தமிழ்library
, மகனும் அப்பாவும், தமிழ்library

மகனும் அப்பாவும்

குமாரின் குலத்தொழில் விவசாயம். ஆனால் அவனுக்கு விருப்பம், வேறு எங்காவது சென்று வேலைபார்க்க வேண்டும் என்பது. ஒரிசாவில் வேலை கிடைத்தது, அங்கிருந்து குஜராத். பெரிய அலுவலக வேலையொன்றுமில்லை, பட்டறை வேலைதான்.

சென்ற இடத்தில் மதாங்கியின் அழகில் மனதை பறிகொடுத்துத் திருமணம் செய்துகொண்டான். குமாரின் பெற்றோருக்கு விருப்பமில்லை. ஒரே மகன் குமாரின் திருமணத்தைக் கண்குளிர பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டனர். அவனோ திருமணம் முடிந்து, வகிடு நிறைய குங்குமமும், முக்காடும் போட்ட மதாங்கியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பெற்றோருக்கு அனுப்பி வைத்தான். மகனின் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த பட்டு வேட்டி, பட்டு சட்டையைப் பார்த்து பார்த்து அழுதாள் அம்மா காமாட்சி.

‘என்னவெல்லாம் கற்பனை பண்ணி வைத்திருந்தேன் தெரியுங்களா?, ஊர்ல இருக்கிற என் அண்ணன் மகளை இந்தப் பயனுக்குக் கட்டிவெச்சா உறவு விட்டுப் போகாம இருக்குமேன்னு நெனச்சே…. ம் …ஹீம் இந்தப்பொண்ணும்  பார்க்க லட்சணமா அழகாதா இருக்கு’

‘சரிதான் காமாட்சி, நம்ம சாதி சனத்தில ஏது இவ்வளவு வெள்ளையானப் பொண்ணு!’

“ம்ம்…. அதுதா அந்தப் பய மயங்கிட்டான் போல இருக்கு” என்று பேசிக்கொண்டனர்.

ஓர் ஆண்டில் சுனில் பிறந்து விட்டான். பேரனின் புகைப்படத்தைக் கொண்டுவந்த தபால்காரர் உள்பட அந்த பகுதிக்கே இனிப்பு கிடைத்தது.

‘இனி மருமகளக் கோவிச்சு என்ன ஆகப்போகுது.’
மருமகளைப்பற்றி போனில் குமாரிடம் விசாரிப்பார்கள். பேசமாட்டார்கள், ஏனெனில் அவளுக்குத் தமிழ் தெரியாது. இரண்டு ஆண்டில் வினிதாவும் பிறந்து விட்டாள்.

பெற்றோர் வேண்டிக் கேட்டுக் கொண்டதன் பேரில், குடும்பத்தோடு ஒரு தடவை ஊருக்குச் சென்றான். வெளிஉலகம் தெரியாத அவளுக்கு, இரயில் பயணம், குளிர்ந்த காற்று, பச்சைப் பசேலென்ற வெளிகள், புளியும் காரமும் கலந்த உணவுவகை, மாமியாரின் பின் கொசுவச் சேலை என எல்லாமே புதிதாக இருந்தது. தினமும் விருந்தோ விருந்துதான். காமாட்சி அக்கம் பக்கம் என எல்லோர் வீட்டிற்கும் பேரன் பேத்திகளை அழைத்துச்சென்று மகிழ்ச்சியடைந்தாள். உளுந்து வடையை வித்தியாசமாக விரும்பி சாப்பிட்டதால், அவர்கள் புறப்படும்போது பெரிய சம்படம் நிறைய போட்டுக் கொடுத்தாள் மாமியார்.

சுனில் ஆறாம் வகுப்பு படிக்கிறான். பல்வேறு குரல்களில் பேசி அசத்தும் ஆற்றல் அவனுக்கு உண்டு. செல்கின்ற மேடைகளில் எல்லாம் முதல் பரிசை வாங்கி விடுவான். பல பரிசளிப்பு விழாவிற்கு மதாங்கியும் சென்றிருக்கிறாள்.
அன்று மதியம் ஏனோ சுனில் சோகமாகக் காணப்பட்டான் பள்ளி வளாகத்தில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது திவாகரன்  சுனிலிடம் கேட்டான்.

“இப்ப எல்லாம் மதிய உணவை நீயே தயார் செய்துகொள்வாயா!”
“இல்லடா அப்பாதா பண்ணுவாரு!”
“திடீர்னு எப்பிடிடா இப்படி ஆச்சு”

“அப்பாவுக்கு மதிய உணவு எடுத்திட்டு போய்தான்டா அம்மாவுக்கு இப்படி ஆச்சு, அதனாலதாண்டா அம்மா இப்பல்லா எங்கயுமே வர்றதில்லே” என்று சுனில் திவாகரனிடம் கூறி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தான்.

‘என்னடா சொல்ற’

‘ஆமாண்டா வெல்டிங் இயந்திரத்தை அப்படியே வெச்சிட்டு அப்பா கை கழுவ போயிருக்காரு. அம்மா அத எடுத்து பாதுகாப்பு கண்ணாடி போடாம இயக்கிட்டாங்க. கண்ணில தீப்பொறி தெரிச்சு அப்பவே ஒரு கண் பார்வை போயிடுச்சு. கொஞ்ச நாள்ல ரெண்டு கண்ணும் தெரியாமப் போச்சடா’

‘எப்பட்றா வேல எல்லாம் செய்றாங்க!’

‘எங்க வீட்ல எல்லா இடமும் அவங்களுக்குத் தெரியும்டா. தனியாவே எல்லாபக்கமும் போவாங்க. என்ன? ரெண்டு அறைதானே! அப்பாவும் நல்லா ஒத்தாசப் பண்ணுவாரு. எங்க அப்பாவையும் அம்மாவையும் பாத்தா, கணவனுக்காகக் கண்களைக் கட்டின திரிதராட்டினரையும் அவர் மனைவியும் போல இருக்கும்டா’. ‘போன எக்ஸாம் அப்பதான ஒங்க பாட்டி எறந்தாங்க’

‘ஆமான்டா அம்மாவுக்குன்னு இருந்த ஒரே சொந்தம் அவங்கதான்டா. அம்மா அதுக்கப்பறம் ரொம்ப ஒடஞ்சு போய்ட்டாங்கடா. அப்பாவும் அத மறக்கடிக்கத்தா இப்பல்லா சீக்கிரமா வீட்டுக்கு வந்திடறாரு. அப்பவும் அம்மா இன்னும் இயல்பு நிலைக்கு வரலடா.” என்று கூறி நிறுத்தினவன்,

அன்றைக்கு ஒரு நாள் அம்மா திடீரென மயக்கமாகி மருத்துவமனைச் சென்றபோது பரிசோதித்த மருத்துவர், அம்மாவின் இதயம் மிகவும் பலவீனமாக இருக்கிறது. கவனம் தேவை என்று கூறியதை நினைத்துப்பார்த்தான்.

அப்பா யாரிடமும் சொல்லக்கூடாது என்றிருக்கிறார், அம்மாவுக்கே தெரியாது. சுனில், பாட்டி தாத்தாவிடம் தொலைபேசியில் அப்பா போலவே தமிழில் பேசி அடிக்கடி அசத்துவான்.

ஊரில் நெருங்கிய உறவுக்காரர் வீட்டுத் திருமணம்.

‘புள்ளகளுக்கு விடுமுறைதானம்மா நீயும் வாயே’

‘இல்லீங்க நானு வரலே’

குமார் எவ்வளவு நிர்பந்தித்துக் கூப்பிட்டும் அவள் வரத்தயாராக இல்லை.

சரி கண்பார்வை பறி போனதை நினைத்தால் எல்லோரும் வருத்தப்படுவார்கள் என்று எண்ணிக்கொண்டான்.

‘பார்வையற்ற மனைவியா?’ என எல்லோரும் இவர்மேல் பரிதாபப்படுவாங்க என்று அவளும் எண்ணிக்கொண்டாள். அவள் நிர்பந்தித்ததால் பிள்ளைகளையும் அழைத்துச் செல்ல சம்மதித்தான்.

வீட்டிற்கு வெளியே மதாங்கி பூந்தொட்டிகள் தொங்கவிட்டு அழகிய பூக்களை வளர்த்துக் கொண்டிருந்தாள். அதை அவள் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள். பிள்ளைகளைக்கூடத் தொட விடமாட்டாள். குமார் ஒவ்வொரு பையாக  தயார்செய்து வெளியில் கொண்டு வைத்துவிட்டு, பிள்ளைகளை கிளப்பிக்  கொண்டிருந்தான்.

வானம் திடீரென இருண்டது. அதுவரை மழை பெய்வதற்கான அறிகுறியே இல்லை. திடீரென மேக மூட்டம் இருண்டு திரண்டது. ஆனால் குளிர்ந்த காற்று வீசவில்லை. துகள்களைப் பரப்பிக் கொண்டு வெப்பக்காற்று வீசியது.

“ இந்தக் காத்து வர்ற மழையையும் கொண்டு போயிடும் போல இருக்கே”
காற்றில் அவள் ஆசையாய் வளர்த்தப் பூந்தொட்டிகளில் ஒன்று அறுந்து கீழே விழுந்ததில் உடைந்து விட்டது. அவளுக்கு அழுகையே வந்து விட்டது.

“மண் சட்டி தானம்மா! இதுக்குப் போய் இப்படி சங்கடப்படற. நா ஊர்லருந்து வரும்போது ஒனக்கு ரெண்டு சட்டியா வாங்கிட்டு வர்றே”

‘ஆச ஆசயா வளத்த ஒரு உயிர் போச்சேனுதாங்க கவல. என்று கண்களைத் துடைத்துக் கொண்டே எனக்கு சட்டியெல்லா ஒண்ணு வேணா நீங்க பத்தரமா போயிட்டு வாங்க பாருங்கக் கிளம்பப் போற நேரத்தில மழ பெய்யப் போகுது”

‘மழ எங்கம்மா பெய்யப் போகுது. அதுதா நம்ம ஊருக் காத்து மழய அடிச்சிட்டுப் போயிடுச்சே’
உள்ளே கண்ணாடியப் பார்த்து தலை சீவிக்கொண்டே சிரித்தான் சுனில்

“ஏண்ணா சிரிக்கற?”

’ஒண்ணு இல்ல அம்மா செல நேரம் கொழந்த மாதிரி நடந்துக்கறதப் பாத்தா சிரிப்பா வருது’.
வேகவேகமாகக் காயப்போட்டத் துணிகளை எடுக்க வந்தப் பாயல்,

“என்ன அண்ணா ஊருக்குக் கிளம்பியாச்சு போல இருக்கு. மழ வரும்னு நெனச்சா இப்பிடி பொய்யாப் போச்சு. காத்து மழய எடுத்துக்கிச்சு” என்றாள்.

‘ஆமாம்மா கௌம்பிட்டோம், இவ வர மாட்டேனுட்டா கொஞ்சம் பாத்துக்கோம்மா’

“கவலப்படாமப் போங்க அண்ணா. எங்க மண்ணிய நீங்க வர்ற வரைக்கும் நீங்க பாக்கற மாதிரியே பாத்துக்கறே” என்ற பாயலின் வரிகள் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

திருமணம் நல்லபடியாக முடிந்தது. உற்றார் உறவினர்களைப் பார்த்த பெரு மகிழ்ச்சி. திருமண மேடையிலும் சுனில் பல குரல்களில் பேசி அசத்தினான். பாட்டி தாத்தாவிற்குப் பெருமையோ பெருமை.

ஊருக்குச் செல்ல இரயில் நிலையம் வந்தனர். பாட்டி தாத்தா வாங்கி வைத்த சிறுசிறு விளையாட்டுச் சாமான்கள், அம்மாவுக்குச் சேலை, பலாப்பழம், சீதாப்பழம், முருங்கைக்காய், கொம்புத்தேன் என மூட்டை முடிச்சுகள் அதிகமாக இருந்தன. பேற்றோரும் இரயில் நிலையம் வரை வந்தனர்.

இரயிலின் அறிவிப்புச் சத்தம் கேட்டதும் காத்துக்கொண்டிருந்த தண்ணீர் விற்பவர், உணவு விற்பவர், பொம்மைகள் விற்கிறவர்கள், காத்திருந்த பயணிகள் என அனைவரும் இங்கும் அங்குமாக ஓடத்தொடங்கினர்.

“நீங்க ரெண்டு பேரும் இங்கயே பாட்டிகிட்ட நில்லுங்க, நான் போய் கூட்டமில்லாத பெட்டியா பாத்து இடம் போட்டுட்டு வர்றேன். இந்தா இதப்புடி ஓடும்போது விழுந்திடும்” என்று கூறி சட்டைப்பையிலிருந்த அலைபேசியை சுனிலின் கையில் திருகி விட்டு ஓடினான்.

‘சரிப்பா மெதுவாப் போங்க!’

கூட்ட நெரிசலில் மோதி வேகமாகப் போனான். ஓடும்போது ஒரு சிறுமி குறுக்கே வந்து கால் தடுக்கி விழுந்து விட்டாள். அவளைத் தூக்கிவிட்டு அவள் கையிலிருந்து விழுந்த பாப்கான் பாக்கெட்டை கையில் கொடுத்துவிட்டு, முதுகில் தட்டியவாறு ஓடினான். கூட்டத்தைக் கடந்து பெட்டியை எட்டி எட்டிப் பார்த்தவாறே ஓடினான். வேகமாக ஓடி தண்ணீர் பாக்கெட் விற்கிறவர் மீது மோதியதில் அனைத்து பாக்கெட்டுகளும் கீழே விழுந்தன.

‘ஏன்டா சாவுகிராக்கி ரெயிலு நிக்கறதுக்குள்ள இப்படிப் பறக்கறீங்க’
`மன்னிச்சிருங்கண்ணே……………………..’

சீட் போட்டுட்டு வந்து இவருக்கு உதவலாம் என்று எண்ணியவாறு காலியாக இருக்கும் இடத்தையே குறி வைத்து ஓடினான்.

காலியான இடத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் ரெயில் நிற்பதற்குள் ஏறப்போனதில், கால் தவறி கீழே விழுந்து விட்டான். தண்டவாள இரும்பில் பின் மண்டை அடிபட்டதோடு, மெதுவாக நிற்க வந்த இரயிலின் வீல்களும் தலையில் ஏறின. வெறும் கையுடன் வழி அனுப்ப வந்த பெற்றோர், மகனின் சடலத்தோடு வீடு திரும்பினர்.

சடலம் பிறந்த வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டு, சடங்குகள் முடித்து அவன் திருமணத்திற்காக எடுத்துவைக்கப்பட்ட பட்டு வேட்டியால் சுற்றி கிடத்தப்பட்டது. அருகில் உள்ள உறவினர்கள் ஒவ்வொருவராக வரத்தொடங்கினர்.
மதாங்கி பூந்தொட்டிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள்.

அதுவரை சுட்டெரித்த சூரியன் சுழல்காற்றை வெட்கையுடன் பரப்பியது, மண்துகள் காற்றலையில் வீசிக்கொண்டிருந்தன.

சுனில் கையிலிருந்த குமாரின் அலைபேசி அடிக்கத் தொடங்கியது.

“புஜ்ஜு அழைக்கிறார்……………..’
அம்மாவை அப்பா அப்படித்தான் கூப்பிடுவார்.

“யாரு தம்பி அலைபேசி…..ல?”

“அ……ம்….மா”

எடுப்பா அலைபேசியை எடுத்துப் பேசு. அம்மாவக் கிளம்பி வரச்சொல்லுப்பா! என்றாள் அழுதுகொண்டே பாட்டி.

‘அப்பா நம்மள எல்லா விட்டுட்டுப் போயிட்டாருன்னு சொல்லுப்பா’

‘ ரெண்டு நாள்ல சடங்க முடிச்சிட்டு வந்தர்றமோன்னு சொல்லு’

‘அப்பா இனிமே திரும்ப வர்ற மாட்டார்னு சொல்லு’

‘ஃபோன நிறுத்தி வைப்பா எடுத்துப் பேசாத’
எனப் பல குரல்கள் கேட்டன.

சிலையாய் நின்ற சுனிலுக்கு, அப்பா அம்மாவின் அன்பான வாழ்க்கை, கண் தெரியாத அம்மாவின் முகம், மருத்துவர் கூறின இருதய பலவீனம், வெளி உலகம் தெரியாமல் அப்பா பாதுகாத்த அம்மாவின் வெகுளித்தனம், அம்மாவின் பெரிய வட்டப்பொட்டு, சேலை முக்காட்டிற்கடியில் குங்குமம் நிறைந்த வகிடு. என அனைத்தும் அவன் கண் முன் வந்து சென்றன. தங்கையையும் தன்னோடு சேர்த்து நின்றான்.

’ஏங்க அலைபேசியை எடுங்க’. என்று மனதில் எண்ணியவளாய் ஹலோ….ஹலோ என்றாள் மதாங்கி.
பலத்த வெப்பக்காற்றால் இணைப்பு கட்டானது. வெளியில் வந்து மீண்டும் முயற்சித்தாள்.

‘ மதினி மணல்காற்று இப்படி சூடா வீசது வெளில எங்க போறீங்க அலைபேசியை எடுத்திட்டு’
என்று அக்கரையுடன் ஓடி வந்தாள் பாயல்.

காற்றில் மதாங்கியின் முக்காடு விலகி, தலை கலைந்து அலங்கோலமாய் நின்றாள்.

`அண்ணாக்கு அலைபேசியை பண்ணினா கட்டாயிட்டே இருக்கு பாயல், எனக்கு என்னமோ போல இருக்கு பாயல்’ என்றவாறு மீண்டும் முயற்சி செய்தாள்.

சுனிலின் கையில் மீண்டும் மணி அடிக்கத் தொடங்கியது.

`அலைபேசியை எடுத்துப் பேசப்பா……’

‘அலைபேசியை குடு நாங்களாவது சொல்றோம்’,

‘இல்ல பேசாம நிறுத்தி வை’

சுனில் தனது கண்களைத் துடைத்துக் கொண்டு, அலைபேசியின் பச்சை பட்டனை அமர்த்தினான்.

‘ஹலோ புஜ்ஜும்மா!…..’

‘வந்த எடத்தில….. நம்ம பெரிய தாத்தா……… அட்டேக்கில எறந்திட்டாரு. ரெண்டு நாள்……..ல சடங்க முடிச்சி……..ட்டு வந்தர்றண்டா……… புஜ்ஜும்மா…………”  என்று குமாரின் அதே குரலில் பேசினான்.

அத்தனை அழுகை சத்தமும் ஒரு நிமிடம் நிசப்தமாயின.

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: