தமிழ்library
, நோன்பு, தமிழ்library

நோன்பு

சுபைதா மன்ஸிலில் நடந்தவற்றைத்தான் ஹாலித் சொல்லிக் கொண்டிருந்தான். இன்றுபோல பலமுறை அவற்றைச் சொல்லி இருக்கிறான். சுமார் இருபதாண்டு காலப் பேச்சுகள் இவை. ஹாலித் சொல்வது பழைய செய்திகளாகிவிட்டன முபாரக்கிற்கு, என்றாலும் காதுகொடுத்து அமைதியாகக் கேட்பான். முன்பெல்லாம் அவற்றைச் சொல்லும்போது ஹாலித் கண்ணீர் சிந்துவது வழக்கம். சுபைதா மன்ஸிலில் என்று அவன் சொல்ல ஆரம்பிக்கும் போதே கண்ணீரின் முதல் துளியும் அரும்பி நிற்கும். பின்னாளில் அதுவே கோபமாய் ஆனது. கண்களில் லேசாகப் படர்ந்து, பிறகு மெல்ல விரியும் ஒரு சிவப்பு. சுபைதா மன்ஸிலில் உள்ள எல்லோரும் இப்போது என் கண்ணுல தெரியுறாங்க எனும்போது அவன் உதடுகள் கோணுவது புதிய முறையாக ஆகிவிட்டது. இப்போது ஹாலித் நல்ல நிலையில் இருக்கிறான். கையில் பணப்புழக்கமும் ஜாஸ்தி. சுபைதா மன்ஸிலின் பண்டைய புராணங்களைச் சொல்லும்போது ஹாலித்துக்கு இப்போது சிரிப்புதான் முட்டிக்கொண்டு வருகிறது.

ஒரு முறை கிழவி சாப்பிட்டுக்கொண்டு இருந்திருக்கிறாள். வயது எழுபதைத் தொட்டுவிட்ட கிழவியின் பெயரால்தான் இந்தவீடு சுபைதா மன்ஸிலாக ஆனது. சுபைதாவின் மூத்த மகன் ஹஸன் முகைதீன் தன் ம்மாவுக்குச் செய்த மரியாதை. அவருடைய வியாபாரம் பெருசாகி, கார் வாங்கிய பின்னரே வீட்டைக் கட்டினார். மற்ற தம்பிமார்கள் இனிமேல்தான் வியாபாரத்தில் ஜொலிக்க வேண்டும். எல்லோரும் தனித்தனியாக இதே நகரின் வெவ்வேறு மூலைகளில் கிடக்கிறார்கள். மூத்த மகனின் வசதியைப் பார்த்து சுபைதா இங்கேயே நிரந்தரவாசம் பண்ணுகிறாள். கிழவியின் சாப்பாடு விமரிசையாக இருக்கும் என்பது வீட்டின் வேலைக்காரர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. பக்கத்தில் பிரியாணி, ஒரு அம்பாரமாய்க் கறி, அவித்த முட்டை, காய்கறி வெஞ்சனங்கள், பழங்கள் சுபைதா தனியாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். மருமகள் நடுஹாலில் டி.வி. பார்த்துக்கொண்டு சொகுசு மெத்தையில் சாய்ந்திருக்கிறாள். அப்போது ஹாலித்தும் அவனுடன் அதே வீட்டில் வேலையாள்களாக இருக்கும் அப்பாஸ் பாயும், சம்சுதீனும் ஏதோ ஒரு வேலையாக வீட்டிற்குள்ளே நுழைந்திருக்கிறாள். சுபைதாவைச் சுற்றியிருந்த சாப்பாட்டுப் பதார்த்தங்களைப் பார்த்துவிட்டார்கள். கிழவி சுபைதாவின் சாப்பாட்டு கடமை வேகமாக நடந்தபடியிருக்கிறது. அவள் வாய்க்கும் கைக்கும் நல்ல ஒத்தாசை. இருபது வயது குமரியைப் போலச் செயல்பாடு. எல்லா வெஞ்சனங்களிலும் கையை மாறி மாறிவைத்து, எல்லாமே கோழி குப்பையைக் கிளறிப்போட்ட வகையில் தாறுமாறாய்க் கிடக்கின்றன. ஹாலித்தும், சம்சுதீனும் திக் பிரமை பிடித்து நிற்க, கூட வந்த அப்பாஸ் பாய் “அடேங்கப்பா, பூதம் மாதிரி சாப்பிடுறாளேப்பா” என்று சப்தம் போட்டுச் சொல்லிவிட்டார். (நமக்கு மட்டும் காது கேக்குற மாதிரி அதக் கொஞ்சம் மெதுவாகத்தான் நான் சொல்லி இருக்கனும். ஆனா அவ சாப்புட்ட முறையப் பாத்து பதறிப் போனதுனாலதான் நம்மளமீறி குரல் உசந்து வந்திருச்சி என்று பின்னாளில் அப்பாஸ்பாய் சொன்னது உண்டு). அப்பாஸ்பாய் சப்தம்போட்டுச் சொன்னது நடுக்கூடத்திலிருந்து டி.வி. பார்த்துக்கொண்டிருந்த மருமகளுக்குக் கடும் தொந்தரவாகிவிட்டது. அவள் ரசனை அந்தச் சமயத்துக்குக் கெட்டுப்போய்விட்டது. மேலும் சுபைதாவும் ஆங்காரமாக எழுந்துவிட்டாள். எச்சில் கையை நீட்டி நீட்டி அப்பாஸ்பாயைத் தாறுமாறாகப்போட்டு ஏசியிருக்கிறாள். கடும் ஏச்சு, உடனே அப்பாஸ் பாய்க்கு சீட்டு கிழிந்துவிட்டது. மற்ற இருவருக்கும் கடும் எச்சரிக்கை. இனிமேல் சாப்பிடும்போது எவரும் உள்ளே வரக்கூடாது.

சுபைதா மன்ஸிலின் சாப்பாட்டு நேரம் பகல் 1.30க்கு. அதற்குள் கிழவி தொழுது முடித்திருப்பாள். தொழாமல் சாப்பிடுவதில்லை. தஸ் பஹீமணி உருட்டல்கள், குந்தன் பாராயணங்கள், துஆக்கள் என்று நெருக்கமான உறவாட்டம், வேலைக்காரர்கள் மூவருக்கும் மூன்றுமணிக்கு மேல்தான் சாப்பாடு. மூவரும் வேலை முடிந்தபின் வெளிவராந்தாவில் உட்கார்ந்திருக்க வேண்டும். அவர்களாகவே சாப்பாட்டைக் கேட்டுவிடக்கூடாது. உன்னதமான பசிநேரம் என்பதால் சிறிதளவு உற்சாகமும் இருக்காது. பேச்சு வார்த்தைக்கும் வழியில்லை. எனவே, அசப்பில் பார்த்தால் மூவருமே அந்நேரம் சிலைகள் போலவே உட்கார்ந்திருப்பார்கள். நல்ல ஆறுதல் தென்றல் மட்டுந்தான். நகரின் மையப்பகுதியாக இருந்தாலும், சுபைதா மன்ஸிலின் விசாலமான தோட்டத்தில் மரங்கள் இருந்தன. அடர்த்தியான நிழல் போர்த்திக் கிடக்கும் சுபைதா மன்ஸில். எனவே, தென்றலின் தாலாட்டில் பசிமயக்கம் சேர்ந்த மூவரும் சொக்குப்பொடி போட்டதுபோல நிலை மயங்கிக் கண்மூடவும், பிறகு ஒரு சின்ன ஏலிக்குப்பைக்கும் திடீரென்று அரக்க விழித்துக் கண் உருளவுமாகக் கிடப்பார்கள். சரியாக இரண்டு ஆள் சாப்பாடு அவர்கள் மூவரின் முன்னாலும் வைக்கப்படும். யாருக்காவது அதிகமான பசி என்றால் அவர், மற்ற இருவரிடமும் சற்றே மனந்தளர்ந்து விண்ணப்பித்து, ஒரு கை சோறோ, இரு கை சோறோ கூடுதலாக அள்ளிக்கொள்ள வேண்டும். சாப்பிட்ட கை காயும் முன்னமேயே, அடுத்தடுத்த வேலைகளுக்கு உத்தரவு வந்துவிடும். சுபைதாவும், அவள் மருமகள் பானுவும் ஏவுகிற வேலைகளுக்காக அவர்கள் எப்போதும் சிட்டாய்ப் பறப்பார்கள்; சிட்டாய்ப் பறக்கவேண்டும். வேலைகள் நேர்த்தியாக முடிக்கப்படும் – அது வேலையாள்களின் கண்களுக்கு! ஆனால் எஜமான் வீட்டுப் பார்வையில் எல்லா வேலைகளுமே சொத்தை, சொள்ளைகள்தான். முகத்துக்கு நேரேயும், முகத்துக்கு பின்னேயும் வசைமொழிகளின் பெருக்கம். மூவருமே தலையில் கைவைத்து முகம் சோர்ந்து உட்கார்வதுதான் வேலையின் கடைசிப்புள்ளி.

கிழவியின் தர்பார்களைத் தொடர்ந்து கவனிக்க ஆரம்பித்துவிட்டான் ஹாலித். மூவரும் ஒன்றாகச் சேர்ந்து பேசுவது, சிரிப்பது ஹராமாக ஆக்கப்பட்டன. எதன் பொருட்டாகிலும் அவர்கள் வெவ்வேறு திக்குகளுக்கு வேலை விசயமாக ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். கூடவே ஆபிஸ் வேலைகளும் உண்டு. வருசங்கள் நகர்ந்தாலும் சம்பளம் நகர்வதில்லை. புவிஈர்ப்பு விசைதான் காரணம்; சம்பளம் தன் சொந்த வலுவில் நகரமுடியாத அளவுக்கு நிலைகுத்தி நின்றதாம். இதை ஒருமுறை ஹாலித்துதான் சொன்னான். அவனுக்கு எப்படி இவ்வளவு விஞ்ஞான ரீதியான கற்பனை முளைத்தது என்று அவனுக்கே ரொம்ப ஆச்சரியம் வந்திருக்கிறது. “பெருநாளைக்கு என்று தரும் பணத்தைக் கூட நோன்பின் கடைசிக் கட்டத்தில்தான் கொடுப்பார்களாம்”. இதை நாங்க ஊருக்கு அனுப்பி, எங்க பொண்டாட்டி புள்ளைங்க எப்போ துணிமணி வாங்கி, எப்போ தைச்சு, எப்போ பெருநாள் கொண்டாடுறது? என்று மூவரும் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள். ஆனால் அப்போது ஹாலித் கல்யாணமாகாதவன். எனவே, அப்பாஸ்பாய், சம்சுதீன் அளவுக்கு அந்த வேதனை தெரியாமல் இருந்திருக்கிறான். ஆனால் இந்த வீட்டைவிட்டு, என்னைக்கு வெளிவேலைக்குப் போய்த் தொலையிறேனோ, அன்னைக்குத்தான் கல்யாணத்தைப் பத்தியே யோசிக்கணும் என்று உள்ளத்தில் சபதம் பூண்டுவிட்டான் ஹாலித்.

பெருநாளைக்கென்று கொடுக்கப்படுகிற பணத்தை, போனஸ் என்று மூவரும் கேலியாகச் சிரித்துப் பேசிக்கொள்வார்கள். ஆனால் ஹஸன் முகைதீன் இந்த “போனஸ்” பணத்தை நோன்பின் ஆரம்பக்கட்டத்திலேயே கொடுக்க இருந்தாராம். கிழவியின் கண்களில் அவர் பணம் கொடுக்கப்போகிறார் என்பது பட்டுவிட்டது. உடனே மகனை மறைத்து நின்று, “கொண்டா, அதை நானே என் கையால கொடுத்துவிடறேன்” என்று கிழவி பிடுங்கிக்கொண்டாள். மகன் ஹஸன் முகைதீனின் அக்கறை அதோடு கழிந்துவிட்டது.

“இந்த வேலைக்காரப் பசங்களுக்கு இப்படி நோம்பு ஆரம்பிச்ச உடனேயே பணத்தக் குடுத்துட்டா, தலைகால் தெரியாம குதிக்க ஆரம்பிச்சிடுவாடுனுங்க” என்று சுபைதா மனதுக்குள் நினைத்துக்கொண்டாள். முதலாளி ஹஸன் முகைதீனிடம் மூவரும் இந்த “போனஸ்” பற்றித் தற்செயலாகக் கேட்கப் போய்த்தான் குட்டு வெளிப்பட்டது. ஆனால், அந்தமுறை ம்மாவிடம் கேட்டு போனஸை உடனே கையளித்த முதலாளி, அடுத்த ஆண்டிலிருந்து ம்மாவின் மனசுப்படியே நடக்கும்படி விட்டுவிட்டார். “நான் ஒரு நாலு எழுத்துப் படிச்சிருந்தா, இந்தப் பேயிங்ககிட்ட கிடந்து இப்படி ஏன் சீப்படணும்?” என்று ஹாலித் சொன்னான். “பொறவு, எங்க கதை மட்டும் வேறயா?” என்று அப்பாஸ் பாயும், சம்சுதீனும் அப்போது சொல்லிக் கொண்டார்கள்.

ஹாலித்துக்கு சுபைதா மன்ஸிலில் அதுதான் கடைசிக்கட்ட வேலைப்பகுதி. “இந்த நோன்பு பெருநாள் வரட்டும், நான் ஊர் போயிருவேன். அதுக்கு அப்புறம் இவங்களுமாச்சி, இவனுங்க வேலையுமாச்சின்னு வேற மனுசங்ககிட்டே போயி வேலை பார்த்தாலும் பாப்பேனே தவிர, இவனுங்க நிழல்ல கூட வந்து உட்கார மாட்டேன்” என்று சொன்னான். இதற்குச் சில தினங்களுக்குப் பிறகுதான் அப்பாஸ் பாய்க்கு வேலை பறிபோன அந்தப் பழைய கதை நடந்தது. அப்போது அவருக்கு ஒரே சிரிப்புதான். “நம்மள ஆண்டவனா பாத்து வெளிய தள்ளிட்டான்னுதான் நினைக்கிறேன். நாய்ப்பொழப்பு போதும்” என்று ஹாலித்திடமும், சம்சுதீனிடமும் சொல்லிவிட்டுப் போனார் அப்பாஸ். இவர்களும் “வாழ்த்தி” வழியனுப்பி வைத்தார்கள். அப்புறம் அப்பாஸ் பாயின் இடத்துக்கு அவருடைய மச்சினனே வந்துவிட்டான். அவனுக்கு இங்கே இது மூன்றாவது வருகை. “ஊரு சுத்துற கழுதைகளுக்கு, வேற எங்க போக்கிடம்? என்ற மருமகள் பானுவுடன் மாமியார் சுபைதா நக்கலடித்து அவன் வருகைக்கு வரவேற்பு நல்கினாள். ஒரே ஊர்க்காரர்களாக இருப்பதால் இரண்டு தரப்புக்குமே இப்படி ஒரு வசதி.

அப்படியும் இப்படியுமாக நோன்பு காலம் வந்துவிட்டது. சஹர் நேரம் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிந்துவிடுகிறதே என்றுதான், முதலாளி குடும்பம் சாப்பிடும் அதே நேரத்திற்கு வேலையாள்களும் சாப்பிட்டார்கள். கிழவி அந்த நேரத்திற்கு வந்து சாப்பாடு தருவதே ஏனோதானா என்றிருந்தது. “கிழவி, இப்ப என்ன செய்வியாம் உன்னால நேரம் கழிச்சு சாப்பாடு தர முடியுமா?” என்று அந்த மூவரும் உள்மனசுக்குள் நினைத்துக் கொண்டவர்களாகக் கிழவியை ஏறிட்டுப் பார்ப்பார்கள். அந்தப் பார்வையில் கிடந்த வன்மம் கலந்த நக்கலை சுபைதா கிழவி உணராமலா இருந்தாள்? நோன்பு துறக்கும் பொழுது சுபைதாவின் வேலை நாசூக்காக இருந்தது. ஒரு சுளை பேரீச்சம் பழமும், ஒரு தம்ளர் தண்ணீரும்தான். பெரிய கோப்பையில் கஞ்சி வரும் வரும் என்று காத்துக்கிடந்தார்கள். வரவில்லை. அப்பாஸ்பாயின் மச்சினன் அக்ரம்தான் கஞ்சி வாங்கி வந்தான். “எவ்வளவு கஞ்சி வாங்கிட்டு வந்தேன்? மூச்சு காட்டாம இருக்காளுங்க!” என்று அக்ரம் வாசல் கதவையே பார்த்துக்கொண்டிருந்தான். மணிக்கதவம் தாழ் திறக்கவில்லை. ஆனால் மாமியும் மருமகளும் பேரன்பேத்திகளும் வகைவகையாய்ச் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாசல் வராந்தாவில் உலா வந்தது. ஏதாவது மிஞ்சினால் தங்களுக்கு வந்துசேரும் என்றும் பொறுத்திருந்தார்கள். அப்போதும் வந்தபாடில்லை. ஒருவாரம் ஓடிப்போனதே தெரியவில்லை. பொறுத்துப் பார்த்து சம்சுதீன் ஒருநாள் கேட்டுவிட்டார், “ஏங்க நோம்பு தொறந்தும் அதே பசியும் பட்டினியுமாத்தான கெடக்குறோம். ஒரு வாயி கஞ்சி தரக்கூடாதா?” சுபைதா ஏறிட்டுப் பார்த்து, மௌனமாகவே உள்ளே போய்விட்டாள். கஞ்சி அப்போதும் வந்தபாடில்லை.

மனதில் சரியான வருத்தம். அதிலிருந்து மறுநாள் நோன்பு துறக்கவென்று பள்ளிவாசலுக்குப் போனார்கள். அதற்கு கொஞ்ச தூரம் நடக்கவேண்டி இருந்தது. பதினைந்து நிமிசமாவது தேவைப்பட்டது. கிழவியிடம் சொல்லாமல் கொள்ளாமல் தான் அப்படிப் போனார்கள். பேரீச்சம்பழம் மிச்சம்தான் என்று முதலில் கணக்குப் போட்டாள் சுபைதா. அப்புறம் அது தப்பாகிவிட்டது. சுபைதாவின் கணிப்பு எப்போதுமே மாறாதது. தான் கணக்குப் போட்டால் எப்போதும் சரியாக இருக்கும் என்கிற எண்ணம் சுபைதாவுக்கு உண்டு. ஆனால் கூப்பிட்ட குரலுக்கு கையைக் கட்டி வந்து நிற்க ஆட்கள் இல்லாமல் போனதும் சுரீர் என்றது. நோன்பு துறக்கப் போகிறவர்கள் அப்படியே உல்லாசமாக ஊர் சுற்றப்போய் விடுகிறார்கள் என்று கிழவி உணர்ந்துகொணடாள். இதைக் கட்டுப்படுத்தாவிட்டால் தன் மறைமுக சிம்மாசனத்தில் ஆணிகள் கழன்று விழுந்துவிடும்; தான் இளிச்சவளாகி விட்டோம் என்ற குற்றஉணர்வு குறுகுறுத்தது. நோன்பு துறந்துவிட்டு, வீட்டுக்குள் கால் வைத்ததுமே சுபைதாவின் ஆங்காரம் சுடுசுடு சொற்களாக வந்துவிழுந்தன. இன்று முதலாளியிடம் எப்படியும் போனஸைக் கேட்டுவாங்கி, அவசரம் அவசரமாக ஊருக்கு அனுப்பி வைத்துவிடவேண்டும் என்று மூவரும் பேசி முடிவு பண்ணியிருந்தார்கள். வந்ததும் கிழவியின் தாண்டவம் இப்படி குதியாட்டம் போடுகிறதே என்கிற கவலையாகிவிட்டது. முதலாளியின் காரும் அந்தச் சமயத்தில் உள்ளே நுழைந்தது. அவர் வரவும் சுபைதா வாயை மூடிக்கொண்டு போய்விட்டாள். ஹஸன் முகைதீனும் புரிந்துகொண்டு, பேச்சு மூச்சு காட்டாமல் நகர்ந்தார். ஆனால் மறுநாள் நோன்பு துறக்கப் பள்ளிவாசலுக்குச் செல்லவிடவில்லை. இவர்களுக்கும் ஒரு சுளைப் பேரீச்சம் பழமும், ஒரு தம்ளர் பச்சைத் தண்ணியும் தவிர வேறு எதுவும் கிட்டினபாடில்லை.

நோன்பு வெகுவேகமாக நகர்ந்து போகிறது. வீட்டிலிருந்து பணம் அனுப்பக்கோரும் கடிதங்கள் வந்துவிட்டன. மூன்றுபேரும் தவித்தனர். சுபைதா மன்ஸிலில் ஜவுளி எடுக்கவும், நகை வாங்கவுமாகப் பரபரத்துக்கொண்டிருந்தார்கள். ஒருநாள் நகை வாங்கவென்று, மனைவியை அழைத்துக்கொண்டு ஹஸன் முகைதீன் காரை எடுத்துக்கொண்டு பறந்தார். முதலாளியின் பிள்ளைகள் பள்ளிக்கூடம் போயிருந்தார்கள். கிழவி உள்ளே இருந்தாள். வேலையாள்கள் மூவரும் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். எப்போதும் போல மென்மையான குரலில்! திடீரென்று அவர்களுக்கு உறைத்தது – இப்போது வீட்டினுள்ளே கிழவி மட்டும்தான்! நன்றாக யோசித்துப் பார்த்தார்கள், விழிகளை அரக்கப்பரக்க உருட்டினார்கள். வெளியே உள்ளவர்கள் இங்கே வர எவ்வளவோ நேரமாகும்! நல்ல சந்தர்ப்பம் வாய்த்தது; இதை நழுவ விடக்கூடாது.

“ஏ கிழவி!” திடீரென்று மூவரும் வீட்டினுள்ளே பாய்ந்தார்கள். கதவைச் சாத்தினார்கள்; ஜன்னல் திரையை மளமளவென்று மூடினார்கள். திடுக்கிட்ட கிழவி திரும்பிப் பார்த்தாள். மூவரின் விழிகளிலும் தீ கனல்வது கிழவிக்குத் தெரிந்துவிட்டது. அல்லாஹ், அவர்களுக்குச் சாதகமாகத் தன்னைத் தனியாளாக்கி விட்டானே! பெரும் ஆபத்துகளைத் தாங்கி மூன்று உருவங்கள்; பெரிதாகத் தெரிந்தனர். மனதில் பதற்றம் கூடியடித்தது. திக்…திக்……திக்……. இதயம் தெறித்து விழுந்தது. கூச்சல் போட்டால் தப்பிக்கலாம் என்று கிழவிக்குத் தெரியவும் கூச்சல் போட வாய் திறந்தாள். கூவினாள். ஆனால் சப்தம் வெளிக்கிளம்பவேயில்லை. காற்று மாத்திரமே புஸ்..புஸ்…. புஸ்…… என்று வந்த பின்னர் அதுவும் நின்றுவிட்டது. “கருணையுள்ள அல்லாவே, என்னை என்ன செய்ய நினைச்ச? நான் செஞ்ச எல்லாக்கொடுமைகளையும் மன்னிச்சு என்னைக் காப்பாத்து யா ரஹ்மானே!” பதறியெழுந்து மீண்டும் வேகமாகச் சாய்ந்தாள்; இரத்தம் சொட்டச்சொட்டத் தலையறுந்த பல கோழிகளும் அவள் முன்னே துடித்துச் சாவுண்ட பல நிகழ்ச்சிகளைப் பார்த்தறிந்தவள். அதில் ஒரு கோழியின் உடலிலிருந்து தன்தலையும் அறுந்து விழுவது போல் தெரிந்தது. கை, கால்கள் வெட்டியிழுத்தன. கத்தியை எடுக்க, யாரோ ஒருவன் சமையலறைக்குள் ஓடுகின்றான். ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொருத்தனின் அரக்கப்பரக்கவுமான செயலும் அவளை குலைநடுங்கச் செய்தன. “நான் நோன்பாளியாச்சே, யாரப்பே! என்னை காப்பாத்தவும் கூட உனக்கு மனசில்லையா?”

சமையலறைக்குப் போனவன் வேகமாகத் திரும்பினான். (புதிதாகச் சாணை தீட்டப்பட்ட கத்தி வெளிப்படையாகவே இருக்கும்படி வைத்துவிட்டு வந்தவள் சுபைதா கிழவிதான்) கிழவியின் குரல் வெளியே வராது என்று மூவருக்கும் நன்றாகத் தெரிந்துவிட்டது. சூழ்நிலை தங்களுக்குச் சாதகமாக இருந்ததைத் தக்கமுறையில் மூவரும் உணர்ந்தாலும், எச்சரிக்கை மிகமிக அவசியமானது. அதனால் ஹாலித்தும், அக்ரமும் பாய்ந்து சென்று கிழவியைப் பிடித்தார்கள். கிழவியின் கை கால்கள் உதறின. ஒருவன் கைகைளைக் கெட்டியாகப் பற்றினான். மற்றொருவன் தலையை இறுக்கமாகப் பற்றினான். கால்கள் உதைபட்டன. உடனே கைகளை விட்டுவிட்டுக் கால்களைப் பிடித்துக்கொண்டான் ஹாலித். சமையலறையிலிருந்து திரும்பி வந்தவன் தன் கையிலிருந்த பொட்டணத்தை அவசரம் அவசரமாகப் பிரித்தான். பேரீச்சம் பழங்கள், வாழைப்பழம், வடை, ஜாங்கிரி, ஆப்பிள், முறுக்கு………. கிழவியின் வாயைக்குவித்து விரிக்க வைத்தான் சம்சுதீன். உடனே பேரீச்சம்பழங்களை வாயில் திணித்து, தண்ணீர் பாட்டிலைத் திறந்து மடமடவென ஊற்றினான். நீண்டகாலம் தின்று விரிந்த பெரிய வாய்தான்; அதனால் நல்ல வசதியாக இருந்தது. எல்லாமும் திணித்தான். கிழவி திணறினாள் ஊ…..ஊ…… என்றாள். உள்ளே திணித்தது, வெளியே வருவது மாதிரி இருந்தது. வரவிடாமல் வாயை மூடினார்கள்.

ஆங்கார கிழவி, நீ கெட்ட கேட்டுக்கு உனக்கு நோம்பு வேற கேக்குதா? நோன்பு பிடிப்பியா, இனிமே நோன்பு பிடிப்பியா?” கிழவியின் வாய்க்குள் கணக்கு வழக்கில்லாமல் இறங்கிய பதார்த்தங்கள் தொண்டையில் சிக்கிக்கொண்டதும் அவன் விரலால் உள்ளே குத்தி ஒரு சொம்புத் தண்ணீரையும் எடுத்து மடமடவென்று வாயில் ஊற்றினார்கள். கிழவி திமிறினாலும் விடுவதாக இல்லை. அவள் சாப்பாட்டின் அளவை அவர்கள் அறிவார்கள்.

“என்னப் படைச்ச ரஹ்மானே, இதெல்லாம் என்னடா கூத்து?” என்று மூச்சு முட்டிய குரலில் முணங்கினாள் கிழவி. சுபைதா கிழவியின் போக்கை நின்று நிதானமாய்ப் பார்த்தார்கள். கிழவியின் திமிறல் இன்னும் இருந்தது. அவள் காற்றோடு போராடிக் கொண்டிருந்தாள் என்று தெரிந்தது. ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து உரித்தான் அக்ரம். இரண்டாகப் பிளந்து அவள் வாயில் ஒன்றைத் திணிக்கவும், அவள் வேண்டாம் என்று சைகை காட்டினாள். “என்ன இதா வேண்டாம்ங்குறே, நல்லா தின்னு கிழவி!” என்று அதையும் அவள் வாயைப் பிளந்து உள்ளே தள்ளியாகிவிட்டது. கண்கள் சொருக ஆரம்பித்தன.

“கிழவி, உன் மவன் மருமவ பேரன் பேத்திங்கண்ணு யாருட்டயாவது இதச் சொன்ன, அப்புறம் ஒரு நோம்பும் உனக்குக் கிடையாது. எச்சரிக்கை!” மூன்று பேரும் அவள் முன்னே ஒரே பேயுருவாகத் தெரிந்தார்கள். “இல்லே, இல்லே ராசாமார்களே, நான் யார்கிட்டேயும் சொல்லல. சொல்லமாட்டேன்” என்ற கிழவியிடமிருந்து ஒரு கொட்டாவி வந்தது. கையை வாய்ப்பொத்தி சைகை காட்டினாள்.

கிழவிக்கு கண்சொருகி வந்தது. ஒன்றும் புரியவில்லை. மூவரும் போன விதமே தெரியவில்லை. சோபாவில் சாய்ந்தாள். மெதுமெதுவென்று அவளை இழுத்தது. என்னவோ சுகம் பரவியது. உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு. காலை நீட்டினாள் தூக்கம் அள்ளிக்கொண்டு போயிற்று-கிழவிக்கு!

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: