தமிழ்library
, போட்டிபோடு, தமிழ்library

போட்டிபோடு

தலைமை ஆசிரியரிடமிருந்து சுற்றறிக்கை வந்திருந்தது. இந்த ஆண்டும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நமது பள்ளியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பெறுகிறது; ஆர்வமுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம், வெற்றி பெறுவோர்க்குப் பரிசுகள் ஆண்டுவிழாவில் வழங்கப்படும்; பெயர்தர நாளை கடைசிநாள். இதுதான் சுற்றறிக்கையின் சாராம்சம். எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பறை அது. வகுப்பாசிரியர் அறிக்கையை ஒரு முறை உரக்க வாசித்துவிட்டு நிமிர்ந்தார். சில மாணவர்கள் எழுந்து போட்டித்தலைப்புகளின் கீழ் தங்கள் பெயரைப் பதிவு செய்தனர். பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி இரண்டிலும் பெயர்தர முத்து எழுந்தான்.

“டேய் முத்து! எப்படியும் உனக்குப் பரிசுகிடைக்கப் போறதில்ல! பிறகு எதுக்குடா பேர் கொடுக்குற?”- பின்னாலிருந்து அவன் நண்பர்கள் அவன் சட்டையைப் பிடித்து இழுத்தனர்.

அவர்கள் சொல்வது உண்மைதான், முத்துவிற்குப் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி இரண்டிலும் ஆர்வம் அதிகம். ஒவ்வொரு முறை போட்டி அறிவிக்கப்படும்போதும் அவன் அதில் தவறாமல் கலந்துகொள்வான். இருந்தும் என்ன பயன்? ஒவ்வொரு முறையும் அவனது வகுப்புத்தோழர்களான கார்த்திக், விக்னேஷ் இருவரும் பரிசைத் தட்டிச் சென்றுவிடுவார்கள். இப்படி பரிசு கிடைக்காமல் தோற்று ஏமாந்து போவதைக்காட்டிலும் பேசாமல் போட்டியில் கலந்துகொள்ளாமல் இருந்துவிடலாம் என்று அவன் எண்ணியதுண்டு. இப்போது நண்பர்களின் கேலியும் அவனைச் சீண்டவே, பெயர் கொடுக்க எழுந்தவன் பெயர் கொடுக்காமல் உட்கார்ந்துவிட்டான்.

மாலையில் அலுவலகம் விட்டு வந்தார் முத்துவின் அப்பா. முத்து ஏதோ குழப்பத்தில் இருப்பதைப் பார்த்து, அவனிடம் கேட்டார். அவன் பள்ளியில் போட்டி அறிவித்திருப்பதைச் சொன்னான். “பரிசு முக்கியமில்லை! நீ போட்டியில் கலந்து கொள்வதுதான் முக்கியம்! நாளைக்குச் சென்று பேர் கொடு”- என்றார் அவர். முத்து தயங்கினான். “பேச்சுப்போட்டியோ, கட்டுரைப்போட்டியோ அதுக்கு ஒரு தலைப்பு கொடுப்பாங்க! அந்தத் தலைப்புக்கான தகவல்களை நீ சேகரிப்பாய்!, புத்தகங்களில் பார்ப்பாய்!, ஆசிரியர்களிடம் நண்பர்களிடம் கேட்பாய்!, இணையதளத்தில் தேடுவாய்! இப்படி தகவல்களை நீயே சென்று தேடி தெரிந்து கொள்வதால், அது உன் மனசில பசுமரத்தாணி மாதிரி பதிந்துவிடும்! என்றைக்கும் மறக்காது!. ஒரு விசயத்தப்பற்றி மற்றவர்களைக் காட்டிலும் நமக்குக் கூடுதலானத் தகவல் தெரியும் என்பது எப்பவுமே சாதகமான ஒரு விசயம்!”- என்றார் அவர்.

முத்து மவுனமாக இருக்கவே, அவரே தொடர்ந்து பேசினார். “நீ ஓரு பேச்சுப் போட்டில கலந்துக்குறதா வைத்துக்கொள்வோம்! நான்காவது அல்லது ஐந்தாவது ஆளாத்தான் பேசப்போற! முதலில் பேசுகிறவன் நன்றாக பேசிட்டு வந்துவிட்டான் என்றால், அவனைக் காட்டிலும் நன்றாகப் பேசவேண்டும், அப்பொழுதுதானே நடுவர்கள் நம்மை கவனிப்பார்கள் என்கிற பதற்றம் வரும்! அந்தப் பதற்றம் உனக்கு ஒரு மன நெருக்கடியைக் கொடுக்கும்! அந்த நெருக்கடிக்குப் பணியாமல் இருந்தால்தான் உன்னால் சிறப்பாக பேசமுடியும்! நெருக்கடிக்குப் பணியாமல் இருக்குற பயிற்சி இந்த மாதிரி போட்டிகளில் கலந்துகொள்ளும் போதுதான் உனக்குக் கிடைக்கும்! இந்த மனப்பக்குவம் எதிர்காலத்துல, வாழ்க்கைல பல்வேறு சந்தர்ப்பங்கள்ல சிக்கலான சூழ்நிலைகளை சமாளிக்க உனக்கு ரொம்ப உதவிகரமா இருக்கும்!”- என்றார் அவர்.

அவரே தொடர்ந்து, “பரிசு வாங்குற மாணவர்கள் உன்னைவிட திறமைசாலிகளாக இருக்காங்க! ஒவ்வொரு முறையும் நீ திறமையானவங்கக்கூட போட்டி போடும்போது உன்னோட திறமையும் மேம்படும் என்பதை மறந்து விடாதே! போட்டிகள் நம்மோட திறமையை மெருகேற்ற நமக்குக் கிடைக்குற நல்ல வாய்ப்பு! அதனால பரிசைப்பத்தி கவலைப்படாம நாளைக்குப் போயி பேர் கொடு!”- என்றார் அவர்.

மறுநாள் பள்ளி சென்றான் முத்து, “டேய்…என்னடா நேத்து போட்டில கலந்துக்கலைன்னு சொன்ன! இன்னைக்கு வேதாளம் முருங்கைமரம் ஏறின மாதிரி திரும்பவும் பேர் கொடுக்கப் போற?”- என்ற நண்பர்களின் கேலி கிண்டலைப் பொருட்படுத்தாமல் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி இரண்டிற்கும் தன் பெயரைத் தந்துவிட்டு வந்தமர்ந்தான்.

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: