தமிழ்library
, மோனா, தமிழ்library

மோனா

மோனா பத்துமாதக் குழந்தை. பொம்மைக்கு மூக்கும் முழியும் வைத்தமாதிரி அழகாக இருப்பாள். நன்றாகத் தவழுவாள். ஒன்றிரெண்டு வார்த்தைகள் மழலையாகப் பேசுவாள். எதையாவது பிடித்துக் கொண்டு எழுந்துநிற்க இப்போதுதான் கற்றுக் கொண்டிருக்கிறாள். வீட்டின் தலைவாசல் கதவை யாராவது திறந்துவிட்டால் போதும். வேகமாகத் தவழ்ந்து வெளியேசெல்ல முற்படுவாள். அம்மாவிட மாட்டார். அவளைத் தூக்கி உள்ளே விட்டுவிட்டு கதவைச் சாத்திவிடுவார். மாலை வேளைகளில் அப்பா மோனாவைத் தூக்கிக்கொண்டு கடைவீதிக்குப் போவார். கண்ணில் தென்படுகிற ஒவ்வொன்றையும் மோனா வேடிக்கை பார்த்தபடி வருவாள். வீட்டிற்கு வெளியே ஒரு சுவராசியமான உலகம் இருப்பது அவளுக்குப் புரிந்தது.

மோனாவிற்கு அவள் வீட்டில் மிகவும் பிடித்தமான இடம் பால்கனி. விசாலமான போர்டிகோவின் மேல் அமைந்த பெரியபால்கனி அது. மோனா எட்டிப்பார்க்கும் அளவில் அமைந்த குட்டையான கைப்பிடிச்சுவர். பாதுகாப்பிற்குக் கம்பிஅழிகள். அந்தக் கம்பிஅழிகளோடுவீட்டின் முகப்பில் இருக்கும் மாமரத்தின் கிளைகள் உரசிக் கொண்டிருக்கும். பெரும்பாலான சமயங்களில் அம்மா அங்கிருந்தபடிதான் மோனாவிற்கு உணவு தருவார். ஒரு நண்பகல் வேளை. பால்கனியில் அமர்ந்தபடி அம்மா மோனாவிற்கு சோறு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது மோனா மரத்தைக் காட்டி ஏதோ சொன்னாள். அவள் சொன்னதை அம்மா சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அவள் மாங்காய்களைக் கைகாட்டுவதாக எண்ணிக்கொண்டார்.

“கொத்துகொத்தா எவ்வளவு மாங்காய் காச்சுத் தொங்குதுபாரு! ரொம்ப அழகா இருக்குல்ல?”– என்றார் அவர். மோனா தொடர்ந்து கைகாட்டினாள். அம்மா உற்றுப் பார்த்தார். ஒருகிளையில் தாய்கிளி ஒன்று குஞ்சிற்கு இரை தந்துகொண்டிருப்பது கண்ணில் பட்டது.

“அட! கிளிகுஞ்சும் மோனா பாப்பா மாதிரி மம்மு சாப்பிடுது!”–அம்மா வியப்புடன் சொன்னார்.

“மம்மு…மம்மு…”–என்று மழலையாகச் சொன்ன மோனா அந்தக் கிளிக்குஞ்சு வாயைத் திறப்பது போல தானும் திறந்து காட்டினாள். குஷியில் ஒருமுறை இருகைகளையும் தட்டிக் கொண்டாள். தட்டில் இருந்த சாதப்பருக்கைகளை அள்ளி கைப்பிடிச்சுவரின் மறுபக்கம் கம்பிஅழிக்கு வெளியே வைத்தாள். தான் வைத்த உணவை கிளிவந்து சாப்பிடும் என்று எதிர்பார்த்தாள். கிளி வரவில்லை.

“கிளிக்கு பழங்கள்னா ரொம்பப் பிடிக்கும்! அம்மா கிளி எங்கேயோ போயி இரைதேடிக் கொண்டாந்து குஞ்சுக்குக் கொடுக்குது!”–என்றார் அம்மா. அம்மா சொன்னது தனக்குப் புரிந்தமாதிரி மோனா தலையாட்டிக் கொண்டாள்.

மோனாவிற்காக வாங்கிய படப்புத்தகம் அருகே நாற்காலியில் கிடந்தது. மோனாவை மடியில் உட்காரவைத்து அந்தப் புத்தகத்தில் இருந்த படங்களை ஒவ்வொன்றாகக் காட்டி அம்மா சொல்லித்தர ஆரம்பித்தார். “காகம்…கிளி…புறா…மயில்…முயல்…!”–என்றார் அவர். மோனாவால் அந்த வார்த்தைகளை உச்சரிக்க முடியவில்லை. தனது இருகைகளையும் உயரேதூக்கி அந்தப்படத்தின் மீது அடித்துத் தனக்குப் புரிந்தமாதிரி ஏதோசொன்னாள். தொடர்ந்து மடியில் அமர்ந்திருக்கப் பிடிக்காமல் புத்தகத்தைத் தள்ளிவிட்டு தவழ்ந்தாள். கம்பி அழியைப் பற்றிக் கொண்டு மரத்தைப் பார்த்து ஆய்…ஊய்… என்று குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டாள்.

சிலநாட்கள் சென்றன. மோனா இப்போது ‘தத்தக்கா புத்தக்கா’ – என்றுநடக்கக் கற்றுக் கொண்டாள். அந்தக் கிளிக்குஞ்சும் பறக்கக் கற்றுக் கொண்டது. அது மாமரத்தில் கிளைவிட்டு கிளை பறந்து சென்றது. அம்மா கிளியைப் போல பறந்துசென்று அதனால் இலாவகமாக அமர முடியவில்லை. கிளைகளின் மேல் விழுந்து எழுந்தது. மோனாவும் சிறிது தூரம் நடந்துசென்று ‘பொத்துபொத்தென்று’ விழுந்தாள். ஆனால் அந்தக் கிளிக்குஞ்சைப் போன்று மீண்டும் எழுந்து நடைபயின்றாள். அம்மா இப்போது மோனாவை அடிக்கடி மாமரத்தின் அடியில் கூட்டிவர ஆரம்பித்தார். அங்கே புல்தரையில் அவளை விளையாடவிட்டு உணவு ஊட்டினார். பால்கனியில் இருந்து பார்த்ததற்கும் மரத்தின் அடியில் இருந்து பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. மோனாவிற்கு அந்த மாமரம் பிரம்மாண்டமாகத் தெரிந்தது. அம்மா புத்தகத்தில் காட்டியதுதவிர இன்னும் நிறைய பறவைகள் மிருகங்கள் புழுப் பூச்சிகள் இருப்பதை மோனா தெரிந்து கொண்டாள்.

மோனா மரத்தில் இருக்கும் அணில், ஓணான் இவைகளை ‘சூ…சூ…’ என கைவீசி விரட்டுவாள். அவைகள் மோனாவை ஒருபொருட்டாகவே கண்டுகொள்ளாது. ஒருநாள் மோனா புல்தரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு சிட்டுக்குருவி வெகுஅருகில் அவளின் முகத்திற்கு எதிரே வந்தது. சிறகுகளை அடித்தபடி ஹெலிகாப்டர் போன்று ஒரே இடத்தில் நிலையாகப் பறந்தது. அந்தக்குருவியைப் பிடிக்க எண்ணி மோனா கைநீட்டினாள். அது சரேலென்று விலகி அவளின் வலப்புறம் பறந்தது. மோனா வலப்புறம் கைநீட்டினாள். அதுவிலகி இடப்புறம் பறந்தது. இப்படி நான்கைந்துமுறை போக்குக் காட்டிவிட்டு அது பறந்து சென்றுவிட்டது. குருவியைப் பிடிக்கிறேன் பேர்வழி என்று மோனா புல்தரையில் உருண்டு புரண்டாள். அவளால் குருவியின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. மோனாவின் உடம்பு முழுக்க வியர்வைத்துளிகள் முத்துமுத்தாக அரும்பியிருந்தது. அவளால் பொக்கைவாய் சிரிப்பைமட்டும் அடக்கவே முடியவில்லை.

இப்போது மோனா வெளிக்காம்பவுண்ட் கேட்டில் ஏறிநின்று தெருவை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கியிருந்தாள். காய்கறி வியாபாரி, மீன்வியாபாரி, எவர்சில்வர் பாத்திரம் விற்பவர் என்று அனைவரும் அவளுக்கு வேடிக்கையாகத் தெரிந்தார்கள். அம்மா ஒரு பாட்டியிடம் வழக்கமாக கீரை வாங்குவார். அப்போது மோனாவும் உடன் இருப்பாள். கீரைக்காரப் பாட்டி கீரையை மோனாவிடம்தான் கொடுப்பார். அப்படிக் கொடுக்கும்போது கீரையில் புழுபூச்சி இருக்கக்கூடாது என்பதற்காக கீரைக்கட்டை கூடைமீது இலாவகமாக ஒருதட்டுதட்டித் தருவார். மோனாவும் பாட்டி செய்தமாதிரியே செய்வாள். பாட்டிதட்டும்போது ஒரு கீரைஇலை கூட கீழே உதிராது. ஆனால் மோனாதட்டும் போதுமட்டும் நிறைய இலைகள் உதிர்ந்துவிடும். தனது இயலாமையை வெளிப்படுத்தும் விதமாக மோனா முகத்தைச் சுருக்கி ‘அச்சோ’ என்பாள். அம்மா ஒன்றும் சொல்லமாட்டார். சிரித்தபடி கீரைக்கட்டை வாங்கிக் கொள்வார்.

ஒவ்வொருநாள் காலையிலும் மோனாவைவிட வளர்ந்த பிள்ளைகள் தெருவழியாகப் பள்ளிக்கூடம் போவார்கள். சீருடை, காலணி அணிந்துகொண்டு, ரெட்டைச்சடைபோட்டுக்கொண்டு, முதுகில் புத்தகப்பையுடன் சமர்த்தாகப் போவார்கள். மோனா கேட்டில் தொங்கியபடி அவர்களைப் பார்த்து கையைசைப்பாள். அவர்களும் பதிலுக்கு மோனாவைப் பார்த்து டாட்டா சொல்லுவார்கள். ஒருசில பிள்ளைகள் கேட்டிற்கு வெளியேநின்றபடி மோனாவிடம் பேச்சுக் கொடுப்பார்கள்.

“நீயும் ஸ்கூலுக்கு வர்றியா? நாங்கக் கூட்டிட்டுப் போறோம்!”–என்பார்கள். மோனாவும் ‘சரி’ என்பதுபோல் வேகமாகத் தலையாட்டுவாள். சிலகுறும்புக்காரப் பிள்ளைகள் மோனாவின் கன்னத்தைக் கிள்ளி ‘கியூட் பேபி’ என்பார்கள். மோனாவும் விடமாட்டாள். பதிலுக்கு அவர்களை இழுத்துப் பிடித்து எச்சில் ஒழுக கன்னத்தில் முத்தம் தருவாள்.

மோனாவின் ஆர்வத்தைப் பார்த்து அப்பா ஒரு ஸ்கூல்பேக் வாங்கித் தந்தார். மோனா அந்த ஸ்கூல் பேக்கை தோளில் போட்டுக் கொண்டு பெரியபிள்ளைகள் பள்ளிக்குப் போவது மாதிரிவீட்டில் குறுக்கும் நெடுக்கும் நடப்பாள். சமயங்களில் அந்தப்பையிலிருந்து நோட்டுப்புத்தகத்தை எடுத்து அதில் பென்சிலால் மனம் போனபடி கிறுக்குவாள். அவளுடைய கிறுக்கல்களில் ஏதேனும் வடிவங்கள் தென்படுவதாக அம்மாவும் அப்பாவும் சொல்வார்கள். மோனாவிற்கு அதுபுரியாது. அதற்காக அவளைப் பாராட்டும் விதமாக அவளைக் கட்டியணைத்து உச்சி முகர்வார்கள். அது அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். கொஞ்சம் வளர்ந்த பின்னால் தன்னையும் மற்றபிள்ளைகள் மாதிரி பள்ளிக்கூடம் அனுப்புவார்கள் என்பது மோனாவிற்குப் புரிந்தது. பள்ளிக்கூடம் எப்படி இருக்கும் என்பதை அவளால் கற்பனைசெய்து பார்க்கமுடியவில்லை. ஆனால் பள்ளிக்கூடம் போவது மகிழ்ச்சியான விசயம் என்பதுமட்டும் அவளுக்குப் புரிந்தது. மோனாதான் பள்ளிக்கூடம் செல்லும் நாட்களை எண்ணி ஆவலுடன் காத்திருந்தாள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்த சிறுமி மோனாவை இந்தப் பூவுலகம் தன் இருகைகளையும் நீட்டிவரவேற்கக் காத்திருந்தது.

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: