தமிழ்library
, ராஜா நல்ல ராஜா!, தமிழ்library

நாட்டரசன்புரம் என்ற நாட்டை மார்த்தாண்டன் என்ற மன்னன் ஆண்டார். அவர் தனது நாட்டில் பல சிரமங்களுக்கிடையில் மிகப் பெரிய பூந்தோட்டம் ஒன்றை அமைத்தார். அதில் எல்லாவகையான பூச்செடிகளையும் வளர்த்தார்.

பல நிறத்தில் பூமரங்களையும் அமைத்தார். பூமரங்களை ஒட்டி நல்ல காய், கனிகளைத் தரும் மரங்களையும் அமைத்தார். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என்ற புற்களையும், புல்லின் நடுவே தரையில் படரும் சிறிய பூச்செடி வகையும் வளர்த்தார்.

மரங்களிலும் புதர்களிலும் உயர்ந்த சாதிப் பறவைகளையும், முயல், அணில் போன்றவைகளையும் வளர்த்தார். வைரத்தை தங்கத்தில் பதித்தது போல பொன்னிற புள்ளி மான்கள் அந்தத் தோட்டத்தில் அங்குமிங்கும் துள்ளியோடின.

அந்தத் தோட்டத்தைக் கண்டால் மனம் அமைதியடையும். கவலைகள் மறந்து போகும். அப்படி ஒரு அற்புதமாக அந்த தோட்டம் அமைந்து இருந்தது. அந்தத் தோட்டத்தைக் காணவும், ரசிக்கவும் பல தேசத்து ராஜாக்களும் சிற்றரசர்களும் வருவர்.

அவர்களை மன்னர் வரவேற்று உபசரிப்பார். அவர்கள் தோட்டத்தைச் சென்று காண்பர்; பிரமிப்பர். இத்தனை பெரிய இடத்தை வளைத்து இத்தனை எழிலான ஒரு தோட்டத்தை அமைக்க முடியுமா? என்று வியப்பர். எனினும் அந்தத் தோட்டத்தைச் சுற்றி பார்த்துக் கொண்டே வரும் போது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரும்போது முகம் சுளிப்பர்.

ஏனென்றால் அந்த இடத்தில் ஒரு பிரிந்தும் பிரியாததுமாக கிழிந்த காய்ந்த, ஓலைகளுடன் கூடிய ஒரு சிறு குடிசை இருந்தது. அந்தக் குடிசையின் சுற்றுச் சுவர்கள் வெறும் களிமண்ணால் பிசைந்து கட்டப்பட்டு இருந்தது. அந்த ஓலைக் குடிசையை சுற்றி துவைக்கும் கல்லும், முக்கூட்டுக் கற்களால் அடுக்கப்பட்ட ஒரு சிறு அடுப்பும், ஏழெட்டு நைந்து போன துணிமணிகளும், அலுமினியக் குவளைகளும் கிடக்கும். குடிசையை சுற்றி நாகவாளி செடி நிறைந்து இருக்கும்.

இத்தனை அற்புதமான ஒரு தோட்டத்தின் நடுவே இத்தனை கோரமான பஞ்சக்குடிசை ஒன்று ஏன் உள்ளது என்ற யாருக்குமே புரியவில்லை. எனினும் அந்தக் காரணத்தை பேரரசரிடம் கேட்கும் தைரியமோ அல்லது அந்தக் குடிசை இருப்பது தோட்டத்தின் எழிலைக் கெடுப்பதாக உள்ளது என்று கூறவோ யாருக்கும் துணிவே வரவில்லை.

நாட்கள் சென்றன. மகிபாலன் என்றொரு சிற்றரசன் அந்த தோட்டத்தைக் காண வந்தான். வழக்கம் போல மன்னருடன் சேர்ந்து தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தபடி அரசனைப் பலவிதமாகப் புகழ்ந்தபடி வந்தான்.

திடீரென அவன் கண்கள் குடிசையைக் கண்டது. உடனே முகம் வாடினான். அத்தனை எழிலான தோட்டத்தில் இப்படி ஒரு ஏழ்மை தோற்றமுடன் கூடிய குடிசை ஒன்று இருப்பதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று நினைத்தான்.

உடனே அரசரிடம், “”மன்னா இந்த எழிலான தோட்டத்தில் இப்படியொரு எளிய குடிசை இருப்பதன் காரணம் என்ன?” என்று கேட்டான்.

உடனே மன்னன், “”மகிபாலா! இந்த குடிசை உன்னைப் போன்ற ஒரு தைரியசாலியின் குடிசை. நான் எட்டு ஆண்டுகளுக்கு முன் இந்தத் தோட்டத்தை உருவாக்க முயன்றபோது ஒரு பெரிய பரப்பளவுடன் கூடிய இடம் எனக்கு மிகவும் அவசியமாகியது. நாடு முழுக்க அமைச்சர் அந்த மாதிரி ஒரு இடத்தைத் தேடிய போது இந்த இடம் அகப்பட்டது. ஆனால், பெரிய இடத்திற்கு நடுவே இந்த குடிசையும் இருந்தது.

“”இதில் இருந்த ஏழைக் கிழவியிடம், நீ இந்தக் குடிசையை காலி செய்ய வேண்டும். இங்கு மன்னர் மிகப் பெரிய பூந்தோட்டம் அமைக்க இருக்கிறார்,” என்று கூறியபோது கிழவி மறுத்திருக்கிறாள்.

விபரமறிந்த நான் நேரில் வந்து, “”இடத்தை காலி செய்,” என்று கூறினேன்.

ஆனால் அந்த பெண்ணோ, “”மன்னா! இது என்பாட்டன் பூட்டன் காலத்து குடிசை. இதைத் தாங்கள் அழிப்பதை நான் விரும்பவில்லை. என் உயிரே போனாலும் இதனை இடிக்கவோ, ஓலைகளைப் பிரித்தெறியவோ நான் மனதார ஒப்புக் கொள்ள மாட்டேன். படைபலம் நிறைந்த நீங்கள் நினைத்தால் என்னை ஒரே நிமிடத்தில் கொன்றுவிடலாம்.

“”நான் இறந்த பின்பு இந்த இடத்தை நீங்கள் இடித்து, சிதைத்து உமது தோட்டத்தை உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால், நான் இறந்தாலும் எனது பூர்வீகக் குடிசையை அழித்து என் மனதில் வேதனையை ஏற்படுத்தியதற்காக தங்களுக்கு இறைவன் நிச்சயம் தண்டனையைத் தந்தே தீருவார்,” என்று கூறி அழுதார்.

“”அவள் கண்ணீரில் இருந்த நியாயமும் பூர்வீக நினைவுச் சின்னத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் மனோ தைரியத்தால் என்னை எதிர்த்து அவள் பேசிய வீரமும் என் மனதை நெகிழ வைத்தது. அவள் மன உணர்வை மதித்து, நான் இந்தக் குடிசையை அகற்றாமல் இந்தத் தோட்டம் உருவாக்கிய நான்கு, ஐந்து ஆண்டுகளில் அந்தக் கிழவி இறந்துவிட்டாள்.

“”அவளுக்குப் பின் இந்தக் குடிசையை ஆள யாரும் சந்ததிகள் இல்லை. என்றாலும் அந்தக் கிழவியின் உணர்வுக்கும், வீரத்திற்கும் ஒரு மதிப்பு தர எண்ணி இந்தக் குடிசையை அகற்றவில்லை,” என்றார்.

பேரரசரின் பெருந்தன்மையையும், நல்ல பண்பையும் மகிபாலன் வியந்து பாராட்டினான்.

குழந்தைகளா!… மனிதர்களாகிய நாம் மற்றவர்களின் மன உணர்வுகளை மதிக்க வேண்டும். யாரையும் மனம் நோகச் செய்தல் தவறு. மன்னரின்பெருந்தன்மையானகுணத்தை நீங்களும் கடைபிடிக்க வேண்டும்.செய்வீர்களா?

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: