மருத்துவராக இருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டார். ஆனாலும் தன் மனைவி, பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்று அவருக்குத்  தோன்றவில்லை. தன் தொழிலில் மூழ்கிப்போய் இந்த இருபது வருடங்களை கழித்து விட்டார்.

அவளுக்கு என்ன அவ்வளவு தெனாவட்டு? அவள் தன்னை வந்து பார்த்திருக்கலாமே? என்று நினைத்துக் கொண்டார்.

“சார், சார்”, என்று அழைத்துக் கொண்டே மாதவன் உள்ளே வந்தான்.

“என்ன சார், அதுக்குள்ளே தூக்கமா? மீன் குழம்பு எடுத்தாந்திருக்கேன். சாப்பிட்டு தூங்குங்க சார்”, என்றான்.

“தட்டை எடுத்து வை மாதவா, கை கழுவிக்கொண்டு வரேன்.”

“சரி சார்”

“அட அட என்ன ருசி, வீட்டு சாப்பாடு ருசியே தனிதான், இல்ல மாதவா?”

“ஆமாம் சார், என்ன சொல்லுங்க, வெளில எங்க என்ன சாப்பிட்டாலும், வீட்ல பொண்டாட்டி கையால சாப்பிடறது போல வராது சார்”

ஒரு நிமிடம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு மாதவனைப் பார்த்தார். கண்களில் கண்ணீர் பெருகியது.

“ஐயோ சார், என்ன இது? நான் பாட்டுக்கு ஏதோ சொன்னேன். அத பெரிசா எடுத்துகாதீங்க.” என்று பதறினான் மாதவன்.

“சார் நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. உங்க கூடவே இருபத்தி அஞ்சு வருசமா இருக்கேன். உங்க மனசு எனக்குத் தெரியும். வீணா ஏன் சார் பிடிவாதம்? வயசும் எறிகிட்டே போகுதுல்ல. நீங்களாவது போய் அம்மாவை பாருங்க சார். வயசான காலத்துல எல்லாரும் இருந்து ஏன் இப்படி தனியா இருந்து கடினப்படணும் சார்.?”

“மாதவா”, என்று அதட்டினார் குமாரவேலன்.

“ஏதோ தோணிச்சு சொன்னேன் சார், மன்னிச்சிடுங்க”, என்று கூறி விட்டு சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்தான் மாதவன்.

“சார் நான் கிளம்புறேன், நாளைக்கு சாயங்காலம் உங்கள பாக்குறேன்.”

சரி என்று தலையாட்டினார் குமாரவேலன். மாதவன் சொன்னதையே  எண்ணிப்பார்த்துக் கொண்டே தூங்கினார். திடீரென எழுந்த குமாரவேலன் மணியைப் பார்த்தார். விடியற்காலை நான்கு மணி. நேற்று மாதவன் சொன்னது காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

“எல்லாரும் இருந்தும் தனியா வாழ்ந்துட்டேன். இப்ப என்ன உறவு வேண்டிக்கிடக்கு? என்றது ஒரு மனது. ஆனால் ஆழ்மனது, ” வீண் பிடிவாதம் வேண்டாம். கோமதி, பிள்ளைகளை இனிமேலாவது பார் என்று கட்டளையிட்டுக் கொண்டே இருந்தது.”

சிந்தித்துக் கொண்டே இருந்தவர் மணியைப் பார்த்தார். மணி காலை ஆறு.

“இப்போ தயார் ஆனாதான் எட்டு மணிக்கெல்லாம் கிளம்ப முடியும். பத்து மணிக்கு செங்கல்பட்டு போக முடியும், என்று தனக்குள் சொல்லிக் கொண்டே வேகமாக தயாராகி தன் காரை கிளப்பிக் கொண்டு விரைந்தார். வழக்கு முடிய மதியம் ஒரு மணியாகி விட்டது. அருகிலிருந்த உணவு விடுதிக்குச் சென்று உணவருந்திவிட்டு தன் செல்போனை எடுத்து மாதவனுக்கு அழைத்தார்.

“சார், இங்க நாராயணனுக்கு பிணை கிடைச்சிடுச்சு”

” இங்க செங்கல்பட்ல அடுத்த வாரம் தேதி போட்டிருக்காங்க.”

“சரி சார், சாயங்காலம் பாக்கலாம்”

“மாதவா…”

“என்ன சார்”

“வந்து … சாயங்காலம் வேணாம், நான் கோமதியை பார்க்கப் போறேன்”

“என்ன சார்ர்ர்ர்ர்…ஆச்சரியம் “

“இல்ல மாதவா, கொஞ்ச நாளாவே மனசுல ஓடிட்டே தான் இருக்கு, நீ வேற நேத்து சொன்ன, வயசாகுதுல, வைராக்கியம், திமிரெல்லாம் குறையுது. இவ்ளோ காலம் ஓட்டிட்டேன், சாகற காலத்துல எல்லாரும் வேணும்னு  மனசு அடிச்சுக்குது.”

“என்ன சார் நீங்க? நீங்க உங்க குடும்பத்தோட ரொம்ப நாள் இருப்பீங்க, நிறைவா இருக்கு சார், நீங்க போய்ட்டு வாங்க. நாளைக்கு பாக்கலாம்”

பல நாட்களுக்குப் பிறகு ஏதோ ஒரு இனம் புரியாத நிம்மதி குமாரவேலனுக்கு. வேகமாக காரை எடுத்தார். பழைய நினைவுகள் நிழலாடிக் கொண்டிருந்தது. கோமதி என்ன சொல்வாள்? பிள்ளைகள் என்ன சொல்லும்? என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டார். தயக்கம் இருந்தாலும் தனிமையின் வலி அந்த தயக்கத்தை கரைத்துக் கொண்டிருந்தது. சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கும்போது தான் திடிரென்று திருப்பத்தில் அந்த லாரி ….

மாதவனின்  செல்போன் சிணுங்கியது

“ஐயோ , சார்……!!”

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: