தமிழ்library
, ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை, தமிழ்library

ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை

திருப்பாவை (1)

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்* நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!* சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!*
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்**
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்*
நாராயணனே நமக்கே பறை தருவான்*
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

செல்வம் நிறைந்துள்ள
திருவாய்ப்பாடியில்
கைங்கர்ய ஸம்பத்தையும் இளம் பருவத்தையும் உடைய பெண்காள் !
விலக்ஷணமான பூஷணங்களை அணிந்துள்ளவர்களே !
(மாதங்களிற் சிறந்த) மார்கழி மாஸமும் பூர்ண சந்திரோதயத்தையுடைய (சுக்கில பக்ஷத்திய) நல்லநாளும் (நமக்கு வாய்த்து நின்றன.)
கூர்மை பொருந்திய வேலாயுதத்தை உடையவனும்
(கண்ணபிரானுக்குத் தீங்கு செய்யவரும் நீச ஜந்துக்கள் பக்கலிலும் சீறிக் கொடுமைத் தொழிலைப் புரிபவனுமான
நந்தகோபனுக்கு பிள்ளையாய்ப் பிறந்தவனும், அழகு நிறைந்த கண்களை உடையளான
யசோதைப்பிராட்டிக்கு
சிங்கக்குட்டி போலிருப்பவனும்,
காளமேகத்தோடொத்த திருமேனியையும்
செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களையும்
ஸூர்யனையும் சந்திரனையும் போன்ற திருமுகத்தை உடையனுமான
ஸ்ரீமந் நாராயணன் தானே (‘அவனால் பேறு’ என்றிருக்கிற) நமக்கே பறையை
கொடுக்குமவனாயிற் நின்றான், ஆதலால், இவ்வுலகத்தவர்கள்
கொண்டாடும்படி
(இந்நோன்பிலே)ஊன்றி
நீராட வர விருப்பமுடையீர்களே !
வாருங்கள் ஏல் ஓர் எம்பாவாய் !

ஆயர் சிறுமிகள் “நாம் நோன்பு நோற்பதற்கீடாக நமக்கு இங்ஙனே விலக்ஷணமானதொரு காலம் நேர்பட்டபடி என் !” என்று காலத்தைக் கொண்டாடி மார்கழி நீராட்டத்தில் விருப்பமுடைய பெண்களை விளிக்குமாறு கூறுவது, இப்பாட்டு.

பகவத் கீதையில் கண்ணபிரான் “மாஸங்கள் அனைத்தினுள்ளும் மார்கழி மாதமாகிறேன் நான்” என்று இம்மாதத்திற்குள்ள வீறுபாடு தோற்ற அருளிச் செய்தமையால் அம்மாதம் வாய்க்கப் பெற்றவர்கள் அதனைக் கொண்டாடாதிருக்க வல்லரல்லரே. இராமபிரானை முடிசூட்டப் பாரித்து முயன்றபோழ்து வஸந்தருதுவில் முதன்மையான மாதம் தன்னடையே நேர்பட, அதனை அங்குக் கொண்டாடினாற்போல், இவர்களும் நோன்பு நோற்கமுயலத் தன்னடையே வாய்த்த மார்கழி மாதத்தை நினைந்து நெஞ்சு கனிகின்றனர்.

நற்காரியங்கள் செய்ய விரும்பினார்க்குச் சாஸ்திரங்களில் விதிக்கபட்ட சுக்லபக்ஷமும் இவர்கட்கு நினைவின்றி வாய்த்தபடியால், அதனையும் கொண்டாடுகின்றனர் மதி நிறைந்த நன்னாள் என்று. ஒருவரை ஒருவர் முகங்கண்டு அநுபவித்தற்கும், எல்லாருங் கூடிச் சென்று கண்ணபிரானை உணர்த்துவதற்கும் பாங்காக நிலா நேர்பட்டமையால் மகிழ்ச்சி மிக்கது. இவர்கள் கண்ணபிரானோடு ஸம்ச்லேஷிப்பதற்கு ஊரார் விரோதிகளயிருக்கும் காலத்தில் “நந்தகோபாலன் கடைத்தலைக்கே நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின்” என்று நள்ளிருளை வேண்டுவர்கள்; இப்போது அங்ஙனன்றி க்ருஷ்ண ஸம்ச்லேஷத்திற்கு ஊராரே இசைந்து நின்றமையால் இருளை வெறுத்து நிலவைக்கொண்டாடுகின்றனரென்க.


திருப்பாவை (2)

வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்கு*
செய்யும் கிரிசைகள் கேளீரோ* பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி*
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி**
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்*
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்*
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி*
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

இப் பூமண்டலத்தில்
வாழ்ந்து கொண்டுள்ளவர்களே!
(எம்பெருமானாலேயே பேறு என்ற அத்யவஸாய முடைய) நாமும் உஜ்ஜீவிக்கும் வழியை ஆராய்ந்து, திருப்பாற்கடலில் அவதாநத்துடன் கண் வளர்ந்தருளி நின்ற பரமபுருஷனுடைய திருவடிகட்கு மங்களாசாஸணம் பண்ணி
(ஆசார்யாதிகளுக்கு இடுகையாகிற) ஐயத்தையும், (ஆர்த்தர்கட்கு இடுகையாகிற) பிக்ஷையையும் சக்தியுள்ளவளவும் இட்டு
மகிழ்ந்து நமது நோன்புக்கு (அங்கமாகச்) செய்யவேண்டிய
க்ரியைகளை காது கொடுத்துக் கேளுங்கள்.
நோன்பு நோற்கத் தொடங்கின நாம் நெய், பால் உண்ணக்கடவோமல்லோம்;
விடியற் காலத்திலேயே ஸ்நாநம் செய்துவிட்டு
(கண்ணில்) மையிட்டு அலங்காரம் பண்ணக்கடவோமல்லோம்;
(குழலிற்) பூ வைத்து முடிக்கக் கடவோமல்லோம்;
(மேலைத் தலைவர்கள்) செய்யாதவற்றை
செய்யக் கடவோமல்லோம்;
கொடிய கோட்சொற்களை
(எம்பெருமானிடத்துச்) சென்று கூறக் கடவோமல்லோம்;
ஏல் ஓர் எம்பாவாய்

ஒரு விசேஷ காரியத்தில் ஈடுப்பட்டவர்கள் அக்காரியம் தலைக்கட்டுமளவும் சிலவற்றைப் பரிஹரிக்க வேண்டுமென்றும் சிலவற்றைப் பற்றவேண்டுமென்றும் அந்த வீடுபற்றுக்களை முதலில் ஸங்கல்பித்துக்கொள்ள வேண்டுமென்றும் சாஸ்திரங்களில் கூறியுள்ளதனால், அதற்கேற்ப, நோன்பு ஆகிற விசேஷ காரியத்தில் ஒருப்பட்ட இவ்வாயர் மங்கைகள் தாங்கள் விடுமவற்றையும் பற்றுமவற்றையும் ஸங்கல்பிக்கிறார்கள், இப்பாட்டில்.

பாற்கடலுள் பையத்துயின்ற பரமனடிபாடுகை, நாட்காலே நீராடுகை, ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டுகை ஆகிற இம்மூன்றும் செய்யப்படுமவை. நெய்யுண்ணாமை, பாலுண்ணாமை, மையிட்டெழுதாமை, மலரிட்டு முடியாமை, செய்யாதன செய்யாமை, தீக்குறளை சென்றோதாமை என்பன விடப்படுமவை.

(நம்மை விட உயர்ந்தவர்களுக்குத் தருவது ஐயம் எனப்படும்.)


திருப்பாவை (3)

ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி* நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்*
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து* ஒங்கு பெருஞ் செந்நெலூடு கயல் உகளப்*
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்* தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி-
வாங்கக்* குடம் நிறைக்கும் வள்ளற் பெரும் பசுக்கள்* நீங்காத செல்வம் நிறைந்து – ஏலோர் எம்பாவாய்.

ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை எத்தனை அழகாக திருப்பாவையின் பாசுரங்களில் செதுக்கி இருக்கிறாள் என்பது இந்த பாசுரங்களின் அமைப்பை பார்த்தால் விளங்கும்.

இந்த சிந்தாந்தம், கர்ம ஞான பக்தி யோகங்களை மோக்ஷ சாதனமாக சொல்லவில்லை. ப்ரபத்தி அதாவது சரணாகதியையே மோக்ஷ சாதனமாக சொல்கிறது. அதையும் அர்ச்சிராதி மார்க்கங்கள் வழியாகவே சரணாகதி செய்து ப்ரஹ்மத்தை அடைய வேண்டும் என்று சொல்கிறது. இதையே முதல் பாசுரத்தில், நாராயாணன் என்று பரமபத நாதனை சொன்னாள். இரண்டாவது பாசுரத்தில், பாற்கடலில் பையதுயின்ற பரமன் என்று வியூஹ மூர்த்தியை சொன்னாள். இந்த பாடலில், ஓங்கி உலகளந்த உத்தமன் என்று விபவ அவதார மூர்த்தியை சொல்கிறாள்!

மேலும் த்ருவிக்ரமாவதாரத்தை சொன்னதற்கு ஒரு உயர்ந்த அர்த்தம் இருக்கிறது. இந்த அவதாரம் கருணையின் வடிவம். இந்த அவதாரத்தில் மஹாபலி சக்ரவர்த்தி – அசுரனான போதும், அவன் தேவர்களை வருத்திய போதும் அவனை கொல்லாமல் வாழ்வளித்த அவதாரம். இந்த அவதாரத்தில்தான், நல்லவன், தீயவன், ஆஸ்திகன் – நாஸ்திகன் என்று எந்த வித பாரபட்சமுமில்லாமல் எல்லோர் தலையிலும் தன் பாத ஸ்பர்சம் வைத்த அவதாரம். அதனால் சர்வ வ்யாபகத்வம், சர்வக்ஞத்வம் தோன்ற ஓங்கி உலகளந்த உத்தமன் – புருஷோத்தமன் என்று அழைக்கிறாள் ஆண்டாள்.

பகவான் கட்டிப்பொன்போலே – அவன் நாமம் ஆபரணம் போலே என்று அவன் நாமத்துக்கு ஏற்றம் சொல்வர்கள் பூர்வாசார்யர்கள்; உத்தமன் பெயர் என்று திருமந்திரமான ஓம் நமோ நாராயணாய என்ற திருவஷ்டாக்ஷரத்தை ஆண்டாள் குறிப்பிடுகிறாள். இது முதல் பாசுரத்தில் சொன்ன நாராயண நாமத்திலிருந்து தேறும். அந்த நாமத்தை இடைவிடாது அனுசந்தித்து வந்தால் என்னென்ன நன்மைகளெல்லாம் ஏற்படும் சொல்லப் புகுகிறாள் ஆண்டாள். அந்த வகையில் இந்த பாடல் ஒரு மங்களாசாசனம். இந்த பாடலுக்கு வியாக்யானம் எழுதிய பூர்வாசார்யர்கள், ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நீராடினால் என்றும் கொண்டு விளக்கம் சொன்னதுண்டு.

மழை என்பது நிறைய பெய்தாலும் தீங்கு – பெய்யாமல் விட்டாலும் தீங்கு – துர்பிக்ஷம், பஞ்சம் போன்ற தீங்குகள் நீங்க மழை தேவை. இந்த புருஷோத்தமனின் நாமத்தை சொல்லி நீராடி பாவை நோன்பிருந்தால் தீங்குகள் நீங்க தீங்கில்லாமல் மாதம் மும்மாரி பொழியும் என்று வாழ்த்துகிறாள். அந்த திருவிக்கிரமனின் பாதத்தை நோக்கி ஓங்கி வளர்ந்தது போல் நெற்பயிர்கள் வயல் வெளியெங்கும் நிறையும். அந்த வயல் வெளிகளில் ஊடே ஓடும் ஓடைகளில் மீன்கள் துள்ளி விளையாடும். பூங்குவளை போது – போது என்றால் தளிர் – அந்த குவளை மலர்களின் துளிரில் வண்டுகள் தூங்கும்.

இங்கே சொல்லப்படும் உருவகங்கள் சுட்டுவது, அந்த பரமனின் கருணையால் ப்ரபன்னர்கள் மத்தியில் ஞானம் ஓங்கி வளர்ந்த பயிரைப்போல் செழித்து இருக்கிறது.

அதில் ஆசார்யர்களை அண்டிய சிஷ்யர்கள், துள்ளும் கயல்களைப்போலே அந்த ஞானம் தந்த இன்பத்தினால் களிப்பர். ஆசார்யர்கள் மிகுந்து ஞானம் தழைத்திருப்பதால் குவளைப்போதில் துயின்ற வண்டைப்போல், பாகவதர்களின் ஹ்ருதய கமலத்தில் அந்த பரமன் உறங்குகிறான்.

அத்தகைய செழிப்பில், பெரிய பசுக்கள் வள்ளலைப்போல் குடம் குடமாக பாலை நிறைக்கின்றன. அவைகளின் மடி பெருத்து இருப்பதால் ஒரு கையால் பாலைக்கறக்க இயலாது.. முலை ‘பற்றி’ என்று இருகைகளாலும் பசுக்களின் மடியை பற்றித்தான் பாலை கறக்க முடியும்… இதற்கும் தேங்காதே என்று தயங்காமல் புகுந்து பாலை கறக்க சித்தமாக ஆய்பாடி இடையர்கள் இருப்பார்களாம்.

இங்கே பசுக்கள் ஒரு உருவகம். அந்த பகவானின் உருவகம். வள்ளன்மை அவன் குணம். அவன் எவ்வளவு கொடுத்தாலும் குறைவில்லாத வள்ளல். அத்துடன் பாலை கன்று குட்டிகளும், இடையர்களும் கொள்ளாவிடில் பசு எப்படி தவியாய் தவிக்குமோ அதுபோல் பரமனும் ஜீவாத்மாக்கள் அவனை கொள்ளாவிடில் தவித்து போகிறான். ஜீவாத்மாக்கள் முக்தி பெற்று அவனை எவ்வளவு அனுபவிக்கிறார்களோ அதே போல் அவனும் அவர்களை கொண்டு சுகிக்கிறான் என்பது தேறும்.

ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி பாடி நீராடி நோன்பிருந்து இத்தகைய செல்வங்களை எந்த நாளும் விட்டு நீங்காமல் பெற்று நிறைவோம் என்று ஆண்டாள் மங்களாசாசனம் செய்கிறாள்.


திருப்பாவை (4)

ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்* ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்து ஏறி*
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து* பாழியந் தோள் உடைப் பற்பநாபன் கையில்* ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்று அதிர்ந்து* தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய்* நாங்களும் மார்கழி நீர் ஆட மகிழ்ந்து – ஏலோர் எம்பாவாய்.

ஆழி மழைக்கண்ணா! என்று பர்ஜன்ய தேவனை அழைக்கிறாள். ஆழி என்றால் முன் பாசுரத்தில் சொன்னபடி மும்மாரி பெய்யும் மழை – மண்டல வர்ஷம் என்பர். இந்த இடத்தில் பர்ஜன்ய தேவனை அழைத்து பாடியதற்கு விசேஷங்கள் சில சொல்வர் பூர்வாசார்யர்கள் – பர்ஜன்ய தேவனை பாடுவது போல், அவனிலும் அந்தர்யாமியைத்தான் ஆண்டாள் குறிப்பிடுகிறாள். அதேபோல், மற்ற தேவதைகளான யமன் முதலான பேர்கள் அழிக்கும் தொழிலை கொண்டு ஹிம்சிக்க புகுகிறார்கள். பர்ஜன்யனான வருணன் மட்டுமே உலகம் உய்ய நீரைத்தருகிறான். நீரின்றி அமையாது உலகு அல்லவா? இந்த பர்ஜன்ய தேவன் நாரணனைப்போலே, படைத்தல் – அழித்தல் தொழில்களை விட்டு ரக்ஷிக்கும் தொழிலை கைக்கொண்டிருக்கிறான் என்று ஒற்றுமை சொல்லி நமக்கு உணர்த்துகிறாள் ஆண்டாள்.

ஹே பர்ஜன்ய தேவனே! நீ உன் அனுகிரஹத்தை நிறுத்தி விடாதே – கை கரவேல் – பாரபட்சம் பார்க்காதே – ஆழியுள் புக்கு முகர்ந்து – இங்கே ஆழி என்பது சமுத்திரத்தை குறிக்கும் – சாதாரணமாக நாடு நகரங்களில் உள்ள குளங்கள் ஏரிகளிலிருந்து நீரை முகர்ந்து அதே நாடு நகரங்களின் மேல் வர்ஷிப்பது வ்யர்த்தம் – ஆழ்கடலுக்குச் சென்று – உள் புக்கு – ஆழ்கடலினுள்ளேயே புகுந்து முகர்ந்து – உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முகர்ந்து ஆர்த்தேறி – நன்றாக சத்தம் எழுப்பி இடி இடித்துக்கொண்டு மேகமாக அந்த நீரை தூக்கி வந்து எங்கள் மேல் கை கரவாமல் பொழி!

ஆர்த்தேறி என்பதற்கு பூர்வாசார்யர்கள் ‘இராமடம் ஊட்டுவார்போலே!’ என்கிறார்கள் – அதாவது அந்த காலத்தில் பிள்ளைகள் வீட்டில் கோபித்துக்கொண்டு ஊர்க்கோடியில் சத்திரங்களில் போய் படுத்துக் கொள்ளுமாம் – இரவில் வீட்டிலிருப்போர் பிள்ளைகள் பசி பொறுக்காதே என்று இரங்கி அன்னத்தை கையில் எடுத்துக்கொண்டு முக்காடிட்டு சத்திரங்களுக்கு சென்று குரலை மாற்றிக்கொண்டு ‘அன்னம் கொணர்ந்துள்ளோம்’ என்று ஆர்த்து கூவி அழைத்து அந்த பிள்ளைக்கு அடையாளத்தைக் காட்டிக்கொள்ளாமல் ஊட்டுவர்களாம்… அதே போல் பர்ஜன்ய தேவனும் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் எல்லோருக்கும் உணவளிக்கிறான்!

ஆழியுள் புகுந்து நீரை முகர்ந்து வரும் மேகங்களை பார்க்கையில் ஆண்டாளுக்கு உடனே நாராயணன் நினைவுக்கு வருகிறான். நாராயணனும் தனது உதார குணத்தினால் கருமையாகி நீலமேக ஸ்யாமளனாக இருக்கிறான். இதில் ஒரு வித்தியாசம் – மழை பொழிந்த உடன் மேகம் வெளுத்து விடும் – ஆனால் அவனோ கொள்ள குறைவிலன் – எவ்வளவு அனுக்ரஹித்தாலும் குறைவின்றி இருப்பான் – அதனால் பர்ஜன்ய தேவனைப்பார்த்து ‘அவனைப்போலே’ நீயும் கருமை கொள் என்கிறாள் ஆண்டாள். அடுத்ததாக பாற்கடலில் துயிலும் பத்மநாபனின் திருத்தோள்களில் உள்ள சுதர்சனாழ்வான் மின்னுவது போலே மின்னலை ஏற்படுத்திக்கொண்டு, அந்த பத்மநாபனின் சங்கொலிபோல் நின்று அதிர்ந்து இடி இடித்து, அவனது சார்ங்கம் எனும் வில் எப்படி சரமழையை பொழிந்ததோ அப்படி – தாழாதே என்றபடி தயங்காமல் பொழிந்து நாங்கள் சுபிக்ஷத்துடன் வாழ பெய்திடாய் – அதை எண்ணி நாங்களும் மகிழ்ந்து மார்கழி நீராட போகிறோம் என்கிறாள்.

இதில் ஊழி என்பது காலத்தை குறிக்கிறது – ஊழி முதல்வன் எனும்போது அந்த கால தத்துவத்திற்கும் முந்தையவனாய் முதல்வனாய் பத்மநாபன் இருப்பதை சொல்கிறாள். வெறுமனே சுதர்சனத்தை சொல்லி அதைப்போல் மின்னல் என்று சொல்லாமல் பத்மநாபன் என்ற நாமத்தை சொல்லி சம்பந்தப்படுத்துவது ஏனெனில் – ஊழிமுதல்வனான நாராயணன் தன் நாபியிலிருந்து ‘பத்மம்’ எனும் தாமரை மலரை தோன்ற செய்து அதில் ப்ரம்ம தேவனை பிறப்பித்தான் – ப்ரம்மன் அதனால் நாராயணனின் பிள்ளை – பிள்ளையை பெற்றதற்கு அவன் பெரிய தன்மையால் தன் மகிழ்ச்சியை காட்டிக்கொள்ளவில்லை ஆனாலும் சுதர்சனாழ்வான் தானும் மகிழ்ந்து மின்னி அந்த மகிழ்வைக்காட்டினான் என்பது உட்பொருள்.

பாழி அம் தோளுடைய – என்று பரமனுடைய அழகிய தோள்களை பாடுகிறாள் – கொள்ள குறைவிலா அனுக்கிரஹம் செய்யக்கூடியவனான பெருமான் ‘ஒதுங்கின ரக்ஷ்ய வர்க்கம் அளவுபட்டு, ரக்ஷிப்பவனுடைய காவல் துடிப்பேமிக்கிருக்கை’ எனும்படி அளவில்லாத மேன்மை பெற்ற தோள்! ‘பிள்ளைகளைத் தொட்டிலிலே வளர்த்துப் புற்பாயிட்டுப் பூரித்து ஆயுதங்கொண்டு நோக்கியிருப்பரைப்போலே’ தன் ஸ்ருஷ்டிக்கு ஸோபாதிக காரணனாய் ப்ரம்மாவை பெற்று திருத்தோள்களால் ரக்ஷித்துக் கொண்டிருக்கிற பத்மநாபன் என்பது பொருள்! தோளென்று அவயத்தை சொன்னபோது ‘தோள் கண்டார் தோளே கண்டார்’ என்று ராமனை நினைத்துக்கொள்கிறாள் போலும் – அதனால் சரமழையை சார்ங்கம் பெய்த சரமழையை உதாரணமாக சுட்டுகிறாள்!

இந்த பாட்டு முழுவதுமே அவனுடைய ரக்ஷகத்துவத்தை தெள்ளிய முறையில் மழையுடன் ஒப்பிட்டு மகிழ்கிறாள். ஒருவரை ரக்ஷிக்க வேண்டுமானால் முதலில் அதற்கு உதார மனம் தேவை. மனமிருந்தால் மட்டும் போதாது ரக்ஷிக்கக்கூடிய சக்தியும் தேவை. ஜனமேஜயன் யாகம் செய்து பாம்புகளை அழித்தபோது தக்ஷகன் எனும் ராஜ நாகம் இந்திரனிடம் சரணாகதி பண்ணியது – ஆனால் இந்திரனோடு சேர்த்து யாகத்தீயில் வீழ்க என்று யாகத்தில் மந்திரங்கள் விநியோகம் ஆனவுடன் தானும் அழிவோமே என்று இந்திரன் தக்ஷகனை விட்டு அகன்றான் – அங்கே கருணை இருந்தது சக்தி இல்லை. தசரதன் பரசுராமனிடம் தன்னை கொல்ல வேண்டாம் என்று சரணாகதி செய்தான் – ஆனால் பரசுராமனிடம் சக்தி இருந்தும் கருணை இல்லை. அதனால் இரண்டு சரணாகதிகளும் பலிக்க வில்லை.

பகவான் அப்படி இல்லை – இலங்கையை போரிட்டு வெல்லும் முன்பே விபீஷணாழ்வானுக்கு முடிசூட்டினான் – பதினோரு அக்ஷோணி சேனையை ஒருபக்கமும் தானோருவன் மட்டும் மறுபக்கமும் நின்று எதிர்த்து ஜெயத்தை கொடுத்தான் – அவன் அளவற்ற வலிமையுடயவன் – சரணாகதி செய்யத் தகுந்தவன் – சங்கம், சக்ரம், சார்ங்கம் என்று அவன் ஆயுதங்களை சொல்வது அவன் வலிமையை உதாகரித்து சரணாகதி செய்ய சொல்லுவதே ஆகும்!


திருப்பாவை (5)

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்* தூய பெருநீர் யமுனைத் துறைவனை *
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்* தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை*
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது* வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க*
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்* தீயினில் தூசு ஆகும் செப்பு – ஏலோர் எம்பாவாய்.

இந்தப் பாடலில் உயர்ந்த தத்வ விசாரம் இருக்கிறது. ஒரு இடைப்பெண் இன்னொரு இடைப்பெண்ணைப் பார்த்து கேட்கிறாள் “நாமெல்லாம் கர்ம வசப்பட்டவர்கள் – விதிப்படி கர்மாப்படி தான் எல்லாமும் நடக்கிறது என்றால், நாம் எப்படி பரமனை அடையமுடியும்? நம் பிழைகள் நம்மை தடுத்து விடாதா? இத்தகைய விரதங்கள் இருப்பதால் என்ன பயன்? இது வரை செய்த கர்மங்கள், கர்மத்துக்கான பலன்கள் நம்மை விட்டுவிடுமா? கர்ம வாசனை நம்மை எங்கோ இழுத்து செல்கிறதே? இதிலிருந்து எப்படி மீள்வது?” என்று கேட்பதாகவும், அதற்கு இன்னொரு இடைப்பெண்ணாக ஆண்டாள் பதில் சொல்வதாகவும் அமைந்திருக்கிறது.

கர்ம ஞான பக்தி யோகங்கள் தன் சுயமுயற்சியால் வசிஷ்டர் வாமதேவர் போல செய்து முக்தியடையக் கூடிய சக்தர்கள் அல்ல நாம் – நமக்கு வேத வேதாந்தங்கள் தெரியாது, சாஸ்திரம் தெரியாது, சம்பிரதாயம் தெரியாது. ஆனால் நாம் செய்யக் கூடியவைகள் சில உண்டு. அந்த மாயனை, வடமதுரை மைந்தனை, ஆயர் குலத்து அணிவிளக்கை, தாமோதரனை மலர் தூவி தொழுது, வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்தோமானால் பல ஜன்மங்களில் நாம் சேர்த்து, இனி சேரப்போகும் அனைத்து பாவங்களும் தீயினில் தூசாக விலகும் என்று பதில் சொல்கிறாள்.

அப்பேர்பட்ட பரமனை நாம் எப்படி அணுகுவது? நாமோ அசுத்தர்கள் – என்றால், நமது அர்ஹதையெல்லாம் பார்க்க தேவை இல்லை – உள்ளமாதிரியே இப்படியே சென்று அடையலாம். அவன் வருவானா? நாம் அங்கே செல்ல வேண்டுமா? என்றெல்லாம் குழம்ப தேவையில்லை. ‘உபாயத்தில் துணிவு புறப்படவொட்டாதாப்போலே, உபேயத்தில் த்வரை முறை பார்த்திருக்க வொட்டாதிறே!’ என்று பூர்வாசார்யர்கள் அருளினார்கள்! அதாவது, கண்ணனை நாம் எப்படி அடைவது என்று பயந்தாலும், அவனை உபேயமாக – அடையும் பொருளாக நினைக்கும் போது அவனை அடையவேணும் என்கிற த்வரை – தணியாத ஆவல் இந்த வழிமுறைகளெல்லாம் பார்க்க விடாது.

ப்ரபத்தி மார்க்கத்தின் சாரத்தை அழகாக நமக்காக விளக்கியிருக்கிறாள். த்ரிகரணமான மனம், வாக்கு, காயம் என்னும் கரணங்களைக்கொண்டு, கைகளால் மலர் தூவி, வாயினால் பாடி, மனதினால் அனுசந்திப்பதே கர்ம கட்டை விலக்கும் என்கிறாள்! இன்னொரு வகையில், புண்ய பாவங்கள் இரண்டுமே மோக்ஷ பலனை தடுக்கும் – அதனால் அவை இரண்டையுமே பகவதர்ப்பணம் – க்ருஷ்ணார்ப்பணம் செய்ய வேண்டும் என்பது தேறும்.

கண்ணனை குழந்தையாக பாவித்து, அவன் செய்த பால லீலைகளை நினைத்து உருகுகிறாள் ஆண்டாள் – நம்மாழ்வார் அவனது சௌலப்யத்தை – சுலபத்தன்மையை நினைத்து நினைத்து ‘எத்திறம் எத்திறம்’ என்று மூவாறு மாதங்கள் வியந்ததைப்போலே. பால் கறந்து விற்கும் வைச்யனாக பிறந்து, தாசனாக நல்ல ஆத்மாக்களான பாண்டவர்களுக்கு தொண்டு செய்து, க்ஷத்ரீயனாக போர் செய்து, பிரம்மத்தை அடையும் வழிக்கு கீதை சொல்லி ஜகதாசார்யானாக விளங்கிய மாயன் அல்லவா அவன்?

யாராவது சாமர்த்தியமாக வேலைகள் செய்தால் எந்த ஊர் வேலை இது? எந்த ஊர் நீர்? என்று விசாரிப்பது வழக்கம். அதைப்போல் கேட்டுக்கொண்டு, இவன் யமுனைத்துறைவன் என்கிறாள். வைகுண்டத்தில் இருக்கும் விரஜா நதியைப்போல் இங்கே கண்ணனிருக்கும் கோகுலத்தில் யமுனா நதி ஓடுகிறது. அவன் ஸ்பர்சம் பட்டதால் அது தூய பேரு நீர்!

மாயனை, தாமோதரனை என்று இரண்டு திருநாமங்களையும் பொருத்திப்பார்க்க வேண்டும். அவன் ‘கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன்’ என்று ஆழ்வார் அருளினார் அல்லவா? யசோதை சிறு கயிற்றினால் தன் பொல்லாப் பிள்ளையை கட்ட, அதனால் வடு விழுந்து தாம – உதரனாக தாமோதரனாக இருக்கும் அவன் பெரிய மாயன். தன் சர்வ சக்தியை மறைத்து அடியார்க்கு பொடியனாய் வந்த மாயக்கண்ணன்! அவன் மதுரையில் பிறந்து, யமுனையை கடந்து, ஆயர்பாடிக்கு வந்தான். இவனை பெற்ற பேறு பெற்றதால் யசோதை குடல் விளக்கம் செய்தான். அவள் இவனைக் கட்டிப்போட்ட கதையினை சிந்தித்தாலே மனிதனுடைய கர்மக் கட்டெல்லாம் கழன்று போகும்!


திருப்பாவை (6)

புள்ளும் சிலம்பின காண் புள் அரையன் கோயிலில்* வெள்ளை விளி சங்கின் பேர்-அரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சு உண்டு* கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி* வெள்ளத்து அரவிற் துயில் அமர்ந்த வித்தினை* உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்*
மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம்* உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்.

ஆண்டாள் முதல் ஐந்து பாசுரங்களில் பரமனுடைய, பர, வ்யூக, விபவ, நாம, நித்ய-லீலா விபூதி விசேஷங்களை சொல்லி பாடினாள். அதிலும் முதல் பாசுரத்தில் ப்ராப்ய ப்ராபக சம்பந்தத்தையும், இரண்டாம் பாசுரத்தில் க்ருத்யா-அக்ருத்ய விவேகத்தையும், மூன்றாம் பாசுரத்தில் பகவதனுக்ரஹத்தினால் ஏற்படும் மங்களங்களையும், நான்காம் பாசுரத்தில் பகவானை அடைந்து சரணாகதி செய்தால், பர்ஜன்ய தேவனான வருணன் முதலானோர் தாமும் அனுக்ரஹிப்பதையும், ஐந்தாம் பாசுரத்தில் கர்ம கட்டிலிருந்து விடுபடும் மார்க்கத்தையும் சொல்லி ஒரு கட்டத்தை முடித்தாள்.

அடுத்த படியாக அர்ச்சையையும் பாகவத விசேஷங்களையும் சொல்ல வருகிறாள். அடுத்த பத்து பாசுரங்களில் பத்து வீடுகளுக்கு சென்று கோபிகைகளை எழுப்புவதாக அமைந்துள்ளது. இன்றைய பாசுரத்தில், பாகவதர்களுடன் புதிதாக சேர்ந்துகொண்ட சிறுமி ஒருத்தியை விடியலின் அடையாளங்களைச் சொல்லி, பிள்ளாய்! என்று அழைத்து தூக்கத்திலிருந்து எழுப்பி அழைத்து செல்கிறாள் ஆண்டாள். பூர்வாசார்யர்கள் இந்த பாசுரத்தை வீட்டினுள்ளே தூங்குகின்ற பெண்ணுக்கும், ஆண்டாள் மற்றும் அவர்கள் குழுவான கோபிகைகளுக்கும் இடையே ஒரு கேள்வி பதிலாக, சம்பாஷணையாக சித்திரித்து கூறுவர்.

ஆண்டாள் இந்த பெண்ணின் வீட்டு வாசலில் நின்று, “அம்மா பொழுது புலர்ந்தது.. நீ நேற்று பாவை நோன்புக்கு எங்களுடன் வருவதாக அத்தனை நேரம் சொன்னாயே! எழுந்திரு” என்று சொல்ல, அந்த பெண், “இன்னும் பொழுது விடியவே இல்லையே. அதற்குள் எழுந்திருக்க சொல்கிறீர்களே!” என்கிறாள்.

“இங்கே வெளியே வந்து பார், பறவைகளெல்லாம் விடிந்ததனால் உற்சாகமாக சப்தமெழுப்பிக்கொண்டிருக்கின்றன…” என்று ஆண்டாள் சொல்ல, அவளோ, “நீங்கள் க்ருஷ்ணனோடு சேருவதை நினைத்து நினைத்து உறங்காமல் இருப்பவர்கள். நீங்கள் பறவைகளையும் உறங்கவொட்டாது எழுப்பி விட்டிருப்பீர்கள், அதனால் அவைகள் கத்துகின்றன” என்கிறாள்.

“விடிந்ததனால் புள்ளரையன் கோவிலில் – பட்சிகளுக்கு அரசனான கருடனின் தலைவன் நாராயணன் – புள் அரையன் கோ – இல்லில், விடிந்ததற்கு அடையாளமாக சங்கு ஊதுகிறார்கள். அந்த பேரொலி உனக்கு கேட்கவில்லையா?” என்று ஆண்டாள் கேட்க, “அது ஏதோ சாமத்துக்கு சாமம் ஊதுகிற சங்காக கூட இருக்கலாம். இதெல்லாம் விடிந்ததற்கு அடையாளம் இல்லை. நான் விடிந்த பிறகு வருகிறேன்!” என்கிறாள் அந்தப் பெண்.

“பரம பாகவத பெண்பிள்ளையான நீ இப்படி சொல்லலாமா? க்ருஷ்ணனுக்கு எத்தனை ஆபத்துக்கள் வந்தன, கண்ணனை நச்சு பாலை கொடுத்து கொல்லப்பார்த்த பூதனை, சகடமென்னும் சிறு விளையாட்டு பொருளுக்குள் ஆவேசித்து கண்ணனை கொல்லப்பார்த்த சகடாசுரன், என்று எத்தனையோ பேர்கள் வந்தார்களே… அவர்களை எல்லாம் அழித்து நம்மைக்காத்த சரண்யனாயிற்றே அவன்” என்று அவன் பெருமைகளை சொல்ல, “அவர்களை எல்லாம்தான் அழித்தாயிற்றே!” என்று இவள் எழுந்து வராமலே இருக்கிறாள்.

“அம்மா, இத்தனை அடையாளங்கள் சொல்லியும் நீ எழுந்திருக்க வில்லை. இந்த அசுரர்களெல்லாம் நுழைய முடியாத இடமான பாற்கடலில் பாம்பணையில் யோக நித்திரையில் இருக்கும் ஜகத்காரண வஸ்துவை – வித்தை – தம் உள்ளத்துள் வைத்துள்ள ஆய்ப்பாடியைச் சேர்ந்த யோகிகளும், முனிவர்களும் மெல்ல எழுந்திருந்து சம்ப்ரதாய முறைப்படி ‘ஹரிர்:ஹரி ஹரிர்:ஹரி’ என்று ஏழுமுறை சொல்ல – அது பேரொலியாக ஒலித்து நம் உள்ளத்தை குளிர்விக்கிறதே! இது கண்டுதான் நாங்களும் எழுந்திருந்து உன்னை எழுப்ப வந்துள்ளோம் – வந்து எங்களுடன் சேர்ந்து கொள் என்று அழைக்க அந்த சிறுமியும் வந்து சேர்ந்து கொள்கிறாள் என்பது சரித்திரம்!

இதில் உள்ளே தூங்குபவளுக்கும் வெளியே இருந்து எழுப்புகிறவர்களுக்கும் பக்தியில் வித்தியாசமில்லை. குடம் குடமாய் பாலூற்றினாலும் விஷம் குணம் மாறுவதில்லை – குடம் நிறையபாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும் மொத்தமும் விஷமாகி விடுகிறது – அதைப்போல் க்ருஷ்ணனுடைய குணங்களை சிறிது அனுபவித்து விட்டாலும், நஞ்சுண்டாரைப்போலே சிலரை மயங்கப்பண்ணுவதும், சிலரை இருந்த இடத்திலே இருக்கவொட்டாதே துடிக்கப்பண்ணுகையாலும், சிலர் உறங்க, சிலர் குதூகலமாக துள்ளிக்கொண்டு சீக்கிரமாக எழுந்து வந்து விடுகிறார்கள் என்பது பெரியோர் வாக்கு.

இந்த பாசுரத்தில் சில முக்கியமான விஷயங்கள் – புள்ளரையன் கோவில் என்று சொல்லும்போது, பாரத காலமான துவாபர யுகத்தில் கோவில்கள் இருந்ததா? என்ற கேள்வி வரலாம். கண்ணனே இருக்கும்போது வேறு கோவில் எதற்கு என்றும் தோன்றலாம். கோவில் – அர்ச்சை வழிபாடு – அதற்கும் பலகாலம் முன்பிருந்தே இருந்தது. இவர்களுக்கு முந்தைய யுகமான த்ரேதா யுகத்திலேயே ஸ்ரீராமன் திருவரங்கத்து பெருமானான அழகிய மணவாளனை ஸ்ரீரங்க நாதனை அர்ச்சாரூபமாக – அதற்கும் பல காலம் முந்தைய தனது குலதனமாக கொண்டு வைத்திருந்து பின் விபீஷணாழ்வானுக்கு வழங்கவில்லையா? அதனால் அர்ச்சிராதி மார்க்கம் என்றுமுள்ளது என்பது தேறும். அர்ச்சையில்தான் மனிதர்களான நாம் தெய்வத்தை உணரமுடியும். அர்ச்சையிடம் முதலில் சரணாகதி செய்துதான் பகவதனுக்ரஹத்தை பெறமுடியும் என்பது சித்தாந்தம்.

அடுத்து, முனிவர்களும் யோகிகளும் என்று பிரித்து சொன்னது – முனிவர்கள் தம் ஞானம் சுடர்விட அனுபவஸ்தர்களாய் பரமனை உணர்ந்தவர்கள் – யோகிகள் யோகாப்யாசத்தினால் பரமனை அடைய முயற்சிப்பவர்கள்! இன்னொரு விதமாக பார்த்தால் இருந்த இடத்திலிருந்தே தவம் செய்வோர் முனிவர். அங்குமிங்கும் அலைந்து உடலை வருத்திக்கொள்வோர் யோகியர். அவர்களெல்லாம் தம் ஹ்ருதய கமலத்துள் பரமன் பைய துயிலுவதை கண்டுகொண்டு அதற்காக அவனுக்கு அலுங்காமல் மெள்ள எழுந்து ஹரி நாம சங்கீர்த்தனம் செய்கிறார்கள்! யோகமார்க்கத்தை குறிப்பால் உணர்த்தும்போது வெள்ளத்து அரவு என்று கோடி காட்டுகிறாள் ஆண்டாள்!


 திருப்பாவை (7)

கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன்* கலந்து- பேசின பேச்சு அரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே*
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து* வாச நறுங் குழல் ஆய்ச்சியர்* மத்தினால்-
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ* நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன்மூர்த்தி*
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ* தேசம் உடையாய் திற-ஏலோர் எம்பாவாய்.

சென்ற ஆறாவது பாசுரத்தில் பகவதனுபவத்துக்கு புதியதான ஒருத்தியை எழுப்பினார்கள். இந்த பாசுரத்தில் பகவதனுபவம் உள்ள பெண்ணையே எழுப்புகிறார்கள். இந்த பெண்ணோ அந்த அனுபவமறிந்தும் உறங்குகிறாள். இவளையும் அந்த பரமனின் பெருமையை எடுத்து சொல்லி எழுப்புகிறார்கள்.

ஆண்டாள் இந்த பாடல் முழுவதுமே பலவிதமான ஒசைகளைப் பற்றி சொல்கிறாள் – பறவைகள் கத்து கின்றன, ஆய்ச்சியரின் தாலி மணி மாலைகள் முதலானவை எழுப்பும் ஓசை, அவர்கள் தயிர் கடையும் ஓசை என்று பலவிதமான ஒசைகளுடன் இவர்கள் கேசவனை பாடும் ஓசையும் சேர்ந்து ஒலிக்கிறது.

ஆனைச்சாத்தன் என்பது வலியன் குருவி அல்லது பரத்வாஜ பக்ஷி எனப்படும். இது அதி காலையில் எழுந்து கூட்டம் கூட்டமாக எங்கும் தம் துணையுடன் பறந்து ஒலி எழுப்புவது, அவை கிருஷ்ண கிருஷ்ண என்று கிருஷ்ண கானம் செய்வது போல் இருக்கிறதாம்.

ஆய்ச்சிகள், கண்ணன் எழுந்துவிட்டால் தம்மை வேலை செய்ய விட மாட்டானே… தம் மீது சாய்ந்து சாய்ந்து கையை பிடித்து தடுத்து தயிர் கடைவதை தடுத்து விடுவானே.. அதனால் அவன் எழுவதற்கு முன்பாக தயிரை கடைந்து விடுவோம் என்று எப்படி தேவர்களும் அசுரர்களும் அம்ருதத்துக்காக பாற்கடலை அவசர அவசரமாக கடைந்தார்களோ அப்படி வேகமாக கைவலிக்க மறுபடியும் மறுபடியும் சோராமல் கடைகிறார்களாம்.

அதனால் அவர்கள் அணிந்திருக்கும் அச்சு தாலி, ஆமைத்தாலி போன்ற ஆபரணங்கள் ஒன்றோடு ஒன்று மோதி எழுப்பும் ஓசையும் கேட்கிறது. இவ்வளவு சத்தத்துக்கு நடுவே நீ எப்படி தூங்குகிறாய்? பேய்த்தனம் என்னும் தமோ குணம் உன்னை பிடித்துக்கொண்டது போலும்.

நீ நாயக பெண் பிள்ளையாயிற்றே! நாங்கள் கேசவனைப் பாட பாட நீ கேட்டுக்கொண்டே சுகமாக படுத்திருக்கலாமா? பகவதனுபவத்தை உணர்ந்து அதனால் முகத்தில் ப்ரஹ்ம தேஜசை பெற்றவளே! ஹே தேஜஸ்வினி! கதவை திறந்து வந்து எங்களோடு இணைந்து கொள்! என்று அழைக்கிறார்கள்!

இப்பாடலில் உயர்ந்த க்ருஷ்ணானுபவம் இழையோடுகிறது. இங்கே எழுப்புகிறவர்கள் நினைப்பது ஒன்றாக நடந்தது வேறொன்றாக ஆயிற்று. இவர்கள் க்ருஷ்ணனை பாடினால் எழுந்திருப்பாள் என்று பார்த்தால், அவளோ அதை கேட்டுக்கொண்டே படுத்துக்கொண்டிருக்கிறாள்! கேசவன் என்று மார்கழி மாதத்துக்கான மூர்த்தியை சொல்லி, நம்மை துன்புறுத்திய கேசி போன்ற அசுரர்களை அழித்த கேசவனை பாட நீ வரவில்லையா என்று சொல்லி எழுப்புகிறார்கள்.

ஆனை சாத்தன் என்பதற்கு அற்புதமாக பெரியவர்கள் அர்த்தங்கள் சொல்வர். சாத்துதல் அல்லது சாற்றுதல் எனும்போது அழித்தல் அல்லது காத்தல் என்று இரண்டுமே பொருந்தும். பகவான் ஆனைச்சாத்தனாக இருக்கிறான். ஒரு யானை கஜேந்திரனை பகவான் ரக்ஷித்தான். இன்னொரு யானை குவலயாபீடத்தை கொன்றான். துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனல்லவா அவன் !


திருப்பாவை (8)

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு* மேய்வான் பரந்தன காண் மிக்கு உள்ள பிள்ளைகளும்*
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து* உன்னைக்- கூவுவான் வந்து நின்றோம்* கோதுகலம் உடைய-
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு* மா வாய் பிளந்தானை மல்லரை மாட்டிய*
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்* ஆவா என்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்.

இப்போது ஆண்டாள் தன் குழுவான கோபிகைகளுடன் எழுப்ப செல்லும் பெண் ஒரு சிறந்த ஞானி. பகவானான கண்ணனுக்கு ப்ரியமானவள். அதனால் கோதுகலமுடைய பாவாய்! என்று அன்போடு அழைக்கிறாள். இங்கேயும் அந்த பெண்ணுடன் ஆண்டாள் ஒரு சம்பாஷணையில் ஈடுபடுகிறாள். ‘கீழ்வானம் வெளுத்து அருணோதயம் ஆகிறது… இன்னும் நீ எழுந்திருக்க வில்லையா?’ என்கிறாள் ஆண்டாள். இங்கே கீழ்வானம் என்பதில் வானம் என்று ஆகாசத்தை குறிக்கிறது… ஆகாசம் என்பது ஒவ்வொரு ஜீவாத்மாவினுள்ளும் தஹாராகாசம் என்னும் மனத்தின் உள்வெளியை குறிக்கிறது. தஹாராகாசம் வெள்ளென்று சுத்தமாக இருந்தால்தான் சுடர்விட்டொளிரும் பரமாத்மாவை கண்டு கொள்ள முடியும் என்று பொருள் சொல்வர் பெரியோர்.

ஆண்டாள் கேட்ட கேள்விக்கு, உள்ளே இருந்த பெண் “இன்னும் பொழுது விடியவில்லை… கிருஷ்ணனை சென்று சேர்வதற்காக எப்போது பொழுது விடியும் விடியும் என்று கிழக்கே பார்த்து பார்த்து உங்கள் முகத்தினொளியின் ப்ரதிபலிப்பே உங்களுக்கு கீழ்வானம் வெளுத்தது போல் தோன்றுகிறது…” என்று சொல்ல, ஆண்டாள் சொல்கிறாள் “எருமைகள் சிறுவீடு மேய கிளம்பி விட்டது… வந்து பார்.” என்கிறாள். சிறு வீடு மேய்வது என்பது பனித்துளி படர்ந்த புற்களை மேய விடிந்தும் விடியாத காலையில் எருமைகள் புறப்படுமாம். ஆண்டாளுக்கு எப்படி எருமைகள் சிறுவீடு மேய்வது போன்ற மாடு மேய்க்கும் இடையர்களுக்கு தெரிந்த விஷயங்களெல்லாம் தெரிந்தது? அவள் தன்னையே ஒரு கோபிகையாக பாவித்துக்கொண்டு கண்ணனை மனதார விரும்பியதுதான் காரணமாக இருக்கவேண்டும்.

அதற்கு அந்த பெண் சொல்கிறாள், ‘கோகுலத்தில் எருமை மட்டுமா இருக்கிறது… ஆடுகள், பசுக்கள், எருமைகள் எல்லாம்தான் இருக்கின்றன.. எருமை மட்டும் சிறு வீடு மேய கிளம்பிவிட்டது என்று நீங்கள் அன்யதா ஞானத்தினால் – விபரீத ஞானத்தினால் தவறாக புரிந்து கொண்டு சொல்கிறீர்கள்… உங்கள் முகத்தின் ஒளியில் இருள் விலக உங்களுக்கு எருமை நகர்வதுபோல் தோன்றுகிறது” என்கிறாள். “மிக்குள்ள பிள்ளைகளும் போவான்” – என்று ஆண்டாள், “நீ இப்படியே பேசிக்கொண்டிருக்கிறாய்…, ஆய்பாடியிலுள்ள மற்ற பிள்ளைகள் எல்லாம் கிளம்பிவிட்டார்கள்” என்கிறாள்.

இது தொடர்பாக ஒரு விஷயம். முதலில் எருமை சிறுவீடு மேய போவதை சொன்னது – எருமைகள் மிக மெதுவாக நகரும் – நடுவில் காணப்படும் சிறு குளம் குட்டை எல்லாவற்றிலும் விழுந்து எழுந்து போக வேண்டிய இடத்துக்கு போய் சேரும். இது போலே, இதர தேவதாந்தரங்களை நாடுபவர்கள், கண்ட வழிகளில் நுழைந்து தாமதித்து கடைசியாக மோக்ஷத்தை அடைகிறார்கள். ஆனால் பரமனான வாசுதேவனை அண்டிய அடியார்களோ நேரே ‘மிக்குள்ள பிள்ளைகளை போல’ சுலபமாகவும் சீக்கிரமாகவும் மோக்ஷத்தை அடைகிறார்கள். அதற்கு பரமனின் க்ருபையும் கிடைக்கிறது.

இங்கே உள்ளே இருக்கிற கோபிகைப்பெண், “ஆய்ப்பாடியிலுள்ள மற்ற பிள்ளைகள் கிளம்பிவிட்டார்களா? இனிமேல் நான் வந்து என்ன செய்ய? நீங்கள் போங்கள்” என்கிறாள். ஆண்டாள், “போகின்றாரை போகாமல் காத்து உன்னைக் கூவுவான் வந்து நின்றோம்! கோதுகலமுடைய பாவாய்!” – “க்ருஷ்ணனுக்கு குதூகலத்தை கொடுக்கக் கூடியவளான உன் புருஷகாரம் இல்லாது நாங்கள் எங்கே அவனை சென்று காண்பது… பாவாய், அதனால் நீ வரவில்லை என்று போகிறவர்களிடம் சொல்ல, த்ருக் என போகாமல் அனைவரும் நின்றார்கள்… உனக்காகவே எல்லோரும் காத்திருக்கிறோம்” என்றாள். அதாவது மற்ற கோபிகைகள் “திருவேங்கட யாத்திரை போலே, போகையே பரயோஜனமாகப் போகா நின்றார்கள்” என்றபடி எல்லோரும் இணைந்து செல்வோம் என்று சொல்லிவிட்டு, கடைசியில் க்ருஷ்ணனையே லட்சியமாக நினைத்து மற்ற எல்லாவற்றையும் மறந்து கிளம்பிவிட்டார்கள். “இந்த கோபிகை வரவில்லையே! இவள் க்ருஷ்ணனுக்கு மிகவும் பிடித்தமானவளாயிற்றே! மேலும், செய்யாதன செய்யோம் என்று சொன்னோமே, க்ருஷ்ணானுபவத்தை கூடியிருந்து குளிர்ந்து அனுபவிப்பது இருக்க இந்த கோபிகையை விட்டுவிட்டு போகலாமா?” என்று கேட்டு அவர்களை தடுத்து விட்டோம் என்கிறாள்.

“கோதுகலமுடைய பாவாய்! எழுந்திராய்!”, “மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால், அவன் நீ வந்திருக்கிறாயா என்று ஆராய்வன். அப்போது உன்னுடன் சேர்ந்து அவனை பாடி பறை கொண்டு வருவோம்”, என்கிறாள். கேசி என்கிற அசுரன் குதிரை உருக்கொண்டு வந்தான். பகாசுரன் என்னும் அசுரன் கொக்கு வடிவம் கொண்டு வந்தான். க்ருஷ்ணன் இவர்களை வாயை கிழித்து கொன்றான். கம்சன் அவையில் மல்லர்களை வென்றான். அத்தகைய தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால், “நாம் இவர்களை தேடிச்சென்று ரக்ஷிப்பது இருக்க, இவர்களே நம்மை தேடி வந்துவிட்டார்களே! என்று ஹாஹா என்று ஆச்சரியப் பட்டு அருளுவன்” என்கிறாள். அந்த பெண்ணும் இவர்களுடன் சேர்ந்து கொண்டாள் என்பது சரித்ரம்.


திருப்பாவை (9)

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கு எரியத்* தூமம் கமழத் துயில்-அணைமேல் கண்வளரும்*
மாமான் மகளே மணிக் கதவம் தாள் திறவாய்* மாமீர் அவளை எழுப்பீரோ* உன் மகள் தான்- ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ* ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ*
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று* நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய்.

இந்த பாசுரத்தில் கண்ணனுக்கு மிகவும் நெருங்கிய ப்ரியமானவளான பெண்ணை எழுப்பச் செல்கிறார்கள் ஆண்டாளுடன் கூடிய கோபிகைகள். பகவத் பக்தர்கள் – பாகவதர்கள் அனைவரும் பந்துக்கள் – உறவினர். அனைவரும் பரமாத்மாவிடமிருந்து பிரக்ருதி சம்பந்தத்தால் வந்த தேக பந்துக்கள். பரமாத்மா எல்லோருக்கும் ஆத்ம பந்து. அந்த உரிமையில் “மாமன் மகளே!” என்று ஆண்டாள் அன்போடு அழைக்கிறாள். ‘இட்டீடு கொள்கைக்கு விடவொண்ணாத முறை கட்டிக்கொண்டு..’ என்றபடி க்ருஷ்ண சம்பந்தம் பெற்ற திருவாய்ப்பாடியிலே தனக்கும் ஒரு உறவு இருந்தால் எப்படி இருக்கும் என்ற த்வரையினால் ஆண்டாள் அப்படி அழைக்கிறாள். அந்த கோபிகையோ க்ருஷ்ணனையே மறந்துவிட்டது போல் துயிலணைமேல் படுத்து தூங்குவதால் அவள் தாயரை மாமீ – அவளை எழுப்புங்களேன் என்று கேட்கிறாள்.

இங்கே சொல்லப்படும் தத்துவம் – கண்ணனை அடைவதான உயர்ந்த புருஷார்த்தத்தை இவர்களுக்கு புருஷகாரம் செய்து அருள அந்த க்ருஷ்ணனுக்கு ப்ரியமான அந்த கோபிகையை பிடிக்கிறார்கள். அவளுடைய தாயாரையே ஆசார்யனாகக் கொண்டு அந்த கோபிகையை வேண்டுகிறார்கள். ஆக மோக்ஷ புருஷார்த்தத்தை அடைய புருஷகாரம் தேவை. அதற்கு ஆசார்ய அனுக்ரஹம் தேவை என்பது தேறும்.

இந்த பாட்டில் கோபிகைகள் கண்ணனுக்கு பிடித்தமான ஒரு கோபிகையை எழுப்ப அவளது தாயாரை துணை வேண்டுவதைப்போல் – இதே மாதிரியான ஒரு சூழலில் நம்மாழ்வார் ஒரு பத்து பாசுரங்கள் பாடியிருக்கிறார். தலைவியான பராங்குச நாயகியைப்பற்றி அவளது தோழி, பராங்குச நாயகியின் தாயாரிடம் பேசுவதாக அமைந்துள்ள இப்பாசுரங்கள் ஒப்பு நோக்கத்தக்கவை. நம்மாழ்வார் பாசுரத்தில் தலைவி திருதொலைவில்லி மங்கலத்தில் இருக்கும் பெருமானிடம் காதல் கொண்டிருக்கிறாள். ஆண்டாள் தூங்கிக்கொண்டிருக்கிற கோபிகையை, ஊமையோ.. செவிடோ என்று கேட்கிறாள். இதே போல நம்மாழ்வார் பாசுரத்திலும், “அன்னைமீர் ! அணிமாமயில் சிறுமானிவள் நம்மைக்கைவலிந்து என்ன வார்த்தையும் கேட்குறாள் – தொலைவில்லிமங்கலமென்றல்லால்” என்று தொலைவில்லி மங்கலம் தவிர வேறு வார்த்தைகள் அவள் காதிலேயே விழுவதில்லை என்கிறார்.

இந்த தொலைவில்லிமங்கல பாசுரங்களில் முதல் பாசுரம் ‘துவளில் மாமணி மாடமோங்கு தொலைவில்லிமங்கலம்’ என்றே தொடங்குகிறது. இதை பூர்வாசார்யர்கள் தூமணி மாடத்து என்ற பதத்துடன் பொருத்தி அற்புதமாக அர்த்த விசேஷங்களை அருளியிருக்கிறார்கள். தேவாதிதேவனான பெருமானிடம் தேவர்கள் முத்து, பவளம், ரத்தினம் ஆகியவற்றை காலடியில் சமர்ப்பிக்கிறார்கள். அவற்றை இரண்டாக தோஷமுள்ள ரத்தினங்கள், தோஷமே இல்லாத ரத்தினங்கள் என்று பிரித்து அவற்றில் தோஷமுள்ள ரத்தினங்களில் தோஷத்தை நீக்கி ‘துவளில் மாமணி’களாக மாற்றி தன் மாளிகையில் பெருமான் வைத்துக்கொள்ளுவனாம். தோஷமே இல்லாத ரத்தினங்களைக் கொண்டு ‘தூமணி மாடம்’ கட்டி தன் நாயகிக்கு கொடுப்பனாம்.

அத்தகைய தூமணி மாடத்தில் சுற்றும் விளக்குகள் ஏற்றி ஒளிர தூபம் கமழ துயிலணை மேல் ஆனந்தமாக அந்த கோபிகை தூங்கிக்கொண்டிருக்கிறாள். அவளுக்கும் தமக்கும் உள்ள சம்பந்தத்தை சொல்லி “மாமன் மகளே! மணிக்கதவை திற!” என்று ஆண்டாள் கேட்கிறாள். பரமன் இருக்குமிடமான தூமணிமாடத்தில் தன் ஞானத்தால் ப்ரஹ்மானந்தத்தை அனுபவித்தபடி அந்த கோபிகை இருக்கிறாள். அந்த தூமணி மாடத்தினுள் நுழைய வெளியே இருப்பவர்களுக்கு தெரியவில்லை. அதனால் உள்ளே இருக்கும் கோபிகையையே பார்த்து மணிக்கதவை திற! என்று கேட்கிறார்கள். அவளோ வாய் திறந்து பேசவில்லை. ஒருவேளை அவளுக்கு காதே கேட்கவில்லையோ? அல்லது நிஷ்காம்யமாக அப்படியே ப்ரஹ்ம நிஷ்டையில் உட்கார்ந்து விட்டாளோ? அல்லது அனந்தலோ? அன்யபரையாக பிறரது கட்டுப்பாட்டில் சிக்கிக்கொண்டாளோ? அனந்தல் என்பதற்கு கர்வம், இறுமாப்பு என்றும் பொருள் கொள்வர். க்ருஷ்ணனை விட்டால் வேறு யார் நம்மை ரக்ஷிக்க தக்கவர் இருக்கிறார்கள் என்ற இறுமாப்பில் இவள் இருக்கிறாளோ?

சரி அவள்தான் பேச மறுக்கிறாள். மாமீர்.. நீங்களாவது அவளை எழுப்பீரோ? அவள் எதாவது மந்திரத்தினால் கட்டப்பட்டு பெருந்துயிலில் ஆழ்ந்துவிட்டாளோ? என்று ஆண்டாள் கேட்கிறாள். இங்கே மந்திரம் என்பது திருமந்திரம் எனப்படும் ஓம் நமோ நாராயணாய என்ற திருவஷ்டாக்ஷர மந்திரத்தை அனுசந்தித்து அதிலேயே தோய்ந்து போய்விட்டாளோ?

அந்த பெண்ணின் தாயார் – நம்மாழ்வார் சொன்னபடி – கண்ணனின் நாமந்தவிர வேறெதுவும் அவள் காதுகளில் விழுவதில்லை – அவன் பெயரை சொல்லிப்பாருங்கள் என்று சொல்கிறாள். ‘மாமாயன் – மாதவன் – வைகுந்தன் என்றென்று ‘ எனும்போது ஒவ்வொரு நாமத்தையும் முதலில் வைத்து ஒவ்வொரு சகாஸ்ரனாமமே பாடுகிறோம் என்கிறாள் ஆண்டாள் .

இங்கே ‘மாமாயன்’ என்பது நமக்கு பிறப்பு கொடுத்து நமது முன் ஜென்ம நிலைகளையும் அவனுடனான சம்பந்தத்தையும் மறைத்தான். ‘மாதவன்’ என்பது மா – லக்ஷ்மியின், தவ – கணவன், ஸ்ரீ:பதி என்று பொருள் – அப்படி பிராட்டியுடன் கூடி எங்களை ரக்ஷிக்கிறான். பிராட்டி இல்லையென்றால் அவனால் ரக்ஷிக்க முடியாது – காகாசுரன் எவ்வளவு பெரிய அபசாரம் செய்தும் பிராட்டியுடன் ராமன் இருந்தபடியால் கொல்லப்படாமல் ரக்ஷிக்கப்பட்டான். அப்படி இந்த மிதுனம் ரக்ஷிக்கையை குறிக்கும். ‘வைகுந்தன்’ என்ற திருநாமம், இங்கிருந்து நாம் சரணாகதி செய்து, பிரபத்தி மார்க்கத்தில் அவனை அடையப்போகிற இடம். ஆக நாம் வந்தது, இருந்தது, போக போவது ஆகிய எல்லா நிலைகளுக்கும் காரணன் அவனே என்பது தேறும்.

இவ்வாறு அவன் நாமங்களை பாட அந்த கோபிகையும் தன் துயில் விடுத்து இவர்களுடன் இணைந்தாள்.


திருப்பாவை (10)

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!* மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய் முடி நாராயணன்* நம்மால்- போற்றப் பறை தரும் புண்ணியனால்* பண்டு ஒருநாள்-
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும்* தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ*
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே* தேற்றமாய் வந்து திற- ஏலோர் எம்பாவாய்.

இந்த பாட்டில் கண்ணனுக்கு மிகவும் பிடித்தமான கோபிகை ஒருத்தியை துயில் எழுப்ப பாடுகிறார்கள். இவள் முதல் நாள், நோன்பைப்பற்றியும் அதன் ப்ரயோஜனத்தைப் பற்றியும் நிறைய பேசிவிட்டு இப்போது தூங்குகிறாள். கும்பகர்ணனையே ஜெயித்தவள் போல் தூங்குகிறாள். இவர்கள் அவளை எழுப்ப குரல் கொடுத்தும், ஆற்ற அனந்தலுடன் பதில் பேசாமல் உறங்குகிறாள். அதனால் வெளியே ஆண்டாள் இவளை சிறிது கிண்டல் செய்து பாடுகிறாள். உயர்ந்த மோக்ஷ புருஷார்த்தம் இருக்க தாழ்ந்த சுவர்க்கானுபவத்துக்கு ஆசைப்படுவதுபோல், க்ருஷ்ணனை அனுபவிப்பது இருக்க இப்படி தூக்கத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறாயே! ஏ.. ஸ்வர்க்கம் போகின்ற அம்மனே! என்று கேலி செய்கிறாள்.

இதற்கு வேறு விதமாகவும் அர்த்தங்கள் சொல்வர். சுவர்க்கானுபவம் என்பதை க்ருஷ்ணானுபவத்தை குறிப்பதாகக் கொள்ளலாம். ஆண்டாள் அந்த கோபிகையை சுவர்க்கம் புகுந்து கொண்டிருக்கிற அம்மனே! என்கிறாள். சுவர்க்கத்தில் புகுந்துவிட்ட என்றோ, புக போகின்ற என்றோ சொல்லாமல் புகுகின்ற – புகுந்து கொண்டிருக்கிற என்று சுகத்தை நித்யமாக அனுபவித்துக் கொண்டிருக்கிற ஸ்வாமிநியாக – அம்மனாக – தலைவியாக இந்த கோபிகை இருக்கிறாள். இப்படி ஆனந்தத்தில் முழ்கி நமக்கு வாசலும் திறக்காமல், உள்ளே இருந்தபடியே பதிலும் சொல்லாமலிருக்கிறாயே! என்கிறாள் ஆண்டாள்.

இப்போது ஆண்டாளுக்கு சந்தேகம். “ஏன் வாசல் திறக்கவில்லை? உள்ளே கண்ணன் இருக்கிறானோ? அதனால்தான் திறக்க மறுக்கிறாயா?” என்று கேட்க, அவள் உள்ளிருந்தே “கண்ணன் இங்கு இல்லை…” என்கிறாள். ஆண்டாள் “அதுதான் அவன் சூடும் மணம் மிகுந்த திருத்துழாய் – துளசியின் மணம் காட்டிக்கொடுக்கிறதே?” என்கிறாள். அதற்கு அவள் “கண்ணன் உங்களுக்கு தெரியாமல் எப்படி என் வீட்டிற்குள் வரமுடியும்… ” என்று சொல்ல, “அவன் அந்தர்யாமியான நாராயணன் அல்லவா?.. அவன் எதனுள்ளும் இருக்கிறான். சேஷத்வத்தை நமக்கு மீட்டு கொடுக்கும் தர்ம ஸ்வரூபம் அல்லவா அவன்” என்று ஆண்டாள் சொல்கிறாள்.

இதற்கும் அந்த கோபிகையிடமிருந்து பதில் வராமல் போகவே, “கண்ணனைச் சொல்லவும் மறுபடியும் கனவு காண போய்விட்டாளோ” என்று பயந்து, ஆண்டாள் ராமாவதாரத்தின் போது நடந்த சில சம்பவங்களை நினைத்துப் பார்க்கிறாள். இந்த பெண் இப்படி தூங்குகிறதே! கும்பகர்ணனுக்கும் இவளுக்கும் போட்டி வைத்து கும்பகர்ணன் தோற்றுப்போய் தன் தூக்கத்தையும் இவளிடம் சமர்பித்து விட்டானோ? அவன் அந்ய தேவதாந்தரங்களிடம் ‘நித்யத்வம்’ கேட்கப்போய் நா பிறழ்ந்து ‘நித்ரத்வம்’ கேட்டு கூற்றத்தின் வாய் வீழ்ந்தவனாயிற்றே! இவளும், தர்ம ஸ்வரூபமான ஸம்ஸ்த கல்யாண குண பூர்ணனான நாராயணனிடம் ‘நித்ய சேஷத்வம்’ கேட்பதிருக்க, இங்கே நித்ரையில் இருக்கிறாளே! என்று சொல்லி புலம்புகிறாள்.

கிள்ளி களைந்தான், வாய் கீண்டான் என்றெல்லாம் பெருமான் அரக்கர்களை அழித்த கதையை சொல்கிற ஆண்டாள் இங்கே மட்டும் கூற்றத்தின் வாய் வீழ்ந்தான் என்று கும்பகர்ணன் தானே போய் வீழ்ந்ததாக ஏன் சொல்கிறாள்? ஏனென்றால் மற்ற அரக்கர்கள் எல்லாம் எதிர் நிற்பது பரமன் என்று அறியவில்லை. ஆனால் கும்பகர்ணன் அறிந்தே போய் வீழ்ந்தான். ராவணனே வந்து சரணடைந்தாலும், அவனுக்கு சரணாகதி அளித்து ரக்ஷிப்பேன் என்று சொன்ன கருணா சாகரத்தை – ‘தண்ணீர் குடிக்க கல்லின ஏரியிலே அமிழ்ந்து, சாவரைப் போலே’ – என்று தெரிந்தே வந்து வீழ்ந்து யமனுலகம் அடைந்தான்.

ஆற்ற அனந்தலுடையாய்! கண்ணனைக் கைக்கொண்ட ஒரு கர்வத்தில் இருக்கிறாயோ! நீ சாதாரணப்பட்டவள் இல்லை… அருங்கலம். பகவத் அனுக்ரஹத்துக்கு உக்தமான பாத்திரமானவள் நீ! அந்த ராமாவதாரத்தில் ராமனின் தூதனாக லக்ஷ்மணன் சுக்ரீவனுக்கு அவன் கடமையை நினைவூட்ட வந்தபோது, தாரையானவள் தன் ஆடைகள் கலைந்த நிலையிலேயே வந்து நின்றாள். நீ அப்படி செய்து விடாதே! இங்கே கோபிகைகள் ஏராளமானோர் இருக்கிறோம்.. அதனால் தேற்றமாய்-திருத்தமாய் வந்து கதவைத் திற! என்று சொல்ல அந்த பெண்ணும் இவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டாள்.

இதில் உள்ள முக்யமான தத்வ விசாரம் ஒன்றை பெரியோர் அருளியிருக்கிறார்கள். இங்கே இவர்கள் பகவதானுபத்திற்காக த்வரையுடன் துடிக்கிறார்கள். அங்கே அவளோ நிச்சிந்தையாக தூங்குகிறாள். இதில் இவர்கள், ‘பரமனை எப்படி அடைவது? எப்போது அடைவது?’ என்று துடிக்கிறார்கள். அவளோ, ‘மோக்ஷமெனும் வீடுபேற்றை தருவது அவன் கருணையல்லவா? நாம் என்ன செய்துவிட முடியும்?’ என்று கிடக்கிறாள். வெளியே இருப்பவர்களுக்கு அவனே ப்ராப்யம். அவனே பேறு. அவனை அடைவதே வீடுபேறு. உள்ளே இருப்பவளுக்கு அவனே ப்ராபகன். வீடுபேற்றை அளிப்பவன். தன்னையே அளிப்பதானாலும் அவனே அளிக்கவல்லவன். சுருக்கமாக வெளியே இருப்பவர்கள் ‘அவனன்றோ பேறு’ என்கிறார்கள் – அவனை அடைய துடிக்கிறார்கள். உள்ளே இருப்பவள் ‘அவனாலன்றோ பேறு’ என்று கொண்டிருக்கிறாள் – அதனால் அவன் தரும்போது தரட்டும் என்று கிடக்கிறாள். இரண்டுமே சரிதான். சிலரை துடிக்க வைப்பதும், சிலரை நிச்சிந்தையாக நிஷ்காம்யமாக இருக்க வைப்பதும் அவனது லீலை அல்லவா!


திருப்பாவை (11)

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து* செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும்*
குற்றம் ஒன்று இல்லாத கோவலர்தம் பொற்கொடியே* புற்றரவு-அல்குற் புனமயிலே போதராய்*
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து* நின்- முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாடச்*
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி* நீ- எற்றுக்கு உறங்கும் பொருள்?-ஏலோர் எம்பாவாய்.

இந்த பாசுரத்தில் மற்றொரு கோபிகையை எழுப்ப ஆண்டாள் கோபிகைகளுடன் சேர்ந்து செல்கிறாள். இந்த பெண் மிகுந்த செல்வம் படைத்த ஒரு கோபாலனின் பெண். இவர்கள் வீட்டில் கன்றுடன் கூடிய பசுக்கூட்டங்கள் நிறைய இருக்கிறதாம். பசுக்களை எண்ணி சொல்வதிருக்க இவர்கள் வீட்டில் பசுக்கூட்டங்களையே எண்ணிப்பார்க்க முடியாதாம். அவ்வளவு பசுக்கள். கற்றுக்கறவை என்ற பதத்தில் சிறிய கன்றாக இருக்கும்போதே கன்றை ஈன்று பால் சுரக்க ஆர்ம்பித்துவிட்ட பசுக்கள் என்றும் அர்த்தங்களை பூர்வாசார்யர்கள் அருளியிருக்கிறார்கள்.

இந்த பெண்ணின் தகப்பனார் இவ்வளவு பசுக்கள் இருக்கிறதே என்று சிறிதும் ஆயாசப்படாமல், தமக்கு தேவையானது போக, மீதமுள்ள பசுக்களையும் அவைகள் மடியில் பால் கட்டி துன்பப்படாமல் இருப்பதற்காகப் பாலை கறந்து விடுவாராம். அதோடு மட்டும் அல்ல… அவர் இந்த திருவாய்ப்பாடிக்கும் கண்ணனுக்கும் எதிரிகளாயிருப்பவர்களை அவர்கள் பலத்தை அழித்து அவர்களை குன்றிப்போக செய்து விடுவாராம். அத்தகைய எதிரிகள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்களை அடக்கிவிடுவாராம். தானுண்டு தன் வேலையுண்டு என்று பால் கறக்கும் இடையருக்கு ஏது எதிரி என்றால் – கண்ணனுக்கு யார் எதிரியோ அவர்களே இவர்களுக்கும் எதிரிகள். கண்ணனுக்கு என்ன ஒரு எதிரியா.. இரண்டு எதிரியா.. எவ்வளவோ அசுரர்கள் – அதனால் இன்னார் என்று சொல்லாமல் செற்றார் என்று பொதுவாகச் சொல்கிறாள் ஆண்டாள்.

இந்த கோபாலர் தம் கடமையில் கர்ம யோகியைப்போல் கண்ணாயிருப்பார். வர்ணாச்ரம தர்மங்களை கடைபிடிப்பவர். நல்ல அனுஷ்டானத்தைக் கொண்டவர். கண்ணனுக்கு எதிரிகள் இருப்பரேல் அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று அவர்களுடன் போரிடக்கூடியவாராய் பலமும் தைரியமும் மிகுந்தவர். அதோடு எதிரிகள் திறலழிந்தபின் – அதாவது அவர்கள் கையில் ஆயுதத்தை இழந்து நிராயுதபாணிகளாக நின்றுவிட்டால் அவர்களை எதுவும் செய்வதில்லை. திறன் இருக்கிற எதிரியுடன் மோதி அவன் திறனை அழிக்ககூடிய சாமர்த்தியம் உள்ளவர். ஞான பல ஐஸ்வர்ய சித்திகளை பெற்றவர். அப்படிப்பட்ட குற்றமே இல்லாத கோவலர் – இடையர் வீட்டில் பொற்கொடியாக பிறந்தவளே! என்று அழைக்கிறாள் ஆண்டாள்.

அடுத்து புற்றரவல்குல் புனமயிலே! போதராய்! என்கிறாள். ‘எவ்வளவு அழகான பெண் நீ!’. பாம்பு நுழையும் புற்றைப்போல இடையை உடைய பெண்ணே! வியாக்கியானத்தில் ‘புறம்பே புறப்பட்டு புழுதியடைந்த உடம்பன்றிக்கே தன்னிலத்திலே வர்த்திக்கிற ஸர்ப்பத்தினுடைய பணமும் கழுத்தும் போலே ஒளியையும் அகலத்தையும் உடைய நிதம்ப ப்ரதேசத்தை உடையவளே’ என்று பூர்வாசார்யர் அருளியிருக்கிறார்.

பூர்வசார்யர்கள் ஸ்வாபதேசமாக சில குறியீடுகளை விளக்கியிருக்கிறார்கள் – அதாவது திருப்பாவையில் இடையை குறிப்பிடும் இடங்கள் வைராக்கியத்தை குறிக்கும் – இடை சிறுத்து இருப்பது போல் ஆசை சிறுத்து வைராக்கியம் வந்த நிலை. சிரசை, கண்களை சொல்லும்போது ஞானத்தை குறிக்கும் என்று விளக்கங்கள் சொல்வர்.

இந்த பெண்ணுக்கு மயில் தோகையைப்போன்ற விரிந்த அளகபாரம் – விரிந்த கூந்தல் உண்டாம். இவள் கண்ணனுக்கு மிகவும் அணுக்கமானவள் – ப்ரியமானவள். தேசமுடயாய் என்று வேறொரு கோபிகையை சொன்னாளே அதைப்போல் இவளது பக்தி உள்ளார்ந்த தானே சுடர்விடக்கூடியது என்று குறிப்பால் உணர்த்துகிறாள். பொற்கொடி, புனமயில் என்று சொல்லுவதெல்லாம், இவள் மெல்லிய இயல்பை உடையவள், கொழுகொம்பின்றி கொடி வாடியிருப்பது போலே க்ருஷ்ணன் இல்லாமல் இவள் வாடுகிறாள். க்ருஷ்ணனை அண்டியே உஜ்ஜீவனம் செய்யும் பரதந்த்ரை இவள் என்று உணர்த்துவதற்காக ஆண்டாள் சொல்கிறாள்.

அடுத்து, இந்த திருவாய்ப்பாடி முழுவதும் உள்ள கோபிகைகள் அனைவரும் பந்துக்கள் – பாகவத சம்பந்தம் உடையவர்கள். அப்படி உன் சுற்றமான தோழிமார் எல்லாரும் உன் முற்றத்தில் வந்து நின்று முகில் வண்ணனான கண்ணனின் பெயரைப் பாடுகிறோம். உன் வீட்டு முற்றம் கண்ணனுக்கு உகப்பானது. அதனால் எங்களுக்கு வந்து அங்கே நின்று அவன் பேர்பாடுவதில் ஒரு ஆனந்தம். நாங்கள் இங்கே உரக்க அவன் பேரை பாடிக்கொண்டிருக்க, நீ இடத்தை விட்டு நகராமல், பேசாமல், செல்வம் நிறைந்த பிராட்டியாக இருக்கிறாயே! இது பாகவதர்களுக்கான லக்ஷணமா? உன் உறக்கத்திற்கு அர்த்தம் என்ன? என்று கேட்டு அவளை ஆண்டாள் எழுப்ப அவளும் எழுந்து மற்ற பாகவத பெண்பிள்ளைகளுடன் சேர்ந்தாள்.


திருப்பாவை (12)

கனைத்து இளங் கற்று- எருமை கன்றுக்கு இரங்கி* நினைத்து முலை வழியே நின்று பால் சோர*
நனைத்து இல்லம் சேறு ஆக்கும் நற் செல்வன் தங்காய்* பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி* சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற* மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்*
இனித் தான் எழுந்திராய் ஈது என்ன பேர் உறக்கம்* அனைத்து இல்லத்தாரும் அறிந்து – ஏலோர் எம்பாவாய்.

கர்ம யோகியாகவும் அனுஷ்டானத்தில் சிறந்தவராகவும் இருந்த கோபாலர் ஒருவர் பெற்ற பாகவத பெண்பிள்ளையை ஆண்டாள் எழுப்பிய பாசுரத்தை இதற்கு முந்தைய ‘கற்று கறவை…’ பாசுரத்தில் பார்த்தோம். இன்றைய பாசுரத்தில், அத்தகைய அனுஷ்டானத்தை எல்லாம் விட்டு விட்டு கண்ணனையே அண்டியிருந்த கோபாலன் ஒருவனை குறிப்பிட்டு சொல்கிறாள் ஆண்டாள். இந்த கோபாலன் கண்ணனுக்கு தொண்டு செய்வதில் – கைங்கர்யம் செய்வதில் மிகவும் ஆவல் கொண்டு அதிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறான். இவன் தன்னுடைய சொத்தான பசுக்களை மேய்ப்பது, பால் கறப்பது போன்ற காரியங்களை சரிவர செய்வதில்லை. ஸ்வதர்மத்தை சாமான்யமாக கொண்டு அதை விட்டு, கிருஷ்ணனுக்கு தொண்டு செய்வதை விசேஷ தர்மமாக பிடித்துக்கொண்டிருக்கிறான்.

இவன் நிரவதிகமான செல்வம் உடையவன். அதோடு அந்த செல்வத்துக்கெல்லாம் தலையாய செல்வமாக கைங்கர்யஸ்ரீ என்னும் தனத்தை தன்னிடத்தே கொண்டிருப்பவன். தனக்கு விதிக்கப்பட்ட அனுஷ்டானத்தை – ஸ்வதர்மத்தை கடைபிடிக்க வில்லையானால் பாவம் சேரும். ஆனால் அப்படி அனுஷ்டிக்க முடியாமல் போனதற்கு பகவத் கைங்கர்யம் என்னும் விசேஷ காரணம் இருக்கும் படியால், பாவம் சேராது என்பது உட்பொருளாக ஆண்டாள் குறிப்பிடுகிறாள். அதனால் அப்படிப்பட்ட கைங்கர்யஸ்ரீ எனும் செல்வத்தைப்பெற்ற நற்செல்வன் தங்காய்! என்று அவனுடைய தங்கையை எழுப்புகிறாள் ஆண்டாள்.

தசரதன் சத்யத்தை காக்கவேண்டும் என்கிற சாமான்ய தர்மத்தை பிடித்துக் கொண்டு, ராமனை காட்டுக்கு அனுப்பினான். அவனால் மோக்ஷம் அடைய முடியவில்லை. அதுவே விபீஷணன் செய்நன்றி பாராட்டுதல் என்னும் சாமான்ய தர்மத்தை விட்டு, விசேஷ தர்மமாக ராமனையும், ராமனுடைய தர்மத்தையும் உணர்ந்து சரணாகதி செய்தான். அவன் ஆசைப்பட்டபடி சிரஞ்சீவியாக வாழ்ந்தான். இதனால் தர்மத்தின் பாதை சூக்ஷ்மமானது – சில நேரங்களில் சாமான்ய தர்மத்தை விட்டு விசேஷ தர்மத்தை கடைப்பிடிப்பது தவறில்லை – என்பது தேறும்.

இந்த வீட்டினுள் நுழையும் போதே மிக அழகான காட்சி உருவகத்தை ஆண்டாள் நம் கண்முன் நிறுத்துகிறாள். இந்த வீட்டு தலைவனான நற்செல்வன் கண்ணனுக்காக ‘சென்று செருச்செய்ய’ – போரிட போயிருக்கிறான். இங்கே வீட்டில் கன்றுடன் கூடிய எருமை மாடுகள் நிறைய இருக்கின்றன. அவன் கண்ணனுக்காக போரிடப் போய்விட்டதால் அவற்றின் பாலைக் கறக்கவும், கன்றை ஊட்ட விடவும் ஆளில்லை. அதனால் மாடுகள் கன்றுகளுக்கு ஊட்ட முடியவில்லையே என்று தவித்து கத்துகின்றன. அவற்றை யாரும் கறக்காமலும், கன்றும் வந்து பால் அருந்தாமல் இருந்தபோதும் தமது வாத்சல்ய குணத்தினாலே, தானே பாலை தம் மடிவழியே சொரிகின்றன. ம்ருக ஜாதியாய் இருந்தாலும் அவற்றுக்கும் உள்ள தாய் சேய் பாசத்தினால் மடியிலிருந்து பால் தானாகவே பெருக்கெடுத்து கொட்டுகிறது. இதனால் இவர்கள் வீட்டு வாசற்புறமெங்கும் சேறாகி விட்டது.

இப்படி இருக்கையில் ஆண்டாளும் கோபிகைகளும், வருகிறார்கள். மார்கழி மாதத்துக்கே உரிய பனி பெய்கிறது. மேலே பனி – கீழே சேறு இதன் நடுவில் வாசலில் வந்து வழுக்காமல் இருப்பதற்காக நிலைப்படியையும், உத்தரத்தையும், தண்டியத்தையும் என ஆளுக்கு கிடைத்ததை பற்றிக்கொண்டு நின்று கொண்டிருக்கிறோம். நீ நற்செல்வன் தங்கையாயிற்றே! இதென்ன ஒரே பெருந்தூக்கத்தில் ஈடுபட்டிருக்கிறாய்? என்று அழகான காட்சி உருவகத்துடன் இந்த பாசுரத்தை ஆண்டாள் பாடியிருக்கிறாள்.

ஒருவேளை இவள் க்ருஷ்ணனுடன் ஊடல் கொண்டு எழுந்து வர மறுக்கிறாளோ என்று நினைத்த ஆண்டாள், சரி ராமனைச் சொல்லுவோம் என்று சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியான் என்கிறாள். ஆண்டாள் இங்கே ராமனைப் பாடியதற்கு சிறப்பான அர்த்தங்களை பூர்வாசார்யர்கள் அருளியிருக்கிறார்கள். கண்ணன் அவன் மீது ப்ரேமை கொண்ட கோபிகைகளை காக்க வைத்து, நிர்தாட்சண்யமாக ஏங்க வைத்து இரக்கமின்றி அலைக்கழிக்கிறான். ஆனால் ராமனோ, அவன் தாய் கெளசல்யை ஆகட்டும், சீதை ஆகட்டும், கைகேயி, சூர்ப்பனகை என்று எல்லோரிடமும் கருணை காட்டினான். அவர்களனைவரையும் மதித்தான். கண்ணனைப்போல், ஆஸ்ரித விரோதிகளை வதம் பண்ணுவதில் ராமனும் மிகுந்த வேகம் கொண்டவன் – அதனால் சினத்தினால் – என்று அவனும் சினங்கொண்டு அழிக்கக்கூடியவன் – சக்தியும் உண்டு – கருணையும் உண்டு – ஆகவே அவனைப்பாடுவோம் என்றார்களாம்.

இலங்கைக் கோமான் என்று சொல்லும்போது, ராவணன் சக்தியை நினைத்துப்பார்க்கிறாள். ராவணன் மூன்றரைக்கோடி ஆண்டுகள் வாழ்ந்ததாக இதிகாசம் சொல்லும். அதிலும் அவன் தவமியற்றி சிவபெருமானை தரிசிக்கும் அளவுக்கு சிறந்த சிவபக்தன். நவக்கிரகங்களையும் காலில் போட்டு மிதித்தவன். குபேரனின் ஐஸ்வர்யத்தை கொள்ளை அடித்து அவனை துரத்தியவன். இப்படி தன் பலத்தால் பல பெருமைகள் கொண்டும், அகந்தையால் அழிந்தான். சிவபெருமானையே அசைத்துப்பார்க்க நினைத்து சிவபெருமானின் கால் விரலுக்கு ஈடாகமாட்டோம் நாம் என்பதை அவன் அறிந்தும் அகந்தையை குறைத்துக்கொள்ளவில்லை.

ராமன் வந்து அவன் ஐஸ்வர்யங்கள், நாடு, மக்கள், சேனை என்று ஒவ்வொன்றாக நொறுக்கி, இறுதியில் நிராயுதபாணியாக நிறுத்தி உயிர்ப்பிச்சை கொடுத்தும் அவனுக்கு அகந்தை போகவில்லை. ராமன் ஏன் அவனை ஒரே பாணத்தில் கொல்லவில்லை?, அவனுக்கென்ன கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதில் ஒரு க்ரூர திருப்தியா? என்றால், அப்படியல்ல… இப்போதாவது திருந்துவானா என்று ஒவ்வொரு சண்டையிலும் அவனுக்கு சந்தர்ப்பம் கொடுத்து சரணாகதி செய்ய நேரம் கொடுத்துப்பார்க்கிறான் ராமன். அப்படியும் திருந்தாமல் வணங்காமுடியாகவே அழிந்ததால் கோமான் என்று குறிப்பிடுகிறாள்.

இப்படி நாங்கள் பாடிக்கொண்டே இருக்க நீ துாங்கிக்கொண்டே இருக்கிறாயே! இனியாவது எழுந்திரு – இனித்தான் எழுந்திராய்! மற்ற வீட்டுக்காரர்கள், நீ இன்னும் எழுந்திருக்கவில்லை, பாகவதர்களைக் காக்க வைத்தாய் என தெரிந்து உனக்கு அவமானமாகப் போய்விடபோகிறது என்று சொல்கிறாள். இதன் பிறகு அந்த வீட்டுப்பெண்ணும் வந்து இவர்களுடன் சேர்ந்து கொள்கிறாள்.


திருப்பாவை (13)

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்* கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமைபாடிப் போய்*
பிள்ளைகள் எல்லாரும் பாவைக்-களம் புக்கார்* வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று*
புள்ளும் சிலம்பின காண் போது-அரிக் கண்ணினாய்* குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே*
பள்ளிக் கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்* கள்ளம் தவிர்ந்து கலந்து-ஏலோர் எம்பாவாய்.

போதரிக் கண்ணினாய்! என்று ஆச்சரியமாக இந்த வீட்டுப் பெண்பிள்ளையை அழைக்கிறாள் ஆண்டாள். பூர்வாசார்யர்கள் மிகவும் அழகாக ஒரு உருவகத்தை சொல்வர்கள் – இந்த வீட்டு வாசலில் கோபிகைகளுக்குள் சிறிய வாக்குவாதம் வந்து விட்டது – ராமனை பாடுவதா? க்ருஷ்ணனை பாடுவதா? இவர்களுக்கு தாபமோ க்ருஷ்ணன் மேல் – ஆனால் மனத்துக்கினியவன் ராமனே என்று ஒரு கட்சி கிளம்புகிறது. ஒருவரி ராமனுக்கு இன்னொரு வரி க்ருஷ்ணனுக்கு என்று இதற்கு முந்தைய பாட்டிலிருந்தே பாடி வருகிறார்கள்.

இங்கே இந்த வீட்டுக்கு வாசல் வந்ததும், க்ருஷ்ணனை நினைத்து – பகாசுரன் என்னும் அசுரன் கொக்கு உருவம் கொண்டு வந்தபோது கண்ணன் அவன் வாய் பிளக்க கொன்றான் என்றார்கள் ஒரு கோஷ்டியினர். பொல்லா அரக்கனான ராவணனை புல்லை கிள்ளிப்போடுவது போல் அவன் தலையை கிள்ளி எறிந்தான் என்றார்கள் மற்றையோர்.

இப்படி இவர்கள் கீர்த்திமைகள் பாட, நடுவில் ஒரு பெண்பிள்ளை, இவர்களை சமாதானப்படுத்தி, உள்ளே தூங்குகிற பெண்ணை போய் எழுப்புவதற்காக “பெண்ணே, வானில் சுக்ரன் உதயமாகி குரு கிரஹம் அஸ்தமனமானபோதே மற்ற பெண்களெல்லோரும் எழுந்திருந்து நோன்பு நோற்க போய்விட்டார்கள்… எழுந்திருந்து வா” என்று சொல்கிறாள். அவள் “அதெப்படி சுக்ரன், குரு முதலான கிரஹங்கள் உதயமாவதும் அஸ்தமனமாவதும் இவர்களுக்கு தெரியும்… இவர்கள் நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமால் எனுமவர்களாயிற்றே!” என்று சொல்ல, இவர்கள் பறவைகளெல்லாம் எங்கும் பறந்து கூவும் சப்தம்கூட கேட்கவில்லையா என்று சொல்லி உள்ளே சென்று அவளை தொட்டு எழுப்புவதற்காக செல்கிறார்கள்.

அவளோ இவர்கள் உள்ளே வருவதைப் பார்த்து தூங்குவது போல் கள்ளமாக நடிக்கிறாள். “பாவாய்! இன்னும் சூரிய உதயமாகவில்லை, இப்போதே கிளம்பி குளிர்ந்த நீரில் நீராட வேண்டாமா, இதுவே நல்ல நேரம்… உன் கள்ளத்தனத்தை விட்டு எங்களோடு கலந்து கொள்” என்று அழைக்கிறாள்.

இந்த பாடலில் புள்ளின் வாய் கீண்டது க்ருஷ்ணன் என்றும் பொல்லா அரக்கனை கொன்றது ராமன் என்றும் சொல்வது ஒரு வகை அர்த்தம். இன்னொரு வகையில், புள்ளின் வாய் கீண்டது ராவணன் – புள் என்னும் பட்சியாகிய ஜடாயுவை கொன்றான் ராவணன் – அந்த பொல்லா அரக்கனைக் கொன்றவன் ராமன் என்று முழுவதுமே ராமனைப்பற்றித்தான் பாடுகிறார்கள் என்று வேறொரு வகையில் ரசிக்கும்படியும் பெரியோர் அர்த்தங்கள் அருளியிருக்கிறார்கள்.

அரக்கன் என்றாலே தீயவன் தானே – பொல்லா அரக்கன் என்று சொல்வது ஏன் என்று கேட்டால், நல்ல அரக்கர்களும் இருந்திருக்கிறார்கள். விபீஷணன், பிரகலாதன், மாவலி என்று நல்லவர்களும் அரக்கர் குலத்தில் தோன்றி பகவத் பக்தர்களாகவும் நல்ல சிஷ்டர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அதுவும் ராவணன் செய்த பாவங்களை சொல்லவே கஷ்டப்பட்டு பொல்லா அரக்கன் என்றார்கள்.

வியாழம் என்பது ப்ரஹஸ்பதியை குறிக்கும். நாஸ்தீக மதமான சார்வாகத்திற்கு ப்ரஹஸ்பதியே ஆசார்யனாகவும் அவர்களுடைய சித்தாந்தத்தை உருவாக்கியதாகவும் சொல்வர். ஆக அப்படி நாஸ்தீகம் ஒழிந்து நல்ல ஞானம் எழுந்ததை வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று என்று குறிப்பால் சொல்கிறாள். மேலும் ‘மாயனை…’ பாசுரத்தில் நோன்பில் எப்படி பரமனை மூன்று காரணங்களாலும் துதிக்க வேண்டும் என்று சொன்ன பிறகு, அடுத்த பாசுரத்தில் ஒவ்வொரு வீடாக பெண்பிள்ளைகளை எழுப்ப ஆரம்பித்த போது முதல் பாட்டாக ‘புள்ளும் சிலம்பின காண்’ என்று தொடங்குகிறாள். அதை இங்கே நினைவு கூர்ந்து, அந்த அடையாளங்களை மறுபடி நினைவூட்டுகிறாள்.

போதரிக் கண்ணினாய் என்னும் பதத்தை விதவிதமாக பிரித்து பெரியோர் அனுபவிக்கிறார்கள். போது என்றால் புஷ்பம் – பூவினுடைய துளிர். அரி என்றால் வண்டு. பூவில் வண்டு மொய்த்தாற்போல அலையும் கண்களை – உன் கண்ணசைவை கண்டு கொண்டோம் – என்று சொல்கிறார்கள். வேறொரு அர்த்தமாக போது என்றால் பூ, அரி என்றால் மான் – இவைகளைப்போன்ற விழிகளைக் கொண்டவளே என்றும் கொள்ளலாம். வேறொரு விதமாக போது என்றால் பூ, அதை அரி என்றால் அழிக்கக்கூடிய – பூவின் அழகையும் விஞ்சக்கூடிய அழகான கண்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.

குள்ளக்குளிர குடைந்து நீராடாதே பள்ளிக்கிடத்தியோ! என்று கேட்கும்போது க்ருஷ்ணனை பிரிந்து விரஹ தாபமே சுட்டெரிக்கிறது. இன்னும் சூர்யோதயம் ஆகிவிட்டால் எங்கும் வெம்மை படர்ந்து விடும். அதனால் இப்போதே கிளம்பி நோன்புக்கு ப்ரதான அனுஷ்டானமான நீராட்டத்துக்கு உன் பாசாங்கைத் தவிர்த்து எங்களோடு வந்து கலந்து கொள் என்று அழைக்க அவளும் வந்து இவர்களோடு இணைந்து கொள்கிறாள்.


திருப்பாவை (14)

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்* செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்*
செங்கற்பொடிக் கூறை வெண்பற் தவத்தவர்* தங்கள் திருக்கோயிற் சங்கிடுவான் போதந்தார்*
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்* நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்*
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்* பங்கயக் கண்ணானைப் பாடு-ஏலோர் எம்பாவாய்.

ஆண்டாள் தம் குழுவினருடன் ஒவ்வொரு வீடாக சென்று இன்னும் எழுந்திருந்து வராத பெண்பிள்ளைகளையும் எழுப்பி தம்மொடு சேர்த்துக்கொண்டு செல்கிறாள். இங்கே இந்தப் பாசுரத்தில் அப்படி ஒரு வீட்டு பெண்ணை விடியலுக்கான உதாரணங்களை சொல்லி எழுப்புகிறாள். திருப்பாவையில் ஐந்தாம் பாசுரத்திலிருந்து, பதினைந்தாம் பாசுரம் வரை பத்து பாடல்களில் பத்து பெண்பிள்ளைகளை எழுப்புகிறாள் – இதில் ஐந்து பாசுரங்களில் விடிந்ததற்கான அடையாளங்களைச் சொல்லியும் ஐந்து பாசுரங்களில் அப்படி ஒரு அடையாளத்தையும் சொல்லாமலும் எழுப்புகிறாள். இன்றைக்கு எழுப்பப் போகிற பெண் சற்று வாக் சாதுர்யம் உள்ளவள். அவளது மதுரமான பேச்சுக்கு கண்ணனே மயங்குவன் என்று இவளை விசேஷமாக எழுப்புகிறாள்.

கிராமப்புரங்களில் இப்போதும் ஒரு வழக்கு உண்டு – யாருக்காவது காத்திருந்து மிகவும் நேரமாகிவிட்டால், அவர்கள் வந்தவுடன் – “எவ்வளவு நேரம் காத்திருந்தேன்! காத்திருந்து காத்திருந்து அலமந்து போச்சு!” என்பார்கள் – அதாவது அலர்மலர்ந்து போயிற்று – என்ற அர்த்தத்தில் – மிகவும் ம்ருதுவாக பூ மலரும் – அத்தனை நேரம் காத்திருந்தேன் என்று சொல்வது வழக்கம். அப்படி “பகலில் மலரும் செங்கழுநீர் பூக்கள் எல்லாம் மலர, இரவில் மலரும் ஆம்பல் எனும் கருநெய்தற் பூக்கள் கூம்பிட எவ்வளவு நேரம் காத்திருக்கிறோம் உனக்காக” என்கிறார்கள். இதைக்கேட்ட அந்த பெண், “என்னைப்பார்த்து உங்கள் நீங்கள் வாய்திறந்தது செங்கழுநீர் என்றும் நான் வாய்மூடி இருப்பதைப்பார்த்து ஆம்பல் என்று சொல்கிறீர்களா? உங்களைப்பார்த்து நான் வாயடைத்துப் போய்விட்டேன் என்றா சொல்கிறீர்கள்?” என்கிறாள். இவர்கள் “இல்லை, நிஜமாகவே பொழுது விடிந்தது – பூக்களெல்லாம் மலர ஆரம்பித்துவிட்டன…” என்று சொல்ல, “நாமெல்லாம் வயற்புறங்களில் பூக்களை பிரித்தும் மூடியும் விளையாடுவது உண்டு…, இதெல்லாம் விடிந்ததற்கு அடையாளமா?” என்று கேட்க, “வயற்புறங்களில் மட்டுமல்ல.. உங்கள் வீட்டு பின்புறத்தில் உள்ள சிறு குளத்திலும் இதே கதை தான்… பூக்களெல்லாம் மலர்ந்து விட்டன…” என்று சொல்கிறார்கள்.

“அங்கும் நீவிர் அதுவே செய்தீர்” என்கிறாள் அவள். இவர்களெல்லாம் சிறுமிகளாக விளையாடுவதை இந்த பாசுரம் அழகாக வெளிப்படுத்துகிறது. “இதென்ன இப்படி சொல்கிறாய், அளற்று பொடியிலே (செந்நிற பொடி – காவி நிறம் என்று கொள்ளலாம்) புரட்டிய ஆடை தரித்து, தம் ப்ரம்ஹசர்யம் தோற்ற வெண்ணிற பற்களை உடையவராய் சந்நியாசிகள் தங்கள் திருக்கோயில்களில் சங்க நாதம் எழ, வழிபாடு செய்ய கிளம்பி விட்டார்கள். நாம் இன்னும் தூங்கலாமா? அனுஷ்டானமே இல்லாது போயிற்றே?” என்கிறாள். சந்நியாசிகள் க்ருஹஸ்தர்களைப்போல் தாம்பூலம் தரிப்பதில்லை – அதனால் அவர்களை வெண்பற்கள் உடையவர் என்று சிறுவர்களுக்கே உரிய விதத்தில் குறிப்பிடுகிறாள்.

இந்த பாசுரத்தில், தொடர்ந்து நங்காய்! நாணாதாய்! என்று தொடர்ந்து சொல்வதற்கு பூர்வசார்யர்கள் ஒரு அழகான விளக்கம் சொல்கிறார்கள். இந்த பெண் மிகுந்த ஞானம் உடையவள் – ஆனால் அனுஷ்டானத்தில் சிறிது வாசி ஏற்பட்டதால் அதை குறிப்பிட்டு காட்டுகிறார்கள். வெறும் ஞானம் மட்டும் இருந்து அதற்கு தகுந்த அனுஷ்டானம் இல்லை என்றால் அது ஊருக்கு உபதேசம் போல்தான் அமையும். ‘அது நாய் வாலைப்போலே’ என்றார்கள். நாய் வால் மற்ற மிருகங்களைப்போலே ஈ எறும்பு ஓட்டுவதற்கும் பிரயோசனம் இல்லை, பேருக்கு இருக்கிறது. அதுபோல ஞானம் இருந்து அனுஷ்டானம் இல்லாமல் இருப்பது கூடாது, அனுஷ்டானமும் மிகவும் அவசியம் என்று வலியுறுத்துகிறார்கள்.

வாய்பேசும் நங்காய்! உனக்கு வெட்கமே இல்லையே! க்ருஷ்ணன் பெண்களைப் பொய்யுரைத்து ஏமாற்றும் தீம்பன் – அவனுடைய சம்பந்தத்தால் அவனைப்போலவே நீயும் வாயால் பேசினாய்… செயலில் ஒன்றும் காணோமே! எங்கள் குறைதீர எழுந்திருந்து வருவாய்! என்று அழைக்கிறாள். “உங்களோடு வந்து நான் செய்யக் கூடியது என்ன இருக்கிறது?” என்று அவள் கேட்க, சங்கொடு சக்கரத்தையும் ஏந்தும் தடக்கைகளை கொண்ட பங்கஜாக்ஷனான பங்கய கண்ணனை பாடு! என்றார்கள்.

வ்யாக்யான கர்த்தா இங்கே ஒரு அழகான விளக்கம் சொல்கிறார். அரவிந்த லோசனான பகவான் சங்கையும், சக்கரத்தையும் இரு மலர்களைப்பொலே தாங்குகிறானாம். ஒன்று சூர்யனாகவும் இன்னொன்று சந்திரனாகவும் இருக்கிறது. இதில், அவனது நாபி கமலம் மலர்ந்து மலர்ந்து கூம்புகிறதாம். இவனோ, ‘கண்ணாலே நமக்கெழுத்து வாங்கி, நம்மையெழுத்து வாங்குவித்து கொள்ளுமவன்’ என்று ஏமாற்றுகிறான். அதாவது அவன் கண்ணழகை காட்டுவனாம். நாம் அதில் மயங்கி அருகே செல்ல, நம்மை அடிமையென எழுதி வாங்கிக்கொண்டு விடுவனாம். உறங்காவில்லி தாசர் கதை நினைவுக்கு வருகிறது. இப்படிப்பட்ட மாயனை எழுந்து வந்து எங்களோடு சேர்ந்து பாடு என்று சொல்ல அவளும் வந்து இவர்களுடன் சேர்ந்து கொண்டாள்!


திருப்பாவை (15)

எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ* சில் என்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்*
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்* வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக*
ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை* எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்*
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க- வல்லானை மாயனைப் பாடு-ஏலோர் எம்பாவாய்.

‘திருப்பாவையாவது இப்பாட்டிறே’ என்று இந்த பாசுரத்தை பூர்வாசார்யர் ஆச்சரியப்பட்டு சொல்கிறார். திருப்பாவையில் இந்த பதினைந்தாம் பாசுரத்தையும், இருபத்தொன்பதாம் பாசுரமான ‘சிற்றம் சிறுகாலே’ என்ற பாசுரத்தையும் இதல்லவோ திருப்பாவை என்று நெகிழ்ந்து சொல்கிறார். இந்த பாசுரத்தை பாகவத தாஸ்யம் சொல்வதாகவும் , இருபத்தொன்பதாம் பாசுரம் பகவத் தாஸ்யம் சொல்வதாகவும் கொண்டு அப்படி ஆச்சரியப்பட்டு சொல்கிறார்.

இதுவரை விடியற்காலையில் எழுந்திருந்து நீராடி, க்ருஷ்ணானுபவத்தை கூடி இருந்து குளிர்ந்து அனுபவிக்க போவதற்காக ஒவ்வொரு வீடாக சென்று ஆண்டாள் ஆய்ப்பாடி பெண்பிள்ளைகளை அழைக்கிறாள். இன்றைய பாசுரத்தில் கடைசியாக வயதில் சிறியவளான பெண்பிள்ளையை இளங்கிளியே! என்று கூப்பிட்டு அழைக்கிறாள். இதுவரை வந்த பாசுரங்களில், ஒவ்வொரு பெண்பிள்ளையை எழுப்பும்போதும், வெளியிலே இருந்து எழுப்புகிறவர்கள் சொல்வது மட்டும் பாசுரத்தில் இருக்க, உள்ளே இருக்கும் பெண் பேசுவதை யூகிக்குமாறு விட்டு விட்டார்கள். ஆனால் இந்த பாசுரத்தில் உள்ளே இருப்பவள் பேசுவதும், வெளியே இருப்பவர்கள் பேசுவதும் சேர்ந்தே பரஸ்பர ஸம்வாதமாக அமைந்திருக்கிறது.

சென்ற பாசுரத்தில் சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடு! என்று இவர்கள் சொல்ல, அந்த வார்த்தைகளை இந்த பாசுரத்தில் வரும் பெண்ணும் கேட்டு, ‘சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணன்’ என்று சொல்லிப் பார்க்கிறாள். அப்படியே அந்த நாமங்களிலே கரைந்து அமர்ந்து விடுகிறாள்.

ஆண்டாள் மற்ற பெண்களுடன் இவள் வீட்டு வாசலுக்கு வந்து, ‘எல்லே! இளங்கிளியே… இன்னும் உறங்குகிறாயோ!’ என்று கேட்க, இவள் ஏற்கனவே எழுந்து இவர்களுக்காக காத்திருப்பது அவர்களுக்கு தெரியவில்லை. இவள் இங்கே பகவந்நாமத்தை அனுசந்தித்து அதிலே தோய்ந்து இருக்கும் நிலையில் அவர்கள் பேசுவது இவளுக்கு இடைஞ்சலாகப் படுகிறது.

இப்படி சில்லென்று என் அனுபவத்தின் நடுவே அழைக்கிறீர்களே! சில்லென்று அழையேன்மின்! பூர்ணத்துவம் பெற்றவர்களே – நங்கைமீர், போதர்கின்றேன்! நான் வந்து கொண்டே இருக்கிறேன், இருங்கள் என்கிறாள். அவள் அப்படி சொல்வதற்கு, பூர்வாசார்யர் ‘திருவாய்மொழி பாடாநின்றால், செல்வர் எழுந்தருளுகையும் அஸஹ்யம் ஆமாப்போலே!” என்று சொல்கிறார். அதாவது, திருவாய் மொழி பாராயணம் செய்ய நிறைய தனத்தைக் கொடுத்து ஒருவர் ஏற்பாடு செய்திருந்தாராம். திருவாய்மொழி பாராயணமும் ஆரம்பித்தாகிவிட்டது. அவர் சிறிது காலதாமதமாக அந்த கோஷ்டிக்கு நடுவில் வர – இவர்கள் திருவாய்மொழி பாராயணத்தை சற்று நிறுத்தி விட்டார்கள்.

ஆழ்ந்து அனுபவிக்க இப்படி ஏற்பாடு செய்தவரே தடையாக இருக்கிறதைப்போலே, இந்தப் பெண் அனுபவித்துக்கொண்டிருக்கும் போது மற்ற பெண்பிள்ளைகள் அழைப்பது அவளுக்கு இடைஞ்சலாகப் படுகிறது.

இப்படி ஒரு பாகவதனுக்கு இன்னொரு பாகவதன் இடைஞ்சலாக இருப்பர்களோ? உன்னைப்பற்றி எங்களுக்கு தெரியாதா.. உன் தாமதத்திற்கு எங்களைக் குறை சொல்லலாமா ? என்ற அர்த்தத்தில் – வல்லையுன் கட்டுரைகள் – நீ கட்டி உரைப்பதில் வல்லமை உடையவள் – பண்டே உன் வாயறிதும் – உன் வாக் சாதுர்யம் எங்களுக்கு புதிதல்ல – பழைய நாட்கள் தொட்டு எங்களுக்கு தெரியும், என்கிறார்கள்.

அந்தப் பெண் இதற்கு பதிலாக, நான் கெட்டிக்காரியல்ல – நீங்களே வல்லமை உடையவர்கள் ஆகட்டும் – வல்லீர்கள் நீங்களே! நானேதான் ஆயிடுக! தவறு என்னுடயதாகவே இருக்கட்டும் – என்கிறாள். இவ்வளவில், இவள் தமோ குணம் கொண்டு தூங்கிக் கொண்டிருப்பவள் அல்ல. ரஜோ குணத்தால் சண்டை இட விரும்புபவளும் அல்ல – இவள் சத்வ குணத்தை உடைய பெண் – தவறை தன்னுடையதாகவே ஏற்றுக் கொள்கிறாள். நீங்கள் பெரியவர்கள், நான் சிறியவள் என்ற நைச்ய பாவத்தை வெளிப்படுத்துகிறாள். இதெல்லாம் தான் ஸ்ரீவைஷ்ணவர்களுக்குரிய உயர்ந்த குணங்கள் – பாகவதர்களுக்கு உரிய சீலங்கள்.

வெளியே மற்ற பெண்கள், “சரி, ஒல்லை நீ போதாய்!” – விரைவாக கிளம்பு – ‘உனக்கென்ன வேறுடையை’ – நீ மட்டும் வேறாக தனியாக பகவதனுபவத்தை அனுபவிக்கலாமா? எங்களோடு சேர்ந்து கொள்ள வா என்று அழைக்கிறார்கள். ஆழ்வார்களும் ஆசார்யர்களும் காட்டிய வழியை விடுத்து நீ வேறு வழியில் செல்லலாமா? என்றும் அர்த்தம் சொல்வர். இதற்கு அந்தப் பெண், ‘எல்லாரும் போந்தாரோ?’ – எல்லாரும் வந்துவிட்டார்களா? என்று கேட்கிறாள். ‘போந்தார் போந்து எண்ணிக்கொள்’ என்று
வந்துவிட்டார்கள் – நீயே வெளியே வந்து எண்ணிப்பார்த்துக்கொள், என்றார்கள் இவர்கள். இதற்கு பூர்வாசார்யர்கள், ‘நோன்பிற்கு புதியவர்களான மற்ற இளம்பெண்களும் வந்துவிட்டனரோ?’ என்று அவள் கருணையுடன் கேட்பதாக சொல்வர்கள்.

வல்லானை கொன்றானை, மாற்றரை மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாட எங்களோடு வந்து சேர்ந்து கொள் என்று அழைக்கிறார்கள். வல் ஆனை – என்று குவலயாபீடம் என்னும் யானையை கொன்றான். கம்சன் முதலான அரக்கர்களை அவர்கள் அரக்க குணம் கெட அழிக்க வல்லவனான மாயக்கண்ணனை பாட வாராய் என்று அழைக்க அவளும் இவர்களோடு சேர்ந்து கொள்கிறாள்! இந்த பாசுரத்தில், பகவந்நாமத்தை இடையறாது அனுசந்திக்க வேண்டும். பாகவதர்களை மதிக்க வேண்டும்.
கர்வம் – அஹந்தை இவைகளை விடுத்து, எளிமையாக நைச்ய பாவத்துடன் இருக்க வேண்டும். ஆசார்யர்கள் சொன்ன வழியில் நடக்க வேண்டும். அனுஷ்டானத்தில் காலதாமதம் செய்தலாகாது. பகவானை பாகவதர்களுடன் சேர்ந்து சத்சங்கமாக அனுபவிக்க வேண்டும் என்று பாகவதர்களுக்கு உரியதான குணங்களை அழகாக எடுத்துக் காட்டுகிறாள்.


திருப்பாவை (16)

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய* கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண-
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்* ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை – மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்* தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்*
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா!* நீ- நேய நிலைக் கதவம் நீக்கு-ஏலோர் எம்பாவாய்.

இதற்கு முந்தைய பத்து பாசுரங்களில், பத்து கோபிகைகளை – ஆய்ப்பாடியைச் சேர்ந்த பெண்பிள்ளைகளை எழுப்பிய ஆண்டாள், அவர்களுடன் நந்தகோபருடைய இல்லத்திற்கு வந்து சேர்ந்தாள். பகவான் க்ருஷ்ணன் இருக்கக்கூடிய அந்த திருமாளிகையில், க்ஷேத்ராதிபதிகள், துவார பாலகாதிபதிகள் என்று கட்டுக்காவல் அதிகமாக இருக்கிறது. அங்கே வாயிலில் இருக்கும் முதல் நிலை, இரண்டாம் நிலை காவல் காப்போர்களை இரைஞ்சி, அவர்களுடைய உயர்வைச் சொல்லி, உள்ளே செல்ல அனுமதி கேட்கிறார்கள். இங்கே இவர்களுக்கு உள்ளே இருக்கும் கண்ணன் தான் உத்தேஸ்யம் என்றாலும், அதை அடைய நடுவில் என்ன தடை நேருமோ என்று பயந்து, எதிர்படுகிறவர்களை எல்லாம் அடிபணிந்து வேண்டுகிறார்கள்.

நந்தகோபர் ஆய்ப்பாடி கோபாலர்களுக்கெல்லாம் நாயகர். அவருடைய திருமாளிகையில், கோவிலுக்கு த்வஜ ஸ்தம்பத்தைப்போல, கொடிக்கம்பம், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வாயில், அதில் மணிக்கதவம் என்று அழகாக இருக்கிறது. இவற்றுக்கு காவலும் இருக்கிறது. இதற்கு முந்தைய சில பாசுரங்களைப் போல், இந்த பாசுரத்திலும் பூர்வாசார்யர்கள் தம் உரைகளில், ஆண்டாளுடைய குழுவும், காவலாளிகளும் பேசுவதாக ஆச்சர்யமாக அருளியிருக்கிறார்கள்.

இவர்கள் கண்ணன் மேலுள்ள த்வரையினால், விடிந்தும் விடியாத காலைப்பொழுதில், கிளம்பி வந்திருக்கிறார்கள். நந்தகோபரின் காவல்காரர்களை பரமனின் ரக்ஷணத்துக்கு சஹாயம் செய்பவர்களாக கொண்டு, அவர்கள் பெயரைச் சொல்லி அழைக்காமல், அவர்களது கார்யத்தை, அதன் பெருமையைச் சொல்லி அப்பேர்ப்பட்ட இடத்தில் இருப்பவர்களே, எங்களை கதவைத்திறந்து உள்ளே அனுமதியுங்கள் என்று கேட்கிறார்கள்.

நாயகனாய் நின்ற நந்தகோபருடைய கோயில் காப்போனே! கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே! என்று காவலர்களை அழைத்து, மணிக்கதவை திறந்து எங்களை உள்ளே செல்ல அனுமதியுங்கள் என்று இறைஞ்சுகிறார்கள். ‘பயமுள்ள க்ஷேத்ரத்திலே மத்யராத்ரத்திலே’ வந்து மணிக்கதவம் தாள் திறவாய்! என்று கேட்கிறீர்களே! நீவிர் யாவர்’ என்று காவலாளிகள் கேட்கிறார்கள். பயமுள்ள க்ஷேத்ரம் என்று ஆய்ப்பாடியை பூர்வாசார்யர் திருஅயோத்தியோடு ஒப்பிட்டு குறிப்பிடுகிறார்.

இது ராமனுக்கு அனுகூலமான அவனுக்கு ஒரு ஆபத்துக்களும் ஏற்படுத்தாத அயோத்தி அல்ல – இது ஆய்ப்பாடி, இங்கே கண்ணனுக்கு எத்தனையோ ஆபத்துக்கள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. முளைக்கும் பூண்டுகளெல்லாம் விஷப்பூண்டுகளாய் இருக்கின்றன. அசையும் சகடம், அசையாத மரம், பெண் உருவில் பூதனை, குதிரை, யானை, கொக்கு என்று எல்லாம் கண்ணனுக்கு தீமை செய்யக்கூடியதாய் இருக்கிறது. அதனால் நாங்கள் விழிப்புடன் காவல் காக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் யார் என்றும் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்றும் சொல்லுங்கள் என்று கேட்க, ஆண்டாள், ‘நாங்கள் ஆயர் சிறுமியரோம்!’ என்று பதில் சொல்லுகிறாள். இதற்கு காவலாளிகள் காவலாளிகள், நீங்கள் சிறுமிகள் என்றோ, ஆயர் குலத்தவர் என்றோ பார்த்து நாங்கள் உங்களை அனுமதிக்க முடியாது. பெண்களிலே சூர்ப்பநகை போன்ற அரக்கிகள் இருந்திருக்கிறார்கள். ஆயர் குலத்தவராக பூதனை வேடமிட்டு கண்ணனை கொல்ல வந்தாள். ஆகவே நீங்கள் ஆய்ப்பாடி சிறுமிகளாகவே இருந்தாலும், இந்த நேரத்துக்கு வந்தது ஏன்? என்று கேட்கிறார்கள் காவலாளிகள்.

ஆண்டாள் அதற்கு பதிலாக ‘அறை பறை’ என்று நாங்கள் எங்கள் பாவை நோன்புக்கு பறை போன்ற சாதனங்களைப் பெற்றுப் போகவே வந்தோம். அவற்றைத் தருவதாக அந்த மாயன் மணிவண்ணனே, எங்களுக்கு வாக்கு கொடுத்திருக்கிறான். அதன் பொருட்டு, அவனிடம் அவற்றைப் பெற்றுபோக, தூய்மையான மனத்தினராய் வந்தோம் – துஷ்க்ருத்யங்கள் செய்யும் எண்ணம் சிறிதும் இல்லை, என்று ஆண்டாள் சொல்கிறாள். சரி, பெருமானே வாக்கு கொடுத்தானோ! அப்படியானால் சரி, ஆனாலும் சந்தேகம் இருக்கிறது என்று காவலாளிகள் தர்ம சங்கடத்தில் தவிக்க, இவர்கள், ‘வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா!’ என்று கதறுகிறார்கள். மாற்றி மாற்றி பேசாதே, உள்ளே அவன் இருக்க, வெளியே நாங்கள் இருக்க, ஏற்கனவே தவித்து போயிருக்கிறோம். எங்களை இதற்கு மேலும் சோதிக்காதீர்கள் என்று பதறுகிறார்கள்.

இதற்கு மனமிரங்கிய காவலர்கள், சரி போங்கள் என்று அனுமதிக்கிறார்கள். ஈஸ்வரன் இருக்கும் இந்த மாளிகையில், அசேதனங்கள் கூட அவனுக்கு அனுகூலமாக இருக்கின்றன. இந்த கதவு இருக்கிறதே, வெளியே க்ருஷ்ண விரோதிகள் வந்தால் அனுமதிக்காமலும், உள்ளே நுழைந்து விட்ட பக்தர்களை, வெளியே விடாது அவனுடனே இருக்க பண்ணுவதுமாக அசேதனங்கள் கூட அவனிடத்தில் ப்ரேமை கொண்டிருக்கின்றன. ‘அநதிகாரிகளுக்கு அவனை உள்ளபடி காட்டாதேப்போலே, ஆத்மஸ்வரூபம், ஸ்வைவலக்ஷண்யத்தாலே, அதிகாரிகளுக்கும் பகவத் விஷயத்தை மறைக்கக் கடவதாயிருப்பது’ என்று சொல்கிறார் பூர்வாசார்யர். இந்த கதவுகள் தம் இயல்பால் பகவத் பக்தர்களுக்கும் உள்ளே விட மறுப்பவையாய் இருக்கின்றன. அதனால் இந்த க்ருஷ்ண ப்ரேமையுள்ள கதவை நீங்களே திறந்து உதவுங்கள் – நேச நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்! என்று கேட்க, காவலர்களும் திறந்து இவர்களை உள்ளே அனுமதிக்கிறார்கள்.


திருப்பாவை (17)

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ் செய்யும்* எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்*
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே* எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்*
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த* உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் *
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா* உம்பியும் நீயும் உகந்து – ஏலோர் எம்பாவாய்.

இந்த பாசுரத்தில், நந்த கோபருடைய திருமாளிகையுனுள்ளே ப்ரவேசித்த ஆண்டாள் நந்த கோபரையும், யசோதை பிராட்டியையும், பலராமரையும், க்ருஷ்ணனையும் உறக்கத்திலிருந்து விழித்தெழ திருப்பள்ளி எழுச்சி பாடுகிறாள். இங்கே ஒவ்வொருவரையும் எழுப்பும் போதும் நல்வார்த்தைகள் சொல்லி, அவர்கள் பெருமையைச் சொல்லி எழுப்புகிறாள்.

நந்தகோபர் நிறைய தான தர்மங்கள் செய்பவர். கணக்கில் அடங்காத அளவு துணி மணிகள், அன்னம், தண்ணீர் என்று தானம் செய்கிறார். அதனால் அம்பரமே! தண்ணீரே! சோறே! அறஞ்செய்யும் எம்பெருமான் – நந்த கோபாலா! என்று ஏகாரம் போட்டு அவர் செய்யும் தான தர்மங்களை சொல்கிறார்கள். இத்தை தாரக, போஷக, போக்யமென்று பூர்வாசார்யர்கள் சொல்வர். தாரகம் – என்பது உயிர் தரிக்கப் பண்ணுவது – நீரின்றி உயிர் தரிக்காது, அதேபோல் போஷகம் என்பது வாழ்வதற்கு தேவையான போஷணை – அன்னம் இன்றி உடல் போஷிக்கப் படமுடியாது – ஆடையின்றி உயிர் வாழ்ந்தாலும் வாழ்ந்ததாகாது – அரை மனிதன் ஆகிவிடுவோம் – அது போக்யம் – வாழ்க்கையை மனிதனாக அனுபவிப்பதற்கு அடிப்படை – ஆக தாரக, போஷக, போக்யம் தருவதில் எம்பெருமானுக்கு நிகர் நீர் – என்று சொல்வதாக அர்த்தங்கள் சொல்வர்.

வேறொரு வகையில், எங்களுக்கு அம்பரமே கண்ணன்! சோறே கண்ணன், தண்ணீரே கண்ணன் – என்று எல்லாமும் எங்களுக்கு கண்ணன். கண்ணனுக்கு நாங்கள் அன்னம் – அவன் எங்களை சாப்பிடுகிறான் – நாங்கள் அவன் எங்களை உண்டு ஆனந்தப் படுகிறானே – அந்த ஆனந்தத்தை நாங்கள் சாப்பிடுகிறோம் என்று (அஹமன்ன: அஹமன்னாத: என்றபடி) குறிப்பிடுவதாகவும் அர்த்தங்கள் உண்டு. இன்னும் ஒரு வகை அர்த்தமும் உண்டு – நந்த கோபரே நீர் எவ்வளவோ தானம் செய்கிறீர் – அதைக் கொடுக்கிறீர் – இதை கொடுக்கிறீர் – என்று சொல்லி எங்களுக்கு எங்கள் பெருமான் கண்ணன் வேண்டும் என்று குறிப்பால் உணர்த்துவதாகவும் அர்த்தம் உண்டு.

கொம்பு அனார்கெல்லாம் கொழுந்தே! – வஞ்சிக் கொம்பைப்போல உள்ள ஆயர்குடிப் பெண்களில் கொழுந்து போன்றவளே! எங்கள் குலத்தை விளக்க வந்த குலவிளக்கே! எம்பெருமானின் மனைவியான எம்பெருமாட்டியே! யசோதா! இங்கே எழுந்திராய் என்று சொல்லாமல் அறிவுறாய் என்கிறார்கள். ஒரு பெண்ணினுடைய கஷ்டம் இன்னொரு பெண்ணுக்கன்றோ தெரியும்! இங்கே இவர்களின் த்வரை உணர்ந்து கண்ணனை தரவேண்டி பெண்ணான உனக்கு தெரியாததா! அறிவுறாய் என்கிறார்கள்.

அடுத்து, கண்ணன் அவர்கள் பார்வைக்கு வர, மற்ற எல்லாவற்றையும் மறந்தார்கள். மஹாபலி தானம் தந்தேன் என்று தாரை வார்க்கும் நீர் கீழே விழும் முன்பாக, ஏழுலகத்தையும் அதை தாண்டி வளர்ந்து, ஊடு அறுத்து என்று எல்லா உலகங்களின் ஊடாகவும் வளர்ந்த ஓங்கி உலகளந்த கோமகனே! தேவதேவனே! என்கிறார்கள். ‘உறங்குகிற ப்ரஜையைத் தழுவிக்கொண்டு கிடக்கும் தாயைப்போலே’ என்பர் பூர்வாசார்யர். எப்படி தாய் உறங்குகிற தன் குழந்தையை தழுவிக்கொண்டு இருப்பளோ அப்படி நல்லவன், தீயவன், ஆஸ்தீகன், நாஸ்தீகன் என்றெல்லாம் எந்த வித்தியாசமும் பாராமல் எல்லார் தலையிலும் தன் திருவடிகளை ஸ்பர்சிக்க செய்தானே! என்று ஆச்சரியப்படுகிறார்கள்.

ஆனால் இவர்கள் எழுப்பியும் கண்ணன் எழுந்திருக்க வில்லை. பிறகுதான் இவர்களுக்கு உரைக்கிறது – க்ரமப்படி க்ருஷ்ணனின் தமையனான பலராமனை அல்லவோ முதலில் எழுப்ப வேண்டும் – அவன் எழாத போது கண்ணன் எப்படி எழுந்திருப்பன்? என்று எண்ணி, பொன் போன்ற திருப்பாதங்களை பொலிய விட்டு உறங்கும் எங்கள் செல்வா! பலதேவா! உன் தம்பியும் நீயும் உறக்கத்திலிருந்து எழுக! என்று அழைக்கிறார்கள்.

பலராமன் கண்ணனுக்கு இந்த பிறவியில் அண்ணனாக பிறந்து விட்டதால், கண்ணன் அவனிடம் பவ்யம் காட்டுகிறான். அதனால் பலராமனை கட்டி அணைத்து தூங்குகிறானாம். பிராட்டியை பிரிந்து பல நாள் இருந்தவன், தம்பியை பிரிந்தவுடன் இக்கணமே உயிர்விட்டேன் என்றவனாயிற்றே! பலராமனோ தன் ஸ்வரூப ஞானத்தால் கண்ணனுக்கு கைங்கர்யம் செய்து பழக்கப்பட்டவனாதலால் அவனும் பவ்யம் காட்டி கண்ணனை விட்டு விலக முடியாத ஆற்றாமையால் அணைத்து படுத்து உறங்குகிறான். இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து தூங்கும் அழகை அனுபவித்து ஆச்சர்யப்பட்டு மகிழ்கிறார்கள்.


திருப்பாவை (18)

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்* நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்*
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்* வந்து எங்கும் கோழி அழைத்தன காண்* மாதவிப் –
பந்தர்மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்* பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்*
செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப* வந்து திறவாய் மகிழ்ந்து – ஏலோர் எம்பாவாய்.

இதற்கு முந்தைய பாசுரத்தில் நந்தகோபரின் திருமாளிகையில் கண்ணனை எழுப்ப முயற்சித்த கோபிகைகள், தம் முயற்சியில் வெற்றி அடையவில்லை. அவர்களுக்கு அப்போது தான் பகவானை ஆஸ்ரயிக்க பிராட்டியின் புருஷகாரம் தேவை என்ற புத்தி வருகிறது. ‘ஆஸ்ரயண வேளையிலிறே க்ரமம் பார்ப்பது – போக வேளையிலே க்ரமம் பார்க்கப் போகாதே!” என்றார்கள் பூர்வாசார்யர்கள். க்ருஷ்ணனை அடைய விரஹ தாபத்தாலே வந்தவர்கள், தம்மை மறந்தார்கள் – சரியான உபாயத்தை –
க்ரமத்தை மறந்தனர். பிறகு புத்தி தெளிந்து இப்பாசுரத்தில் பகவான் க்ருஷ்ணனின் பிராட்டியான நப்பின்னையை புருஷகாரம் செய்தருள எழுப்புகிறார்கள். நப்பின்னை தேவி, யசோதையின் சகோதரரான ஸ்ரீகும்பரின் மகள் என்று சொல்வர். நப்பின்னை – நற்பின்னை என்பது நல் – பின்னை – நல்ல தங்கை (அக்காளைப் பற்றித்தான் தெரியுமே!) – என்று மஹா லக்ஷ்மியைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்றார் ஒரு பெரியவர்.

மதம் உந்துகின்ற களிறு – இயல்பாகவே பலமுள்ள யானை, மதம் பிடித்து விட்டால் அதன் மூர்க்கம் மிகவும் அதிகமாகி விடும். அத்தகைய யானைகளையும் எதிர்த்து நின்று சண்டை இடக்கூடியவராம் நந்தகோபர். ஓடாத தோள்வலியன் என்ற பதத்தில் அவரது வலிமை பேசப்பட்டது. இங்கே நந்த கோபரை ஆசார்யனாகக் கொண்டு நப்பின்னையை அடைய முயற்சிக்கிறார்கள். அதனால், மதம் பிடித்த களிரைப்போல நாஸ்தீக வாதிகள், துஷ்டர்கள் வந்தாலும் ஞான பலத்தால் எதிர்த்து வெல்லக்கூடிய சக்தி படைத்தவராம் நந்த கோபர். அப்பேர்ப்பட்டவரின் மருமகளே! என்று விளிக்கிறார்கள். அவரது மருமகள் – மஹா லக்ஷ்மியான இவளிடம் தர்ம பூத ஞானம் பிரகாசிக்கிறதல்லவா! அதோடு நந்த கோபர்தான் கொடை வள்ளலாயிற்றே.. இதற்கு முந்தைய பாசுரத்தில் சொன்னார்களே! அவரது மருமகளான நீ அவரையும் விட நிரவதிகமான காருண்யம் உள்ளவளன்றோ!

இப்படி இவர்கள் அழைக்க, நப்பின்னைப் பிராட்டி எழுந்து வரவில்லையாம்! திருவாய்ப்பாடி பெண்பிள்ளைகள் எல்லோருமே நந்தகோபருக்கு மருமகள்கள் தாமே… க்ருஷ்ணன் மேல் மாளாத காதல் கொண்ட பெண்கள் தானே எல்லோரும்…! என்று பேசாமல் இருந்துவிட்டாளாம். பின் இவர்கள் நப்பின்னாய்! என்று பெயர் சொல்லி, நீ இருப்பது உன் வாசம் கமழும் குழல்களிலிருந்தே தெரிந்தது. கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்! பகவான் கந்தப்பொருள். பிராட்டி அதிலிருந்து வரும் வாசனை. இணை பிரியாத இரட்டையராயிற்றே நீவிர்! நீ யாரென்று நாங்கள் கண்டுகொண்டோம். எங்களை நீயே கடைத்தேற்ற வேண்டும்! என்று இரைஞ்சுகிறார்கள். இதற்கு நப்பின்னை, நடுராத்திரியில் வந்து எழுப்புகிறீர்களே! ஏன் என்று கேட்க, இல்லை பொழுது புலர்ந்தது… ‘வந்தெங்கும் கோழி அழைத்தன காண்!’ என்றார்கள்.

அது சாமத்துக்கு சாமம் கூவும், சாமக்கோழியாகக்கூட இருக்கலாம் என்று நப்பின்னை சொல்ல, இவர்கள் உன் வீட்டு ‘மாதவிப் பந்தல்’ மேல், பலகாலும் – பலமுறை குயில் முதலான பக்ஷிகள் கூவுவதை நீ கேட்கவில்லையா! என்றார்கள். அதற்கு அவ்விடத்திலிருந்து பதில் வராமல் போகவே உள்ளே என்ன நடக்கிறது என்று கதவில் துவாரம் வழியாக பார்த்து அங்கே கிடைத்த சேவையை ஆச்சர்யமாக சொல்கிறார்கள். நப்பின்னை ஒரு கையில் கண்ணனையும், மறு கையில் அவனோடு போட்டியிட்டு வென்ற பந்தினையும் பிடித்து வைத்துக் கொண்டு தூங்குகிறாளாம். அதென்ன… ஒரு கையில் நித்ய விபூதியாக பகவானையும், மறுகையால் லீலாவிபூதிக்கு அடையாளமாக பந்தையும் இவள் பிடித்திருக்கிறாள்! என்று ஆச்சர்யப் படுகிறார்கள். பிஞ்சு விரல்கள் நிறைய அள்ளி நீ பிடித்திருக்கும் பந்தாக நாங்கள் பிறந்திருக்கக்கூடாதா! எதற்கு எங்களுக்கு சைதன்யம் உன் ஸ்பர்சம் இல்லாமல்! அசேதனமான பந்தாகவே இருப்போமே உன் கை படுமென்றால்!

அடுத்து சொல்கிறார்கள், நாங்கள் வந்தது உனக்கு ப்ரியமானவனான – உன் ப்ரியத்தை பெற்றவனான கண்ணனைப்பாடத்தான்! நீ மைத்துனனை பாராட்ட கண்ணனிடம் ஆசையோடு இருக்கிறாய்! நாங்களும் அப்படித்தான்! என்கிறார்கள். கண்ணனை அவள் ஏற்கனவே அடைந்தவள். இவர்கள் அடைய தவிப்பவர்கள். அதற்கு அவள் உதவியை நாடுபவர்கள். அதனால் நந்தகோபரிடமோ, யசோதையிடமோ, பலராமனிடமோ சொன்னது போல், எங்கள் கண்ணனை எங்களிடம் கொடுங்கள் என்று கேட்க
முடியவில்லை. அப்படிக் அங்கெல்லாம் கேட்டும் நடக்காமல் போய்விட்டது. அதனால் உன் மைத்துனன் என்று பகவானிடம் நப்பின்னைப் பிராட்டியின் சம்பந்தத்தைச் சொல்லி அவள் புருஷகாரத்தை வேண்டுகிறார்கள்.

செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப என்ற பதத்தில் இவர்கள் அவள் அபய வரத ஹஸ்தங்களை காண தவிப்பது தெரிகிறது. நாங்கள் உள்ளே கதவை திறந்து கொண்டு வர முடியாமல் தவிக்கிறோம். நீயே வந்த திற அம்மா! உன் செந்தாமரை போன்ற கரங்கள் கதவைத் திறக்க நாங்கள் அதை தரிசிக்க வேண்டும். வந்து திறவாய் மகிழ்ந்து! என்று சொல்லும் போது, மஹா லக்ஷ்மியான நப்பின்னையிடம் தர்ம பூத ஞானம் சுடர் விட்டு ஒளிர்கிறதாம். அவள் க்ருஷ்ணனை தம்முடனேயே எக்காலமும் கொண்டிருப்பதால் அவள் முகத்தில் மகிழ்ச்சி தளும்ப அந்த நிலையில் எங்களுக்கு தரிசனம் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.

இந்த அத்யாச்சர்யமான பாசுரத்தை உள்ளார்ந்து அனுசந்தித்தால் மஹா லக்ஷ்மியை நமக்குள்ளேயே உணரமுடியும். குரு பரம்பரைக்கதைகளில் இத்தகைய சம்பவம் உண்டு. உடையவர் எம்பெருமானார் ராமானுஜர் ஸ்ரீவைஷ்ணவ சந்யாசியாக தினமும் உஞ்சவ்ருத்தி எடுத்து உண்பது உண்டாம். அப்படி வரும்போது திருப்பாவை பாசுரங்களை அனுசந்தித்தும், வாய்விட்டு பாடியும் வரும்போது, அவரது ஆசார்யனான பெரிய நம்பியின் திருமாளிகைக்கு வந்து சேர்ந்தார்.

அப்போது இந்த உந்து மத களிற்றன் பாசுரம் பாடி, ‘பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாட செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்!” என்ற வரியின் போது, பெரிய நம்பியின் மகளான அத்துழாய் அம்மை என்ற சிறுமி வாசற் கதவை திறந்து வெளியே வரவும் சரியாக இருந்தது. ராமானுஜர் ரொம்பவும் அனுபவித்துப் பாடிக்கொண்டே வந்ததில் இந்த காட்சியை காண நேரவும் அப்படியே மூர்ச்சித்து விழுந்து விட்டாராம்!

அந்த செய்தி கேட்ட, பெரிய நம்பியும் வெளியே வந்து ராமானுஜரை ஆஸ்வாசப்படுத்திவிட்டு, என்ன ‘உந்து மத களிற்றன்’ பாசுர அனுசந்தானமோ! என்றாராம். அவரும் அப்படி அனுசந்தித்ததால் தானே இந்த அனுபவத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது! பெரியவர்கள் ஆழ்ந்து அனுபவித்ததால் இந்த பாசுரம் மிகுந்த ஏற்றம் பெற்றது என்பது தேறும்.


திருப்பாவை (19)

குத்து விளக்கு எரியக் கோட்டுக்காற் கட்டில்மேல்* மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்*
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்* வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய்திறவாய்*
மைத் தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை* எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனை யேலும் பிரிவு ஆற்றகில்லாயால்* தத்துவம் அன்று தகவு ஏலோர் எம்பாவாய்.

ஆண்டாளுடன் சேர்ந்த திருவாய்ப்பாடிப் பெண்கள் அம்பரமே தண்ணீரே பாசுரத்தில் பகவானை தனியாக எழுப்ப முயற்சித்தார்கள். அடுத்த உந்து மத களிற்றன் பாசுரத்தில் பிராட்டியை தனியாக எழுப்ப முயற்சித்தார்கள். அதுவும் நடக்கவில்லை. இந்த பாசுரத்தில் மலர்மார்பா! என்று பகவானையும், மைத்தடங் கண்ணினாய்! என்று பிராட்டியையும் சேர்த்தே அனுசந்திக்கிறார்கள். இது ஒரு அபூர்வ அழகுடைய பாசுரம் – பராசர பட்டர் இந்த பாசுரத்தின் நினைவில்தான் திருப்பாவையின் தனியன்களுள் ஒன்றான “நீளா துங்க” என்ற ஸ்லோகத்தை அருளினார். அப்படி பாகவதர்கள் உகந்த பாசுரம் இது!

இந்த பாசுரத்தில் ஆண்டாளோடு சேர்ந்த ஆய்பாடி பெண்பிள்ளைகள் சிறு குழந்தைகளாக குதூகலித்து, பக்தியினால் உள்ளம் கரைய விகசித்து போகிறார்கள். விடிவதற்கு முன்னமே எழுந்திருந்து, “மையிட்டெழுதோம் மலரிட்டு முடியோம்!” என்று நாங்கள் இருக்க, நப்பின்னாய்! நீ கொத்தாக அலர்ந்த பூக்கள் நிறைந்த குழலுடன், குத்துவிளக்கெரிய விட்டு, மலர்மார்பனான பகவான் மீது சயனித்து அவனையும் துயிலெழ விடாமல் செய்கிறாயே! இது தத்துவமன்று! என்கிறார்கள்.

மாதாவாக பிராட்டி இவர்களுக்கு ப்ரியமானதையே செய்பவள். பிதாவாக பகவான் இவர்களுக்கு ஹிதமானதையே செய்கிறவன். ஒரு ஜீவன் எத்தனையோ பாவங்கள் செய்து பகவானிடம் சரணாகதி என்று வரும்போது, இவனுக்கேற்ற ஒரு பிறப்பைக் கொடுத்து, இவன் ஞானத்தைப் பெற செய்ய வேண்டும் என்று பகவான் நினைப்பனாம். பிராட்டியோ, இந்த ஜீவன் நமக்கு குழந்தை அல்லவா! அவன் அப்படி ஒன்று பெரிய பாவங்கள் செய்து விடவில்லை. இவனுக்கு ஞானத்தை நான் தருகிறேன்.. ப்ரம்ம வித்யையை நான் தருகிறேன். இவனை மறுபடி மறுபடி சம்சாரத்தில் சிக்க வைக்க வேண்டாம் என்று புருஷகாரம் செய்வளாம். பகவானும் அதை ஏற்று அப்படி ஞானம் பெற்ற ஜீவனை அழைத்து முக்தி கொடுத்து தன் பாம்பணை மேல் தூக்கி இருத்துவனாம்.

இப்படி மாதா பிதாக்களான இவர்கள் பஞ்ச சயனத்தில் படுத்திருப்பதைப் பார்க்கிறார்கள். அதுவும் சாதாரண பஞ்சு படுக்கை அல்ல அது. அழகு, குளிர்ச்சி, மென்மை, தூய்மை, வெண்மை ஆகிய பஞ்ச குணங்கள் உள்ள படுக்கையாம் அது.

கண்ணன் போர்களில் யானைகளோடு பொருதி அவற்றைக் கொன்று அவற்றின் தந்தங்களை எடுத்து வந்து ‘கோட்டுக்கால்’ – நான்கு கால்களாக தந்தக்கட்டில் செய்து வைத்திருக்கிறான். அப்படிப்பட்ட தந்தக் கட்டிலில், மெத்தென்ற பஞ்ச சயனத்தில் மீதேறி படுத்துக் கொண்டிருக்கிறார்கள். உந்து மத களிற்றன் பாசுரத்தில், இவர்கள் நப்பின்னையை அழைக்க அவளும் எழுந்து வர, பகவானுக்கு தன் பதவி மேல் சிறிது பயம் வந்து விட்டதாம். நானல்லவோ ரக்ஷிக்க வேண்டும் – இவளே முதலில் போகிறாளே! நம் வேலையை செய்ய முடியாமல் போகிறதே என்று அவளை பிடித்து இவனது அகன்ற திருமார்பில் சரிய இழுத்து வைத்துக்கொண்டிருக்கிறானாம். அவனாவது ஆண்பிள்ளையாக வன்முறை காட்ட வேண்டியிருந்தது. இவளோ, ‘வாய்திறவாய்!’ என்று வெளியே கேட்கப்பட்டபோது ‘மா சுச:’ என்று பதில் கொடுக்கவொண்ணாத படி தன் பார்வையாலேயே தடுத்து விட்டாளாம்! அதனால் மைத்தடங்கண்ணினாய்! என்றார்கள்.

இங்கே கொங்கைகள் என்று சொன்னது அவள் மாத்ருத்வத்தை சொல்கிறது. குழந்தைக்கு பசிக்க தாய் பொறுப்பளோ! பகவான் நான் முந்தி என்று அவளை தடுக்கிறான். அவள் நான் முந்தி என்று அவனை தடுக்கிறாள். இவர்களது ஆர்த த்வனிக்கு அவள் மாத்ருத்வம் அவளை ரக்ஷிக்க சொல்லி தபிக்கப்பண்ணுகிறதாம். சென்ற பாசுரத்தில் இவர்கள் லீலாவிபூதிக்கு போட்டியிட்டுக் கொண்டதை சொன்னார்கள். இந்த பாசுரத்தில் லீலாவிபூதியிலிருந்து ஜீவாத்மாக்களை விடுவித்து நித்ய விபூதிக்கு அழைத்துச் செல்ல இந்த திவ்ய தம்பதிகள் ஒருவருக்கொருவர் போட்டி போடுகிறார்களாம்!

இப்படி அவனது ரக்ஷகத்வத்தை அவளும், அவளது புருஷகாரத்தை அவனும் தடுப்பது தத்துவமன்று தகவுமன்று என்று இவர்கள் இரைஞ்சுகிறார்கள்.


திருப்பாவை (20)

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று* கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்*
செப்பம் உடையாய் திறல் உடையாய்* செற்றார்க்கு- வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்*
செப்பு அன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்* நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்*
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை* இப்போதே எம்மை நீர் ஆட்டுஏலோர் எம்பாவாய்.

இதற்கு முந்தைய பாசுரத்தில் பகவான் ரக்ஷகத்வத்துக்கும், பிராட்டியின் புருஷகாரத்துக்கும் அவர்களுக்குள்ளேயே போட்டி ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தடுத்துக் கொண்டிருப்பது தத்துவமன்று என்று துவங்கிய ஆண்டாள் இந்த பாசுரத்தில் அதன் தொடர்ச்சியாக அந்த திவ்ய மிதுனமான தம்பதிகளை போற்றி மங்களாசாசனம் செய்கிறாள்.

இங்கே இந்த திவ்ய தம்பதிகளுக்குள் போட்டியென்றெல்லாம் சொல்வது நமக்கு தத்துவத்தை விளக்கவதற்காகத்தான் – ஒரே ப்ரஹ்மம் – நிர்விசேஷமாக சின் மாத்ரமாக – அத்வதீயமாக ஒன்றாகவே இருக்கிறது – அதுவும் நிர்குணமாக இருக்கிறது என்று சொல்வது ப்ரஹ்மத்தின் குணங்களைச் சொல்லுகிற அனேக வேத வாக்யங்களை தள்ளி வைப்பது போல் ஆகும். அது தத்துவம் அன்று. பகவானும் பிராட்டியும் திவ்ய மிதுனமாக – இரட்டையாகவே இணை பிரியாமல் இருக்கிறார்கள். வேதம் பகவானின் அனந்தமான கல்யாண குணங்களைச் சொல்லுகிறது. இப்படி குண சம்ருத்தி உள்ள ப்ரஹ்மத்திடம் குணக்லேசம் உடைய நாம் எப்படி சென்று சேர்வது? அதற்குத்தான் பிராட்டி புருஷகாரம் – சிபாரிசு செய்கிறாள்.

இப்படி இரண்டு பேர்கள் இருப்பதால் உடனே நம் மனதில் ஐயம் எழ வாய்ப்பிருக்கிறது – இரண்டு பேர் என்றால், அதில் யார் பெரியவர்? ஒருவர் செய்யும் செயலை மற்றவர் தடுப்பரோ? என்றெல்லாம் தோன்றக்கூடும். அது தத்துவமன்று என்கிறாள் ஆண்டாள். பகவானுக்கு செப்பமுடையவன்! திறலுடையவன்! என்றெல்லாம் அவன் வீர பல பராக்ரம ப்ரக்யாதிகளை சொல்கிற ஆண்டாள், பிராட்டியைச் சொல்லும்போது, மென்முலையாள், செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்! என்று அவள் ஸ்த்ரீத்வ பூர்த்தியை சொல்கிறாள். நங்காய் என்பது பூர்ணமான பெண்ணே! என்று பொருள். பகவானே ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹார வ்யாபாரங்களை எடுத்துக் கொண்டிருக்கிறான். பிராட்டி அதில் அவனோடு சேர்ந்து அவனுக்கு உற்ற துணையாகவும் அவனுக்கு சந்தோஷத்தை – பூர்த்தியை தரக்கூடியவளாகவும் இருக்கிறாள் என்பதை இங்கே சுத்தாந்த சித்தாந்தமாக ஸ்தாபனம் செய்கிறாள்.

முப்பத்துமுவர் என்று ஆதி தேவர்களான ஏகோதச ருத்ரர்கள், த்வாதச ஆதித்யர்கள், அஸ்வினி தேவர்கள் இருவர் – என்று முப்பத்து மூன்று தேவர்களுக்கும், அவர்கள் வம்சத்து தேவர்களுக்கும் ஒரு கெடுதி ஏற்பட்டால் உடனே ஓடிப்போய் முன்னே நிற்கிறான். கப்பம் என்பது கம்பனம் என்ற கஷ்டத்தை – சிரமத்தை குறிக்கும். இப்படி ஓடி ஓடி தேவர்களது துயர் துடைப்பவனே! எங்கள் குரல் கேட்டு உறக்கம் தவிர்த்து எழுந்திராய்! எங்களுக்கு அமரரைப்போல் ராஜ்யங்கள், ஐஸ்வர்யங்கள் வேண்டாம். உன் பக்தர்களான எங்களுக்கு பயமும் இல்லை. உன் கடாக்ஷத்தையே எதிர்ப்பார்த்து இருக்கிறோம்.

செப்பம் உடையாய்! இனிமை, எளிமை, கருணை, தைரியம் என்று எண்ணற்ற குணங்களால் பூர்ணமாக இருப்பவன்! திறலுடையாய்! சாமர்த்யம் உடையவன். இந்த இடத்தில் அவனது திறல் – பராபி பவந ஸாமர்த்யம் என்று பூர்வாசார்யர் அருளுகிறார். ஆஸ்ரித விரோதிகளாக இருப்பவர்கள் அவனை உணர்ந்து கொள்ளவே முடியாதவனாக இருக்கிறானாம்!

தேவர்கள் ப்ரஹ்மத்தை அண்டினால் அது அவர்களுக்கு சில படிகள் மேலானதாக இருக்கிறது. தேவர்களை விட உயர்ந்த ப்ரஜாபதிகள் ப்ரஹ்மத்தை அண்டினால் அது அவர்களுக்கும் சில படிகள் மேலே இருக்கிறது. இவர்களுக்கெல்லாம் உயர்ந்த ப்ரம்மா இந்த ப்ரஹ்மத்தை அண்டினால் அது அவருக்கும் மேலே சில படிகள் உயர்ந்து இருக்கிறது. இவர்களெல்லாரையும் விட தாழ்ந்த ஜீவர்களுக்கும் அது சில படிகளில் எட்டிப்பிடிக்குமாப்போலே தென்படுகிறது. அணோர் அணீயான்! மஹதோ மஹீயான்! என்று அணுவுக்குள் அணுவாக, பெரியவற்றுக்கும் மிகப்பெரியதாக இருக்கும் ப்ரஹ்மத்தின் சாமர்த்யத்தை திறலுடையாய்! என்று ஆண்டாள் சொல்கிறாள்.

செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்! – அவன் ஆஸ்ரித விரோதிகளை தன் சினத்தினால் தண்டிக்கிறான் – ஆஸ்ரிதர்களுக்கோ காருண்யத்தால் அதன் குளிர்ச்சியால் நனைக்கிறான்! இப்படி சில ஜீவர்களை தண்டிப்பதும், சில ஜீவர்களை ரக்ஷிப்பதும் அவனுக்கு குறையாகாதோ? என்றால் இல்லை – அவன் விமலன்! மலம் என்றால் தோஷம் – அவன் குற்றங்கள் அற்றவன் – விபீஷண சரணாகதியின் போது, அங்கே இருந்த சுக்ரீவன் முதலானவர்கள் எல்லோரும் தடுக்க, ராமன் சொல்கிறான் – அந்த ராவணனே என்னிடம் சரணடைய வந்தாலும் அபயம் தருவேன் என்று சொல்லும் போது அவனது கல்யாண குணங்கள் வெளிப்படுகிறது. அத்தகைய உயர்ந்த ப்ரஹ்மத்தை உணராமல் தம்மை தாமே தரம் தாழ்த்திக்கொள்கிறார்களே தவிர அவன் ஒருவரையும் விலக்குவதில்லை.

அடுத்து பிராட்டியை அவள் பெருமைகள் தோன்ற மங்காளாசாசனம் செய்கிறார்கள். செப்பென்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் என்று நாயகனான பகவான் உகந்து பிராட்டியும் உகப்பிக்கும் அவயவ லக்ஷணங்களைச் சொல்லி அவர்களுக்குள் நெருக்கத்தைச் சொல்லி, திருவே! துயிலெழாய்! என்று அந்த மஹாலக்ஷ்மியே இங்கே நப்பின்னை என்று திருப்பள்ளியெழுச்சி பாடுகிறார்கள்.

உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டு! – இங்கே பூர்வாசார்யர்கள் ‘உக்கமும் தந்து, தட்டொளியும் தந்து, உன் மணாளனையும் தந்து’ என்று அர்த்தம் சொல்கிறார்கள். இது மனித உறவாக இருந்தால், மனைவியிடமே கணவனைக் கொடு என்று ஒரிருவரல்ல, பஞ்ச லக்ஷம் கோபிகைகளும் போய் நின்று கேட்க முடியுமா! இது தெய்வீக சம்பந்தம். எல்லோருக்கும் துளி துளி எடுத்துக் கொடுத்தாலும் அப்போதும் அது பூரணமாக இருக்கும் ப்ரஹ்மமாயிற்றே!
எப்படி தசரதன் ராமனை ‘தந்தேன்!’ என்று விஸ்வாமித்திரரிடம் எடுத்துக்கொடுத்தானோ அப்படி உன் மணாளனை தூக்கி எங்களிடம் கொடுத்து விடு என்கிறார்கள். அது பகவானிடம் பிராட்டிக்கு உள்ள உரிமையையும் எடுத்துக்காட்டுகிறது. அசேதனங்களை எடுத்துக்கொடுப்பது போல், பகவானையும் தூக்கி பக்தர்களிடம் சேர்ப்பிக்கக் கூடியவள் அவள். உக்கம் என்பது விசிறி, தட்டொளி என்பது முகம் பார்க்கும் கண்ணாடி. ஒன்று கைங்கர்யத்துக்கு. ஒன்று ஸ்வரூபத்தைக் காட்டுவதற்கு. கைங்கர்யமும், ஸ்வரூப ஞானத்தையும் பிராட்டியிடம் கேட்டுப் பெற்று ப்ரஹ்மத்தை அடைவதே மோக்ஷம். அதை தரவேண்டும் என்று மஹா லக்ஷ்மியான நப்பின்னையிடம் வேண்டுகிறார்கள்.


திருப்பாவை (21)

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப* மாற்றாதே பால் சொரியும் வள்ளற் பெரும் பசுக்கள்*
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்* ஊற்றம் உடையாய் பெரியாய்* உலகினில் –
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்* மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்*
ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே* போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து ஏலோர் எம்பாவாய்.

இதற்கு முந்தைய ‘முப்பத்து மூவர்’ பாசுரத்தில், பகவானையும் பிராட்டியையும் சேர்த்தே பாடி எழுப்பினார்கள். இந்த பாசுரத்தில் பிராட்டியும் எழுந்திருந்து வந்து இவர்களோடு சேர்ந்து கொண்டு பகவானை எழுப்புவதாகச் சொல்வர். வேறு விதமாக இந்த பாசுரத்திலும் பகவானையும் பிராட்டியையும் சேர்த்தே பாடுவதாகவும் சொல்வர். எப்படியாயினும் இவர்கள் பகவான் க்ருஷ்ணனை கண் முன்னே கண்டு அனுபவித்து பாடுவது இந்த பாசுரத்தை உள்ளார்ந்து அனுசந்தித்தால் புரியும்.

ஏற்ற கலங்கள் – எத்தனை குடங்கள், பாத்திரங்கள் வெவ்வேறு அளவில் எடுத்து வைத்து பால் கறந்தாலும், எதிர்பொங்கி மீதளிப்ப என்று அவை எல்லாம் நிரம்பி வழிகின்ற அளவில், மாற்றாதே பால் சொரியும், ஏமாற்றாமல் பாலை சொரிகின்ற வள்ளல் பெரும் பசுக்கள், நிறைய உடையவரான நந்தகோபரின் மகனே! என்கிறாள். பகவான், பக்தியில் இவன் சிறியவன், இவன் புதியவன், இவன் பலகாலம் பக்தி செய்தவன் என்றெல்லாம் வித்தியாசம் பார்க்காமல் யார் கொண்டாலும் குறைவின்றி உள்ளத்தில் நிறைந்து விடுகிறான். அதோடு மட்டும் அல்ல, அவனையே நினைக்காதவர்களையும் அவன் ரக்ஷிக்கிறான். அதனால் இவ்வளவு என்று எண்ணிச் சொல்ல முடியாத வள்ளன்மை அவனுக்கு. அதற்கு பசுக்களை உதாரணமாக சொல்கிறாள். உன் வீட்டு பசுக்களுக்கே இந்த குணம் உண்டே. அதோடு இந்த பசுக்களுக்கெல்லாம் சொந்தக்காரரின் மகன், எங்களில் ஒருவனல்லவா நீ என்று அவனது விபவ அவதார மாயையில் மூழ்கி திளைத்து மகிழ்ந்து போகிறாள் ஆண்டாள். எங்களோடு உனக்கிருக்கும் சம்பந்தத்தை மறந்து போய்விட்டாயா! என்கிறாள்.

அடுத்த வரியிலேயே அந்த அவதார மாயையை மீறி அவன் அருளாலே இவர்களுக்கு ஸ்வரூப ஞானம் ஏற்படுகிறது. அடுத்து ஆச்சர்யப்பட்டு சொல்கிறார்கள், “ஊற்றம் உடையாய்!” – சிறிதளவும் அயராது, தயங்காது ஊற்றமாய் உலக வியாபாரத்தை கவனிக்கிறாய்! ஜீவன்களையும் படைத்து, அவற்றைக் காத்து, அவற்றுக்கு புலன்களையும் இன்பத்தையும் படைத்து என்று இதில் தான் உனக்கு எத்தனை உற்சாகம்? என்று ஆச்சரியப்படுகிறாள். அவனது இந்த ஊக்கத்தை பூர்வாசார்யர்கள் இப்படி சொல்கிறார்கள் ‘ஆஸ்ரித விஷயத்தில் பண்ணின ப்ரதிக்ஞையை மஹாராஜருள்ளிட்டாரும் விட வேணுமென்னிலும் விடாதே முடிய நின்று தலைக்கட்டுகை’ என்று விபீஷண சரணாகதியில் சுக்ரீவன் முதலானவர்கள் எதிர்த்தாலும் ரக்ஷித்தே தீருவேன் என்று ஊக்கக் குறைவில்லாமல் ரக்ஷணத்தை செய்தானே என்று ஆச்சரியப் படுகிறார்கள்.

பெரியாய்! – வேதத்தை நினைக்கிறாள் ஆண்டாள். வேதங்கள் அனந்தம் – எண்ணி அடங்கமுடியாதது. அவனும் அனந்தன். வேதம் அனாதி – ஆதி அந்தம் இன்றி எப்போது தோன்றியது என்று சொல்ல முடியாதது. – அவனும் அப்படித்தான். அப்படி அவனது சுவாசமாக இருக்கிற வேதத்துக்கும் பெரியவனாக இருப்பவனே! என்கிறாள். இதற்கு பூர்வாசார்யர்கள் பகவானின் பெரிய தன்மையும் அதற்கேற்ற அவன் சுலபத்தன்மையையும் சேர்த்து பலவாறாக சொல்வர், “அந்த ப்ரதிக்ஞா சம்ரக்ஷணத்தளவின்றியேயிருக்கும் பலமென்றுமாம்!”, “ஆஸ்ரித விஷயத்தில் எல்லாஞ் செய்தாலும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்றிருக்கை என்றுமாம்!”, “தன் பேறாயிருக்கை என்றுமாம்!”, “தன் பெருமைக்கு ஈடாக ரக்ஷிக்குமவன் என்றுமாம்” என்று பலவாறாக அவன் பெரிய தன்மையை, அதே நேரத்தில் எளிமையை சொல்கிறார்கள்.

உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! – ‘பர வியூஹ அந்தர்யாமி தஸைகள் போலன்றிக்கே, சேதன ஜனங்கள் மத்யத்தில் தோற்றமாய் நின்ற’ என்று பூர்வாசார்யர்கள் சொல்கிறார்கள். வேதத்தைவிட பெரியவனான உன்னை, ஏதோ ஒரு புத்தகத்திலிருந்து தெரிந்து கொண்டோம், யாரோ சொன்னார்கள் கேட்டோம் என்று இல்லாமல் இங்கே எங்கள் மத்தியில் வந்து தோன்றினாயே! என்று அவன் செளலப்யத்தை – எளிய தன்மையை எண்ணி ஆச்சர்யப் படுகிறாள். ‘சுடரே’ என்ற பதத்துக்கு பூர்வாசார்யர்கள் மிகவும் உகந்து ‘ஸம்ஸாரிகளைப் போலே பிறக்கப் பிறக்க கறையேறுகையன்றிக்கே, சாணையிலிட்ட மாணிக்கம் போலே ஒளிவிடா நிற்கை’ என்றார்கள். ஜீவர்கள் பூமியில் பிறந்து பிறந்து கறையேறிப்போய் இருக்கிறோம். ப்ரக்ருதியின் மாயையில் மூழ்கி இருக்கிறோம். ஆனால் அவன் எத்தனை தடவை வந்து பிறந்தாலும் மாயையில் சிக்குவதில்லை.

விசிஷ்டாத்வைத சித்தாந்தப்படி, ஒவ்வொரு உடலினுள்ளும் ஜீவாத்மாவும், பரமாத்மாவும் இருக்கிறது. இதில் ஜீவாத்மா எல்லா சுக துக்கங்களையும் அனுபவிக்க, பரமாத்மா அந்தர்யாமியாய் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறது. இந்த பாவ புண்ணியங்கள், சுக துக்கங்கள் அந்த பரமாத்மாவை தீண்டுவதில்லை. அதனால் அது அப்பழுக்கில்லாத சோதி, சுடர் என்று ஆண்டாள் சொல்கிறாள். அதோடு, ஏற்கனவே வையத்து வாழ்வீர்காள் பாசுரத்தில் பார்த்தபடி, அவன் சுடர் விட்டு ஒளிர்வது இந்த உலகில் தானே – இங்கேதானே அவன் பெருமைகள் சுடர்விட்டு ஒளிரும் என்று சொல்வதாகவும் கொள்ளலாம். துயிலெழாய்! – நீ இந்த உன் தன்மைகளையெல்லாம் தெரிந்தும், நாங்கள் ஏற்ற கலங்களாக இருப்பது தெரிந்தும் நீ இன்னும் உறங்கலாமா!

மாற்றார் உனக்கு வலி தொலைந்து – ஆஸ்ரிதர்களையும், அவர்களது விரோதிகளையும் நினைத்துப் பார்த்து சொல்கிறாள் ஆண்டாள். பகவானுக்கு எதிரிகள் யாரும் இல்லை, அவனது பக்தர்களுக்கு விரோதியை தனக்கும் விரோதியாகவே கொள்கிறான். இங்கே ஆண்டாள், பக்தனுக்கும் விரோதிக்கும் சில விதங்களில் ஒற்றுமை சொல்கிறாள்.

பக்தனும் உன்னை நினைத்து தன் முயற்சி, வலிமை, தன் சாமர்த்யம் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று அகங்கார மமகாரங்களை தொலைத்து விடுகிறான். விரோதியோ, ஹிரண்ய கசிபு, ராவணன் என்று உனக்கெதிரே நின்று தன் வலிமைகள் அனைத்தையும் தொலைத்து பகவானின் குணங்கள் தோன்ற செய்த புண்ணியத்துக்கு அவனிடமே வந்து சேர்ந்துவிடுகிறார்கள். பக்தர்களும், அவர்கள் விரோதிகளும் கூட, தம் வலிமை எல்லாம் தொலைத்து, தங்கள் நாடு, பொருள், பலம் எல்லாம் தொலைத்து உன் வாசலில் வந்து இப்பேர்ப்பட்டவனை நமக்கு சமம் என்று எண்ணினோமே என்று ஆற்றாமை தோன்ற உன் அடிபணிகிறார்கள்.

அப்படி ‘போற்றியாம் வந்தோம் புகழ்ந்து’ என்று உன்னை நாங்கள் போற்றி புகழ்ந்து வந்தோம், உன் சத்ருக்கள் உன்னை எதிர்த்து உன் வீரத்துக்கு தோற்று உன்னிடம் வந்து அடைந்தார்கள். உன் பக்தர்கள் உன் குணத்துக்கு, உன் பெருமைக்கு தோற்று உன்னிடம் வந்து சேர்ந்தார்கள். எங்களை இந்த கோஷ்டியில் எதாவது ஒன்றில் சேர்த்தாவது ரக்ஷிக்கக் கூடதா! யாம் போற்றி வந்தோம் என்று பகவானுக்கே பல்லாண்டு சொல்லி போற்றிய பெரியாழ்வாரை ஆண்டாள் நினைத்து அதைப்போலே
‘ஆற்றாமை இருந்தவிடத்தில் இருக்க வொட்டாமையாலே வந்தோம்’ என்று சொல்கிறாள்.


திருப்பாவை (22)

அங்கண் மா ஞாலத்து அரசர்* அபிமான- பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே*
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்* கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப் போலே*
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ* திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்*
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்* எங்கள்மேல் சாபம் இழிந்து ஏலோர் எம்பாவாய்.

ஆண்டாள் இந்த பாசுரத்தில் தன் சரணாகதியையும், தன் சேஷத்வ தன்மையையும், தான் பகவானிடம் வேண்டுவது என்ன என்பதையும் விண்ணப்பம் செய்கிறாள். இதற்கு முந்தைய பாசுரத்தில் ‘மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் ஆற்றாது வந்து அடிபணியுமா போலே” என்பதன் தொடர்ச்சியாக, இந்த பாசுரத்திலும் அந்த ஆச்சர்யத்தை தொடர்ந்து சொல்கிறாள். துரியோதனன், அர்ஜுனன் என்று ஞாலத்து பெரிய அரசர்கள் முதற்கொண்டு, கணக்கற்ற அரசர்களும், சக்ரவர்த்திகளும் தங்கள் ஸ்வபிமானத்தை – தன் சொத்து, தன் நாடு, தம்மக்கள், தன் உடல், தன் ஆன்மா என்று தன்னையே அபிமானித்து வந்தவர்கள் அந்த அபிமானம் பங்கமுற உன் கட்டிற்கால் கீழே வந்து சங்கம் – கூட்டம் போட்டிருப்பது போலே நாங்கள் வந்து நிற்கிறோம் என்கிறாள்.

அந்த ராஜர்களெல்லாம் வருவதற்கும் நாங்கள் வருவதற்கும் வாசி இருக்கிறது. அவர்கள் வேறு வழியின்றி உன்னிடம் வந்து நின்றார்கள். நாங்கள் எங்கள் வழியே நீதான் – உன் கைங்கர்யமே நாங்கள் வேண்டுவது என்று வந்து நிற்கிறோம். இதை பூர்வாசார்யர் இப்படி சொல்கிறார்: “அனாதிகாலம் பண்ணிப் போந்த தேஹாத்மாபிமானத்தை விட்டு தேஹாத்பரனான ஆத்மாவின் பக்கல் ஸ்வாதந்த்ரியத்தையும் விட்டு அனன்யப் ப்ரயோஜனராய் வந்தோம் என்றுமாம்!”. இப்படி சரணாகதி செய்து இவர்கள் நிற்கையில் அவன் செய்ய வேண்டுவது என்ன என்றும் சொல்கிறார்கள்.

சிறிய மணியினுடைய வாயைப்போல், தனது மொட்டு சிறிது மலர்ந்ததாய் உள்ள தாமரையைப் போலே எங்கள் மேல் உன் பார்வை படாதா என்கிறார்கள். கரியவாகி புடை பறந்து செவ்வரியோடி நீண்ட அப்பெரியவாய கண்கள்’ என்று திருப்பாணாழ்வார் அனுபவித்தது போல், இங்கே தாமரையை உதாரணம் காட்டி உன் சிவந்த கண்கள் திறக்க வேண்டும் என்று வேண்டுகிறார்கள். அப்படி விழிக்கும் போதும் முதல் பார்வை எங்கள் மேல் படவேண்டும்.

அங்கணிரண்டுங் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல் – அப்படி நீ எங்கள் மேல் உன் பார்வை செலுத்தினால், எங்கள் மேல்சாபம் இழிந்து – எங்களுக்கு இன்னும் மிச்சமிருக்கிற சம்சார பாவங்கள் தொலையும். “விஷ ஹாரியானவன் பார்க்க விடிந் தீருமாபோலே, அவன் நோக்காலே, சம்ஸாரமாகிற விஷந்தீரும்” என்கிறார் பூர்வாசார்யர். இவர்களுக்கேது சாபம் – அவனை பிரிந்திருப்பதே சாபம் – அந்த சாபம் நீங்கி உன்னுடன் நாங்கள் சேர உன் கடாக்ஷம் தேவை என்று இரைஞ்சுகிறார்கள்.

இந்த ஜீவன் தன்னது என்று எண்ணிக்கொண்டிருக்கும் மாயை விலகி, அவனிடம் அனன்யார்ஹ சேஷத்வமாக சேர்ந்து, அவன் கருணையாலே கடாக்ஷத்தாலே, தான் சேர்த்த கர்ம பலன்களை விலக்கி அவனிடம் சாயுஜ்யம் அடைவதையே இந்த பாசுரம் சொல்கிறது. நந்தகோபர், யசோதை போன்றவர்களை ஆசார்யர்களாக கொண்ட இவர்களுக்கு அவர்கள் மூலம் சாலோக்யம் கிட்டிற்று. பின் பிராட்டியை அண்டி அவளிடம் சரணாகதி செய்ததால் இவர்களுக்கு அவனிடம் சாமீப்யம் கிட்டிற்று. இவர்கள் பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு அவனை நெருங்கி தம் அபிமானத்தை எல்லாம் விட்டு அனன்ய சரணமாக அடையவும் அவன் சாரூப்யம் இவர்களுக்கு கிட்டிற்று. அவனுடனே இருக்க சாயுஜ்யத்தை இங்கே அவனிடமே யாசிக்கிறார்கள். இப்படியாக ப்ரபத்தி மார்க்கத்தையும், அதன் வெவ்வேறு நிலைகளையும், அதனை அடையும் உபாயங்களையும் ஆண்டாள் அழகாக நமக்கு எடுத்து வைக்கிறாள்.

அடுத்த பாசுரத்தில் க்ருஷ்ணன் விழித்தெழ அவனிடம் பேசவே ஆரம்பித்து விடுகிறார்கள!


திருப்பாவை (23)

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்* சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து*
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி* மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்*
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா* உன்- கோயில் நின்று இங்ஙனே போந்தருளி* கோப்பு உடைய-
சீரிய சிங்காசனத்து இருந்து* யாம் வந்த – காரியம் ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்.

இதற்கு முந்தைய ‘அங்கண் மாஞாலத்தரசர்’ பாசுரத்தில், ஆண்டாள் இதர பாகவத பெண்பிள்ளைகளோடு, பிராட்டியை முன் வைத்து, பகவானை நெருங்கி உன் சிவந்த கண்களை சிறிது சிறிதாக திறந்து எங்கள் மேல் உன் கடாக்ஷத்தை – கடைக்கண் பார்வையை செலுத்த வேண்டும் என்று கேட்க, பகவான் எழுந்திருக்கிறான். இந்த பாசுரத்தில் அவன் எழுந்திருக்கும் அழகை, தன் பெடையொடு குகையிலே படுத்திருக்கும் சிங்கம் எழுந்து வருவதை உபமானமாகச் சொல்லி ரசிக்கிறார்கள்.

இங்கே சிங்கத்தை சொன்னது யாதவ சிம்ஹமான க்ருஷ்ணன், தன் பராபி பவந சாமர்த்தியம் தோற்ற, வீரம் வெளிப்பட எழுவதை சிறப்பாக எடுத்துரைக்கிறது. மாரி – மழை பெய்கிறது – அதுவும் பனியே மழைபோல் பெய்யும் மார்கழிக்காலம் – ஆண்டாள் முன்னமே ஒரு பாட்டில் – பனித்தலை வீழ என்று சொன்னபடி பனிவிழும் மார்கழியாம். முழைஞ்சில் என்பது குகை. அப்படி குளிர் நடுக்குகிற, பனி – மழை போல் பெய்து கொண்டிருக்கிற மார்கழி மாத காலத்தில், தன் குகையில் – மன்னிக் கிடந்துறங்கும் – சோம்பலை அள்ளி பூசிக்கொண்டு தன் பெடையொடு அணுஅளவும் விலகாமல் படுத்துத் தூங்குகிறதாம் சிங்கம்.

அது மழைக்காலம் முடிந்த நிமித்தங்கள் கண்டு, அறிவுற்று – அதுவரை அசையாமல் இருந்தது – திடீரென்று உயிர் வந்ததுபோல் அசைந்து, தீவிழித்து – உறங்கிய பின் பார்க்கிற முதல் பார்வையாகையால் சிறிது சிவந்து விழித்த விழிகள் – வேரிமயிர் பொங்க – ஜாத்யுசித பரிமளம் என்கிற விலங்கு ஜாதிக்குரிய மணம் கமழ – தனது வாசனையுள்ள பிடரி மயிர்களை உதறி, வெப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து – உடம்பில் இன்னமும் ஒட்டியிருக்கும் சோம்பலை உதறுகிறதாம். முன்னங்கால்களை நீட்டி உடம்பை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுத்து, பின் பின்னங்கால்களை நீட்டி மறுபடியும் உடம்பை இழுத்து சோம்பலை உதறுகிறதாம். பிறகு முழங்கி – கர்ஜித்து புறப்பட்டு போதருமா போலே வேட்டையாடக் கிளம்பும் சிங்கத்தைப்போலே என்று சொல்லவும் பகவான், நான் என்ன சிங்கம் மாதிரி கருணை இல்லாமலா இருக்கிறேன் என்று பார்க்க, சிங்கம் உன் காம்பீர்யத்துக்கு மட்டுமே உதாரணம் – உன் செளகுமாரத்தன்மை எங்களுக்கு தெரியாதா? பூவைப்பூவண்ணா! என்கிறாள்.

இப்படி படுக்கையறையிலேயே இருக்காமல், உன் கோயிலில் இங்ஙனே போந்தருளி – இங்கே ஸபா மண்டபத்துக்கு வந்து, கோப்புடைய சீரிய சிங்காதனத்தில் இருந்து, நாங்கள் வந்த காரியத்தைக் கேட்கவேண்டும் என்று சொல்கிறாள் ஆண்டாள். அவனது சிம்மாசனம், ‘தர்ம ஜ்ஞானாதிகளாலும், அதர்ம ஜ்ஞானாதிகளாலும் கோப்புடைய ஸிம்ஹாசனம் என்றுமாம்’ என்றார்கள் பூர்வாசார்யர்கள். இப்படி தர்மம், அதர்மம், ஜ்ஞானம், அஜ்ஞானம் என்று எல்லாவற்றையுமே சட்டம் கட்டி, சிம்மாசனம் அமைத்து அதில் அமர்ந்தவன் என்று அவன் சாமர்த்தியத்தை சொல்கிறார்கள்.

இத்தனை நேரம் பள்ளி எழுப்பப் பாடியவர்கள், அது ஏன் எழுந்து சபா மண்டபத்துக்கு வரச் சொல்கிறார்கள்? பூர்வாசார்யர் சொல்கிறார், “நடையிலே ரிஷபத்தினுடைய வீறும், மத்தகஜத்தினுடைய மதிப்பும், புலியினுடைய சிவிட்கும், ஸிம்ஹத்தினுடைய பராபிபவந சாமர்த்தியமும் தோற்றியிருக்கை’ என்று. இப்படி ரிஷப கதி, கஜ கதி என்று பலவிதங்களில் அவன் நடையழகை காண ஆசைப்பட்டு சொல்கிறார்கள். அத்துடன் திருப்பாவை மொத்தமுமே ஸ்ரீரங்கநாதனை நினைத்து பாடியது தானே! (ஆண்டாள் அரங்கற்கு பன்னு திருப்பாவை…). அப்படி அரிதுயில் கொண்டே இருக்கிற ஸ்ரீரங்க நாதன் எழுந்து வந்தால் அந்த சேவை எப்படி இருக்கும் என்று ஆச்சர்யப்பட்டு சொல்கிறார்கள்.

நாங்கள் இதற்கு முன்னமே எழுந்திருந்து பலகாலும் உன் பேர்பாடி, ஒவ்வொரு பாகவதர்களாக எழுப்பி, உன் வாயில் காப்போர்களை அண்டி அனுமதி பெற்று, நந்த கோபர், யசோதை ஆகியோர்களை எழுப்பி, உன் பிராட்டியை எழுப்பி நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை வந்து சேர்ந்திருக்கிறோம்! ப்ரபத்தி என்பது எல்லாம் அவன் அருள் என்று சும்மாக் கிடைப்பதல்ல, அதன் அளவில் அதுவும் ஒரு போராட்டமே! என்று குறிப்பால் உணர்த்துகிறாள். இப்படி நாங்கள் கஷ்டப்பட்டு உன்னை அடைந்திருக்கிறோம். இப்படி நாங்கள் கஷ்டப்பட நீயன்றோ காரணம்! ஆகையால் இப்படி நாங்கள் வந்ததை நீ ஆராய்ந்து, அறிவுற்று பார்த்தால், அருளுவாய் என்று சொல்கிறாள். இன்னும் இவர்கள் தாம் வந்த காரியத்தை சொல்லவில்லை. அதை சிற்றஞ் சிறுகாலே பாட்டில் வைத்தார்கள். இங்கே எழுந்து வந்து நாங்கள் வந்த காரியத்தை ஆராய வேண்டும் என்று ப்ரார்திக்கிறார்கள்.


திருப்பாவை (24)

அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி* சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி*
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி* கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி* குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி* வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி*
என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்* இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய்.

அன்றும் இன்றும் என்றென்றும் என்று முக்காலத்தையும் ஒரு பாசுரத்தில் ஆண்டாள் அடக்கி விட்டாள். இதற்கு முந்தைய பாசுரத்தில் சீரிய சிங்காதனத்தில் அமர்ந்து யாம் வந்த காரியத்தை ஆராயவேண்டும் என்று கேட்ட ஆண்டாள், அதன் படியே பகவான் படுக்கையறையினின்று எழுந்து வந்து சபா மண்டபத்துக்கு நடக்கவும், அவன் நடையழகை ரசித்து அனுபவிக்கிறாள். பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையாயிற்றே இவள்! அதனால் அவரது பல்லாண்டு பாசுரத்தையும் விஞ்சி நிற்கும் தன்மையாய் இங்கே பகவானுக்கு மங்களாசாசனம் செய்கிறாள்!

அதென்னவோ ஆண்டாளுக்கு இந்த த்ரிவிக்ரமாவதாரத்தின் மீது ஒரு அதீத ப்ரேமை. திருப்பாவையை ஆரம்பிக்கும் போதும் ஓங்கி உலகளந்த உத்தமன் என்றாள். நடுவில் பதினேழாம் பாசுரத்தில், அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே! என்றாள். இங்கே அன்றிவ்வுலகம் அளந்தாய் என்று த்ரிவிக்ரமனை மூன்று முறை அனுசந்தித்திருக்கிறாள்.

அன்று மஹாபலியை அடக்க மூன்று உலகத்தையும் ஈரடிகளால் அளந்தாய். நடந்த கால்கள் நொந்தனவோ எனும்படியாக அந்த பாதங்கள் காடுமேடுகளெல்லாம், துஷ்டர்கள் சிஷ்டர்கள் மீதெல்லாம் படர உலகளந்தாயே! அந்த திருப்பாதங்கள் போற்றி! ஆஸ்ரித விரோதிகளான ராவணாதிகளை அவர்கள் இடத்திற்கே சென்று ஜெயித்தாயே ! உன் திறல் போற்றி! அசுரன் சகடத்தில் ஆவேசித்த போது, சகடத்தை பொன்ற உதைத்தாயே! ‘தாயுங்கூட உதவாத தஸையிலே அனாயாஸேன திருவடிகளாலே ஸகடாசுரனை அழித்த புகழ்!’ என்று பூர்வாசார்யர்கள் போற்றுகிறார்கள்.

வத்ஸாசுரன், கபித்தாசுரன் எனும் இரு அரக்கர்கள் கன்றுக்குட்டியாகவும், விளா மரமாகவும் வந்து நிற்க, கன்றையே கோலாகக்கொண்டு விளாமரத்தை அடித்து இரண்டு அரக்கர்களையும் முடித்தான். மாரீசனைப்போல் உயிர்பிழைத்துப் போக விடாமல் வருகிற அரக்கர்களையெல்லாம் மிச்சம் வைக்காமல் அழித்தான். ஆனால் இவர்களுக்கோ வயிறுபிடிக்கிறது – கவலையுறுகிறார்கள். ‘ஸத்ருவையிட்டு ஸத்ருவையெரிந்தால் ஸங்கேதித்து வந்து இருவருமொக்க மேல்விழுந்தார்களாகில் என் செய்யக்கடவோம்’ என்று பதைத்தார்களாம். இந்த அரக்கர்களை அழித்த வ்ருத்தாந்தத்தை ஆசார்யர்கள் இப்படி அனுபவிக்கிறார்கள், கன்றை பிடித்துக் கொண்டு தானும் சுழன்று கன்றை வெகுவேகமாக விட்டெறிந்தானாம் – அப்போது ஒரு காலை குஞ்சித்த பாதமாக தூக்கியபடியால் சிவந்த பாதங்கள் கண்ணில் பட, கழல் போற்றி என்றார்கள்.

அடுத்து அவன் குண விசேஷத்தை சொல்கிறார்கள். இந்த்ர பூஜையை க்ருஷ்ணனுக்கு செய்தது பிடிக்காத இந்திரன், ‘கையோயுந்தனையும் வர்ஷிக்க’ என்றபடி விடாது மழை பொழிவிக்க, கண்ணன் கோவர்த்தன கிரியை குடையாக பிடித்து கோபாலர்களை காத்தான். ஆஸ்ரிதர்களுக்குள் விரோதமேற்பட்ட காலத்தில், தனது ஆந்ருஸம்ஸய குணம் வெளிப்பட (பெருந்தன்மையுடனான கருணை), இந்த்ரனை அழிக்கப்புகாமல் பொறுத்தான். அந்த குணம் போற்றி என்று பாடுகிறார்கள்.

பல்லாண்டு ப்ரபந்தத்தில் பெரியாழ்வார், வடிவார் சோதிவலத்துறையும் சுடாராழியும் பல்லாண்டு என்பது வரை சொன்னவர் ஐயகோ! நம் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறதே! என்று முகத்தை திருப்பிக்கொண்டாராம். படைபோர் புக்குமுழங்கும் ‘அப்’பாஞ்சசன்னியமும் பல்லாண்டே! என்றார். முகத்தை திருப்பிக்கொண்டு ‘அந்த’ பாஞ்சசன்னியமும் பல்லாண்டு என்று சொன்ன பக்த சிரோமணி அவர். அவர் மகளான ஆண்டாள், இங்கே அதே பாவத்தில், பகைவரை வென்று கெடுக்கும் வேல் போற்றி!
என்று அவன் ஆயுதத்தை போற்றுகிறாள். அவன் புகழை வேலுக்கும் ஏற்றிச் சொல்கிறாள். கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரனல்லவா! அதனால் இவனும் கூர்வேல் பிடித்த கையன் தான்.

பகவானின் நடையழகை ரசித்தபடி பாடிவந்த ஆண்டாள், முத்தாய்ப்பாக ‘உன் சேவகமே யேத்திப்பறை கொள்வான் வந்தோம் இன்று இரங்கு’ என்று சொல்லி முடிக்கிறாள். இப்படி உன்னை போற்றி பாடுவதையே பரம ப்ரயோஜனமாக கொள்ள வந்தோம், நீ அதற்கு இரங்கி அருளுவாய் என்று கேட்டு முடிக்கிறாள்.


திருப்பாவை (25)

ஒருத்தி மகனாய்ப் பிறந்து* ஓர் இரவில்- ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த* கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்* நெருப்பு என்ன நின்ற நெடுமாலே!,* உன்னை- அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில்*
திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி* வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்.

கண்ணன் ஒரு அதிசய பிறவி! ஆலமாமரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய் ஞாலமேழும் உண்ட மாயன் அவன்! அவன் பிறப்பிலேயே எத்தனை மாயங்கள்! ஆண்டாள் சென்ற ‘அன்றிவ் வுலகம் அளந்தாய்!” பாசுரத்தில் அவன் செய்த அசாத்யமான காரியங்களை போற்றினாள். இந்த பாசுரத்தில், அன்றும் இன்றும் என்றும் வேறெங்கும் நடக்க முடியாததான பகவத் சேஷ்டிதத்தை பாடுகிறாள்.

வேறெந்த தெய்வமாவது இப்படி கொஞ்சமும் அஸூயைப்படாமல், கர்ப்ப வாசம் செய்திருக்கிறார்களா? அதுவும் பன்னிரு திங்கள் கர்ப்ப வாசம் செய்து கண்ணன் பிறந்தான். இப்படி ஒரு தெய்வம் செய்யலாமா என்றால், கர்ம வசத்தாலே ஜீவர்களான நமக்கு கர்ப்ப வாசம் நேருகிறது. க்ருபா வசத்தாலே அவனுக்கு கர்ப்ப வாசம் நேர்ந்தது. ‘நம்முடைய கர்மம் நம்மோடே அவனை ஸஜாதீயனாக்கும்! அவனுடைய க்ருபை நம்மை அவனோடே ஸஜாதீயனாக்கும்!” அதாவது கர்ம வசத்தால் நாம் எடுக்கிற பிறவி அவனை நம்மிடமிருந்து விலக்குகைக்கு காரணமாயிருக்கும். அவன் க்ருபா வசத்தால் எடுக்கிற பிறவி நம்மை அவனிடம் சேர்க்கைக்கு காரணமாயிருக்கும்.

ஒருத்தி மகனாய் பிறந்து – தசரதன் தவம், யாகங்களியற்றி நான்கு புதல்வர்களை பெற்றான். இங்கே தேவகி, வசுதேவர், யசோதை, நந்தகோபர் என்று நால்வர் இயற்றிய தவத்துக்கு ஈடு இணையற்ற ஒரே யாதவ ரத்னமாக கண்ணன் பிறந்தான். வளர்ந்து பெரியவனாகிய பின் தான் ஸ்ரீராமன் பித்ருவாக்ய பரிபாலனம் செய்தான். இங்கே க்ருஷ்ணனோ பிறந்த சில மணிக்குள்ளே, தன் சங்க சக்ராதி அம்ஸங்களை மறைத்துக்கொள்ள தேவகி ப்ரார்த்திக்க உடனே அப்படி தன் அம்சங்களை மறைத்துக்கொண்டு அவள் இட்ட வழக்கை செய்து காட்டினான். என்னே அவள் பெருமை!

ஓரிரவில் ஒருத்தி மகனாய் – அந்தகாரமான, பயங்கரமான அந்த ராத்திரி நினைவுக்கு வருகிறது. சிறைச்சாலையில் பிறந்து, பிறந்த சில மணித்துளிக்குள்ளாகவே, கொடும் இரவில், கொட்டும் மழையில், பெருக்கெடுத்து ஓடும் ஆற்று வெள்ளத்தைக் கடந்து வேறொருத்திக்கு மகனாய் போய் சேர்ந்தானே! என்ன ஆச்சர்யமான சம்பவங்கள்! பூர்வாசார்யர்கள் இதை வேறு விதமாகவும் அனுபவிக்கிறார்கள்.

‘நாய்க்குடலுக்கு நறு நெய் தொங்காதாப்போலெ, கம்ஸாதிகள் தண்மை ஸூதிகாக்ருஹத்திலே ஓரிரா தங்கவொட்டிற்றில்லை என்கை’ என்றார்கள். கம்ஸன் முதலான அரக்கர்களின் சமீபம், தெய்வீகமான இந்த குழந்தையை, ப்ரசவிக்கிற அறையில் ஒரு ராத்திரி கூட தங்க விடவில்லை. உடனே குழந்தையை இடம் மாற்றியாக வேண்டியதாகி விட்டது.

அதோடு, முதலில் சொன்ன ஒருத்தி தேவகி. இப்போது சொல்கிற ஒருத்தி யசோதை. யசோதைக்கு ஈடு இணை உண்டோ! ஈடு இணையற்ற அத்விதீயமானவள் அவள். தேவகி கண்ணனை பிறந்த குழந்தையாக பார்த்தாள். யசோதையோ அவன் வளர்ந்து, அவன் பால லீலைகளையெல்லாம், தொல்லையின்பத்தையெல்லாம் திகட்ட திகட்ட அனுபவித்தவள். அவள் பெருமைக்கு ஈடே இருக்க முடியாது.

தீயவனான கம்சனின் விஷப்பார்வை கண்ணன் மீது பட்டு விடக்கூடாதே, நல்லவர்களான தேவர்களும் இவன் இருக்குமிடம் தெரிந்தால் அவர்களெல்லாம் இவனிடம் ப்ரேமை கொண்டு கூடி வருவர், அதனால் இவனிருப்பது வெளித்தெரிந்து விடுமே என்று யாரும் பார்க்காமல் கண்ணனை நிலவரையில் வைத்து வளர்த்தாளாம் யசோதை. எப்படி நம் மத்தியிலேயே, சேதன அசேதனர்களுக்குள்ளேயே அந்தர்யாமியாய் அவன் இருந்தாலும் மறைந்து இருக்கிறானோ, அதைப்போல் ஆஸ்ரிதர்கள் மத்தியில் பிறந்து வளர்ந்தாலும் அவன் மறைந்தே இருந்தானாம். இது அவனுடைய சங்கல்பம் – அதைத்தவிர வேறு விளக்கங்கள் இல்லை. ஓரிடத்தில் பிறப்பதும், தாயை தவிக்க விட்டு, வேறொரிடத்துக்கு போவதும், உலக கண்களிலிருந்து மறைந்திருப்பதும், பின் வெளிவந்து யுத்தம் செய்வதும் எல்லாம் அவன் சித்தம் – சங்கல்பம்.

இப்படி கண்ணனை நினைக்கும் போதே கம்ஸனையும் நினைக்க வேண்டியிருக்கிறதே! அது அவன் செய்த புண்ணியம்! ஆண்டாள் கம்சனை எண்ணி, ‘தரிக்கிலனாகித் தான் தீங்கு நினைந்த’ என்று கண்ணன் ஆய்ப்பாடியில் இருக்கிறான் என்று தெரிந்தவுடன் ஓரிடத்தில் தன் உடலை தரிக்க முடியவில்லையாம் கம்சனுக்கு. உடலும் தவிக்க, உள்ளமும் தவிக்க தரிக்க முடியாமல் துடித்தானாம்.

அவனுக்கு தங்கையாய் பிறந்த பாவத்துக்கு, தேவகியின் வயிற்றில் பயாக்னியை வைத்தான். கண்ணன் பிறந்து அந்த அக்னியை கம்ஸன் வயிற்றுக்கு மாற்றி விட்டான். என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் தனக்கு தானே தீங்கு செய்து கொண்டான். அவன் கண்ணனை அழிக்க வேண்டும் என்கிற கருத்தை பிழையாக்கி, (எண்ணத்தில் மண் விழ வைத்து), தானே எல்லாம் என்று நினைத்து நிர்பயமாக இருந்த அரக்கன் வயிற்றில் பயாக்னியை உண்டு பண்ணி நெருப்பென்ன நின்றான் கண்ணன். சின்ன குழந்தையாய் இருந்தாலும் கம்ஸனுக்கு நெருப்பென்ன நெடுமாலாய் நின்றானாம் கண்ணன்.

நெடுமாலே! ‘பண்டே வ்யாமுக்தனான உன்னை அர்த்திக்கையாலே பிச்சின்மேலே பிச்சேற்ற வந்தோம்!” என்று அவன் மீது இவர்களுக்கும், இவர்கள் மீது அவனுக்கு வியாமோகம் அதிகம். அதனால் உன்னை உன்னிடமிருந்து உன்னையே அருத்தித்து பெற வந்தோம். இப்போது ஆண்டாள் அவன் சங்கல்ப விசேஷத்தை நினைத்து பார்த்து, ‘பறை தருதியாகில்’ என்று எங்களுக்கு பறையை – கைங்கர்ய ப்ராப்தியை தருவதென்று சங்கல்பித்தாயானால், உன் சங்கல்பம் இருந்து நீ கொடுத்தால், வருத்தம் தீர்ந்து மகிழ்வோம் என்கிறாள்.

உன் சங்கல்பம் இருந்தால், நீ எங்களுக்கு கைங்கர்ய ஸ்ரீயை கொடுத்தால், நாங்கள் உன்னையும் உன் பிராட்டியான மஹாலக்ஷ்மியையும் திருத்தக்க செல்வமாக, என்றும் நிலையான செல்வமாக பெற்று, உங்களுக்கு சேவகம் செய்து, இதுகாறும் பிறவிகள் பல எடுத்த வருத்தமும் தீர்ந்து, நித்யமான பரமானந்த நிலையை அடைந்து மகிழ்வோம் என்று சொல்கிறாள்.


திருப்பாவை (26)

மாலே! மணிவண்ணா! மார்கழி நீர் ஆடுவான்* மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்*
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன* பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே*
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே* சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே*
கோல விளக்கே கொடியே விதானமே* ஆலின் இலையாய் அருள் ஏலோர் எம்பாவாய்.

பூவைப் பூவண்ணா! நீ சீரிய சிங்காதனத்திருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்! என்று இவர்கள் கேட்டதற்கேற்ப அவனும் தன் நடையழகைக் காட்டி நடந்து வந்து சிங்காதனத்தில் அமர்ந்து, ‘பெண்களே! நீங்கள் வந்த காரியம் என்ன?’ என்று வினவுகிறான். இந்தப் பாட்டில் நோன்புக்கு தேவையான உபகரணங்களையெல்லாம் அவனிடம் யாசிக்கிறார்கள். அதுவும் மாயனே! நாராயணா! உலகளந்தவனே என்றெல்லாம் கேட்டால் அவன் மேன்மைதான் வெளிப்படுகிறது. அவன் பெரியவன் என்ற எண்ணம் ஏற்பட்டு அஞ்சி வாயில் வார்த்தைகளே வருவதில்லை.

அதனால் மாலே! என்றாள். தன் அத்தனை வியாமோஹத்தையும் – பித்து பிடித்த அன்பத்தனையும் கலந்து மாலே! என்றாள் இந்த ஒற்றைச் சொல்லில் அவன் செளலப்யம் – சுலபத்தன்மை, தோளோடு தோள் நின்று விளையாடிய கண்ணனை உருவகிக்கிறாள். இவர்களுக்கு மட்டுமா பித்து? அவனும் தான் மயங்கிக் கிடக்கிறான். கண்ணன், வந்திருக்கிற இவர்களது மார்பகங்களையும், இடையையும், முக அழகையும் பார்த்துக்கொண்டே மயங்கி நின்று விட்டானாம். அதாவது இவர்களது பக்தியையும், வைராக்கியத்தையும் , ஞானத்தையும் கண்டு அவனே ஒரு கணம் மயங்கி நின்று விட, நாங்கள் வேண்டுவன கேட்டியேல் என்று அவனை உலுக்கி எழுப்புகிறார்கள். எங்களுக்கு எத்தனை உன்னிடம் அன்பிருக்கிறதோ அதை விட பலமடங்கு அன்பை நீ எங்களிடம் வைத்திருக்கிறாய் என்று நாங்கள் தெரிந்து கொண்டோம் என்றாள்.

நாங்கள் வேண்டுவன கேட்டியேல், இந்த உலகமனைத்திலும் சிஷ்டர்களுக்கு ஆறுதலையும், துஷ்டர்களுக்கு பயத்தையும் உண்டு பண்ணக்கூடியதான உன் பாஞ்ச சன்னியம் போன்ற சங்குகள் வேண்டும். பெரிதான பேரிகைகள் வாத்தியங்கள் வேண்டும். பல்லாண்டு இசைக்கக் கூடிய முக்தர்கள் எங்களுக்கு ஆசார்யர்களாக வர வேண்டும். விடியற்காலை ஆதலால் இருள் விலக்க அழகான விளக்குகள் வேண்டும். இன்னும் நோன்புக்கு வந்து கொண்டிருக்கிற பேர்களுக்கு தொலைவிலேயே இடத்தை அடையாளம் சொல்லத்தக்க கொடிகள் வேண்டும். இவற்றையெல்லாம் குடையாகக் காக்க கூடிய மேல்விதானம் வேண்டும் என்று ஒரு பெரிய பட்டியலையே அபெக்ஷிக்கிறார்கள்.

கண்ணன் கேட்டானாம், இதெல்லாம் வேண்டும் என்று உங்களுக்கு எப்படி தெரியும்? இதெல்லாம் மேலையார் செய்வனகள்! எங்களுடைய பூர்வாசார்யர்கள் செய்தபடி எங்களுக்கு தெரியும் என்றார்கள்.
வியாக்கியானத்தில் இந்த இடத்தை அழகாக விளக்கியிருக்கிறார்கள். இவர்கள் கேட்டபடி தன்னுடைய சின்னங்களையெல்லாம் பெருமான் கொடுக்க ஆரம்பித்தானாம்.

என்னிடம் பாஞ்சசன்னியம் ஒன்றுதான் இருக்கிறது, அதன் ப்ரபாவங்களுக்கு ஈடாக இன்னொன்றில்லை, அதை எடுத்துக்கொள்ளுங்கள். நான் உங்களுடன் கூத்தாடின பறை இருக்கிறது அதை எடுத்துக் கொள்ளுங்கள். பல்லாண்டு பாடின விஷ்ணு சித்தரே இருக்கிறார். அந்த பெரிய ஆழ்வாரை ஆசார்யானாக வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு நப்பின்னையே கோல விளக்காக உங்களை காட்டித் தருகிறாள். அவளை எடுத்துக் கொள்ளுங்கள். என் கருடன் ஆரோகணித்த கொடி இருக்கிறது அதை எடுத்துக் கொள்ளுங்கள். விதானத்துக்கு என் அத்தவாளத்தையே (உத்தரீயத்தை) எடுத்துக் கொள்ளுங்கள். இங்கே பூர்வாசார்யர் சொல்கிறார், அவனுடைய விதானம் ஆதிசேஷன் அல்லவா? அதை ஏன் தரவில்லை என்றால், ஆதிசேஷன் பெருமாளே சொன்னாலும் ‘தன்னையொழிய ஓரடியிடமாட்டாதவனாகையாலே!’ என்று அவனை விட்டு விலகமாட்டானாம். அதனால் தன் உத்தரீயத்தையே தருகிறேன் என்றானாம்.

மணிவண்ணா! நீ தருவதாகச் சொல்வதெல்லாம் ஒன்று தானே இருக்கிறது. எங்களுக்கு இதுமாதிரி பலப்பல வேண்டும் என்று இவர்கள் கேட்க, அவன் இல்லாததை எப்படி தருவது என்று திகைக்க, இவர்கள் சொல்கிறார்கள். உன்னிடம் இல்லாதது என்று ஒன்று உண்டா? ஆலினிலையாய்! ஞாலமேழும் உனக்குள் கொண்டு ஆல இலையில் சிறு குழந்தையாக துயில் கொண்டவனாயிற்றே நீ! இருப்பது இல்லாதது எல்லாவற்றையும் கடந்து ‘இல்லாததையும்’, ‘இருப்பதையும்’ உண்டு பண்ணுபவனாயிற்றே நீ, உன் அருளாலே எல்லாம் முடியும் என்று சொல்கிறார்கள்.

இங்கே நோன்பு நோற்பது என்பது பகவானுக்காக பக்தர்கள் செய்யும் கைங்கர்யமே ஆகும். இத்தை பூர்வாசார்யர்கள் சொன்னபடி செய்வது சிஷ்டாசாரம். சங்கங்கள் அவன் ஜெயத்தை சொல்லி இவர்களது அனன்யார்ஹ சேஷத்வத்தை குறிக்கும். பறை பரதந்த்ரீயத்தை குறிக்கும். பல்லாண்டிசைப்போர் சத்சங்கத்தை குறிக்கும். கோல விளக்கு பாகவத சேஷத்வத்தைக் குறிக்கும். விதானம், தன்னாலே தனக்காக எதுவும் இல்லை என்று போக்த்ருத்வ ஞானத்தைக் குறிக்கும். ஈஸ்வரனிடமிருந்து இந்த
ஐஸ்வர்யங்களை எல்லாம் அருள் என்று யாசிக்கிறார்கள்.


திருப்பாவை (27)

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா* உன்தன்னைப்- பாடிப் பறைகொண்டு யாம் பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்* சூடகமே தோள்வளையே தோடே செவிப் பூவே*
பாடகமே என்று அனைய பல் கலனும் யாம் அணிவோம்* ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு*
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்* கூடியிருந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்.

‘பாலன்ன வண்ணத்துன் பாஞ்சசன்னியம் போல்வன.. ஆலினிலையாய் அருள்’ என்று இதற்கு முந்தைய பாசுரத்தில் பகவானிடம் ஸ்வரூப ஸித்தியை ப்ரார்திக்க, அவனும் இவர்களுக்கு தன்னையே போன்றதான ஸ்வரூபத்தை, சாரூப்ய நிலையை அருளுகிறான். இவர்கள் அதைவிட உச்ச நிலையான சாயுஜ்ய நிலையை இந்த பாசுரத்தில் கேட்கிறார்கள். நோன்பின் கடைநிலையை நெருங்கிவிட்ட இவர்கள் அவனிடம் சென்று சேர்வதான கல்யாண நிலையை – ஜீவனும் பரமனும் இணையும் கல்யாணத்தை – எண்ணி மகிழ்ந்து தம்மை தயார் படுத்திக் கொள்கிறார்கள்.

நெய்யுண்ணோம், பாலுண்ணோம் என்று சொன்னவர்கள் மூட நெய் பெய்து முழங்கை வழிவார உன்றன்னைப் பாடிப்பறை கொண்டு கூடியிருந்து உண்போம் என்று நோன்பினால் உன்னை அடைகிறோம் – அதனால் நோன்பின் பூர்த்தியாக உன் ப்ராஸாதங்களை நீ அருளியவற்றை அனுபவிக்கிறோம் என்கிறார்கள்.

கூடாரை வெல்லுஞ் சீர்க் கோவிந்தா! ஆண்டாள் இந்த பாசுரத்தைச் சேர்த்து இனி வரும் இரண்டு பாசுரங்களிலுமாக கோவிந்த நாமத்தை மூன்று முறை அனுசந்திக்கிறாள். கூடாரை என்றால் – இவனை வணங்கமாட்டேன் என்று த்வேஷிக்கிற பேர்களை வெல்லுகிற கோவிந்தா என்கிறாள். அப்படியானால் த்வேஷிக்காத பேர்களிடம் தோற்பான் என்று அர்த்தமாகிறதே என்றார்கள் பூர்வாசார்யர்கள். சரி த்வேஷமும் இல்லை, அத்வேஷமும் இல்லை… அவனை வணங்கவும் இல்லை, இகழவும் இல்லை… இப்படி இருப்பவர்கள் கதி? ஆண்டாள் இந்த பாசுரத்தின் முதல் ஒற்றை வரியில் பற்றியுமே சொல்லி விடுகிறாள்.

கூடாரை என்றால் வெறுக்கிற பேர்வழிகள். வெறுப்பாலேயே சதா அவனைப்பற்றி நினைத்துக் கொண்டிருப்பவர்கள். ஹிரண்யாக்ஷன் – ஹிரண்யகசிபு, ராவணன் – கும்பகர்ணன், சிசுபாலன் – தந்த வக்ரன் என்று வெறுப்பின் மூல முடிச்சாக, ஆணி வேறாக – இதற்கு மேலாக வெறுக்க முடியாது என்ற அசுரேந்த்ரர்களாக, த்வேஷ திலகமாக இருப்பவர்களை தோற்கப்பண்ணுகிறானாம்! அவர்கள் கருத்தைப் பிழைப்பித்து வெல்கிறான்.

கூடாத பேர்களை வெல்லுவான் என்றால், அவனை விரும்பிக் கூடுகிற பேர்களிடம் தோற்றுப்போகிறான் என்றுதானே ஆகிறது. பாண்டவர்கள் சரணாகதி செய்தார்கள். அவர்களுக்காக அவன் இரங்கி வந்து தூதனாக தாஸனாக அவர்களுக்கும் கீழ்நிலையை உகந்து ஏற்றவனல்லவா!

சரி வெறுக்கவும் இல்லை, விரும்பவும் இல்லை அவர்களுக்கு? என்றால் அதற்குத்தான் கோவிந்தா என்ற பதத்தை ஆண்டாள் ப்ரயோகித்தாள். கோவிந்த: என்ற பதத்திற்கு இப்படி விளக்கம் சொல்கிறார்கள்: கோ என்றால் பசு. பசுதனம் லபதே விந்ததி இதி கோவிந்த: என்றார்கள். பசுக்கள் அவனை எங்களை ரக்ஷிக்க வா.. எங்கள் பின்னால் வா என்று அழைக்கவில்லை. அப்படி வருவதால் நாங்கள் கேட்காமலே வந்தாயே என்று கொண்டாடப் போவதுமில்லை. இப்படி இருக்கிற பசுக்கள் பின்னாடியும் போனானே! அவைகள் கேட்காமலே ரக்ஷித்தானே என்று அந்த அர்த்ததில் ரக்ஷிப்பவன் கோவிந்தன் – வெறுப்பில்லாமல் இருப்பதே போதும் என்று கொண்டிருப்பவன் கோவிந்தன் என்று கோவிந்தா என்ற பதத்தை ஆண்டாள் ப்ரயோகித்தாள்!

அடுத்து சொல்கிறாள், கோவிந்தா! உன்றன்னைப் பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசு என்றாள். கோவிந்தா என்று ஒருமுறை சொன்னாலே நாடு புகழும் பரிசு கிடைக்குமாம். இவர்கள் இவனை பாடிப் பறையை – கைங்கர்ய பலப்ராப்தியை சம்மானமாகப் பெற்றதோடு அல்லாமல் அதற்கு மேலாக நாடு புகழும் பரிசு வேண்டும் என்று கேட்கிறார்கள். நாங்கள் பாடியதோடு அல்லாமல் நாடே எங்களை பாடுமாறு ஒரு பரிசு வேண்டும் என்கிறார்கள். சரி அப்படி என்ன வேண்டும் என்று அவன் யோசிக்க ஒரு பெரிய பட்டியலையே கொடுக்கிறார்கள்.

சூடகமே, தோள்வளையே, தோடே, செவிப்பூவே, பாடகமே என்றனைய பல்கலனும் – கேசாதி பாதமாக எல்லா அங்கங்களிலும் அணியும் பல்கலனும் நீ தரவேண்டும். சூடகம் என்னும் கைவளை, தோள்வளை, தோடு, செவிப்பூ என்னும் செவிக்கு மேலே அணிகிற நகை, பாடகம் என்றால் பாதத்தில் அணிகிற கழற்காப்பு என்று இவற்றை தரவேண்டும் என்கிறார்கள். இவர்கள் பரமனை நெருங்கவும், அவனும் இவர்களும் வியாமோஹத்தால் ஒருவரை ஒருவர் அணைக்க, முதலில் ஸ்பர்சிக்கும் அணி கைவளை. அடுத்து அவன் இவர்களை நெஞ்சார, அவனை விட்டு பிரிந்ததால் நலிந்த தோள்களை அணைக்க அங்கே தோள்வளை என்ற நகையை அணிகிறார்கள். தோடு என்ற காதில் அணியும் ஆபரணத்தை அவன் தானே வந்து அணிவிக்க வேண்டும் என்று ஆசைப்படுவனாம். செவிப்பூ என்ற காதணி, அவன் நாசியினால் முகர்ந்து பார்த்து உகப்பனாம். இப்படி இவர்களை ஆலிங்கனம் பண்ணி, விரஹத்தால் இவர்கள் காலை பிடிக்க அங்கே பாடகம் அணிந்தார்கள். இப்படி எல்லா வகையிலும் இதை அவன் ரசிப்பானே… இதை அவன் உகப்பானே என்று எண்ணி எண்ணி அணிகிறார்கள்.

இதற்கு உட்பொருளாக, சூடகம் என்கிற கைவளை இவர்களது பக்திக்கு காப்பு – ரக்ஷை. தோள்வளை என்பது சமாஸ்ரயணம் – தோளில் பதித்த சங்க சக்ர முத்திரைகள் – பாகவதனுக்குரிய திரு இலச்சினைகள். தோடு என்பது திருவஷ்டாக்ஷர மந்திரம். செவிப்பூ என்பது த்வய மந்திரம். பாடகம் என்பது சரம ஸ்லோகத்தைக் குறிக்கும்.

கோவில்களில் அர்ச்சா மூர்த்தியாக பெருமானை சேவிப்பதற்கு ஒரு முறை இருக்கிறது. முதலில் அவன் திருமுகத்தைப்பார்த்து ஓம் நமோ நாராயணாய: என்கிற திருவஷ்டாக்ஷர மந்திரத்தை த்யானிக்க வேண்டும். பிறகு திரு உறையும் மார்பைப் பார்த்து ஸ்ரீமன் நாராயண சரணெள சரணம் ப்ரப்த்யே! ஸ்ரீமதே நாராயணாய நம: என்கிற த்வய மந்திரத்தை அனுசந்திக்க வேண்டும். பிறகு திருப்பாதங்களை தரிசித்து ‘ஸர்வ தர்மான் பரித்யஜ்ய: மாமேகம் சரணம் வ்ரஜ: அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசு ச:’ என்று அவன் நென்னலே வாய்நேர்ந்த சரம ஸ்லோகத்தை ஸ்மரிக்க வேண்டும். இப்படி எல்லாவற்றையும் செய்து, ஸ்ரீவைஷ்ணவனுக்கு ஆபரணங்களாகக் கொண்டு இவற்றை அணிந்து எங்களுடைய ஸ்வாபாவிகமான ஜ்ஞான, பக்தி, வைராக்ய லக்ஷணங்களுடன் உன்னிடம் வருவோம் என்கிறாள் ஆண்டாள்.

ஆடையுடுப்போம் என்று சொல்லும்போது, இவர்கள் இதற்கு முன் ஆடை உடுத்தாமல் இல்லையே என்றால், இப்போது இவர்களுக்கு உயர்ந்த நிலை வந்துவிட அதைக் கொண்டாட, உடுத்து களைந்த நின் பீதகவாடை என்று பெரியாழ்வார் பாடியதுபோல், அவனுடைய ஆடையையும் இவர்கள் எடுத்து அணிகிறார்கள். மேலே சொன்ன அலங்காரங்களுக்கெல்லாம் அடிப்படையாக அவன் இவர்களுக்கு கொடுத்த சேஷத்வ ஞானத்தை ஆடையாக அணிவோம் என்பது உட்பொருள்.

அதன்பின்னே பால்சோறு, மூட நெய்பெய்து முழங்கை வழிவார என்று வ்ரத பூர்த்தியாக, பால் சோறும், முழங்கை வரை வழியும் அளவுக்கு நெய்யுமாக அவனுக்கு சமர்பித்து தாங்களும் அனுபவித்து கூடியிருந்து குளிர்வோம் என்கிறாள். பாலில் சோறு கலந்தார்போல், பாலில் நெய் கலந்தார்போல் என்று ஒன்றோடு ஒன்று கலந்து புதிய நறுசுவையுடன் உண்போம். அவனில் நாமும், நம்மில் அவனுமாக கலந்து கரைந்து, அஹமன்ன என்று நாம் அவனுக்கு உணவாகவும், அஹமன்னாத: என்று நமக்கு அவன் உணவாகவும் உண்டு களித்து – உன்னுடன் நாங்கள் சாயுஜ்ய பதவி அடைந்து நீயும் நாமுமாக கலந்து என்றென்றும் புதியதாக நித்யமாக கூடியிருந்து இன்பத்தை பெறுவோம் என்று ஆண்டாள் முடிக்கிறாள் .


திருப்பாவை (28)

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்* அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து* உன்தன்னைப்-
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்* குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா* உன்தன்னோடு-
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது* அறியாத பிள்ளைகளோம் அன்பினால்* உன்தன்னைச்-
சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே* இறைவா நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய்.

கோவிந்தா! உன்றன்னைப் பாடிப்பறை கொள்ள வந்தோம் என்று சொன்ன ஆண்டாளிடம், க்ருஷ்ணன் லீலா விநோதனாக விளையாட்டுப் பேச்சு பேசுகிறான். அப்படி நான் உங்களுக்கு நீங்கள் கேட்டதையெல்லாம் அளிக்கிறேன், பதிலுக்கு நீங்கள் என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று கேட்க ஆண்டாள் தனது ஆகிஞ்சன்ய குணத்தை (கைமுதல் இல்லாமையை) வெளிப்படுத்தி தனது நிலையை விளக்குகிறாள். இந்த பாசுரம் மிக உயர்ந்த அர்த்த செறிவு கொண்டது. வைஷ்ணவத்தில் ரஹஸ்ய த்ரயங்களுள் ரத்னமாக விளங்கும் த்வய மந்திரத்தை இந்த பாசுரத்துடன் சாம்யப் படுத்தி பூர்வாசார்யர்கள், இந்த பாசுரமும், ‘சிற்றம் சிறு காலே’ பாசுரமும் த்வய மந்திரத்தின் இரு பாகங்களை சொல்வதாக அருளியிருக்கிறார்கள்.

கறவைகள் பின்சென்று கானஞ் சேர்ந்துண்போம் என்றால், எங்களிடம் பெரிதாக ஆசார்ய சம்பத்தோ, சத் சங்க ப்ராப்தியோ இல்லை. நாங்கள் கறவைகள், பசுக்கள் பின்னாலே சென்று மாடு மேய்ப்பவர்கள். காட்டில் போய் சேர்ந்து உட்கார்ந்து உண்போம். பிறகு மாலையில் வீட்டுக்கு பசுக்களை ஓட்டி வருவோம். இப்படியே பொழுது போக்கினோம். எங்களுக்கு புண்ணியம் எது பாபம் எது என்று எதுவும் அறியாத பிள்ளைகளோம் என்றாள். சரி நீங்கள் தான் இப்படி, உங்கள் பூர்வர்கள் நல்ல காரியங்கள் ஏதாவது செய்திருக்கிறார்களா என்று கண்ணன் கேட்க, அப்படி எங்கள் குலத்திலேயே வழக்கமில்லை. எங்கள் குலம் அறிவொன்றுமில்லாத ஆய்க்குலம். இப்படியாக புண்ணியமோ, பாபமோ எதுவுமே இல்லை எங்களிடம்.

எங்களிடம் இருப்பதெல்லாம், யாதவ மணியாக நீ வந்து உதிக்கப் பெற்றோமே அந்த பேறு ஒன்றுதான் இருக்கிறது. உன்றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம். இவர்கள் புறத்தில் பார்க்க ஞான பக்தி யோகங்களெல்லாம் இல்லாதவர்களானாலும் இவர்களுக்கு ஒரு பெரும் சிறப்பு இருக்கிறது. ஸர்வஜ்ஞனான பகவான் ஸஹஜனாக இவர்களுடன் வந்து பிறந்தானே! அந்தப் பேறொன்று போதாதா? அறிவொன்று மில்லாத ஆய்க்குலம் என்று இவர்கள் ஆகிஞ்சன்யத்தை தெரிவித்தாலும், பகவானை உணர்ந்து கொண்டார்கள். அவனது செளலப்ய செளசீல்யாதி குணங்களை புரிந்து கொண்டார்கள். தெய்வத்தை தமக்குள் உணர்ந்தார்கள்.

கண்ணா, எங்களிடம் நீ குறை என்று பார்க்க ஆரம்பித்தாயானால் அது அளவிலடங்காமல் இன்னமும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இப்படி நீ எங்களை, எங்கள் தகுதியைப்பார்த்து நீ ஏற்றுக் கொள்ள நினைக்காதே! நீ எங்களோடு ஒருவனாக வந்து பிறந்த உனக்கேது குறை! குறைவொன்றுமில்லாத கோவிந்தா! எங்கள் அறியாமை பாதாளம் வரை ஆழமுள்ள பள்ளம் என்றால் அதையும் நிறைக்கக்கூடிய மலையளவு கருணை கொண்ட பர்வதமாகவன்றோ நீ இருக்கிறாய்! அதோடு நாங்கள் எதையாவது வைத்திருந்து அதை விட்டு விட்டு உன்னிடம் வந்தோம், நாங்கள் ஒரு தியாகத்தை செய்தோம், பதிலுக்கு நீ பரிசு கொடுத்தாய் என்று உன் கருணையிலே குறை காண்பதற்கு இடமில்லை. எல்லாமே உன்னுடையது. எங்களிடம் எதுவும் இல்லை. அதனால் உனக்கு அந்த குறையும் வரப்போவதில்லை. உன் கருணைக்கும் எங்கள் அறியாமைக்கும் நேராகிவிட்டது.

அதோடு உனக்கு வேறொரு நிர்பந்தமும் உண்டு – அது எங்களோடு உனக்கு உண்டான சம்பந்தம்! உன்றன்னோடு உறவேல்! நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது! – இனி அந்த உறவை அறுத்துக் கொள்ளவே முடியாது. எங்களை இந்த ஜகத்தில் வந்து பிறக்கப்பண்ணியவனே நீதானே! நீ காரணம்.. நாங்கள் காரியம். இது ஆத்ம சம்பந்தம். ‘நீ எங்கள் கையில் தந்த மூலப்ரமாணத்தில் முதலெழுத்தைப் பார்த்துக் கொள்ளாய்!” என்றார்கள் பூர்வாசார்யர்கள். என்னை ஆஸ்ரயித்தவனை நான் என்று கைவிடாமல் ரக்ஷிக்கிறேன் என்று சத்யம் செய்ததை நினைவு கொள் என்கிறார்கள்.

உன்னை எங்களுக்கு நடுவே பிறக்கப் பெற்ற புண்ணியம் தவிர வேறு எதுவும் இல்லை என்பது நன்றாக தெரிகிறது. ஆனால பாவங்கள்? இமைக்கிற பொழுதில் எண்ண முடியாத அளவுக்கு பாவத்தை சேர்த்துக் கொள்கிற ஜீவன் மனிதன். அப்படி ஏற்படுகிற பாபத்துக்கு அபராத க்ஷமாபனமாக சொல்கிறார்கள். அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச் சிறுபேரழைத்தனவும் சீறி அருளாதே! கோவிந்தா என்று கூப்பிட்டது வரைக்கும் நிறைய பாவங்களை செய்திருக்கிறோம். மஹதோ மஹீயனான உன்னை – பெரியவற்றுக்கும் பெரியவனான உன்னை எளிமையாக கோவிந்தா என்று சிறு பேர் கொண்டு அழைத்திருக்கிறோம். அழைத்தனவும் எனும் போது, இம்மாதிரி பலவாறும் குறைவுள்ள மனிதர்களோடு சமப்படுத்தி சிறு பேர் சொல்லி அழைத்திருக்கிறோம். இது அறியாமையாலும், பால்ய வயதினாலும், அன்பினால் ஏற்படுகின்ற சுவாதீனத்தாலும் ஏற்பட்ட பிழைகள், இவற்றைக் கண்டு கோபம் கொள்ளாமல் மன்னித்துவிடு என்று கேட்கிறார்கள்.

அடுத்து, எங்கள் குறைபார்க்காது, குறைகளை மன்னித்து, எங்களை ஏற்று இறைவா! நீ தாராய் பறை! என்றார்கள். இறைவா! என்ற பதத்தில் இவர்களது நைச்ய பாவம் வெளிப்படுகிறது. இதுவரை மாலே! மணிவண்ணா! கோவிந்தா! என்றெல்லாம் பல பெயர்கள் சொன்னவர்கள், இறைவா என்று அவன் இறைமையை சொல்கிறார்கள். நீ பெரியவன், நாங்கள் சிறியவர்கள். நீ காரியமாயிருக்க நாங்கள் காரணமாயிருப்பவர்கள். நாங்கள் சரீரமாயிருக்க நீ சரீரியாய் இருக்கிறாய். நீ இன்றி நாங்கள் இல்லை. உன் உடலில் நாங்கள் ஒரு சிறு பகுதியைப்போல. பாவங்களை தன் கை செய்தது, தன் கால் செய்தது என்று ஒருவன் சொல்லுவனோ! நீ உடமைக்காரன் – ஸ்வாமி! நாங்கள் உன் உடமை – சொத்து! ‘உடமையையிழக்கை உடையவனிழவன்றோ. அன்றி அந்த உடமைக்கிழவன்றே!’ என்றபடி நீ எங்களை இழந்தால் அது உனக்குத்தான் இழப்பே தவிர உன் சொத்தான எங்களுக்கு இழப்பில்லை. ஆதலால், குற்றம் குறைகளை மன்னித்து, பொருட்படுத்தாது, நாங்கள் விரும்புவதை அளித்து எங்களை ஏற்றுக் கொள் என்று கேட்கிறார்கள்.


திருப்பாவை (29)

சிற்றஞ் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து* உன்- பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்*
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்திற் பிறந்து* நீ- குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது* இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா* எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும்* உன்தன்னோடு-
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்* மற்றை நம் காமங்கள் மாற்று ஏலோர் எம்பாவாய்.

இது திருப்பாவையின் முத்தாய்ப்பான பாசுரம். இதற்கு அடுத்த பாசுரம் சாற்றுமுறையாக, வாழ்த்துரையாக ஆண்டாள் பாடியது. இந்த பாசுரம் வரை தன்னை ஆய்ப்பாடியைச் சேர்ந்த பெண்பிள்ளையாக எண்ணிக்கொண்டு ஆண்டாள் பாடினாள். அடுத்த பாசுரத்தில் பெரியாழ்வாரின் பெண்ணாக, திருப்பாவை பாசுரங்களை இயற்றிய கவியாக பலஸ்ருதி சொல்லி முடிக்கிறாள். இந்த பாசுரம் பகவத் தாஸ்யம் சொல்லுகிற பாசுரம். பதினைந்தாம் பாசுரமான எல்லே இளங்கிளியே! பாசுரத்தில் பாகவத தாஸ்யம் சொல்லப்பட்டது. இந்த இரண்டு பாசுரங்களையுமே பூர்வாசார்யர்கள் ஆச்சர்யப்பட்டு திருப்பாவையாவது இப்பாட்டிறே! என்று புகழ்ந்தார்கள்.

ரொம்பவும் தத்துவமாகவும், கவித்துவமாகவும் சொல்லி வந்த ஆண்டாள், பகவானை நேரில் பார்த்த பரவசத்தை கடைசி ஐந்து பாசுரங்களில் வெளிப்படுத்துகிறாள். அதிலும் இந்த பாசுரம் முடிந்த முடிவாக தான் விரும்பி வந்தது என்ன என்று உடைத்து சொல்லி அவனுடைய தாஸ்யத்தை தனது பரம புருஷார்த்தமாக கேட்டுக்கொண்ட பாசுரம். அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச் சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே! என்று அபராத க்ஷமாபனம் செய்து தனது முன்வினைகளை சரணாகதியின் மூலம் அழித்தது இதற்கு முந்தைய பாசுரத்தில். அந்த பாசுரத்தில் முக்கியமான வார்த்தைகள் அவை.

அதே போல் இந்த பாசுரத்திலும் இற்றைப் பறைகொள்வான் அன்று! காண், கோவிந்தா, எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு உற்றோமே யாவோம், உனக்கே நாமாட்செய்வோம்! என்று நாங்கள் வெறும் பறை எனும் வாத்தியத்தை பெற்றுப்போக வரவில்லை. அது ஒரு வியாஜமே! நாங்கள் வந்தது உன்னிடம் அடிமையாக இருக்கும் பெரும் பேற்றை பரம புருஷார்த்தமாக பெற்றுப்போகவே! இதை பூர்வாசார்யர்கள், ‘ஸ்ரீ பரதாழ்வானைப் போலே விஸ்லேஷித்திருக்கையன்றிக்கே, இளைய பெருமாளைப் போலே அடிமை செய்ய வேணும்’ என்று தெரிவிக்கிறார்கள். பரதனைப்போலே உன்னை பிரிந்த போது, அன்னம் தண்ணீர் இல்லாது உன் பாதுகையையே நமஸ்கரித்து அதனடிவாரத்திலேயே இருந்து பக்தி பண்ணிக்கொண்டிருந்தபடி. உன்னோடு இருக்கும்போது, இளைய பெருமாளான லக்ஷ்மணனைப்போல் எல்லாவிதமான தாஸ்யங்களையும் குறைவற்று உனது திருப்திக்காகவே செய்தபடி இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

எற்றைக்கும் என்பது எக்காலத்திலும் என்று ஸ்ரீவைகுண்டத்தில் அருகில் இருந்து செய்யும் தொண்டு. ஏழேழ் பிறவி என்றால், பகவான் பூமிக்கு வந்தாலும் அவனுடனே வந்து இருந்து அவன் கூடவே தொண்டு செய்தல். ஏழேழ் பிறவி என்பது எண்ணிக்கை என்று கொள்ளாமல் எத்தனை முறையானாலும் என்றே கொள்ள வேண்டும். வேறொரு விதமாகப் பார்த்தால், இனி ஒரு வேளை பிறப்பெடுக்க நேர்ந்தால், அப்போதும் உனக்கு தாஸனாகவே இருக்க வேண்டும் என்று கேட்பதாகும். மற்றை நம் காமங்களை மாற்றி உனக்கே ஆட்செய்ய அருளுவாய் என்று கர்ம வாஸனை எங்களை வேறு விஷயங்களில் இழுத்து அமிழ்த்தி விடாமல் அதிலிருந்து விடுதலை அளிக்க வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார்கள்.

இப்படி கேட்பதற்கு இந்த பாசுரத்தின் முன் பாதியில் ஒரு உறுதியை வெளிப்படுத்துகிறாள். சிற்றஞ் சிறுகாலே வந்து… என்று இளம் விடியற்காலையில் வந்து எனும்போது, அவனை தேடி அடி எடுத்து வைத்து வந்ததற்கே அவன் ரக்ஷிக்க சங்கல்பித்து விடுவனாம். பின் ‘உன்னை சேவித்து’ என்று அவனை விழுந்து வணங்கிவிட்டால், அதற்கு என்ன தரக்கூடும் என்று திகைத்துப் போவானாம் பகவான். ‘அதுக்கு மேலே ஓரஞ்சலியையும் உண்டறுக்கமாட்டாத உன்னைச் சேவித்து’ என்று பூர்வாசாரயர்கள் சொல்கிறார்கள். ‘உன் பொற்றாமரை அடியே’ என்று ஏகாரமாக இழுத்து சொல்வதால் வேறொருவரையும் நாடாமல் உன் திருவடிகளையே நாடி வந்து சேவித்து உன்னை போற்றி ஸ்தோத்திரம் செய்து, கவன ஈர்ப்பாக ‘பொருள் கேளாய்!’ என்று நாங்கள் வந்த காரியத்தை கேள் என்கிறாள்.

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து என்று சொல்லும் போது, ‘ரக்ஷ்யமான பசுக்கள் வயிறு நிறைந்தாலல்லாது தாங்களுண்ணாத குலம்’ என்று ஆயர் குலத்துக்கு உள்ள லக்ஷணத்தைப்போல் தம்மிடம் ரக்ஷணத்துக்கு வந்த ஜீவனை ரக்ஷிக்காமல் விடாத நீ, குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது! என்று உறுதியாய் சொல்கிறாள். நீ எங்களை கொள்ளாமல் விடுவது உன் ஸ்வரூபத்துக்கு விரோதமாகும். அதனால் நீ நிச்சயம் எங்களை ரக்ஷிப்பாய் என்று மஹா விஸ்வாசத்தை வெளிப்படுத்துகிறாள்.

நாங்கள் உன்னிடம் சூடகம், பாடகம் என்று என்னென்ன கேட்டாலும் கொடுத்தாய். நாங்கள் அதை மட்டுமே பெற்றுப்போக வரவில்லை. அவைகளெல்லாம் இப்போது நாங்கள் கேட்கப்போவதான மோக்ஷத்துக்கு (நீ உகக்கூடிய) சாதனங்கள். எங்களுக்கு உன்னிடம் ஸ்மரணை ஏற்படுத்துவதும், உன்னை வந்தடைவதற்கு ஏற்ற சாதனத்தைக் கொடுப்பதும், செப்பமுடைய உன் திறலால் எங்கள் சாதகத்திற்கு விரோதமாக இருப்பதை நீக்குவதும், மற்றை நம் காமங்கள் மாற்றுவதும், எங்களோடே அந்தர்யாமியாய் இருந்து தேற்றுவதும் உன் அருளாலே கிடைக்க வேண்டும். சாத்யோபாயங்களும், சித்தோபாயங்களும் எல்லாம் உன்னாலேயே கிடைக்க வேண்டும், நீயே சரணம் என்று சரணாகதி செய்கிறாள் ஆண்டாள்.


திருப்பாவை (30)

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்* திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி*
அங்குப் பறைகொண்ட ஆற்றை* அணி புதுவைப்- பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன* சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே* இங்கு இப் பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்*
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்* எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

வங்க கடல் எனும் மரக்கலங்கள் மிதக்கும் பாற்கடலைக் கடைந்து மா என்கிற லக்ஷ்மியைப் பெற்ற மாதவனை, ஆஸ்ரிதர்களுக்கு ஊறு செய்த அசுரர்களை அழித்த கேசவனை, ஆய்ப்பாடியில் திங்கள் திருமுகத்து சேயிழையார்களான பெண்பிள்ளைகள், அவன் இருக்குமிடத்துக்கே சென்று இரைஞ்சி, அங்கே பறை கொண்டார்கள். பறை எனும் பரம புருஷார்த்தத்தை அவனிடமிருந்தே பெற்றார்கள். இந்த ஆற்றை – பெருஞ்செயலை பிற்காலத்தில் ஆண்டாள் அனுக்கிரிஹித்து, பக்தியால் உணர்ந்து பாடினாள்.

அணி புதுவை – இந்த பூவுலகிற்கே அணியான புதுவை என்கிற ஸ்ரீவில்லி புத்தூரில், பைங்கமல தண் தெரியல் என்று தண்மையான குளிர்ந்த மாலைகளை அணிந்தவராகவும், பட்டர்பிரான் என்று பண்டிதர்களுக்கு தலைவராகவும் பெரியாழ்வார் விளங்குகிறார். அப்பேர்பட்டவருடைய திருமகளான கோதை நமக்கு கொடுத்த பரிசான இந்த சங்கத்தமிழ் மாலையாகிய இந்த முப்பது பாசுரத்தையும் தப்பாமல் உரைப்பவர்களை – தன் இரண்டு தோள்கள் நான்கு தோள்களாகும் படியாக, இரண்டு கை போதாது இந்த ஆஸ்ரிதரை அணைக்க என்று நான்கு கைகளால் பகவான் எடுத்து அணைப்பனாம். அப்படி செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால் என்றும் எங்கும் திருவருள் என்று லக்ஷ்மி கடாக்ஷம் பெற்று இன்புறுவர் என்று மங்களா சாசனம் செய்கிறாள்.

‘நற்கன்னுக்கிரங்குந்தேனு தோற்கன்னுக்குமிரங்குமாபோலே…’ என்று வியாக்கியானத்தில் சொன்னபடி, நாம் ஆய்ப்பாடியை சேர்ந்தவர்கள் இல்லாவிட்டாலும், ஆழ்வார் ஆசார்யர்கள் ஆண்டாளைப்போல் இல்லாமல் போனாலும், இந்த திருப்பாவை முப்பதும் தப்பாமல் சொன்னோமானால், நல்ல கன்றைப்போலே, தோல் கன்றுக்குட்டிக்கும் பசு இரங்கி பால் சுரப்பது போல், பகவான் அருளுவன் என்று சொன்னார்கள்.

இந்த பாசுரத்துடன் திருப்பாவை நிறைவுக்கு வருகிறது. இதில் சித்தாந்த விரோதமாகவோ, ஆசார்யர் உபதேச விரோதமாகவோ, பகவத் அபசாரமோ, பாகவத அபசாரமோ, இன்னும் அறியாத வகையில் எதாவது குறைகள் இந்த உரையில் நலிந்தும் வலிந்தும் ஏற்பட்டிருக்குமேயானால், பெரியோர்கள் க்ஷமிக்க வேண்டும் என்று உளமாற சேவித்து கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மார்கழியில், திருப்பாவையை சொன்னவர்கள், கேட்டவர்கள், படித்தவர்கள், எழுதியவர்கள் என்று எல்லோருக்கும் கோதையின் அருள், அவள் உகந்த செல்வத்திருமால் கண்ணனது அருள் தட்டின்றி கிடைக்கட்டும். வாழ்வில் எல்லா மங்களங்களும் அடைந்து எங்கும் அடியார்கள் ஆசார்யர்கள் தொடர்பும், சத்வ குணமும், ஐஸ்வர்யங்களும், பகவத் கிருபையும் பெற்று இன்புறுவர்.இனிய திருப்பாவை உரை இனிதே நிறைவடைந்தது.

திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே!

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!

பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே!

ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!

உயரரங்கற்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே!

மருவாறும் திருமல்லி வளநாடு வாழியே!

வண்புதுவை நகர்கோதை மலர்பாதங்கள் வாழியே!

ஆண்டாள் திருவடிகளே சரணம்…!

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: