“இதுக்குத்தான்யா நான் அப்பவே வேணாம்ணு சொன்னேன். இதெல்லாம் எனக்குச் சரிப்பட்டு வராதுன்னு…” என்றார் மணிமாறன்.
நிமிர்ந்து பார்த்த கல்வி அலுவலர் ராமதேவன் “ம்… கொஞ்சம் இருங்க; நாலைஞ்சு கையெழுத்துப் போடணும் அப்புறம் பேசலாம்” என்று கோப்புகளைப் படிக்கத் தொடங்கினார்.
சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரம் மணி ஆறு இருபது என்று காட்டியது. அதன் பக்கத்திலிருந்த படத்தில் மகாத்மா சிரித்துக் கொண்டிருந்தார். இப்போது மணிமாறனின் கைகளில் தாள்கள் பறக்காமல் இருக்கக் கனமாக வைக்கப்படும் கண்ணாடி உருண்டை இருந்தது. அவர் பதற்றத்துடன் அதை மேசை மீது வைத்து லேசாகச் சுழற்றிக் கொண்டிருந்ததைத் தன் கீழ்க் கண்களால் ராமதேவன் கவனித்தார்.
இந்த வலையில் தான் அகப்பட்டதே தன் தவறு என எண்ணிய மணிமாறனுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன. இதேபோன்ற ஒரு புதன் கிழமையில்தான் மாலையில் தொடக்கக் கல்வி அலுவலகத்துக்கு வரும்படி மணிமாறனுக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. கல்வி அலுவலரே அழைத்ததால் மணிமாறன் வியப்படைந்தார். மாலையில் சென்றபோது அலுவலகத்தில் கல்வி அலுவலர் மட்டுமே தனித்திருந்தார். வேறு யாருமே இல்லை.
வெளியில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்த மணிமாறனைப் பார்த்த ராமதேவன், “வாங்க மணிமாறன், இப்படி உட்காருங்க..” என்று வரவேற்றார்.
“வணக்கம்யா..” என்று கூறிக் கொண்டே மணிமாறன் நாற்காலியில் அமர்ந்தார். எப்படித் தொடங்குவது என்று தெரியாமல் கோப்புகளை ஒழுங்குபடுத்தி மேசையைச் சீராக்கியும், மூக்குக் கண்ணாடியைக் கழற்றி உறையில் வைத்தும், வாசற் புறத்தைப் பார்ப்பதுமாக இருந்த அலுவலரிடம் “என்னாங்கய்யா? திடீர்னு வரச் சொன்னீங்க; ஏதாவது பிரச்சினையா..?” என்று அக்கறையாய்க் கேட்டார் மணிமாறன். ஏனெனில் அவர் ஆசிரியர் இயக்கத்தின் தலைவராகவும் இருக்கிறார்.
“பிரச்சினைக்கெல்லாம் ஒங்களைக் கூப்பிடுவேனா? செயலாளரை வைச்சே முடிச்சிடுவேன் மணிமாறன்..” என்றார் ராமதேவன்.
“வேற என்னாங்கய்யா… சொல்லுங்க…”
“வந்து ஒரு முக்கியமான விஷயம் இந்த ஆண்டு நல்லாசிரியர் விருதுக்கு ஒங்க பேரை அனுப்பலாம்னு இருக்கோம். இந்தச் செய்தியை சொல்லத்தான் வரச் சொன்னேன். ஆனா இது ரொம்ப ரகசியமானது. அதோட இதை நீங்க எப்படி ஏத்துக்குவீங்கன்னு தெரியல..”
கேட்டவுடன் மணிமாறனுக்கு அதிகமான ஆர்வம் தோன்றாவிட்டாலும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. இலக்கியத் துறையில் அவர் எழுதியிருந்த பல நூல்கள் தமிழக அரசின் பரிசையும், பல்வேறு நகரங்களில் இயங்கிவந்த அமைப்புகளின் விருதுகளையும் பெற்றிருந்தாலும், தான் பணிபுரியும் தொழிலுக்கான விருது தனக்குக் கிடைக்கப் போகிறது என்பதை எண்ணும் போது அவருக்குப் பெருமையாகவும் இருந்தது.
“ஐயா, என் தலைமை ஆசிரியரைக் கேட்டீங்களா? அவரும் என்னைப் போல அதே பள்ளியில் முப்பது ஆண்டுகளாகச் சிறப்பாகப் பணிபுரிபவர் இல்லீங்களா” என்றார் மணிமாறன்.
