தமிழ்library
, வானம்பாடி, தமிழ்library

வானம்பாடி

வானம்பாடிப்பறவை ஒன்று வானில் பறந்துசென்று கொண்டிருந்தது. அப்போது அது, ஒரு சிறுமி மிகுந்த வருத்தத்துடன் தன்வீட்டுக் கொல்லையில் அமர்ந்திருப்பதைப் பார்த்தது. அந்தச்சிறுமியின் பெயர் மாயா. நான்காம் வகுப்புப் படிக்கிறாள். வானம்பாடிக்குக் குழந்தைகள் வருத்தத்துடன் இருப்பது பிடிக்காது. உடனடியாக அது அந்தச்சிறுமியின் முன்னால் போய் அமர்ந்தது.

“நான் தான் வானம்பாடி! நீ ஏன் வருத்ததுடன் இருக்கிறாய்?” – என்று கேட்டது.

“ஓ…வானில் பாடியபடி பறக்கும் பறவை நீதானா? உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி” – என்றாள் மாயா. அவள் குரல் சுரத்தில்லாமல் இருந்தது.

“உன் பிரச்னை என்னன்னு சொல்லு! என்னால தீர்த்;து வைக்கமுடியுமான்னு பாக்குறேன்!” – என்றது வானம்பாடி.

மாயா சிறிதுநேரம் அமைதியாக இருந்தாள். பிறகு சொன்னாள். “என்னோட நண்பர்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்துல திறமைசாலியாக இருக்காங்க! ஒருசிலர் நல்லா படிக்கிறாங்க! ஒருசிலர் நல்லா ஓவியம் வரையுறாங்க! ஒருசிலருக்குப் பேச்சுக்கட்டுரை நல்லாவருது! ஒருசிலர் நல்லா ஆடுறாங்க! ஒருசிலர் நல்லா விளையாடுறாங்க! இப்படித் திறமையா இருக்குறதுனால அவங்க எல்லாரும் மகிழ்ச்சியா இருக்காங்க! ஆனா எங்கிட்ட இப்படிப்பட்ட திறமைகள் ஏதுமில்லை! இது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு வானம்பாடியே!” – என்றாள் மாயா.

“இதுதான் உன் பிரச்சனையா? இந்தா இந்த வளையத்தைக் கையில போட்டுக்க! இது அரிதான உலோக வளையம்! ரொம்பவும் சக்தி வாய்ந்தது! இது உன்கையில இருக்கும்போது உன்னால இனிமையாப் பாடமுடியும்! அப்புறம் பாரு! உன்னைப் பாடச்சொல்லி கேக்குறதுக்காக உன் நண்பர்கள் எல்லோரும் உன்னைச் சுத்திச்சுத்தி வருவாங்க! வருத்தப்படாத! சந்தோசமா இரு!! மீண்டும் சந்திப்போம்!!! – என்று சொல்லிவிட்டு ஓரு வளையத்தைத் தந்துவிட்டுப்போனது வானம்பாடி.

மாயா அந்தவளையத்தைக் கைவிரலில் போட்டுக்கொண்டாள். என்ன ஆச்சரியம்? அவளால் நன்றாகப் பாட முடிந்தது. முதலில் பள்ளியில் பாடினாள். அப்புறம் அக்கம்பக்கத்தில் பாடினாள். அவளுடைய புகழ் மெல்லப்பரவியது. நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று அனைவரும் அவளைப் பாடச்சொல்லி கேட்டு மகிழ்ந்தார்கள். அவள் அனைவராலும் விரும்பப்படும் பெண்ணாக மாறினாள். அவளுக்குப் பெருமிதம் தாளவில்லை. அவள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள். நாட்கள் இனிமையாகச் சென்று கொண்டிருந்தன. அப்போதுதான் அது நடந்தது.

ஒருநாள் மாயா ஆற்றுக்குக் குளிக்கப்போனாள். குளித்துவிட்டுக் கரைக்கு வந்தபோதுதான் கவனித்தாள். அவள்கையில் வளையம் இல்லை. அது ஆற்றில் நழுவியிருந்தது. மாயா அதிர்ச்சி அடைந்தாள். “இந்த வளையம் உன்கையில இருக்குறவரைக்கும்தான் உன்னால நல்லா பாடமுடியும்! ஞாபகம் வைச்சுக்கோ!” – என்று வானம்பாடி சொன்னது அவள் நினைவிற்கு வந்தது. உடனடியாகத் தனக்குப் பரிச்சயமான பாடல் ஒன்றைப் பாடிப்பார்த்தாள். அவளால் ராக ஆலாபனைகளுடன் பாட முடியவில்லை. மாயாவிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. நன்றாகப் பாடிக்கொண்டிருந்தவள் திடீரென்று பாடமுடியாமல் போனால் அனைவரும் என்ன நினைப்பார்கள்? அவள் பள்ளிக்குக் கூடச்செல்லாமல் இரண்டுநாட்கள் வீட்டில் அடைந்து கிடந்தாள். வளையம் காணாமல் போனதை நினைத்து அவள் தேம்பித்தேம்பி அழுதுகொண்டிருந்தாள்.

ஒருநாள் வானம்பாடி வந்தது. “ஏன் இப்படி அழுதுக்கிட்டிருக்க மாயா?” – என்று கேட்டது. மாயா வளையம் ஆற்றில் நழுவி விழுந்ததைச் சொன்னாள்.

“நீ எனக்கு இன்னொரு மந்திரவளையம் தர்றியா வானம்பாடியே?” – என்று கேட்டாள்.

“ஒருமுறைதான் என்னால உதவிசெய்ய முடியும்! நீ அந்த வளையத்தை மறந்துரு மாயா!” – என்றது வானம்பாடி.

“ஏன் உன்னால திடீர்னு பாடமுடியாம போச்சுனு எல்லாரும் கேப்பாங்களே? அவங்களுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?” – கேட்டாள் மாயா.

“நீ மத்தவங்களைப்பத்தி கவலைப்படுறத விடு மாயா! திறமைங்குறது மந்திரத்தாலோ தந்திரத்தாலோ வர்றது கிடையாது! அப்படியே வந்தாலும் அது நிலைக்காது! உனக்கு நடந்ததும் அதுதான்! பூக்கள் மலர்ற மாதிரி ஒரே ராத்திரில யாரும் திறமைசாலியா ஆயிர முடியாது. அதுக்கு தொடர்ந்து பயிற்சி செய்யனும்! பாடனும்னு ஆசைப்பட்டேன்னா கண்டிப்பா உன்னால நல்லாப் பாடமுடியும்! அதுக்கு முதல்ல உன்னை நீ நம்பனும்!” – என்றது வானம்பாடி. மாயா அமைதியாக இருந்தாள். அவள் சிந்திக்கிறாள் என்பது புரிந்தது. வானம்பாடி போய் விட்டது.

மாயா தனது பள்ளி பாட்டுஆசிரியையிடம் சென்று நடந்ததைச் சொன்னாள். “நல்லவங்க எப்பவும் நம்மள உயர்வான இடத்துக்குத்தான் கூட்டிட்டுப் போவாங்க! வானம்பாடி உனக்கு உதவ நினைச்சுருக்கு! நான் உனக்குப் பாட்டுச் சொல்லித்தர்றேன் மாயா!” – என்று அவர் உறுதிஅளித்தார். மாயாவும் ஆர்வமுடன் கற்றுக்கொண்டாள். ஆறுமாதகாலத் தீவிரப்பயிற்சியில் அவள் மீண்டும் நன்றாக பாடஆரம்பித்து விட்டாள். உடல்நலமின்மையால் அவள் சிறிதுநாட்கள் பாடாமல் இருந்ததாக அனைவரும் எண்ணிக் கொண்டார்கள். அவள் இழந்த மகிழ்ச்சியை மீண்டும் திரும்பப்பெற்றாள். இந்தத்திறமை இப்போது அவளைவிட்டு வேறுஎங்கும் ஓடிவிடாது ‘கற்றோருக்குச் செல்லுமிடமெல்லாம் சிறப்பு’ என்பது போன்று அவள் செல்லுமிடமெல்லாம் அதுவும் சேர்ந்தேவரும் என்பதையும் புரிந்துகொண்டாள்.

வானம்பாடி மாயாவைக் காண வந்தது. “என்ன மாயா உற்சாகமா இருக்கியா?” – கேட்டது அது.

“ரொம்ப உற்சாகமா இருக்கேன்! உன்னால முடியும்னு என்னை நம்பவைச்சதே நீதான்! அதுக்காக உனக்குத்தான் நான் நன்றிசொல்லனும் வானம்பாடியே!” – என்றாள் மாயா.

“உன்னோட திறமைய இப்பயாரும் உன்கிட்ட இருந்து பறிச்சுரமுடியாது! அது எங்கயும் நழுவி கீழயும் விழுந்துராது! இப்பப் புரிஞ்சுதா எது உண்மையான திறமைங்குறது?” – கேட்டது வானம்பாடி.

“நிச்சயமா!” – என்றவள் “ஒருநிமிசம் இந்தப்பக்கம் திரும்பு! உன்கழுத்துல தொங்குறது நான் தவறவிட்ட வளையம்தான? இது எப்படி உன்கிட்ட?” – ஆச்சரியத்துடன் கேட்டாள் மாயா.

“ஏழுமலை ஏழுகடல் தாண்டி இருக்குற புதையலையே எடுக்குறவங்க நாங்க! ஆத்துலவிழுந்த வளையத்தை எடுக்குறதா கஷ்டம்?” – அர்த்தம் நிறைந்த புன்னகையுடன் பேசியது வானம்பாடி. அதுவே தொடர்ந்து “இதுதான் நம்முடைய கடைசிச் சந்திப்பு! இனி நான் உன்னைப்பார்க்க வரமாட்டேன்!” – என்றது.

ஏன்? – ஆச்சரியம் மேலிடக் கேட்டாள் மாயா.

“நீ திறமைசாலியாயிட்ட! நாங்க வானத்துல சுதந்திரமா சிறகடிச்சுப் பறக்குறமாதிரி நீயும் இப்ப உற்சாகமா மகிழ்ச்சியா இருக்க! இனிமே உனக்கு என்னோட உதவி தேவைப்படாது! ஒருவானம்பாடிக்கு இன்னொரு வானம்பாடியோட உதவிஎதுக்கு? வருத்தத்தோட இருக்குற வேறொரு சிறுமிக்கு நான் உதவனும்! எனக்கு நிறையா வேலை இருக்கு!” – தன்கழுத்தில் தொங்கிய அந்த மந்திரவளையத்தை அலகால் கோதியபடி  சொன்னது வானம்பாடி. மந்திரவளையம் அவள் கைக்கு வந்தது அதுநழுவி ஆற்றில்விழுந்தது இப்போது அது அதன் கழுத்தில் இருப்பது எல்லாம் வானம்பாடி செய்த மாயஜாலம் என்பதை அவள் புரிந்துகொண்டாள்.

“வானம்பாடி! உனது அன்பிற்கு நன்றி!” – கையசைத்து அதற்கு விடைகொடுத்தாள் மாயா.

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: