தமிழ்library
, வள்ளி என்றொரு நாயகி, தமிழ்library

வள்ளி என்றொரு நாயகி

மன்னர் விக்கிரமங்கலத்திற்குக் குழந்தை பாக்கியம் கிடையாது. இதனால் மன்னரும் ராணியாரும் பெரிதும் துயருற்றனர். இருவருக்கும் பெண்குழந்தைகள் என்றால் கொள்ளைப்பிரியம், ஒரு பெண்குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க இருவரும் ஆசைப்பட்டனர். மன்னர் தனது விருப்பத்தை தனது தாய்மாமன் நிறைமதியாரிடம் தெரிவித்தார். நிறைமதியார் மன்னரின் தாய்மாமன் மட்டுமல்ல, அரசின் ராஜகுருவும் கூட, அவரின் வழிகாட்டுதலின்படியே மன்னர் தனது பரிபாலனத்தை நடத்திவந்தார். “தத்தெடுப்பதற்கான அவசியம் இப்போது இல்லை! காலம் கனியும்!”- என்றார் ராஜகுரு, மன்னர் குழம்பிநிற்பதைப் பார்த்த அவர் மேலும் “முனைமுறிந்த அம்புகள் வழிகாட்டும்!”- என்று மட்டும் சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார். ராஜகுரு எப்போதும் அப்படித்தான், பூடகமாகவே பேசுவார், ஆனால் அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆயிரம் அட்சரங்கள் பெறும், அதற்கான பொருளை உடனடியாகப் விளங்கிக்கொள்ள முடியாது. காலத்தின் போக்கில்தான் விளங்கிக்கொள்ள முடியும். மன்னரின் நலம்விரும்பியான ராஜகுருவின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு சிறிதுகாலம் காத்திருப்பது என மன்னரும் ராணியாரும் முடிவுசெய்தனர்.

வள்ளி ஒரு ஏழைச்சிறுமி, பத்துவயதுப் பெண், சிறுவயதிலேயே தாய்தந்தையரை இழந்தவள், பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தாள். அவள் வசித்தவந்த ஊரின் பெரியதனக்காரர்கள் வீட்டுக் கால்நடைகளை மேய்ப்பது அவளது வேலை, அதில் கிடைத்த  சிறுவருவாயில் அவள் தன்னையையும் பாட்டியையும் பாதுகாத்து வந்தாள். மற்ற சிறுவர்சிறுமியர் போன்று பள்ளிசெல்ல முடியவில்லையே என்ற ஏக்கம் அவளுக்கு உண்டு, ஆனால் இயல்பாகவே எதையும் கூர்ந்துகவனித்து கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டவள், மேய்ச்சலுக்காக கால்நடைகளை ஓட்டிச்செல்லும் ஊரைஒட்டிய காட்டுப்பகுதியே அவளது ஆசான், வள்ளி காட்டுப்பகுதியைப் படித்தாள், அதைப் புரிந்துகொள்ள முயற்சித்தாள், அது அவளுக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தது.

ஊரிலிருந்து காட்டிற்குச் செல்வதாக இருந்தால் ஒரு குன்றின் சரிவில் அமைந்த பாலத்தைக் கடந்துதான் செல்லவேண்டும். சுமார் நூறுஅடி நீளம்கொண்ட சிறியபாலம் அது, ஊரைஒட்டிய காட்டுப்பகுதியில் ஒருநாள் கால்நடைகள் மேய, போதுமான புற்கள் இல்லை, இதனால் ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டு பாலத்தைக்கடந்து போனாள் வள்ளி, அப்போது ஆறேழு முனைமுறிந்த அம்புகள் பாலத்தில் இறைந்து கிடப்பதைக் கண்டாள். அவைகள் குன்றின்பாறையின் மீது எய்யப்பட்டிருக்க வேண்டும். அவைகள் துளைத்த இடத்தில் பாறையில் அடையாளங்கள் இருந்தன. பாறை மிகவும் கடினமானது என்பதால் அம்புகள் முனைமுறிந்தும் ஒடிந்தும், வளைந்தும் கிடந்தன. இந்த அம்புகள் குன்றின் எதிர்திசையில் இருந்துதான் எய்யப்பட்டிருக்க வேண்டும். எதிர்புறம் பாலத்தின் கைப்பிடிச்சுவரை அடுத்து சுமார் அறுபதடி பள்ளம், செடிகளும் கொடிகளும் மண்டிக்கிடக்கும் சேறும்சகதியுமான புதர், யாரும் காணவிரும்பாத இருளடைந்த பகுதி அது, ஆடுமாடுகள் பாலத்தைக் கடந்து மறுபுறம் சென்றுவிட்டதால் வள்ளி அதற்குமேல் அதில் கவனம் செலுத்தவில்லை. மந்தையின் பின்னால் போய்விட்டாள்.

நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. ராஜகுருவின் வார்த்தைகளை மீறமுடியாத சூழல், காலம் எப்போது கனியும்? ஒரு பிள்ளைச்செல்வத்திற்காக இன்னும் எத்தனைநாள் காத்திருப்பது? மன்னர் மிகவும் மனச்சோர்வடைந்தார், இவ்வாறு மனச்சோர்வடையும் போதெல்லாம் அவர் காட்டிற்குச் செல்வது வழக்கம், மன்னர்மீது பரிவுகொண்ட ஒன்றிரெண்டு துறவிகள் காட்டில் இருந்தார்கள். மன்னர் அவர்களது குடிலில் சென்று ஓரிருநாட்கள் தங்கிவருவார். வனம் மன்னருக்கு இழந்த அமைதியை மீட்டுத்தரும் இடமாக இருந்தது. அவ்வாறு காட்டிற்குச் செல்லும்போது அவர் ஆரவாரமாகச் செல்லமாட்டார். தனது பாதுகாப்பிற்கு நம்பிக்கைக்குரிய சிறுபரிவாரத்தை மட்டும் உடன் அழைத்துச்செல்வார். விரைவில் காட்டிற்குச் சென்று ஒன்றிரெண்டு நாட்கள் தங்கிவிட்டு வரவேண்டும் என மன்னர் முடிவெடுத்தார். ஆனால் இந்தமுறை அவரது பயணம் வழக்கமான ஒன்றாக இராது என்பதையோ, தனது தாய்மாமனின் பூடகமான வார்த்தைகளுக்கு அப்போது விடை கிடைக்கப்போகிறது என்பதையோ மன்னர் அப்போது அறிந்திருக்கவில்லை.

ஒருநாள் குன்றின்சரிவில் சிறுமரங்கள் ஏராளம் குலைகள் தள்ளியிருப்பதை வள்ளி கண்டாள். அக்குலைகளை ஆடுமாடுகள் விரும்பித் தின்னும், அதனால் வள்ளி அவைகளை சரிவில் ஓட்டிவிட்டு தான் குன்றின் மீதேறினாள். அங்கிருந்த மொட்டைப்பாறை ஒன்றின்மீது அமர்ந்தபடி தட்டாங்கல் ஆடினாள். அப்போது தொலைவில் ஊர்புறமிருந்து குதிரைகளின் பரிவாரம் ஒன்று காட்டைநோக்கி வருவதைக் கண்டாள். மன்னர் காட்டிற்கு வருகிறார். மன்னர் வேட்டைக்கு வருவதாக சிலர் சொன்னார்கள். சிலர் அவர் துறவிகளைச் சந்திக்க வருவதாகச் சொன்னார்கள். இன்னும்சிலர் அவர் ஓய்வெடுக்க வருவதாகச் சொன்னார்கள், அவர் எதற்காக வருகிறார் என்பது தெரியாது. ஆனால் அவர் அவ்வாறு வருவது வழக்கமான ஒன்றுதான்.

அப்போது குன்றின்சரிவில் பாலத்தின் மறுபுறம் பதற்றமான அசைவுகள் தென்படுவதை வள்ளி கவனித்தாள். அந்தப்புதரின் ஓங்கி வளர்ந்த காட்டுமரங்களின் அடர்ந்த கிளைகளில் நிறைய மனிதத்தலைகள் தென்பட்டன. அவர்கள் அனைவரின் கைகளிலும் வில், அவர்கள் அம்புகள் தொடுப்பதற்குத் தயார்நிலையில் வாகாகத் தங்களை ஒளித்து கொண்டிருந்தனர். வள்ளிக்கு உடனடியாக பாலத்தில் கிடந்த முனைமுறிந்த அம்புகள் நினைவிற்கு வந்தது. அவர்கள் கயவர்கள், மன்னரைக் கொல்லத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். மன்னரின் பரிவாரம் பாலத்தில் நுழைந்துவிட்டால் தாக்குவது எளிது, மன்னரால் குன்றின்சரிவில் ஏறித்தப்ப முடியாது, சிறியபாலத்தில் குதிரைபரிவாரம் பின்வாங்குவதும் கடினம், முன்னேறிச்செல்வதுதான் ஒரேவழி, புதர்பகுதியிலிருந்து தாக்குதல் வருவதைப் புரிந்துகொள்ளும் முன்னால் தாக்குதல் தொடுத்து முடித்துவிடலாம், அதற்காகத்தான் அவர்கள் ஆள்அரவமற்ற வேளையில் ஒத்திகை பார்த்திருக்கிறார்கள். அப்போது எய்யப்பட்ட அம்புகள்தான் பாலத்தில் இறைந்து கிடந்திருக்கின்றன. வள்ளி ஒருநொடியில் அனைத்தையும் யூகித்து விட்டாள்.

வள்ளிக்கு பக்கென்றிருந்தது. இன்னும் ஓரிருநிமிடங்களில் மன்னரின்பரிவாரம் பாலத்தை அடைந்துவிடும். பாலத்தில் முன்னேறிச்செல்லாமல் அவர்களைத் தடுக்கவேண்டும், வள்ளி பம்பரமாய் சுழன்றாள். கையிலிருந்த சாட்டையைச் சுழற்றி மேய்ந்துகொண்டிருந்த ஆடுமாடுகளை ஆக்ரோசமாய் விரட்டினாள். வெருண்ட அவைகள் குன்றின்சரிவில் திபுதிபுவென இறங்கிஓடின, அந்தமந்தை பாலத்தை அடைத்துக்கொண்டு நிற்பதற்கும் மன்னரின்பரிவாரம் வந்துசேர்வதற்கும் சரியாக இருந்தது.

வரவிருக்கும் ஆபத்தை மன்னர் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை, புதர்பகுதியில் கயவர்கள் ஒளிந்திருப்பதை மன்னர்பரிவாரத்திற்கு உணர்த்த வேண்டும், வள்ளியிடம் எப்போதும் ஒரு கவட்டை இருக்கும். ஆடுமாடுகளை சமயங்களில் காட்டுநாய்கள் கடித்துத் தொந்தரவு செய்யும். அவைகளைத் துரத்த வள்ளி கவன்கல் அடிப்பாள், அது பெரும்பாலும் குறிதப்பாது. வள்ளி சிறுகூழாங்கற்களை கவனில் வைத்து சாமாசரியாகப் புதரைநோக்கி எறிந்தாள். அதில்ஒன்று கள்வனின் மேல்பட்டு அவன் அலறியபடி புதரில் வீழ்ந்தான். அவ்வளவுதான், அடுத்தகணம் மன்னரின் பரிவாரம் குரல்வந்த திசையை நோக்கி தாக்குதல் தொடுத்தது. பதிலுக்கு அவர்களும் எதிர்தாக்குதல் நடத்தினர். வள்ளி குன்றின்சரிவில் இறங்கி ஓடிவருவதற்கு முன்னால் அங்கே ஒரு சிறுயுத்தம் நடந்து முடிந்திருந்தது. கயவர்கள் அனைவரும் அம்படிபட்டு புதரில்வீழ்ந்து மாண்டுபோனார்கள்.

ஒருகையில் சாட்டை மறுகையில் கவட்டையுடன் தன்முன்னால் நின்ற வள்ளியைக் கண்டார் மன்னர், அவர் புரவியிலிருந்து இறங்கி வந்தார். வள்ளியின் முன்னால் மண்டியிட்டு அவளை மார்போடு அணைத்துக் கொண்டார். அவர் மனம் நெகிழ்ந்திருந்தது. கண்கள் பனித்திருந்தன. அவர்கள் இருவரைச் சுற்றிலும் ஏராளமான அம்புகள் இறைந்து கிடந்தன. அதில் முனைமுறிந்த அம்புகளும் இருந்தன. தனது தாய்மாமனின் பூடகமான வார்த்தைகளுக்கு அர்த்தம் மன்னருக்கு இப்போது புரிந்தது. கயவர்கள் ஒருதவறு செய்துவிட்டார்கள். அவர்கள் ஒத்திகை பார்த்தவரை சரி, ஆனால் எய்த அம்புகளை அவர்கள் அப்படியே விட்டுச்சென்றிருக்கக் கூடாது. அவைகளை அவர்கள் அப்புறப்படுத்தியிருக்க வேண்டும். அது வள்ளியின் கண்களில் பட்டுவிட்டது. அவள் புத்திசாலிப் பெண்ணல்லவா? அனைத்தையும் ஊகித்து விட்டாள். ஒரு மாடுமேய்க்கும் சிறுமியிடம் இருந்து தங்களின் திட்டத்திற்கு இடைஞ்சல் வரும் என்று கயவர்கள் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

வள்ளியை தனது மகளாக மன்னர் சுவீகாரம் செய்துகொண்டது பழையகதை, வள்ளிக்குத் திருமணமாகி அவள் இப்பபோது ராணியாகி விட்டாள். அவளுக்கு ஐந்துவயதில் ஒரு பெண்குழந்தையும் இருக்கிறது. வள்ளி அரண்மனைக்கு வந்தபின்னால் நிறைய கலைகளைக் கற்றுக்கொண்டாள். அதில் முக்கியமானது ஓவியம், வனம்பற்றி அவள்வரைந்த ஓவியங்கள் பலரின் பாராட்டைப் பெற்றது. தன்னையே அவள் வரைந்துகொண்ட ஆளுயர ஓவியம்தான் அதில் முக்கியமானது, ஒருகையில் சாட்டை மறுகையில் கவட்டை ஓடிவந்ததால் வியர்வை அரும்பிய முகம் வாரப்படாத தலைமுடியுடன் தெற்றுப்பல் தெரிய கள்ளங்கபடமற்று சிரிக்கும் வள்ளியின் சிறுவயது ஓவியம்தான் பின்னாளில் மிகவும் பிரசித்தி பெற்றது. வள்ளியின் மகளுக்கும் அம்மாவின் இந்த ஓவியம்தான் மற்றஎல்லா ஓவியங்களைவிட ரொம்பப்பிடிக்கும். ஒவ்வொருநாளும் படுக்கைக்குச் செல்லும்முன்னால் வள்ளி தனதுமகளுக்கு ஒருகதை சொல்லுவது வழக்கம், அன்றைக்கு மாடுமேய்த்த சிறுமி ராணியான தனது கதையையே சொன்னாள். சுவீகாரம் என்ற வார்த்தைக்கு என்னஅர்த்தம் என்று அந்தக்குழந்தை தனது அம்மாவை கேட்க நினைத்தது. ஆனால் அதற்குள்ளாக ஒருகதை கேட்டுவிட்ட திருப்தியில் அந்தக்குழந்தைக்குத் தூக்கம் வந்துவிட்டது.

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: