நீண்ட காலமாக குழந்தை இல்லாத மன்னன் பிரதாபனுக்கு ஒரு மகன் பிறந்தான். வித்யாபதி என்று பெயரிட்டு வளர்த்தான். புத்திசாலியாக வளர்ந்த அவன் சரஸ்வதி அருளால் கல்வியிலும், இசையிலும் சிறந்து விளங்கினான். மகனுக்கு பட்டம் சூட்ட முடிவெடுத்தான் மன்னன். அதற்காக நல்லநாள் குறிக்க அரண்மனை ஜோசியரை அழைத்தான். ஜாதகத்தை ஆராய்ந்த ஜோதிடர், “”மன்னா! மன்னிக்க வேண்டும். தங்கள் மகன் வித்யாபதிக்கு பட்டம் சூட்டி பயனில்லை. ஏனெனில் அவர் அற்பாயுளே வாழ்வார்,” என தெரிவித்தார்.
வீரபிரதாபன் அதிர்ச்சியில் ஆழ்ந்தான். ஆனால்,வித்யாபதி சிறிதும் கலங்கவில்லை.
“தந்தையே…. இதற்கு போய் ஏன் கவலைப்படுகிறீர்கள். மண்ணில் பிறந்த அனைவரும் ஒருநாள் மறையத் தானே போகிறோம். எனக்கு முடிவுநாள் முந்தி வருகிறது. இதை பெரிதுபடுத்தாதீர்கள்,” என்றான் சாதாரணமாக.
“”மகனே! நீ சொல்வது உண்மை தான். இருந்தாலும், பெற்றவன் என்ற முறையில் பிள்ளை நீண்ட காலம் வாழ வேண்டும் என்று நினைப்பது இயல்பு தானே. என் மனம் மிகவும் வேதனைப்படுகிறது,” என்றான்.
“தந்தையே! உங்கள் கண்ணெதிரில் இருப்பதால் தானே கவலைப்படுகிறீர்கள். நான் இப்போதே எங்காவது போய் விடுகிறேன். அப்படியானால், நான் ஒருவேளை உயிரோடு எங்காவது திரிந்து கொண்டிருப்பேனோ என்ற சந்தேகத்தில், நான் என்றாவது வருவேன் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பீர்கள். நான் கிளம்புகிறேன்,” என்றான்.
தன் கண் முன்னால் மகன் சாவதை விட, இந்த யோசனை நன்றாகத் தெரிந்தது மன்னனுக்கு. அரை மனதுடன் சம்மதித்தான்.
இளவரசன் சில பணியாளர்களுடனும், செலவுக்கு பெரும் பணத்துடனும் நாட்டை விட்டுப் புறப்பட்டான். மலைநாட்டை சென்றடைந்தான். அங்குள்ள குழந்தைகளுக்கு நல்ல ஆசிரியராக கல்வி, கலைகளைப் போதித்து வந்தான். ஏழைகளுக்கு தானம் அளித்து மகிழ்ந்தான்.
வித்யாபதியின் ஆயுள் முடியும் நாள் வந்தது. அன்று சரஸ்வதி பூஜை என்பதால், குழந்தைகளுடன் சேர்ந்து சரஸ்வதியை வழிபட்டான். வீணை இசைத்து மனம் உருகி தேவியைப் பாடிக் கொண்டிருந்தான். அப்போது, எமதூதர்கள் வித்யாபதியின் உயிரைப் பறிக்க பாசக் கயிற்றுடன் வந்தனர். வந்தவர்கள் வித்யாபதியின் வீணை இசை கேட்டு மெய் மறந்து நின்றனர்.
இதனால், அவனது உயிரைப் பறிக்கும் நேரம் கடந்து விட்டது. அவர்கள் செய்வதறியாது திரும்பி விட்டனர்.
அப்போது அங்கு தோன்றிய சரஸ்வதி, “வித்யாபதி! தானத்தில் சிறந்தது கல்வி தானமே. கொடுத்தாலும் குறையாத செல்வமும் கல்வியே. இந்த குழந்தைகளின் கல்விக் கண்ணைத் திறந்த உனக்கு, ஜாதகத்தில் ஆயுளுக்கு நேர்ந்த தோஷம் அகன்று விட்டது. அது மட்டுமில்லாமல், உன் வீணை இசை எமதூதர்களையும் கட்டிப் போட்டு விட்டது. இனி நீண்ட காலம் வாழும் பாக்கியம் பெறுவாய்,” என்று வாழ்த்தினாள்.
சரஸ்வதியின் அருள் பெற்ற வித்யாபதி நாடு திரும்பினான். அவனைக் கண்ட தந்தை மகிழ்ந்தான். அவனுக்கு பட்டம் சூட்டப்பட்டது.
Add comment