நேற்று இரவிலிருந்தே அகிலனுக்கு மனம் சரியில்லை, மனைவி செல்வி மருத்துவரிடம் சென்று வந்தவுடன் சொன்ன விசயம் தான் காரணம்,
‘ஏங்க, நான் டாக்டரிடம் போய் வந்தேன், உங்களை வந்து பாக்க சொன்னாங்க..’
‘ ஏன் … என்னாச்சு..இப்படி தலை கால் புரியாம சொல்லாதே, விவரமா சொல்லு’
‘ ஒண்ணுமில்லையாம், கொஞ்சம் பலகீனமாக இருக்கேனாம். இரும்புச்சத்து குறைவா இருக்காம், டானிக், மாத்திரை எல்லாம் கொடுத்திருக்காங்க… அவ்வளவு தான், நான் நேத்தே உங்களை கூப்பிட்டேன்.. நீங்க ஆபிசல வேலை அதிகம், நீயே போயிட்டு வந்துடுனு சொன்னீங்க, டாக்டர் என்னான்னா, தனியாவா வந்தீங்க… யாரையாவது கூட்டிட்டு வந்திருக்கலாமே, சரி.. நாளை நீங்கள் வர வேண்டாம், உங்கள் கணவரை வந்து என்னைப் பாக்கச் சொல்லுங்க.. அப்படினு சொன்னாங்க..! ‘
‘ ஓ.. ஏன் அப்படி சொன்னாங்க… நாளை காலையில போலாமா’
‘ இல்லை, சாயந்திரம் ஆறு மணிக்கு தான் வருவாங்க. ஆபிசலயிருந்து வரும்போது போய் பாத்துடுங்க..’
செல்வி சொன்னதிலிருந்து அகிலன் யாரிடமும் பேசவே இல்லை, ஏதோ ஒன்று நெஞ்சை அழுத்துவது போன்ற ஒரு உணர்வு. நேரம் ஆக ஆக, இன்னும் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. என்னவாயிருக்கும் என்ற உந்துதல் அவனை வருத்திக் கொண்டே இருந்தது.
‘ என்ன சார்.. என்னவோ மாதிரி இருக்கீங்க… உடம்பு சரியில்லையா’ என்றாள், பக்கத்து காபின் மல்லிகா.
மல்லிகாவின் குரலைக்கேட்டு சுயநினைவுக்கு வந்த அகிலன், ‘ ஒண்ணுமில்லிங்க… மனைவிக்கு உடம்பு சரியில்ல.. அதான்..’
‘ ஓ.. அப்ப லீவு போட்டுட்டு டாக்டர்கிட்ட அழைச்சுக்கிட்டு போயிருக்கலாமே.’
‘ இல்ல.. சாயந்திரம் தான் வருவாங்க.. கொஞ்சம் சீக்கிரமா கிளம்பி போகணும்.’
அதன் பிறகு, கைக்கடிகாரத்தை பார்த்துக்கொண்டே இருந்தார், எப்போது ஐந்து மணி ஆகுமென்று… ஏனோ இன்றைக்கு நேரம் மிக மெதுவாக நகர்கிறதே…ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக அல்லவா போகிறது, எதற்கு இவ்வளவு பதற்றம்… கல்யாணம் ஆனதிலிருந்து, இதுவரை செல்வியைப்பற்றி நாம் இப்படி பதட்டப்படவில்லையே என்று மனம் கேட்டது.
உண்மை தான்… அவளைப்பற்றி இத்தனை ஆண்டுகள் நாம் சிந்திக்கவே இல்லை, அவளுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்று கூட எனக்கு தெரியவில்லை. ஆனால், அவள் என்னை மட்டும் அல்ல, என் அம்மா, என் அப்பா, மகன், மகள் என்று எல்லோரையும் இன்றுவரை கவனித்துக்கொண்டு இருக்கிறாளே.. சே.. என்ன பிறவி நாம், என்று நினைக்கும்போதே அவனுக்கு அவன் மேலேயே வெறுப்பு, கோபம், இயலாமை வந்து பிடுங்கித் தின்றது. அவளைப்பற்றி நினைக்க, நினைக்க, குற்றஉணர்ச்சி மேலோங்கியது. இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு சம்பவம், சண்டை.. அதில் தான் நடந்து கொண்டவிதம் இப்போது வெட்கத்தையும், வேதனையையும் அவனுக்கு தந்தது.
‘ செல்வி, இன்னைக்கு அம்மாவுக்கு கண் டெஸ்ட் எடுக்க வேண்டியிருக்கு, எனக்கு லீவு போடறது கஷ்டம், நீயே கூட்டிகிட்டு போ.’
‘ இல்லைங்க… எனக்கு ரொம்ப அசதியா இருக்கு., வரவர வேலை செய்றதே ரொம்ப சிரமமா இருக்கு… நீங்களே போய்ட்டு வாங்களேன்…’
‘ என்ன பெரிசா செஞ்சு கிழிச்சட்ட.. வெளியே போய் பாரு, பொம்பளைங்க வீட்டுலேயும் வேலை பாத்துகிட்டு, வெளியிலேயும் வேலை பாக்குறாங்க… அவங்கெல்லாம் உன்ன மாதிரி தான் சீன போடுறாங்களா… வேலை நேரம் போக என்னா பண்ற… ரெஸ்ட் தானே எடுக்கற.. இல்லைனா டிவி பாப்பே… இதுல என் அம்மா, அப்பா இருக்குறது உனக்கு பிடிக்கல.. அதான் இப்படி பேசறே… வீட்டுல உக்காந்துகிட்டு இருக்கும் போதே இப்படினா, வேலை பாத்தா என்னென்ன பேசுவ நீ ..’ கத்தினான்.
‘ கத்தினா சரி ஆயிடுமா, ஏன் இப்படி நான் சொல்லாததையெல்லாம் சொன்னதா சொல்றீங்க.. புரிஞ்சிங்கவே மாட்டிங்களா… வீட்டுல இருக்கேன், வீட்டுல இருக்கேன்னு சொல்லி, சொல்லியே என் சுயத்தையெல்லாம் இழக்க வைச்சிட்டீங்களே… சரி போறேன் ‘ என்று கண்ணிலிருந்து தாரை தாரையா கண்ணீர் வழிய சமையலறைக்குள் சென்றாள். அம்மாவை அழைத்துக்கொண்டு போய் வந்த மறுநாள் காலை அவளால் வழக்கம் போல் 5 மணிக்கு எழுந்திருக்க முடியவில்லை.. கொஞ்சம் தாமதமாகவே எழுந்தாள். அதற்குக் கூட அவளை திட்டினோமே.
எவ்வளவு கேவலமாக நடந்திருக்கோம் என்று நினைக்கையில் அகிலனின் கண்கள் கலங்கின. திருமணமாகி, இத்தனை ஆண்டுகளில் ஒரு தடவை கூட அம்மா, அப்பாவுடன் இருப்பதைப்பற்றி, தவறாக சொன்னதில்லையே அவள், மேலும் தன் அம்மாவும் எப்போதும் மாமியார் என்ற அதிகாரத்துடன் தான் நடந்து கொண்டிருந்தாள். பாசமாகக் கூட பேசியதில்லை, இவ்வளவு குறைகள் நம்மிடமிருக்கும்போது, எப்படி அவளை அன்று அவ்வளவுதூரம் புண்படுத்தி இருக்கிறோம்… தன்னை மீறி கண்ணீர் திவலைகள் கன்னத்தின்மீது உருண்டோடின.
‘ என்னாச்சு அகிலா… ஏதாவது பிரச்னையா..? ‘ என்றான் சரவணன் தோளை குலுக்கியப்படி,
‘ இல்லை.. சரவணா, மனசு சரியில்ல… எங்கே செல்வியை பறிகொடுத்திடுவேனோனு பயமா இருக்குடா… அவ இல்லாம என்னால எதுவுமே செய்ய முடியாது, அவளை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்..’ என்று அனைத்து செய்திகளையும் சொல்லிமுடித்தான்.. அகிலன்.
‘ சே .. சே.. அந்த மாதிரி எதுவும் இருக்காது.. நல்லதையே நினைப்போம், போய் டாக்டரை பாரு…ஒண்ணுமில்லைனு சொல்லடுவாங்க, இப்ப உணர்ந்திட்டே இல்ல, அதுவே பெரிய விசயம்., இனிமேல் செல்வியை நல்ல பாத்துப்பே’ என்றான் சரவணன் தோளைத் தட்டிய படி.
மதிய நேரம், சாப்பிட்டு டப்பாவை திறந்தார். அகிலனுக்கு பிடித்த வத்தல் குழம்பும், வெண்டைக்காய் பொரியலும் இருந்தன. ஆனால் அவனால் சாப்பிடத் தான் முடியவில்லை. மனம் டாக்டரை எப்ப பார்ப்போம் என்பதிலே இருந்தது..
.
மாலை ஐந்து மணி, மூன்றாம் மாடியில் உள்ள தன் அலுவலகத்திலிருந்து லிப்ட்டில் ஏறினான், லிப்ட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தால், அது முதல் தளம்…. சே…மன தடுமாற்றம் தான் எவ்வளவு பிழைகளை செய்ய வைக்கிறது… தனக்குத் தானே நொந்துகொண்டு, மிகவும் சோர்வாக படிகளில் இறங்கி தரை தளத்திற்கு வந்தான்.
தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கிளினிக்கில் நுழைந்தான் அகிலன்.
அங்கே யாருமே இல்லை, வரவேற்பறையில் உள்ள நாற்காலியில் அமர்ந்தான். சிலநிமிடங்களில் ஒரு பெண் வந்தார்.
‘ சார் … நீங்க யாரை பாக்கணும்?’
‘ டாக்டர் மரகதம் அவங்கள தான் பாக்கணும். என்ன வர சொன்னதா என் மனைவி சொன்னாங்க..’
ஓ … சரி அவங்க இன்னும் வரல.. ஆறு மணிக்குத் தான் வருவாங்க .. வெயிட் பண்றதா இருந்தா இருங்க, இல்லையனா வெளியே போய்ட்டு வாங்க..’
‘ இல்லை ..நான் இங்கேயே இருக்கேன்..’
ஒரு சிறிய புன்முறுவலுடன் தலையை ஆட்டி, சரி என்ற அர்த்தத்தில் அளித்துவிட்டு சென்றார் அந்த பெண்.
மறுபடியும் செல்வியின் நினைவு வந்தது.. நேற்று இரவு தூக்கம் வருவதற்கு முன் வரையிலும், இன்று காலை தூங்கி விழித்தபின் இந்த நொடி வரையிலும் இப்படிமுன்பு எப்பயாவது செல்வியைப்பற்றி நாம் நினைத்தோமா என்று எண்ணினால் கொஞ்சம் கூட பிடிபடவில்லை அகிலனுக்கு.. இதில் இரு பிள்ளைகள் வேறு பிறந்திருக்கின்றன.
‘ உண்மையில் நீ ஒரு சுயநலவாதியடா அகிலா… ஆனால், ஆண்கள் பொதுவாக இப்படித் தான் இருப்பார்களோ, ‘தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்.
‘ சார்., டாக்டர் கூப்பிடுறாங்க.. வாங்க’
கதவை திறந்துகொண்டு அறையினுள் நுழைந்தான்.
சுமார் நாற்பத்தைந்து வயதிருக்கும். பார்ப்பதற்கு மிகவும் சாந்தமான, கண்களில் அன்பு வழிய, சிரித்த முகத்துடன், வெளிர்நீலநிற காட்டன் புடையில் இருந்தார் டாக்டர் மரகதம்.
‘ வாங்க… உங்க பேரென்ன.. நேற்று வந்த செல்வியின் கணவரா நீங்கள்?’
‘ஆமாம் டாக்டர். என் பெயர் அகிலன், தனியார் கம்பனியில் கணக்காளராக இருக்கிறேன்.’
‘ மகிழ்ச்சி… திருமணம் ஆகி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன.. எத்தனை குழந்தைகள்..?’
‘ இருபத்தாறு ஆண்டுகள் ஆகின்றன.. ஒரு மகன், ஒரு மகள். மகன் கணினி பொறியாளாராக, தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான், மகள் இறுதியாண்டு பொறியியல் படிக்கிறாள்.’
‘ நீங்கள் நான்கு பேர்கள் தானே வீட்டில்’
‘ இல்லை, டாக்டர், அப்பா, அம்மா கூட இருக்காங்க..’
‘ ம்ம்ம்.. சரி, ‘ சற்று யோசித்துவிட்டு, ‘ ஏன்.. நேற்று நீங்கள், உங்கள் மனைவிவுடன் வரவில்லை….?’
‘நேற்று முக்கியமான வேலை டாக்டர், வீட்டிற்கு வர நேரமாகி விட்டது.. ஏதாவது பிரச்சனையா டாக்டர்.’ என்றான் இழுத்தபடி,
‘இல்லை.. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, பயப்பட வேண்டாம், நான் சொல்வதை சரியாக புரிந்துகொள்ளுங்கள். உங்கள் மனைவி இப்போது PMS என்ற கட்டத்தில் இருக்கிறார். அதாவது போஸ்ட் மெனோபாஸ் ஸ்டேஜ் என்று சொல்வோம். பொதுவாக பெண்களுக்கு இது 40 முதல் 50 வயதிற்குள் வரும். மிக அதிகமான உதிரப்போக்கு இருக்கும்.. ஒழுங்கற்ற மாதவிலக்கு, அதாவது, ஒரு மாதத்திலேயே, இரண்டு, மூன்றுமுறை வரும். அதுவும் மிக அதிக அளவில் இருக்கும். மிக எரிச்சலாகவும், கோபமாகவும் இருப்பார்கள். தங்களை மீறி வருவது அது. அவர்களுக்கே இது தெரியாது… குடும்பத்திலும் ஆதரவு இல்லையென்றால், புரியாமல் மிகவும் சங்கடப்படுவார்கள்.
அந்த நேரத்தில் மிகவும் சோர்வாக இருப்பார்கள். அதிக இரத்தம் வெளியேறுவதால், அனிமிக் ஆக இருப்பார்கள், அதற்கு டானிக், மாத்திரை கொடுத்திருக்கிறேன். ஆரோக்கியமான உணவு உண்ண வேண்டும். வேண்டிய அளவு ஒய்வு தேவை. முக்கியமா மனசு நல்லா இருக்கணும். இம்மாதிரி கால கட்டத்தில், நிறைய பெண்களுக்கு மன அழுத்தம் காரணமாக பல பிரச்சனைகள் வருவதுண்டு… அது வராமல் தடுப்பது உன்கிட்ட தான் இருக்கு. அன்பு, அரவணைப்பு நிச்சயம் தேவை, உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன். அவங்கள நல்லபடி பாத்துக்கோங்க. இவ்வளவு காலம் உங்க வீட்டுல இருந்த எல்லோரையும் பாத்துக்கிட்டாங்க.. இப்ப நீங்க எல்லோரும் சேர்ந்து அவங்கள பாத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. அதிகபட்சம் மூன்று ஆண்டுகளில் இயல்பு நிலைக்கு வந்து விடுவார்கள். பயப்படறதுக்கு ஒண்ணுமில்லை… அன்பை அள்ளி கொடுங்க.. புரியுதுங்களா..’ என்று முடித்தார் சிரித்தபடி.
‘ நிச்சயமா… மகிழ்ச்சி.. ரொம்ப நன்றி டாக்டர்.!’ அகிலன்.
வெளியில் உள்ள செருப்பைப் போடும்போது, ஒரு மனஅமைதியை உணர்ந்தான்.. ‘அப்பாடா.. என் செல்விக்கு ஒண்ணுமில்லை.. இனிமேல் நான் அவள் மீது அதிக கவனம் செலுத்துவேன்..’ பெருமூச்சு விட்டபடி. இது தெரியாமல் நாமும் எப்படி எல்லாம் எரிந்து விழுந்திருக்கிறோம் அவள் மேல்… முடியல, முடியல என்று அவள் சொல்லும்போதெல்லாம் அவ மனசை இப்படி நோக அடிச்சிட்டோமே..என்று மனம் அங்கலாயித்தது..
ஒரு அடுப்பில் இட்லி வெந்து கொண்டிருந்தது… மற்றொரு அடுப்பில் வெங்காய சட்னிக்கு, மிளகாய், உளுத்தம்பருப்பு,வெங்காயத்தை சேர்த்து, வதக்கிக் கொண்டிருந்தாள் செல்வி.
மாமனார், மாமியார் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார்கள். மகள் நிலா படித்துக் கொண்டிருக்கிறாள். மகன் ஆதவன் இன்னும் வீட்டிற்கு வரவில்லை.
வீட்டிற்குள் நுழைந்த அகிலன், நேரா அடுப்பங்கறைக்கு வருகிறான்.
‘ செல்வி.. என்ன பண்ணிட்டு இருக்கே?’
‘ ம்ம்.. தெரியலையா, சட்னி ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன்… என்ன சார் இன்னைக்கு நேரா என்ன பார்க்க வந்து இருக்காரு, அப்பா, அம்மாவிடம் பேசிவிட்டு, ரூம்க்கு போய் பிரெஷ் ஆயிட்டு, நியூஸ் கேக்க உக்காந்துடுவீங்களே… என்ன டாக்டரை பாத்தீங்களா, என்ன சொன்னாங்க…. இன்னும் கொஞ்சநாள்தான் உயிரோட இருப்பேன்னு சொன்னார்களா..! ‘
‘அப்படி சொல்லாதே செல்வி.. என்னை மன்னிச்சுடு.. வெரி சாரி… நான் ரொம்ப பயந்து போயிருந்தேன்.. தெரியுமா, உனக்கு ஒன்னுமில்ல கொஞ்சம் வீக்கா இருக்க.. அவ்வளவு தான். இந்த நேரத்தில இப்படி தான் இருக்குமாம்…டாக்டர் ரொம்ப நல்லவங்க.. புரியிறமாதிரி எடுத்து சொன்னாங்க, நல்லா ரெஸ்ட் எடு, சத்தான உணவு சாப்பிடு… நிலா, ஆதவன், நான் சேர்ந்து வேலையை பாத்துகிறோம். அம்மாவை கூட சின்ன சின்ன வேலைகள் செய்ய சொல்லலாம். அப்புறம், லீவு நாட்கள் நாம் இரண்டு பேரும் வெளியே போகலாம். உனக்கு பிடித்த புத்தகங்கள் படி, நூலகம் போயி நாளாச்சு சொல்வியே… இனி வாராவாரம் போப்பா…
.ம்ம்ம், அப்ப்…புறம் … உன் சொந்தகாரங்க வீட்டுக்கு போவோம்,
நீ தனியா போகணும்னாலும் போய் வா. வீட்டைப்பத்தி கவலை படாம வெளியே போய் வா.’
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த செல்விக்கு மனம் ஏதோ செய்தது…நம்ப முடியவில்ல நம்பாமல் இருக்கவும்முடியவில்லை… கண்கள் கலங்கி, ‘இதற்குத் தானே இத்தனை ஆண்டுகாலம் ஏக்கத்துடன் காத்திருந்தேன்’ என்று படி தன்னை மறந்து அகிலன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
கீழே வழிய காத்திருக்கும் கண்ணீர் துளிகளை, தன் கையால் துடைத்துவிட்டு, இரு கைகளாலும் அவளுடைய கன்னங்களை ஏந்தி, நெற்றியில் முத்தமிட்டு முகத்தை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான் அகிலன்.
உனக்கு நான் இருக்கேண்டா என்று அந்த அரவணைப்பு சொன்னது..
.’ரொம்ப நன்றி டாக்டர்’ மனதுக்குள் சொல்லிக்கொண்டாள் செல்வி.
Add comment