“மணிமாறன், உங்க தலைமை ஆசிரியர்தான் அவரைவிட நீங்கதான் பொருத்தமானவருன்னு சிபாரிசு செஞ்சார் தெரியும்ல” என்றார் அலுவலர்.
இதுபோன்ற நண்பர்களையும் நேர்மையான அதிகாரிகளையும் பெற்றதைத் தன் வாழ்வின் பேறாக நினைத்தார் மணிமாறன்.
“அவரு சொன்னா சரியாகத்தான் இருக்கும்; நான் இப்ப என்னங்க செய்யணும்” என்று கேட்ட மணிமாறனின், முன்னால் இருந்த தனது மேசையின் இழுவையை இழுத்து பதிவேடு போன்ற ஒரு புத்தகத்தை எடுத்துப் போட்டார் ராமதேவன்.
“இதோ பாருங்க… இது போன ஆண்டு குருமூர்த்தி தயார் செஞ்சு அனுப்பியது, இதேபோல ஒங்களைப் பத்தி எல்லாத் தகவல்களையும் சேகரிச்சு நீங்க விண்ணப்பிக்கணும்..”
உடனே மணிமாறன் சிரித்துக் கொண்டே “என்னாங்கய்யா எனக்கு விருது கொடுங்கன்னு நானே கேட்டு விண்ணப்பிக்கணுமா?அதெல்லாம் வேணாங்க…” என்றார்.
“மணிமாறன், நீங்க தலைமை ஆசிரியராகக் கூட இல்லாம உதவி ஆசிரியரா ஒரே பள்ளியில முப்பது ஆண்டுகளாகச் சேவை செஞ்சிருக்கீங்க; பாட நூல் எழுதறதுக்கும் போய் இருக்கீங்க; நெறைய நூல்கள் எழுதி இருக்கீங்க; இதெல்லாம் கல்வித் துறைக்கு மாவட்டம் முழுதா நல்லாத் தெரியும்தான் ஆனாலும் நடைமுறைன்னு ஒண்ணு வச்சிருக்காங்கல்ல; அதனாலே மறுக்காதீங்க..” என்றார் ராமதேவன்.
மணிமாறனும் அவரின் மனம் புண்பட வேண்டாமென்று மேசை மேல் இருந்ததை எடுத்துக் கொண்டார் மணிமாறன்.
பள்ளியில் தான் நடத்திய நிகழ்ச்சிகள், கலந்து கொண்ட கல்விப் பயிற்சிகள், கருத்தரங்குகள், ஊரில் நடத்திய கல்விக் குழுக் கூட்டங்கள் ஆகியவற்றின் தகவல்கள், படங்கள் மேலும் தான் வெளியிட்ட நூல்களின் அட்டைப் படங்கள் கலந்து கொண்ட இலக்கிய நிகழ்ச்சிகளின் அழைப்புகள், ஊரில் இயங்கும் நிறுவனங்களின் சான்றிதழ்கள் என்று பெரிய தொகுப்பைச் சேகரித்துத் தந்தார் மணிமாறன்.
அதை முறைப்படி அனுப்பிய பிறகு திடீரென ராமதேவன் ஒருநாள் பேசினார். “மணிமாறன் இன்னிக்கு மாலை அலுவலகம் வாங்க; விருது விஷயமா பேசணும்..”
“என்னாங்கய்யா? சொல்லுங்க…”
“ஒண்ணுமில்ல; நேரா வாங்க பேசலாம் விருதுக்கு அரசியல் சிபாரிசெல்லாம் தேவைப்படும்போல இருக்குது…”
“மணிமாறன் இப்ப இதெல்லாம் ரொம்ப சகஜமாப் போச்சு, போன தடவ வாங்கின குருமூர்த்தியும் சரி, அதுக்கு முன்னாடி வாங்கின மோகனராசும் சரி; இருபதாயிரம் முப்பதாயிரம் செலவு செஞ்சிருக்காங்க தெரியுமா?” என்றார் ராமதேவன்.
“ஐயா, அவங்க தகுதியெல்லாம் ஒங்களுக்கே தெரியும்ல…”
“தகுதிக்கு எங்க மணிமாறன் இப்ப மதிப்பிருக்கு? எல்லாமே மாறிப் போயிடுச்சில்ல…”
“அதுக்குத்தான் நான் விண்ணப்பம் அனுப்பும் போதே எனக்கு விருது வேணும்னு நானே கேக்கணுமான்னு கேட்டேன். எப்படியோ நானூறு பேரில் என்னை நீங்க தேர்ந்து எடுத்ததே போதுங்கய்யா..”
“இல்ல மணிமாறன், உங்களுக்குக் கிடைச்சதுன்னா என் பணிக்காலத்துல ஒரு நல்ல ஆசிரியருக்கு வாங்கிக் கொடுத்த திருப்தி இருக்கும். அதுவும் ஒரு இலக்கியவாதிக்குக் கெடச்சா எனக்குப் பெருமை. நம் வட்டாரத்திற்கும் பெருமை..” என்றார் ராமதேவன்.
“ஐயா, அதெல்லாம் சரிதாங்க; இருந்தாலும் சிபாரிசு செஞ்சு அதை அடையணுமான்னுதான் எனக்குப் பிரச்சினை. சரிங்கய்யா, யார் சிபாரிசு வேணுமாம்” என்றார் மணிமாறன்.
ராமதேவன் சிரித்துக் கொண்டே, “ஒங்க ஊர்க்காரர் தானே இப்ப கல்வியமைச்சரா இருக்காரு. அவரைத் தெரியும்ல” என்றார்.
“நல்லாவே தெரியுங்கய்யா; நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாவே படிச்சவங்க..”என்றார் மணிமாறன்.
“அப்புறம் என்னங்க? அவருகிட்ட ஒரு வார்த்தை சொல்லிடுங்க…” என்றார் ராமதேவன்.
“அண்ணே.. உங்களுக்கு விருது கிடைச்சா நம்ப இயக்கத்துக்கும் பெருமைதாண்ணே..” என்று இயக்கச் செயலாளர் குமரன் கூறியதும் மணிமாறன் அமைச்சரைப் பார்க்கச் சென்னை செல்வதற்குத் தூண்டுதலாக அமைந்தது.
கல்வி அமைச்சரும் நன்றாகவே மரியாதை கொடுத்துப் பேசினார். “திறமை இல்லாத எவ்வளவோ பேர் விருது வாங்குவதற்குப் பரிந்துரை செய்யச் சொல்கிறார்கள். உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா? நீ இதுக்காக நேரில் வரணுமா? தொலைபேசியில் பேசி இருந்தாலே போதுமே. இப்பவே உனக்கு விருது கிடைச்ச மாதிரி நினைச்சுக்க..” என்றார்.
மணிமாறனின் பள்ளி ஆசிரியர்கள் எல்லாம் விருது பெறும் விழாவிற்கு எப்படிப் போவது, யார் யாரை அழைத்துப் போவது என்றெல்லாம் திட்டமிட்டார்கள். விருது வழங்கும் நாளுக்கு இரண்டு நாள்கள் முன்னர்தான் தகவல் வரும் என்று கல்வி அலுவலர் கூறி இருந்தார். அப்படித்தான் தகவலும் வந்தது. கல்வி அமைச்சரே மணிமாறனிடம் தொலைபேசியில் பேசினார்.
“மணிமாறன்தானே! நான்தான் ஒங்க நண்பர் கல்வி அமைச்சர் பேசறேன். மொதல்ல நீங்க என்னை மன்னிக்கணும். எல்லாத்துக்குமே மந்திரிங்க சிபாரிசுன்னா எப்படி? கொஞ்சம் எம்.எல்.ஏ. சொல்றதுக்கும் மதிப்பு கொடுங்கய்யான்னு சி.எம்.மே. தலையிட்டு சொல்லிட்டாரு. இந்தத் தடவை எந்த அமைச்சர் சிபாரிசும் எடுபடல. தகுதியுள்ள ஒருவருக்குக் கிடைக்காதது எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கு..” என்றார்.
அமைச்சர் பேசி முடித்ததும் சற்று நேரம் கழித்து மீண்டும் தொலைபேசி ஒலித்தது.
கம்பம் பாரதி இலக்கியப் பேரவையிலிருந்து அவரது சிறுகதை நூலுக்கு விருது கிடைத்திருப்பதாகப் பேசினார்கள்.
இப்போதுதான் மணிமாறனுக்கு உண்மையான மகிழ்ச்சியை அடைந்தது போலிருந்தது…
Add comment