தமிழ்library
, நாயா உழைச்சாலும் ஓடா தேய்ஞ்சாலும் என்ன கிடைக்கும்?, தமிழ்library

நாயா உழைச்சாலும் ஓடா தேய்ஞ்சாலும் என்ன கிடைக்கும்?

நம் எல்லோருக்குமே தடைகள் இருக்கும்தான். அந்தத் தடைகளில் ஏதாவதொன்றைத் தாண்டிப் போகும்போது நமக்குக் கிடைப்பதுதான் திருப்தி’ – பிரேசில் கால்பந்தாட்ட வீராங்கனை மார்த்தா (Marta) தன் அனுபவத்திலிருந்து சொன்ன பொன்மொழி இது. தடைகள் கிடக்கட்டும்… தங்கள் ஊழியர்கள் பார்க்கும் வேலையில் திருப்திப்படாத எஜமானர்கள்தான் இன்றைக்கு ஏராளம். பல வருடங்களாக உண்மையாக, நேர்மையாக உழைக்கும் தொழிலாளிகளை அடையாளம் கண்டுகொண்டு அவர்களுக்கான ஊதியத்தையோ, ஊக்கத்தையோ கொடுக்காதவர்களும் அவர்களில் அடக்கம். `என்னப்பா… கடுமையா உழைக்கிறோம்… ஓரமா கிடக்கிறோம்…’ என முணுமுணுக்கிற தொழிலாளியின் குரல், ஒருபோதும் எஜமானரின் காதுக்குப் போய்ச் சேர்வதே இல்லை. அப்படியே போய்ச் சேர்ந்தாலும், அந்தக் குரலில் ஒரு குற்றம் கண்டுபிடிப்பார் அவர். அல்லது கண்டுபிடிக்கக் கற்றுக் கொடுப்பார் ஒருவர். தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையே இருக்கவேண்டிய புரிதலைச் சுட்டிக்காட்டும் கதை இது!

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் இருக்கும் அட்லாண்டாவில் நடந்த ஒரு கதை இது. அவர் ஒரு கசாப்புக் கடைக்காரர். கடையை அடைக்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. கடைக்குள் ஒரு நாய் நுழைவதைப் பார்த்தார். உடனே,“ச்சூ… சூ… ஓடு…’’ என அதை விரட்டியடித்தார். பின்வாங்கி ஓடிய நாய், சற்று நேரத்தில் மறுபடியும் கடைக்குள் நுழைந்தது. `என்னடா இது… விரட்டியடிச்சும் திரும்ப உள்ளே வருதே…’ என்ற யோசனையில் கசாப்புக் கடைக்காரர் நாயின் அருகே போனார். அப்போதுதான் அதை கவனித்தார். நாயின் வாயில் ஒரு பேப்பர் சொருகியிருந்தது. அதை எடுத்துப் பார்த்தார் கசாப்புக் கடைக்காரர். அதில், `எனக்குக் கொஞ்சம் ஆட்டிறைச்சி வேண்டும். அதற்கான பணமும் இதிலிருக்கிறது’ என்று எழுதியிருந்தது.

நாய்

அதில் குறிப்பிடிருந்தபடியே பணமும் இருந்தது. கடைக்காரர், அந்தப் பணத்துக்குள்ள ஆட்டு இறைச்சியை எடுத்தார். பேக் செய்தார். நாயிடம் கொடுத்தார். நாய் அதைக் கவ்விக்கொண்டு தன் வழியே போனது. கடைக்காரருக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். ஒரு நாய், தன் கடையில் வந்து இப்படி இறைச்சியை வாங்கிப் போவது அதுவே முதல்முறை. அவர், அது எங்கே செல்கிறது என்று பார்க்க விரும்பினார். அவசர அவசரமாகக் கடையை அடைத்தார். நாய் சென்ற திசையில் நடந்தார்.

அந்த நாய், ஒரு ரயில்வே லெவல் கிராஸிங்கில் நின்றுகொண்டிருந்தது. சரியாக ரயில் கடந்து, கேட் திறக்கப்பட்டதும் அப்பால் நகர்ந்தது. `சே… என்ன ஒரு புத்திசாலித்தனம்..!’ வியந்துபோனார் கசாப்புக் கடைக்காரர்.

நாய் மேலே நடந்து போனது. அவர் அதன் பின்னாலேயே போனார். ஒரு பஸ் ஸ்டாப்பில் நாய் நின்றது. அங்கே எழுதியிருக்கும் டைம் டேபிளைப் பார்த்தது. ஓர் இருக்கையில் அமர்ந்து காத்திருந்தது. அவரும் அதன் கூடவே காத்திருந்தார்.

ஒரு பேருந்து வந்து நின்றது. நாய், ஓடிப் போய் அந்தப் பேருந்தின் எண்ணைப் பார்த்தது. திரும்பி வந்து தன் இருக்கையில் அமர்ந்துகொண்டது. சிறிது நேரம் கழித்து, இன்னொரு பேருந்து வந்தது. நாய், வேகமாக ஓடிப் போய் அந்தப் பேருந்தின் எண்ணைப் பார்த்தது. உடனே, தாவி ஏறி பஸ்ஸில் நுழைந்து, ஓர் இருக்கையில் அமர்ந்தது. கசாப்புக் கடைக்காரரும் அந்த பஸ்ஸில் ஏறிக்கொண்டார். கடைசி நிறுத்தம் வரை டிக்கெட் எடுத்துக்கொண்டார்.

வழியில், ஓரிடத்தில் அந்த நாய் இறங்கியது. அவர் பின்தொடர்ந்தார். அது ஒரு சாலையில் நடந்தது. ஒரு வீட்டுக்கு முன்னே போய் நின்றது. அந்த வீட்டுக் கதவைப் போய்ப் பிராண்டியது. குரைத்தது. பிறகு, வெகு வேகமாக பின்னோக்கிப் போய் கதவின் மேல் பாய்ந்து திறக்க முயன்றது. திரும்பத் திரும்ப பின்னோக்கிப் போய், கதவிலும் ஜன்னலிலும் போய் மோதி மோதி, கதவைத் திறக்கப் பார்த்தது.

இதையெல்லாம் அந்தக் கசாப்புக் கடைக்காரர் பார்த்துக்கொண்டேயிருந்தார். சிறிது நேரத்தில் கதவு திறந்தது. ஆஜானுபாகுவான ஓர் ஆள் வெளியே வந்தார். தன் கையில் வைத்திருந்த பிரம்பால் நாயை அடித்தார். அடி அடியென வெளுத்து வாங்கினார்.

நாய்

அவ்வளவுதான். கசாப்புக் கடைக்காரர் பதறிப் போனார். “என்னங்க… இந்த நாய் எவ்வளவு புத்திசாலி தெரியுமா… இதைப் போய் அடிக்கிறீங்களே…’’ என்று தடுத்தார்.

“இந்த நாயைப் போய் புத்திசாலிங்கிறீங்களே… இந்த நாய் வீட்டுச் சாவியை மறந்து போயிடுது. இது ரெண்டாவது தடவை… நான் வந்து கதவைத் திறக்கணுமா?’’ என்றார் அவர்.

– பாலு சத்யா

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: