தமிழ்library
, தெனாலியும் பிராம்மணர்களும், தமிழ்library

தெனாலியும் பிராம்மணர்களும்

மன்னர் கிருஷ்ணதேவராயரின் தாயார் மரணப்படுக்கையில் இருந்தபொது, தன் இறுதி மூச்சை விடுவதற்கு முன் தன் மகன் ராயரிடம் ஒரு மாங்கனி கேட்டார். சேடிகள் மாங்கனி வெட்டி எடுத்து வருவதற்குள் அவரின் உயிர் பிரிந்து விட்டது. ராயருக்கோ அடங்காத துன்பம். தாயின் ஆத்மா சாந்தியடையாதே என்று பெருங் கிலேசமடைந்தார். என்ன செய்வாது? தன் அரசவை பிராம்மணர்களை அழைத்து ஏதாவது வழி இருக்கிறதா என கேட்டு வைத்தார்.

பேராசைக்கார பிராம்மணர்களும் மிக்க நல்ல சந்தர்ப்பம் வாய்த்ததென மகிழ்ந்து, “மன்னா!! ஒரு வெள்ளித் தட்டில் பசும்பொன்னால் செய்த இரட்டை மாங்கனிகளை வைத்து 108 பிராம்மணர்களுக்கு தானம் செய்தால் உங்கள் தாயார் ஆத்மா சாந்தியடையும்.” என பெரிய பொய்யொன்றை வாய்கூசாமல் சொல்லிவைத்தார்கள். மன்னரும் சரியெனெ ஒப்புக் கொண்டு, 108 பிராம்மணர்களுக்கு பொன்னால் செய்த இரட்டை மாங்கனிகளும் வெள்ளித்தட்டும் தானமாக கொடுத்தார்.

இந்த வேடிக்கையை பார்த்த ராமன் மனம் மிக நொந்து, “இப்படி பகற்கொள்ளை அடிக்கிறார்களே. இவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்” என மனதில் நினைத்துக்கொண்டு அரச சபை சென்றான். வழியில் கண்ட பிராம்மணர்களுக்கெல்லாம் “எனது தாயாரின் ஆத்மா சாந்தியடைய நானும் 108 பிராம்மணர்களுக்கு தானம் செய்ய போகிறேன். அவசியம் வரவேண்டும்” என அழைப்பு விடுத்தான். இந்த செய்தி பேராசைக்கார பிராம்மணரிடையே காட்டுத்தீயாக பரவியது.

108 பிராம்மணர்கள் ராமன் வீட்டில் சங்கற்பம் தரித்து உக்கார்ந்திருக்க, ராமன் அவர்கள் ஒவ்வொருவராக வந்து தானம் பெறுமாறு ஒரு இரகசிய அறைக்கு அழைத்துச் சென்றான். இருண்ட அந்த அறையில் ஒரு அடுப்பில் இரும்புக்கம்பி செக்கச் செவேல் என்று காய்ந்துகொண்டு இருந்தது. அதை எடுத்து பிராம்மணர்கள் கைகளிலும் கால்களிலும் சூடு வைத்து அடித்து துரத்திவிட்டான். சூடுவைத்த வெப்பு ரணமும், அடி உபாதையின் வலியும் தாங்கமாட்டாது “ஓவென” புலம்பியபடி மன்னர் ராயரின் அரண்மனை நோக்கி ஓட்டமெடுத்தனர் பிராம்மணர்.

வழக்கை விசாரித்த ராயர், “அடே ராமா!! ஏன் இந்த கொடிய பாதக செயலை செய்தாய்?” என்று கேட்க, ராமன் மிகவும் பவ்யமாக “மன்னா!! எனது தாயார் வலிப்பு நோயால் கடும் அவஸ்த்தைப்பட்டார். நோயில் இருந்து விடுபடுவதற்காக வைத்தியர் கூறியதுபோல் இரும்புக் கம்பியை காய்ச்சி சூடுவைக்குமாறு வருந்திக் கேட்டார். நான் அதை தயார்செய்து எடுத்துவருவதற்குள் பரலோகம் அடைந்துவிட்டார். என்ன செய்வது. இதுநாள் வரையில் அவர் ஆத்மா சாந்தியடைய எந்த வழியும் தெரியவில்லை. இந்த பிராம்மணர்கள் தங்க மாங்கனி பெற்று உங்கள் தாயாரின் ஆத்மாவை சாந்தியடைய வைத்தபோதுதான் எனக்கும் வழி தெரிந்தது” என கூறினான்.

இதைக் கேட்ட பிராம்மணர் சொல்வதற்கேதுமின்றி வாய்மூடி மௌனியாக தலைகுனிந்து நின்றனர். மன்னரும் மற்றையோரும் பிராம்மணரின் பேராசை நிமித்தம் அவர்கள் அடைந்த தண்டனை கண்டு சிரிப்பாய் சிரித்தனர்.

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: