தமிழ்library
, விமர்சனம், தமிழ்library

விமர்சனம்

ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணி. நண்பர் ராஜாவிடம் இருந்து அழைப்பு வந்தது. எடுத்தால் ‘விளையாட வா’ என்றார். அவசர அவசரமாகக் கிளம்பி மைதானத்திற்கு ஓடினேன். 3 மணி நேரம் நன்றாக விளையாடிவிட்டு, களைப்போடு வீட்டிற்கு வந்தேன். மனைவி தொலைக்காட்சியில் திரை விமர்சனம் பார்த்துக் கொண்டிருந்தாள்.  அவளுடன் சேர்ந்து நானும் பார்க்கத் தொடங்கினேன்.

திரையில் வந்தவரோ ஒவ்வொரு திரைப்படமாக வரிசைப்படுத்திக் கொண்டிருந்தார். கடைசியாக அவ்வாரத்தில் திரைக்கு வந்த ஒரு திரைப்படத்தை முதலிடத்தில் இருப்பதாகக் கூறினார். நிகழ்ச்சியும் முடிந்தது. நான் வேறு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு மாற்றினேன். அங்கும் அதே திரை விமர்சனம். ஆனால் முன்பு பார்த்த தொலைக்காட்சியில் முதலிடம் பிடித்த திரைப்படம் இந்த தொலைக்காட்சியில் ஆறாவது இடம். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதெப்படி அந்த தொலைக்காட்சியில் முதலிடம் பிடித்த திரைப்படம் இந்த தொலைக்காட்சியில் ஆறாவது இடம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.  சூடான தேநீருடன் வந்த என் மனைவி கூறினாள், முதலிடம் பிடித்த அத்திரைப்படம் அதே தொலைக்காட்சியால் தயாரிக்கப்பட்ட படமென்று. அப்படியென்றால் அத்திரைப்படதிற்கான உண்மையான விமர்சனம்??????

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் மற்றவர்களால் விமர்சிக்கப்படுகின்றது. நாம் செய்யும் ஒரு நல்ல செயல் சிலருக்குக் கெட்டதாகப் படலாம், கெட்ட செயல் சிலருக்கு நல்லதாகப் படலாம். ஆக மொத்தத்தில் நாம் எது செய்தாலும் விமர்சிக்கப்படுகின்றோம். இவ்வாறான விமர்சனத்தை எப்படி அணுகவேண்டும். நண்பரிடம் கேட்டேன். இரண்டு விதமாக அணுகலாம் என்று சொன்னார்.

1. எவ்வித விமர்சனமானாலும் ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டு விடு, நீ செய்யும் செயலை கவனத்தோடு செய்.

2. எவ்வித விமர்சனமானாலும் அதிலுள்ள எதிர்மறை விடயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு அதை நேர்மறையாக மாற்ற முயற்சி செய்.

எக்காரணம் கொண்டும் விமர்சனத்தைக் கண்டு சோர்வடைந்து, பின் வாங்காதே என்றார்.

“உன்னைக் கண்டு குறைக்கும் ஒவ்வொரு நாய் மீதும் நீ கல்லெறியத் தொடங்கினால் உன் இலக்கை நீ ஒருபோதும் அடையமாட்டாய்” என்று வின்ஸ்டன் சர்ச் ஹில் கூறிய வாசகத்தை மேற்கோள் காட்டினார்.

இவ்வுலகத்தில் விமர்சிக்கப்படாத மனிதர் யாரேனும் இருக்கிறாரா?, கண்டிப்பாக இருக்கமாட்டார். புகழின் உச்சியில் இருக்கும் சச்சினையும் விமர்சிப்பார்கள், கோவிலில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரனையும் விமர்சிப்பார்கள்.

தாமஸ் ஆல்வா எடிசன் மீது வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு அவரளித்த பதில் “நான் தோற்கவில்லை, தோற்றுப் போகும் 10,000 வழிகளைக் கண்டுபிடித்திருக்கிறேன்” என்று.

நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நாம் எது செய்தாலும் விமர்சிக்கப்படுவோம், ஆதலால் விமர்சனத்தைக் கண்டு பயந்து பின் வாங்காமல் நாம் செய்யும் செயலில் தீர்க்கமாக இருக்க வேண்டும்.  இல்லாவிடில் அவ்விமர்சனமே நம் தோல்விக்கான முழுமுதற்காரணமாக அமைந்துவிடும்.

எப்போதெல்லாம் நாம் புது முயற்சி எடுக்கிறோமோ அப்போதெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்படுவோம். அவ்விமர்சனதைக் கண்டு அஞ்சி ஒடுங்கி விடாமல் நம் வழியை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும். முடியாது என்று நினைத்தால் முடியாது. முடியும் என்று நினைத்தால் நிச்சயமாக முடியும். இதற்கு எடுத்துக்காட்டாக நமக்குப் பரிச்சயமான ஒரு விளையாட்டை எடுத்துக் கொள்ளலாம்.

ஒருநாள் மட்டைப்பந்து போட்டியில் 1996 வரை இந்திய அணி ஒரு முறை கூட 300 ஓட்டம்(Runs) எடுத்ததில்லை. ஆனால் 1996 இல் முதல் 300 ஓட்டம் எடுக்கப்பட்டது. அதன் பின்  இன்று வரை 78 முறை 300 ஓட்டம் எடுத்துள்ளோம். முதல் 300 ஓட்டம் எடுப்பதற்கு 24 வருடங்கள் ஆகி இருக்கிறது ஆனால் அடுத்த 20 வருடங்களில் நம்மால் 78 முறை 300 ஓட்டம் எட்ட முடிந்துள்ளது. முடியாது என்றிருந்த 300 ஓட்டம் இலக்கு இன்று ஒரு எளிதான இலக்காக, அனைத்து அணிகளாலும் எட்டப்படும் இலக்காக இருக்கிறது.

அதுபோல் இரட்டை சதம் முதன்முதலாக சச்சின் டெண்டுல்கர் எடுத்தார். முதல் இரட்டை சதம் எடுப்பதற்கு 44 வருட காலம் ஆகியிருக்கிறது. ஆனால் அதற்குப்பின் இரட்டை சதம் எட்டியவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது வெறும் நான்கு வருடங்களில். இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், முடியாது என்று எதுவும் இல்லை. யார் முதலில் தொடங்குவார் என்பதுதான் கேள்வியே. ஒருவர் தொடங்கிவிட்டால் நாம் அவரைப்  பின் தொடர்வோம்.

சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் நான் ஆஸ்திரேலியா சென்றிருந்தேன். அங்கு அப்பாவின் நண்பர் எங்களை ஊர் சுற்றிக் காண்பிப்பதற்கு அழைத்துச் சென்றார். காரில் சென்றோம். ஒரு இடத்தில் சாலை முடிந்து, மலை தொடங்கியது. அதனால் அனைத்துக் கார்களும் அந்த மலை வரை சென்று திரும்பிக் கொண்டிருந்தன.  நாங்களும். . . அப்போது அங்கு ஒரு மனிதர் தனியாக அந்த மலையை வெட்டிக் கொண்டிருந்தார். நான் அப்பாவின் நண்பரிடம் அவர் யாரென்று கேட்டேன். அதற்கு அவர், அவர் பெயர் மார்டின், அவர் ஒரு பைத்தியம், பக்கத்து ஊர்க்காரர், வேலை இல்லாமல் இந்த மலையை வெட்டிக் கொண்டிருக்கிறார் என்றார். நானும் சரி என்று கேட்டுக் கொண்டேன்.

கடந்த வருடம் மீண்டும் வேலை நிமித்தமாக ஆஸ்திரேலியா செல்ல வேண்டியிருந்தது. மீண்டும் அப்பாவின் நண்பரை அழைத்து நான் வருவதைக் கூறிவிட்டுச் சென்றேன். என் அலுவலக வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு மூன்று நாள் விடுப்பில் அவர் வீட்டிற்குச் சென்றேன். இரண்டாவது நாள் அவர் என்னை ஒரு அழகான இடத்திற்கு, பூமியின் சொர்கத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, ஒரு குகைவழியாக மறுபுறம் இருக்கும் இடத்திற்குச் சென்றார். உண்மையாகவே அது பூமியின் சொர்க்கம் தான். ஆனால் நான் வந்த வழியை ஏற்கனவேப் பார்த்திருக்கிறேன். ஆம் நான் வந்தது மார்டின்ஸ் ரோடு, இருபத்தைந்து வருடங்களுக்கு முன் மார்டினால் வெட்டப்பட்ட குகை. மார்டின் இப்போது மக்களுக்கு பூமியின் சொர்கத்தைக் காட்டிய பூரிப்பில் மலைமேல் சந்தோசத்துடன், கம்பீரமாக நின்று கொண்டிருந்தார் சிலையாக.

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: