தமிழ்library
, யாவரும் கேளிர், தமிழ்library

யாவரும் கேளிர்

பாலுவும் சித்ராவும்  கடற்கரை மணலில் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது யாரோ இரண்டு பேர் ஒரு குழந்தையை முரட்டுத்தனமாக தூக்கிக் கொண்டு போவது சித்ராவின் கண்களில் பட்டது. சித்ரா அந்தக் குழந்தையை ஒரு வினாடி உற்றுப் பார்த்தாள். எங்கேயோ பார்த்த முகமாகத் தோன்றியது. குழந்தை  திமிறிக் கொண்டு கீழேயிறங்க முயற்சித்தது.

”அட, நம்ம மீனு குட்டி மாதிரியிருக்கிறது. மீனு, மீனு“ என்று கத்திக் கொண்டே வேகமாக அந்த ஆட்களை நோக்கி ஓடினாள். பாலுவும், அவன்கூட  நான்கைந்து நபர்களும் அவள் பின்னாடி ஓடி வந்தனர்.

தன்னை நோக்கி சிலர் ஒடி வருவதைப் பார்த்த இரண்டு பேரும் குழந்தையைப் போட்டுவிட்டு ஓட்டம் எடுத்தார்கள் குழந்தை மீனு அரண்டு போயிருந்தாள்,  பயத்துடன் சித்ராவின் கையை கெட்டியாகப் பிடித்து கொண்டாள்.

” மீனு, அழாதே. இங்கே எப்படி வந்தாய்?“

” ஆண்ட்டி, அப்பா என்னை இங்கே விட்டுவிட்டு போய்விட்டார்.”………….  அழுகை நிற்கவில்லை.

” வா, போகலாம்“.

மீனுவுடன்  ஒரு ஆட்டோவில் ஏறி  மதுரம் அப்பார்ட்மெண்ட்ஸ் நோக்கிப் புறப்பட்டார்கள். சித்ராவின் மனம் பின்னோக்கிச் சென்றது “மதுரம் அப்பார்ட்மெண்ட்ஸ்” பெயருக்கேற்ற மாதிரி அழகான  இருபது வீடுகள் கொண்ட கம்பீரமான அடுக்கு மாடி குடியிருப்பு. பாலுவும் சித்ராவும் அங்கு குடியிருக்கிறார்கள். நேபாளி காவலாளி ரத்தன் அவன் மனைவி மாயா மற்றும் குழந்தை  மீனுவுடன் தரைத் தளத்திலிருக்கும் ஒரு அறையில் தங்கியிருக்கிறான்.

ரத்தன், மாயா இருவரும் பத்து வருடங்களுக்கு மேலாக தமிழ் நாட்டில் வசிப்பதால் அவர்களுக்குக் கொஞ்சம் தட்டுத்தடுமாறி தமிழ் பேச வரும் ஆனால், மீனு தமிழை  தாய் மொழி போல் மிக சரளமாய் பேசுகிறாள். அவளை  நேபாளி குழந்தை என்று யாராலும் நம்ப முடியாது. அவ்வளவு  அழகாக தமிழ் உச்சரிப்பு இருக்கும்.

பாலுவுக்கு ஒரு தனியார் கம்பெனியில் வேலை. சித்ரா இல்லத்தரசி. கல்யாணம் ஆகி பத்து வருடங்கள் ஆகிவிட்டது. குழந்தை  பிறக்கவில்லை. போகாத கோவிலில்லை. செய்யாத பரிகாரங்களில்லை பார்க்காத மகப் பேறு மருத்துவர் இல்லை. குறை எதுவுமில்ல என்று ஒன்று அல்ல நான்கு  டாக்டர்கள் சொல்லி விட்டார்கள். கடவுள்தான் கண் திறக்க வேண்டு,ம். ஒருநாள் கலைந்த  தலையுடன் ஒரு சிறுமி வீட்டுக்குள் வந்தாள். அழுக்கு கவுன் அணிந்திருந்தாள். முகத்திலே ஒரு குறுகுறுப்பும் கண்களிலே ஒரு துருதுருப்பும் இருந்தன.

சித்ராவிற்கு அவளைப்  பார்த்தவுடனே மிகவும் பிடித்துப் போய்விட்டது.

” குட்டி உன் பேர் என்ன? “

”என் பேர் மீனு. நீங்கள் புதுசா குடி வந்திருக்கீங்களா ஆண்ட்டி” ? மழலை குரலில் கேட்டாள். குழந்தையின் மழலை சித்ராவை ஈர்த்தது.

”குட்டி நன்னா தமிழ் பேசறியே? எப்படி கத்துண்டே?“ புன்சிரிப்புடன் கேட்டாள்.

கனவனைப்  பார்த்து“ பாருங்கோ, ஒரு நேபாளி குழந்தை எவ்வளவு அழகா தமிழ் பேசறது“ என்றாள்.

”உன் வயசென்ன? படிக்கிறாயா?“

”எனக்கு ஐந்து வயசு. படிக்கிறதுன்னா என்ன ஆண்ட்டி?”

மீனு பள்ளிக்கூடம் போக ஆரம்பிக்கவில்லையென்பது சித்ராவுக்குப் புரிந்தது.

காவலாளி மனைவி மாயா “பணமில்லாததால்தான் மீனுவை பள்ளிக்கூடம் அனுப்பமுடியவில்லை. அவர் என்  இரண்டாவது புருசன். முதல் புருசன் மூலம் பிறந்த குழந்தை மீனு என்பதால் அவருக்கு அவள் மேல் வெறுப்பு. எப்பவும் எரிந்து விழுவார்.“ என்றாள்.அவளைப் பள்ளிக்கூடம் சேருங்க, நான் பண உதவி செய்கிறேன்” என்றாள்.

மீனுவின் அன்பு பிடியுள் சித்ரா சிக்கி விட்டாள். அவள் செய்யும் குறும்புகள், கேட்கும் கேள்விகள் தரும் தொல்லைகள் சித்ராவிற்கு இன்பத்தைக் கொடுத்தன. அணிந்துகொள்ள அழகான துணிகள் வாங்கிக் கொடுத்தாள்.

இப்போதெல்லாம் மீனு குளித்துவிட்டு நன்கு தலைவாரி தூய உடையுடன் வருகிறாள். அதனால்தான் என்னவோ பாலுவுக்கும் மீனுவிடம் பாசப் பிணைப்பு ஏற்பட்டுவிட்டது.

ஒரு நாள் மீனு வரவில்லை என்றதும் சித்ராவிற்கு நிரம்ப கவலையாயிருந்தது. உடம்பு சரியில்லையென்று கேள்விப்பட்டு போய் பார்த்துவிட்டு வந்தாள். அடுத்த நாள் மீனு வந்தவுடன்தான்  அவளுக்கு உயிர் திரும்பி வந்த மாதிரியிருந்தது.

”வீடு  வந்தாச்சு” என்றாள் மீனு குதூகலத்துடன்.

கையில் பீடியுடனும் வாயில் புகையுடனும் அவர்களை எதிர்கொண்ட காவலாளி, “பிசாசே வந்துட்டயா? உன்னை தொலைக்கணுமுன்னு பார்த்தால் முடியலியே! உன்னை என்ன செய்வதென்று தெரியல.

”ஏம்பா, குழந்தையைத் திட்டறே?” என்றாள் நளினி.

”செலவு அதிகமாக இருக்கு. வர்ற வருமானத்திலே குடும்பம் நடத்த முடியல. அவ எப்படியோ உங்க கூட வந்து விட்டாள் இந்தக் குட்டிப் பிசாசை எனக்கு சுத்தமாக பிடிக்காது. அதில்லாமே, என் வீட்டுக்காரிக்கு இப்போது மூணு மாதம்.”என்றான். மீனுவின் தலைமயிரைப் பிடித்து இழுத்தான்.

அதைப் பார்த்த சித்ரா அதிர்ச்சி அடைந்தாள்.

”உனக்கு குழந்தையின் அருமை தெரியவில்லை. குழந்தையை போய் யாராவது கடற்கரையில் வேண்டுமென்றே விட்டுவிட்டு வருவார்களா? அவள் தலை முடியைப் பிடித்து இழுக்காதே. இனிமேல் இப்படி செய்தால் நான் போலீசிடம் புகார் செய்வேன்.“ என்றாள் கோபத்துடன்.

“நாங்க என்ன செய்றது? விலைவாசி அதிகமாய் விட்டது. இன்னொரு குழந்தை வேறு மாயாவுக்கு பிறக்கப் போகிறது.? எப்படி எங்களால் சமாளிக்க முடியுமென்று தெரியவில்லை“என்றான் ரத்தன்.

“குழந்தையை பள்ளிக்கூடம் அனுப்பி படிக்க வைங்க, அடிக்காதீங்க, இனிமே அவளை வெளியிலே எங்காவது விட்டு விட்டு வந்துடாதீங்க. அவள் தங்கக் கம்பி.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்கள்.

சித்ராவின் முகத்தில் வருத்தம் படர்ந்திருந்தது.

“ கவலைப் படாதே சித்ரா, நமக்கு சீக்கிரத்தில் குழந்தை பிறக்கும்.”

“யாருக்கு ஒரு பொருள் பிரியமாயிருக்கிறதோ அவருக்கு அப்பொருளைக் கடவுள் அளிப்பதில்லை. வேண்டாதவருக்குப் பார்த்துக் கொடுக்கிறார். நாம் குழந்தை வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். நமக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை. குழந்தை வேண்டாம் என்று நினைக்கும் காவலாளிக்கு கேட்காமலேயே கடவுள் குழந்தையைக் கொடுக்கிறார்“ அவளால் அழுகையைக் கட்டுப் படுத்தமுடியவில்லை. விக்கி விக்கி அழுதாள். குழந்தைக்காக அவள் மனதிலிருக்கும் ஏக்கத்தைவார்த்தையால் சொல்ல முடியாது.

அடுத்த நாள் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி தரும் செய்தி காத்திருந்தது. நேபாளில் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தில் ரத்தனின் அப்பாவும் அண்ணனும் மரணமடைந்து விட்டார்கள் என்ற விசயம் தெரிந்த ரத்தன் வீட்டைக் காலி பண்ணிக் கொண்டு குடும்பத்தோடு நேபாள் போய் விட்டிருக்கிறான். அவன்  குடியிருப்பு காலியாய் இருந்தது. காவலாளி தேவை என்ற அட்டை இரும்பு வாயிலில் தொங்கியது.

அவர்கள் ஊரை விட்டு போய்விட்டார்கள் என்று கேள்விப்பட்டதும் பாலு திடுக்கிட்டான். சித்ராவுக்கும் மீனுவும் போய்விட்டாள் என்பதால்  துக்கம் அவள் நெஞ்சை அப்பியது. அவள் விம்மி விம்மி அழுதாள்.” மீனுவைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கலாம் என்று பார்த்தேனே, அதற்குள் அவள் போய்விட்டாளே!” என்று சித்ரா மிகவும் வருத்தப்பட்டாள். அவளுடைய துறுதுறுக்கும் கண்கள், சப்பை மூக்கு, மழலை மொழி, என்று சொல்லிச் சொல்லி ஆதங்கப்பட்டாள்.

இரவு வீட்டை விட்டு கிளம்பிய ரத்தன் சென்னை ரயில் நிலையத்தில் மீனாவை விட்டு விட்டு ரயிலேறி விட்டான். மாயா கெஞ்சிக் கெஞ்சிப் பார்த்தாள். அவன் மசியவில்லை அவளை அழைத்து வர ரயிலை விட்டு இறங்கினாள். ரத்தன் அவளைப் பார்த்து, “நீயும்  போ. உன்னையும் விட்டு விட்டு போய்விடுவேன், ரயிலுக்குள்ளே ஏறு“ என்று கர்ஜித்தான். அடித்தாலும், திட்டினாலும் புருசனை விட்டு விட முடியுமா? மனசில்லாமல் ரயிலுக்குள் ஏறினாள். உடனே ரயில் கிளம்பிவிட்டது.

மீனு அவள் பெற்றோர்களைத் தேடி தேடி அழுதுக் கொண்டிருக்கும்போது அவளை ஒரு முரட்டு கரம் பிடித்தது. அவன் ஒரு பிச்சைக்காரன். ஒற்றைக் கண்ணனான அவனைப் பார்த்து மீனு பயந்துபோய் அழுகையை நிறுத்தினாள்.

ஒருவாரம் கழித்து ஒரு நாள் பாலு அலுவலகத்திலிருந்து வந்ததும், ஏங்க, கோவிலுக்குப் போயிட்டு வரலாம் வாங்க, மீனு போனதும் வீடு வெறிச்சோடிப் போச்சு. குழந்தை இப்போ எங்கே இருக்காளோ? அவள் நினைவாகவே இருக்கு“என்றாள்.

இருவரும் கோவில் போய்விட்டு வரும்போது அங்குப் பிச்சை எடுத்துக் கொண்டு வரும் ஒரு குழந்தையைப் பார்த்து, “அங்கே  பாருங்கோ, நம்ம மீனு பிச்சை எடுக்கிறா. மீனு இங்கே வா“ என்று குதூகலத்துடன்  கத்தினாள் சித்ரா.

பசுவைக் கண்டக் கன்றைப் போல் மீனு சித்ராவை நோக்கி ஓடி வந்தாள்.

”மீனு  எப்படிடீ இங்கே வந்தே?  அப்பா, அம்மா எங்கே?

”ரயில்வே ஸ்டேஷனில் என்னை விட்டு விட்டு போய்ட்டாங்க” என்று மீனு சொல்லிக் கொண்டிருக்கும்போது அங்கு உட்கார்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒற்றைக் கண்ணன் அவர்களை நோக்கி வந்தான்.

”அவ எங்க கும்பலைச் சேர்ந்தவ.  அவகிட்டே உங்களுக்கு என்ன பேச்சு? பிச்சை போட விருப்பம் இருந்தால் போடுங்க, இல்லாவிட்டால் போங்க.” என்று கத்தினான்.

சிதரா அவனை நோக்கி, என்ன அக்கிரமம் இது? இந்தக் குழந்தையைப் பிச்சை எடுக்க வைக்கிறாய். இவ எங்களுக்குத் தெரிஞ்சவ என் மாமா போலீசில் வேலை செய்கிறார். போலீசில் புகார் கொடுப்பேன் ஜாக்கிரதை“ என்றாள்.

குழந்தையை நீங்களே கூப்பிட்டுக்கிட்டுப் போங்க“ வேறு வழியில்லாமல் இறங்கி வந்தான். அவர்கள் மீனுவை அழைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.

மீனு திரும்பி வந்ததில் சித்ராவிற்கு அதிக சந்தோசம். ”நீ நல்லபடியா இங்கு வந்து சேந்துட்டே. அது போதும். ரத்தன் கொஞ்சம் கூட இரக்கமில்லாத  கல்நெஞ்சுக்காரன். உன்னை அம்போன்னு விட்டு விட்டுப் போயிருக்கான். அதுகூட  ஒரு விதத்தில் நல்லதுதான். நீதான் இனி என் பெண். ..ம். அதுக்கு நான் ரொம்ப பாக்கியம் செய்திருக்கணும் ”மகிழ்ச்சிப் பரவசத்திலே சித்ரா  திக்குமுக்காடிவிட்டாள்.

குழந்தையில்லையே என்று வருத்தப்பட்டாயே சித்ரா. இனிமே மீனுதான் நம்ம குழந்தை என்றான் பாலு. மீனுவைக் கட்டி அவ கன்னத்தில்  முத்தமிட்டான்.

”சரியா சொன்னீஙக. ஏங்க, மீனு நம்ம வீட்டுக்கு வருவாள் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. பழம் நழுவி பாலில் விழுந்து விட்டது. மீனுவை கடவுள் நமக்குக் கொடுத்த வரப்பிரசாதமாய் எடுத்துக் கொண்டு அவளுக்கு நல்ல  கல்வி, உணவு, உடையெல்லாம் கொடுத்து நன்றாக வளர்த்து ஆளாக்குவோம்“

அம்மா, அம்மா” என்ற மீனு தன் குட்டிக் கையால் சித்ராவின் இடுப்பை கட்டிப் பிடித்தாள். ”அம்மா” என்று மீனு அழைத்தது அவளுக்கு காதில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது போலிருந்தது. குழந்தையை அணைத்துக் கொண்டு  நர்த்தனமாடினாள்.

அவளுக்குத் திடீரென்று கண்ணை இழுத்துக் கொண்டு வந்தது. வயிற்றைப் புரட்டியது. ஓடிச் சென்று கடகடவென்று வாந்தி எடுத்தாள்.

”எ…ன்…ன…ம்மா செய்கிறது?” பாலு பதறினான்.

அவள் வாயைக் கொப்பளித்து முகத்தை அலம்பும்போது சடாரென்று முளையில் ஒரு பொறி தட்டியது. மனசில் ஒரு கணக்குப் போட்டு பார்த்தாள். உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க முகத்தில் புன்முறுவலுடன் கூறினாள்.

“ நல்ல விசயம்தான். மீனு வந்த வேளை எனக்கு நாள் தள்ளிப் போச்சு“.

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: