தமிழ்library
, மஹாசிவராத்திரி விரதமும், மகத்துவமும் அனுஷ்டிக்கும் முறைகளும், தமிழ்library

மஹாசிவராத்திரி விரதமும், மகத்துவமும் அனுஷ்டிக்கும் முறைகளும்

ஆதியும், அந்தமும் இல்லாத பரம்பொருள் சிவனை முதல்முதற் கடவுளாக ஏற்று சைவ நாயன்மார்களும், சிவனடியார்களும் சிவனையே எந்நேரமும் சிந்தித்து உண்மை அனுபவத்தினைக் கண்டு தெளிந்து தம்மை முழுமையாக அப்பரம் பொருளிடம் ஒப்படைத்து விட்டு நிறைவாழ்வு வாழ்ந்தவர்கள். அவர்கள் அனைத்தும் சிவன் செயல் என உணர்ந்து கொண்டமையினால் சிவநெறி நிற்கும் சிவனடியார்களுக்கு ஒரு குறையும் இல்லை.இதனை உலகிற்கு எடுத்துக் காட்டுவதே சிவ சிந்தனை நிறைந்த மஹாசிவராத்திரி விரதமாகும்.

சக்திக்கு ஒன்பது இராத்திரிகள் அது நவராத்திரி. சிவனுக்கு ஒரு இராத்திரி அது சிவராத்திரி ஆகும். மஹாசிவராத்திரி என்பது சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனை போற்றி அர்ச்சிக்கும் ராத்திரி என பல பொருள் தருகின்ற போதிலும் சிவமான ராத்திரி என்பது சிறப்பாக கருதப்படுகின்றது. மஹா என்றால் பெரிய,மஹோன்னத எனப்பொருள்படும். சிவன் என்றால் துக்கம், இன்னல், இடர் இல்லாமல் செய்பவன். என்றும் இராத்திரி என்றால் சுகத்தைக் கொடுப்பது என்பதாகும். அந்தவகையில் மஹாசிவராத்திரி என்பது எமக்கு சுகத்தையும்,நல்வாழ்வையும் அளிக்கவல்லது என்பது பொருளாகும்.மஹாசிவராத்திரி நாளை 07ஆம் திகதி திங்கட்கிழமை உலகமெங்கும் வாழும் இந்துக்கள் அனுஷ்டிக்க ஏற்பாடாகி வருகின்றனர்.

பிரமாவும், விஷ்னுவும் தம்முள்ளே யார் பெரியவர் என்று கருத்து வேற்றுமை கொண்டு சிவபெருமானிடம் சென்றபோது சிவன் சிவலிங்கத் திருமேனியராகி பெரும் ஜோதியாக அவர்கட்கு காட்சி கொடுத்தார். அந்த ஜோதியானது ஆதியும் அந்தமும் இல்லாத பெரும் ஜோதியாக காட்சி கொடுக்க இந்தப் பிளம்பதோர் மேனியின் அடியையோ அல்லது நுனியையோ யார் முதல் காண்கின்றாறோ அவரே பெரியவர் என சிவன் கூற பிரமாவும், விஷ்னுவும் அடியையும், முடியையும் தேடி இறுதியில் காணாது இருவரும் ‘நான்’ என்ற மமதை நீங்கிய நாளோ இச் சிவராத்திரி தினம் என பொருள் புகட்டி நிற்கின்றது.

மேலும் ஒரு சமயம் விளையாட்டாக சிவபெருமானது இருகண்களையும் உமையம்மாள் அவருக்கு பின்புறமாக வந்து கைகளால் மறைத்து விடுகின்றாள். அப்போது உலகமெங்கும் பேரிருள் பரவுகின்றது. இந்நிலையில் இக்குற்றம் நீங்க உமையம்மை நான்கு ஜாமம் சிவபூஜை செய்ததுடன் இந்த சிவராத்திரி தினத்தில் சிவனை வழிபடும் அடியார்கள் யாவரும் இடர் களையும் வகையில் சிவனிடம் அருள் வேண்டிக் கொண்ட இரவே சிவராத்திரி என்றும் புராணங் கூறப்படுகின்றது.இது சிவசக்தி அம்சம் கொண்ட நாளாயிற்று. இதனையே சிவலிங்க வடிவம் எடுத்துக் காட்டுகின்றது.

அதேபோன்று அறிந்தோ அறியாமலோ யாயொருவர் சிவராத்திரி தினத்தன்று சிவசிந்தனையில் விழித்திருக்கின்றார்களோ அவர்களுக்கு புண்ணியம் கைகூடும்.இதனை எமக்கு எடுத்துக் காட்டுவதே சிறுவயது முதல் நாமறிந்த வேடன்,புலி கதையாகும்.இது நிகழ்ந்த இடமாக திகழ்வது இந்தியாவிலுள்ள திருவைகாவூர் என்ற புண்ணிய தலமாகும்.அங்கு இன்றும் சிவராத்திரி பூஜை முக்கிய வழிபாடாக இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்ட்டிக்கும் முறைகள்

மகாசிவராத்திரி தினத்திற்கு முதல் நாள் தொடக்கம் சைவ போசனம் உண்டு சிவராத்திரி அன்று காலை பிரம்மமூர்த்தத்தில் எழுந்து ஸ்நானஞ் செய்து (நீராடி) தோய்த்துலர்ந்த வஸ்திரம் அணிந்து சிவசின்னங்களான விபூதி, உருத்திராக்கம் தரித்து கோயிலுக்குச் சென்று சிவனை வழிபடுதல் வேண்டும். அன்று முழுக்க உபவாசம் இருத்தல் நன்று. முடியாதோர் மதியம் மட்டும் பாலோ, பழமோ உண்ணலாம். மாலை கோயிலுக்குச் சென்று அங்கு இடம்பெறும் முறையான நான்கு ஜாமமும் அபிஷேகம் மற்றும் பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்ளல், புராண படலங்கள் கேட்டல், சிவதோத்திரங்கள் ஓதுதல், இறைவனுக்கு மலர்தூவுதல், பயபக்தியுடன் சிவசிந்தனையில் முழ்கி தியானம் செய்தல் போன்ற செயற்பாடுகளில் தன்னை அர்ப்பணித்தல் வேண்டும்.சிவபூஜை விதி தவறாமல் நான்கு சாமத்து பூஜைகளையும் முறைப்படி செய்வது சிறந்தது.

முதலாம் சாமம்- பால், தயிர், நெய், கோசல, கோமயம் எனும் இவைந்தையும் கலந்து பஞ்ச கவ்யத்தில் சிவலிங்கத்தை அபிசேகம் செய்து சிவனுக்கு வெந்நிறப்பட்டு உடுத்தி பத்திரங்களான வில்வம் இலை, சாத்தி தாமரை போன்ற மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். அச்சமயம் பயத்தம் பருப்பு சேர்ந்த பொங்கல் நிவேதித்து (படைத்து)பச்சைக் கற்பூரம்,சாம்பிராணிதூப, புஷ்பதீப போன்றவற்றால் ஆராதனைகள் செய்து இருக்கு வேத மந்திரங்கள் ஓதி இருகை கூப்பி வணங்கி அஷ்டாங்கமாக சிவனை மனதில் நிறுத்தி வழிபடல் வேண்டும்.

இரண்டாம் சாமம்- முக்கனிகளுடன் ஐந்து வகையான பழங்களைச் சேர்த்து பஞ்சாமிருதத்தால் சிவலிங்கதுக்கு அபிஷேகம் செய்து சிவனுக்கு மஞ்சல் நிறப்பட்டு சாத்தி சந்தனத்துடன் தாமரைமலரும், சாத்தி, துளசியால் அர்ச்சித்து,பாயாசம் நிவேதித்து.குங்கிலியம் தூபமிட்டு நடசத்திர தீபத்தினால் ஆராதனைகள் செய்து யஜுர் வேத மந்திரங்கள் ஓதி வழிபடல் வேண்டும்.

மூன்றாம் சாமம்- தேனால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்து வெண்ணிறப்பட்டு சாத்தி அரைத்த பச்சைக் கற்பூரத்துடன் கிழுவை அல்லது விளா சாந்திமுல்லை மலர்சாத்தி முக்கிளை வில்வத்தால் அர்ச்சித்து எள்ளு கலந்த அன்னம்(சோறு) நிவேதித்து.கஸ்தூரி வாசைன இட்டு அகிற்புகை காட்டி சாம வேத மந்திரங்கள் ஓதி பஞ்ச தீபாராதனை செய்து வழிபடல் வேண்டும். இவ்சாம பூஜையில் தான் “லிங்கோற்பவ காட்சி இடம்பெறும். இது பதினொன்றரை மணிதொடக்கம் நள்ளிரவு பன்னீரண்டு பதினைந்து நிமிடத்திற்கும் உள்ள இடைப்பட்ட நேரமாகும். சிவராத்திரி வழிபாட்டில் இக் காலம் முக்கியமானது. அன்று நள்ளிரவில் சர்வவல்லமையும் கொண்ட சிவபெருமான் இலிங்கத்தில் தோன்றி சகல ஜீவராசிகளுக்கும் தனது திருவருள் கடாற்சத்தை வாரி வழங்குகின்றார்.இதன் காரணமாகவே அன்றைய இரவு உலகமெங்குமுள்ள இந்துகள் அனைவருக்கும் சிறப்புக்கள் கூடிய புனித இரவாக கருதி வழிபாடுகளை செய்கின்றனர்.

நான்காம் சாமபூஜை- கருப்பஞ் சாற்றினால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்து.நீல நிறப்பட்டு சாத்தி அரைத்த குங்குமப் பூவுடன் நந்தியாவட்டை மலரும், சண்பகப்பூ, சாந்தி நீலோற்பல மலர், நொச்சி ஆகியவற்றால் அர்ச்சித்து.கறியமுது நிவேதித்து, அதர்வண வேத மந்திரங்கள் ஓதி மூன்றடுக்கு தீபம் காட்டி வழிபடல் வேண்டும்.

இவ்வாறு நான்கு ஜாமம் நித்திரை விழித்து சிவனை பூசித்து மறுநாள் அதிகாலையில் புனித நீராடி அநுஷ்டானம் இயற்றி தமது தீட்சா குருவைத் தியானித்து தக்கவாறு செய்வதுடன் இவ்வுலகில் மட்டுமல்லாது மறுமை உலகிற்கும் இன்பமளிக்கவல்லதால் இறைவனோடு வாழ்வதற்கு சிறந்த சந்தர்ப்பத்தை இந்த மஹாசிவராத்திரி திருநாள் அமைந்துள்ளது.இதனை இந்துக்கள் அனைவரும் தமது பஞ்சமாபதகங்களை கைவிட்டு சிவகதியேற்றிட சிவசிந்தனையில் வாழ்வோமாக.

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: