தமிழ்library
, யாருடைய குரல் சிறந்த குரல்?, தமிழ்library

யாருடைய குரல் சிறந்த குரல்?

வானம் மேகமூட்டமாய் இருந்தது, மழைவரும் போலிருந்தது. இக்காட்சி கண்ட கானகமயில் ஒன்று மிக்கமகிழ்ச்சி கொண்டது. அது மொட்டைப்பாறை ஒன்றின்மீது ஏறிநின்று தோகைகளைவிரித்து ஆட ஆரம்பித்தது. அதீதஉற்சாகத்தில் அது அகவவும் செய்தது. அருகே இருந்த மரத்தில் குயில்ஒன்று இருந்தது. அது மயிலின் அகவலைக் கேட்டு கீழிறங்கி வந்தது.

“நீ தோகைவிரித்தாடுவதைப் பார்ப்பது கொள்ளைஅழகுதான்! ஆனால் அகவல் மட்டும் வேண்டாம்! இனியகுரலுக்குத்தான்நான் இருக்கிறேனே?”- என்ற அது ‘அக்காவ்…அக்காவ்…’ என ராகமிட்டுப்பாடிக் காட்டியது.

கிளிஒன்று வானில் பறந்துசென்றது. அது இவைகளின் உரையாடலைக் கேட்டு கீழிறங்கி வந்தது. அது குயிலிடம் “நீ பாடுவது இனிமைதான்! ஆனால் குறுகிய காலஅளவில் அடுத்தடுத்து கூவுவதைக் கேட்க ஒரே இரைச்சலா இருக்கு! ஆனால் நான் கொஞ்சும்கிளி! மனிதர்கள் தங்கள் மழலைகளை ‘தத்தைமொழி பேசும்கிள்ளை’- என எங்கள் குரலோடு ஒப்பிட்டுத்தான் பேசுகிறார்கள்!”- என்றது. அதோடு ‘கீ…கீ…’ என்று பாடியும் காட்டியது. பாறைஇடுக்கை மாடப்பொந்தாய் மாற்றி வசித்துவந்த புறாஒன்று அங்கு வந்துசேர்ந்தது. அது “மனிதர்கள் என்னை சமாதானத்தூதுவன் என்கிறார்கள்! உலகில் சமாதானமே மிகச்சிறந்த விடயம்! ஒரு உயர்ந்த நிலையில் என்னை வைத்துப்பார்ப்பதால் நான் அடக்கமாகக் குணுகுகிறேன்!”- என்றது. புறா சொன்னதைக் கேட்ட அங்கிருந்த மற்ற பறவைகள் மூன்றும் நமட்டுச்சிரிப்பு சிரித்தன. கேவலமான குணுகலுக்கு இப்படி ஒரு விளக்கம் வேறா என்று அவைகள் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டன.

அப்போது எங்கிருந்தோ அண்டங்காக்கை ஒன்று அங்கே வந்தமர்ந்தது. அது “உங்களுடைய குரலால் உங்களுக்குத்தான் நன்மை! ஆனால் நான் கரைந்தால் எனக்கு மட்டுமல்ல எனது நண்பர்களுக்கும் உணவு கிடைக்கும்! மனிதர்கள் ‘கா…கா…’என்று எங்களைத்தான் கரைந்து அழைக்கிறார்கள்!”- என்றது. அப்போது வானில் கழுகு ஒன்று பறந்துசென்று கொண்டிருந்தது. அது பாறைமீது வந்தமர்ந்தது. அதன் தோற்றத்தைக் கண்டதும் மற்றபறவைகள் பயந்து ஓரடி பின்வாங்கின. “நான் வானில் பறந்துசென்று கொண்டிருக்கும்போது லேசாகக் கிறீச்சிட்டால் போதும்! எலி, முயல் போன்ற சிற்றினங்கள் அஞ்சி நடுங்கி வளைக்குள் ஓடிஒளிந்து கொள்ளும்!”- என்றது அது.அதுவரை அருகிலிருந்த மரப்பொந்து ஒன்றில் அமைதியாக அமர்ந்திருந்த ஆந்தை ஒன்று பாறைமீது வந்து உட்கார்ந்தது.அது தனது முட்டைக்கண்களுடன் கழுத்தை வட்டமாய் ஒரு சுழற்றுச்சுழற்றி அங்கிருந்த அனைத்துப் பறவைகளுக்கும் ஒரு பீதியை உண்டுசெய்தது. “உனது குரல் அதிகாரம் மிக்ககுரல்தான்! ஆனால் நடுநிசிவேளையில் நான் மொட்டைமரத்தின் மீதோ விளக்குக்கம்பத்தின் மீதோ வந்தமர்ந்து அலறினால் மனிதர்களுக்கு மரணபயமே வந்துவிடும்! நடுக்கத்தில் பக்கத்தில் இருப்பவர்களைக் கட்டிப்பிடித்துக் கொள்வார்கள்!”- என்றது அது.அதோடு நில்லாமல் கொஞ்சம் அலறியும் காட்டியது.

அப்போதுதான் அந்தப்பறவைகள் வெளவால் ஒன்று அவைகளைச் சுற்றிச்சுற்றி பறந்து கொண்டிருப்பதைக் கவனித்தன. வெளவால் கீழேவந்து கஷ்டப்பட்டு அமர்ந்தது.அது அமர்ந்தவிதமே மற்றபறவைகளுக்கு சிரிப்பை உண்டுசெய்தது. அது அவைகளிடம் “எனது குரலை கேட்டீர்களா?”- என்று கேட்டது.

“இல்லையே?”- என்றன மற்ற பறவைகள்.

“உங்கள்குரலின் அதிர்வெண்; அலைநீளம் வேறு! எனதுகுரலின் அதிர்வெண்ணும் அலைநீளமும் வேறு! உங்கள்குரலை கேட்கமுடியும்! எனதுகுரலை கேட்க முடியாது! எனக்குக் கண்பார்வை குறைவு! இருந்தாலும் உங்களைச்சுற்றி எப்படி என்னால் இடிக்காமல் பறக்கமுடிந்தது? அதற்கு எனதுகுரல்தான் காரணம்! மனிதர்கள் எதிரொலித் தத்துவத்தைப் புரிந்துகொண்டு பல அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதற்கு நானே வினையூக்கி! எனது குரலே சிறந்தகுரல்!”- என்றது அது.

“முதலில் இவன் பறவையே கிடையாதே! இவன் பாலூட்டிவகையைச் சார்ந்த விலங்கல்லவா? இவன் எதற்காக நம்மோடு வந்து போட்டிபோடுகிறான்?”- என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டன மற்றபறவைகள்.

அப்போது ‘சிர்ப்…சிர்ப்’- என்று ஓசை எழுப்பியபடி சிட்டுக்குருவியொன்று அங்கே வந்துசேர்ந்தது. அது “எனதுகுரல் உற்சாகத்தின் அடையாளம்! உற்சாகமாக இருந்தால்தான் எந்தஒரு செயலையும் திறம்பட செய்துமுடிக்க முடியும்! எனதுகுரலே நல்லகுரல்!”- என்றது. திடீரென்று எங்கிருந்தோ காட்டுச்சேவலொன்று அங்கே வந்து குதித்தது. “நான் கூவித்தான் பொழுதே விடிகிறது! சூரியனை எழுப்புவதே நான்தான்! எனது குரலே கம்பீரமும் இனிமையும் நிறைந்த குரல்!”- என்றது.

நந்தினி பறவைகளின் தோழி, தங்களுக்குள் ஏதாவது பிரச்சினை என்றால் பறவைகள் அவளிடம் சென்றுதான் முறையிடும்.அவளும் தீரவிசாரித்து அவைகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்வாள். ஒருநாள் பறவைகள் அனைத்தும் நந்தினியின் வீட்டுக்கொல்லையில் கூடியிருந்தன. தங்களுடைய குரலில் யாருடைய குரல் நல்லகுரல் என்று சொல்லும்படி அவளைக் கேட்டுக்கொண்டன. நந்தினி பேச ஆரம்பித்தாள்.

“நமக்குள் வேறுபாடுகள் இருக்கிறது, சண்டை இடுவதற்காக அல்ல! விட்டுக்கொடுத்து சகிப்புத்தன்மையோடு சமாதானமாக வாழ்வதற்காக! நான் சிறந்தவன் என்று நினைப்பது தன்னம்பிக்கை! நானே சிறந்தவன் என்று நினைப்பது மமதை! தன்னம்பிக்கை நல்லமுயற்சியைக் கொடுக்கும்! மமதை அகங்காரத்தையும் அழிவையும்தான் கொடுக்கும்! எல்லோருக்கும் ஒரே மாதிரியான குரல் இருந்தால் எப்படி இருக்கும்? கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! இரசிக்க முடியுமா? மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்கிற பிரபலமான வாசகத்தை கேள்விப்பட்டதில்லையா? மாடப்புறா குணுகுவதுதான் நல்லது!, இச்சைதரும் பச்சைக்கிளிக்குக் கீச்சுக்குரலே அழகு!, இரவாடி ஆந்தை கூவினால் எப்படி இருக்கும்?, கூவுவது குயிலின் பூபாள ராகமல்லவா?”- என்று சொல்லிக்கொண்டு வந்த நந்தினி சற்று நிறுத்தினாள்.

“ஒவ்வொருவர் வாழ்க்கை முறையையும் வைத்துப்பாக்கும் பொழுது உங்கள் ஒவ்வொருவருடைய குரலும் இனிமையான குரல்தான்! அதனால் வேற்றுமையில் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழப்பழகுங்கள்”- என்றாள்.

நந்தினியின் தீர்ப்பை ஏற்றுக்கொண்ட பறவைகள் தங்களுக்குள் சமாதானமாகி தத்தமது இடங்களை நோக்கிக் கிளம்பிச்சென்றன. நந்தினி வீட்டுக்கொல்லையில் இருந்த அத்திமரத்தைப் பார்த்த பழந்திண்ணி வெளவால் மட்டும் அங்கேயே இருந்துவிட முடிவுசெய்து தலைகீழாய்த் தொங்க ஆரம்பித்தது.

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: