தமிழ்library
, மனுஷனை மனுஷனா மதிக்கக் கத்துக்குங்களேன்!, தமிழ்library

மனுஷனை மனுஷனா மதிக்கக் கத்துக்குங்களேன்!

`எங்கிருந்து வந்திருந்தாலும் இனவெறி என்பது மோசமானது’ – உரத்த குரலில் ஒருமுறை சொன்னார் அமெரிக்காவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான ஆலன் பால் (Alan Ball). `இப்போல்லாம் சாதி யாருங்க பார்க்கிறா…’ என்று நமக்கு நாமே கூறிக்கொண்டாலும், உள்ளங்கை செல்போனைக் கொண்டு உலகின் மூலை முடுக்கெல்லாம் தகவல் பரிமாற்றம் தொடங்கி பல மாயாஜாலங்கள் நிகழ்ந்தாலும், சாதிப் பாகுபாடும், இனவாதமும் பல இடங்களில் செழித்து வளர்ந்திருக்கின்றன என்பதே உண்மை. சில இடங்களில் இனவெறியின் குரூரமான முகம் எல்லோரையும் நடுக்கம்கொள்ளச் செய்கிறது. சக மனிதனை நேசிப்பதைவிட உயர்வான குணம் வேறொன்று இருக்க முடியாது. கணியன் பூங்குன்றனாரின் `யாதும் ஊரே யாவரும் கேளிர்’ முதல் திருவள்ளுவரின் `அன்பிலார் எல்லாம் தமக்குரியர்’ வரை வலியுறுத்துவது மனிதநேயத்தைத்தான். அதேநேரத்தில், சக மனிதனிடம் பரிவுகொள்கிறவர்கள், கருணை காட்டுகிறவர்கள், ஒரு மனிதனுக்கு அநீதி நிகழ்கிறபோது வேதனைப்படுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை அடையாளம் காட்டும் கதை இது!

கதை

இன்றைக்கு வளர்ந்த நாடுகளில், முதன்மையான நாடு என தன்னை முன்னிறுத்திக்கொள்கிறது அமெரிக்கா. ஆனால், அதன் வளர்ச்சிக்குப் பின்னணியில் இருந்தவர்கள் கறுப்பின மக்கள். அமெரிக்கா செழிப்பான நாடாக மாறுவதற்கு அரும்பாடுபட்டவர்கள் அடிமைகளாக இருந்த, கறுப்பின மக்கள்தான். அமெரிக்கா சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பிறகும்கூட அங்கே அடிமைமுறையும், கறுப்பின மக்களுக்கு எதிரான கொடுமைகளும் நடந்துகொண்டுதான் இருந்தன. ரோஸா பார்க்ஸ் என்ற பெண்மணி பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட வரலாறு நமக்குத் தெரியும்; அதற்காகவே மார்ட்டின் லூதர் கிங் பேருந்து புறக்கணிப்புப் போராட்டத்தை அஹிம்சை வழியில் நடத்தி கறுப்பின மக்களுக்கு எல்லா இடங்களிலும் சம உரிமையைச் சட்ட ரீதியாக வாங்கித் தந்த வரலாறும் நமக்குத் தெரியும். ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அந்த மக்களுக்கு எதிரான இனவெறி அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றது… இப்போதும்.

அந்த பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானம் பயணிகளால் நிறைந்திருந்தது. ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க்கிலிருந்து, லண்டனுக்குச் சென்றுகொண்டிருந்தது. ஓர் இருக்கையில் 50 வயது மதிக்கத்தக்க ஆங்கிலேயப் பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார்; அவருக்கு அருகே ஒரு கறுப்பின ஆண் அமர்ந்திருந்தார். விமானம் கிளம்பியதிலிருந்தே அந்தப் பெண்மணிக்கு ஏதோ ஓர் எரிச்சல். அவரை அந்தப் பெண்மணிக்குப் பிடிக்கவேயில்லை என்பது அவர் முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது. அந்தக் கறுப்பின மனிதரைக் கடுகடுவெனப் பார்த்தார். சிறிது நேரம் கழித்து ஏதோ முணுமுணுத்தார். பிறகு கொஞ்சம் சத்தமாகவே திட்ட ஆரம்பித்தார். இத்தனைக்கும் அந்த கறுப்பின மனிதர் அந்தப் பெண்ணைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. தன் கையிலிருந்த புத்தகத்தைப் படிப்பதில் ஆழ்ந்துபோயிருந்தார். இப்போது விமானத்திலிருந்த மற்ற பயணிகளின் கவனமெல்லாம் அந்தப் பெண்ணின் மேல் திரும்பியிருந்தது.

ஆங்கிலேயப் பெண்மணி, கைதட்டி விமான பணிப்பெண்ணை அழைத்தார். அருகே வந்த விமானப் பணிப்பெண், “மேடம்… சொல்லுங்க. உங்களுக்கு என்ன வேணும்?’’ என்று கேட்டார்.

“என்ன வேணுமா… பார்த்தா தெரியலை? எனக்குப் பக்கத்துல ஒரு கறுப்பரை உட்கார வெச்சிருக்கீங்க. இந்த மாதிரி ஆள் என் பக்கத்துல உட்கார்ந்திருக்கிறது எனக்குப் பிடிக்கலை. நான் ஊர்ப் போய்ச் சேர்ற வரைக்கும் இதையெல்லாம் என்னால சகிச்சுக்க முடியாது. எனக்கு வேற சீட் குடுங்க…’’

விமானம்

“சரி மேடம். கொஞ்சம் அமைதியா இருங்க. இன்னிக்கி கிட்டத்தட்ட எல்லா சீட்டுகளுமே நிரம்பிடுச்சு. ஏதாவது சீட் கிடைக்குதானு பார்த்துட்டு வந்து சொல்றேன்…’’

“சீக்கிரம்…’’ என்றார் அந்தப் பெண்மணி.

சில நிமிடங்கள் கழித்து விமானப் பணிப்பெண் திரும்பி வந்தார்.

“மேடம்… நான் நினைச்ச மாதிரியேதான் இருக்கு நிலைமை. நீங்க ட்ராவல் பண்றது எக்கனாமி கிளாஸ்ல… அதாவது குறைஞ்ச கட்டணப் பிரிவான மூன்றாம் வகுப்புல. இங்கே ஒரு சீட்கூட இல்லை. நான் எங்களோட ஃப்ளைட் கேப்டன்கிட்ட பேசிப் பார்த்தேன். இதுக்கு அடுத்த நிலையில இருக்குற பிசினஸ் கிளாஸ்லயும் சீட் எதுவும் காலியில்லைனு அவர் சொன்னார். அதே நேரத்துல ஃபர்ஸ்ட் கிளாஸ்ல ஒரு சீட் இருக்காம்…’’

இப்போது ஆங்கிலேயப் பெண்மணியின் முகத்தில் பரவசமும் நிம்மதியும் தெரிந்தது.

விமானப் பணிப்பெண் தொடர்ந்தார்… “இருங்க… எங்க கம்பெனி விதிகள்படி, ஒருத்தரை எக்கனாமி கிளாஸ்லருந்து ஃபர்ஸ்ட் கிளாஸ்ல கொண்டுபோய் உட்காரவைக்கிறது வழக்கமில்லை. ஆனா, இங்கே இருக்கிற சூழ்நிலையில, அருவருப்போட இன்னொருத்தருக்குப் பக்கத்துல ஒருத்தர் உட்கார்ந்திருக்கிற நிலைமையில எங்க நிறுவனத்துக்குக் கெட்ட பேரு வந்துடக் கூடாதுனு எங்க கேப்டன் நினைக்கிறார்…’’ என்றவர் அந்தக் கறுப்பின மனிதரைப் பார்த்துப் பேச ஆரம்பித்தார்.

“சார்… உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா, உங்க ஹேண்ட்பேக்கை எடுத்துக்கங்க. என்கூட வாங்க. உங்களுக்காக ஃபர்ஸ்ட் கிளாஸ் சீட் காத்துக்கிட்டிருக்கு…’’

பணிப்பெண் சொல்லி முடித்தார்… அவ்வளவுதான்.. சக பயணிகள் எல்லோரும் எழுந்து நின்று, கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். ஆங்கிலேயப் பெண்மணி திகைத்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தார்.

-பாலு சத்யா

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: