தமிழ்library
, உணர்வுகள், தமிழ்library

உணர்வுகள்

“கவிதா” என்ற அதட்டலுடன் கூடிய மாதவனின் குரலைக்கேட்டவுடன், ஆசையுடனும், ஏக்கத்துடனும் சன்னலோரமா நின்று பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டிருந்த கவிதா சற்றே தூக்கிப்போட்டவளாக

” இதோ வரேன்ங்க” என்றாள்.

‘ உனக்கு இதே வேலையா போச்சு. காலை நேரத்துல போய் அங்கே நின்னுகிறே. அப்படி என்னத்தான் பாக்குறே, நேரமாச்சுல. கல்யாணம் ஆகி மூணு மாசம் ஆச்சு.. இன்னும் உனக்கு மண்டையில ஏற மாட்டேங்குது. அம்மாவுக்கு மாத்திரை கொடுத்தியா. ‘

‘ கொடுத்துட்டேன் ‘

‘கொடுத்து அரைமணி நேரத்துல சாப்பாடு கொடுக்கணும்.. தெரியும்ல, என்ன சொன்னாலும் முழிக்கிறே. உனக்கு ஏற்கனவே நான் சொல்லி இருக்கிறேன். நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதே, என் அம்மாவுக்காகத் தான், புரியுதா. இன்னொரு தடவை சொல்ற மாதிரி வச்சுக்காதே. சரியா. ஒகே, போய் சாப்பாடு எடுத்து வை .’

தன் பள்ளிப்பருவ நாட்களை நினைத்துக்கொண்டே, அடுக்களைக்குள் நுழைந்தாள் கவிதா. பத்தொன்பது வயதுடைய சிறிய பெண். மாதவனுக்கோ முப்பத்திநான்கு வயது. பதினைந்து வயது வித்தியாசம். மாதவனின் அப்பா ஒரு விபத்தில் இறந்துவிட்டார். பி.காம் படித்து முடித்த இரு மாதங்களிலேயே இந்த கோர நிகழ்ச்சி அவர்களின் வீட்டில். உடனே அவருடைய வங்கிப்பணி இவனுக்கு கிடைத்துவிட்டது. இவனுக்கு மூன்று தங்கைகள். மூவரையும் நன்கு படிக்கவைத்து, கல்யாணம் செய்து கொடுத்தப்பிறகு தான், தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதமாக இருந்து, அனைத்தையும் முடித்தப்பிறகே கவிதாவை கைப்பிடித்தான்.

கவிதாவோ படிப்பில் மிகவும் நாட்டமுடையவள். நன்றாகவே படிப்பாள்.
முதல் ஐந்து ரேங்குகளில் வந்து விடுவாள். தான் படித்து, பெரிய ஆளாக வேண்டும் என்ற இலக்குடன் படித்து வந்தவளுக்கு, ஒரு பேரிடி, அவளின் அக்கா வடிவில் அவள் தலையில் வந்து விழுந்தது. பிளஸ் டூ படிக்கும்போது கவிதாவின் அக்கா நந்தினி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவள், தன் காதலனுடன் வீட்டில் சொல்லிக்கொள்ளாமலே ஓடிப் போய்விட்டாள். அவளுக்குத் தெரியும். சொன்னால் அவர்களின் அப்பா ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவ்வளவு பிடிவாதக்காரர். சாதிவெறி உள்ளவர்.

அவ்வளவு தான். அக்கா போய்விட்டப்பிறகு, இவளை வெளியே விடாமல் வீட்டினுள் வைத்து விட்டார். படிப்பை நிறுத்தி விட்டார். எவ்வளவு கெஞ்சிப்பார்த்தும் அவரிடம் இருந்து துளி இரக்கம் கூட வரல. அம்மாவோ வாயில்லாப்பூச்சி. பின்பு, எங்கெங்கோ அலைந்து, திரிந்து அவருடைய சாதியிலேயே வரன் பார்த்து, ஓராண்டிற்குள் திருமணம் முடித்தார். இதில் எமோஷனல் பிளாக்மெயில் வேறு.

‘ மாப்பிள்ளை ரொம்ப நலலவர், போற இடத்தில் ஒழுங்கா இல்லாம, ஏதாவது முரண்டு பண்ணி, திருப்பி இங்கே வந்தே, எங்க இரண்டு பேரையும் உயிரோட பாக்கமுடியாது தெரிஞ்சிக்க.’

இதையெல்லாம் சிந்தித்தவாறே, இட்லியையும், தக்காளி சட்னியையும் மேசையில் கொண்டுவந்து வைத்துவிட்டு,

‘ அத்தே, கொஞ்சம் மெதுவா எழுந்திருங்க சாப்பிடலாம்.’
‘என்னம்மா ரெடி பண்ணிட்டியா, அவன் ஏதோ கத்திக்கிட்டு இருந்தானே.’
‘ஒண்ணுமில்ல அத்தை, நீங்க சாப்பிடும் நேரம் வந்துடிச்சல அதான் சொன்னாங்க.’

மெதுவா தூக்கிவிட்டு சக்கரநாற்காலியில் உட்காரவைத்தாள் தன் மாமியார் மரகத்தம்மாளை. அவருக்கு நடக்க முடியாது. முதுகெலும்பில் கோளாறு. சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் பிடித்துக்கொண்டு சில அடிகள் தான் வைப்பாள். மீதம் முழுதும் இந்த சக்கர நாற்காலி தான்.

‘ அம்மா வாங்க சாப்பிடலாம். ‘ மாதவன்.
‘ நீயும் வாம்மா எல்லோரும் சேர்ந்தே சாப்பிடலாம்.’ இது மரகதம்.
‘இல்ல அத்தே, நீங்க சாப்பிடுங்க. எனக்கு இப்ப பசிக்கல. அப்புறம் சாப்புடுறேன்’

‘ ஏம்மா கவிதா, இந்த டிவியைப் போடு. மணி 12 ஆச்சு சீரியல் ஆரம்பிச்சிடும்.’

மரகத்தம்மாளுக்கு சீரியல் தான் பொழுதுபோக்கு. கவிதாவுக்கு தொடர்கள் என்றால் பிடிக்காது. படிக்கும் நாட்களில் சக தோழிகளை கிண்டல் செய்வாள். இப்போது வேறு வழியில்லை. மாமியருடன் சேர்ந்து அவளும் பார்க்க பழகியிருந்தாள்.

‘ இதோ போடறேன் அத்தே.’

தொலைக்காட்சியை போட்டுவிட்டு, தன் மாமியாருக்கு காய்கறி சூப் கொண்டுவந்து கொடுத்துவிட்டு சற்று தள்ளியுள்ள சோபாவில் அமர்ந்தாள் கவிதா.

தொடரில் வந்த ஒரு காட்சி, கல்லூரிப்பெண்ணான கதாநாயகியை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறார்கள் அவளின் பெற்றோர். நான் படிக்க வேண்டும் என்று கவிதா போலவே அவளும் கெஞ்சுகிறாள். நல்ல இடம் பிறகு வராது. சொல்றதை கேள், படிப்பு முக்கியமில்லை. வேணுனா அப்புறம் படிச்சிக்கலாம். என்ற வசனக்காட்சி.
கவிதாவின் நினைவுகள் பின்னோக்கி சென்றன. கலங்கிய கண்களுடன்.!

‘அப்பா, ப்ளீஸ, நான் அக்கா மாதிரி எல்லாம் செய்ய மாட்டேன்பா, நீங்க சொல்ற பையன கல்யாணம் பண்ணிக்கிறேன். என்ன படிக்க வையுங்கபா. எனக்கு கெமிஸ்ட்ரி படிக்கணும். ரொம்ப ஆசையா இருக்குப்பா..’

‘இங்கே பார் கவிதா, வாழ்க்கையின்னா என்னனு புரிஞ்சிக்கோ… எல்லோருக்கும் ஆசை இருக்கு. அதை எல்லாத்தையும் எல்லோரையாலும் அடைய முடியாது. உன் அக்காவை காலேஜ் சேர்த்தேன், அவ படிச்சாளோ. திமிரு பிடிச்சு, எவனோ ஒரு சாதி கெட்டவன இழுத்துக்கிட்டு ஓடிப் போயிட்டா. நீயாவது ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்து. நீ எவ்வளவு கேட்டாலும் நடக்காது. இனிமே இதப்பத்தி எங்கிட்ட பேசாதே.’

கவிதா கெமிஸ்ட்ரி பாடத்தை காதலித்தாள் என்று தான் சொல்லணும். அந்தளவிற்கு நேசித்தாள் வேதியியலை. அவள் பதினோராம் வகுப்பு சேர்ந்த சில நாட்களிலேயே வேதியியல் ஆசிரியர் நோயுற்று படுத்த படுக்கையாகி விட்டார். நம்மூர் அரசு பள்ளிகள் தான் தெரிந்த கதை ஆயிற்றே. உடனே ஆசிரியர் நியமனம் செய்யப்படவில்லை.
கிட்டத்தட்ட 3 மாதங்கள். ஆசிரியர் இல்லாமலேயே வகுப்பு நடந்தது, மாணவிகள் யாருக்கும் தானாக படிப்பதில் விருப்பமில்லை. ஆனால் கவிதாவோ, தானாகவே படிக்க ஆரம்பித்தாள். மிகவும் ஆர்வமாக இருந்தது. தினமும் அதற்காக சில நிமிடங்கள் ஒதுக்கினாள். திடீரென்று, ஒருநாள் ஒரு ஆசிரியர் வந்து, தான் வேதியியல் ஆசிரியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, மாணவிகளின் அறிமுகங்கள் எல்லாம் முடிந்தபிறகு, கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்.

‘டியர் ஸ்டூடென்ட்ஸ். கொஞ்சமாவது படிச்சியிருக்கீங்களானு பாக்கலாமா. சிம்பிளா தான் கேக்கப் போறேன். அசிட்டிக் ஆசிட் யோட மாலிகுளர் பார்முலா (மூலக்கூறு வாய்ப்பாடு) சொல்லுங்க, முதல நீ சொல்லுமா.’

என்று நளினியை எழுப்பினார். அவளுக்குத் தெரியவில்லை. பின்பு உமா, புனிதா, பாரதி என முதல் வரிசையில் உள்ள எல்லோருக்குமே தெரியவில்லை. இரண்டாவது வரிசையில் உள்ள கவிதா முறை வந்தது.

அப்போது, உட்கார்திருந்தது மட்டும் தான் அங்கே தவிர, மனம் எதையோ சிந்தித்தவண்ணம், அதுவும் கலங்கிய கண்களுடன் இருந்த தன் மருமகளைப்பார்த்து,

‘ அம்மா, கவிதா.. கவிதா ‘ என்றார் இருமுறை..

‘ CH3COOH சார்..’ என்றாள் கவிதா.

‘ஏய், உனக்கு என்னாச்சுப்பா, என்ன சொல்ற. ஒன்னும் புரியல.’ மரகதம்

சுயநினைவுக்கு வந்தவளாக,

‘ஆங், சாரி அத்தை. இது கெமிஸ்ட்ரி. ஏதோ ஞாபகத்துல சொல்லிட்டேன், மன்னிச்சிக்கோங்க. ப்ளீஸ்…’ என்று சொல்லும்போது கண்ணீர் அருவியாகக் கொட்டியது.

‘இதுக்கு, எதுக்கு சாரியெல்லாம்… எதுக்கு அழுகுற… சரி கொஞ்சம் தன்ணி கொண்டு வாரீயா.’

கண்ணீரை துடைத்தபடி, சொம்பில் உள்ள நீரை டம்ளரில் ஊற்றி,
‘ இந்தாங்க அத்த.’ என்று கொடுத்தாள்.

வாங்கி கடகடவென குடித்த மரகதம்,
பிறகு,
‘அதை இங்கேயே வைச்சிட்டு இப்படி உட்கார்.’
என்று தன் பக்கத்தில் உள்ள நாற்காலியை காண்பித்தார்.

‘உனக்கு எந்த சப்ஜெக்ட் பிடிக்கும்?’

‘ கெமிஸ்ட்ரி’

‘ சரி, இவ்வளவு மார்க் எடுப்பே…’

’80 டு 90 % எடுப்பேன் அத்தை. இன்னும் எடுக்கணும்னு ஆசை. எல்லாப் பாடத்தை விட கெமிஸ்ட்ரி தான் அதிக மார்க்கா இருக்கும்.’ என்றாள் மலர்ந்த முகத்துடன்,

‘அப்ப ஏன் பிளஸ் டூ பரீட்சை எழுதல..?’

‘ அப்பா கல்யாணம் பண்ணனும்னு நிறுத்திட்டாங்க.’

‘ஓ சரிம்மா சாப்பிட்டு கொஞ்சநேரம் படுக்கணும் சாப்பிடுவோமா..’

‘ ம்ம்ம்ம் …. இதோ எடுத்து வைக்கிறேன் அத்தை.’

**********************

இரவு உணவு முடிந்து, மாதவன் டிவியைப் போட்டு விட்டு செய்திகள் பார்த்துக்கொண்டிருந்தான். கவிதா அடுக்களை வேலைகளை முடித்துவிட்டு, மாமியாருக்கும், கணவனுக்கும் பால் கொண்டுவந்து கொடுத்தாள். பின்பு,
‘ நான் போய் படுக்கிறேன் அத்தை.’

‘ சரிம்மா … போய் தூங்கு … ‘

உடனே தன்னுடைய படுக்கையறைக்கு சென்று விட்டாள்.

‘மாதவா அந்த டிவி சத்தத்தை கொஞ்சம் குறைச்சு வைச்சிட்டு, இங்கே பக்கத்துல வந்து உட்காரேன்.’

‘ ம்ம்ம் ‘ என்றவாறே வந்து அமர்ந்தான். ‘ என்ன, சொல்லுங்கம்மா.’

‘ஏன், காலையில கவிதாகிட்ட கத்தின.’

‘பின்ன என்னம்மா, இங்க வந்து இவ்ளோ நாளாச்சு. ஒண்ணுமே புரிஞ்சிக்க மாட்டேங்கிறா. கொஞ்சம் கூட மெஜூரிட்டியே கிடையாது. அதுக்குத்தான் இவ்ளோ சின்ன வயசு பொண்ணு வேணாம்னு நினைச்சேன். நீங்க தான் ஒரே பிடிவாதமா இருந்தீங்க.’

‘அதெல்லாம் சரி. அவ ஏன் படிப்பை பாதியில் நிறுத்தினானு தெரியுமா…?’

‘அதான் அவ அப்பா படிப்பு வரலன்னு சொன்னாரே.’

‘அப்போ நீ, இதைப்பத்தி அவகிட்ட ஒண்ணுமே கேக்கலையா. மூணு மாசம் ஆச்சு. அவளைப்பற்றி உனக்கு ஒண்ணுமே தெரியலையே.’

‘இதைக்கேட்டு என்ன ஆவப்போது. உங்களையும், வீட்டையும் ஒழுங்கா பாத்துக்கிட்டா போதும் எனக்கு.’

‘தப்பு மாதவா.. ரொம்ப தப்பு.. உன் தங்கச்சிகளை அவங்க விருப்பப்படி படிக்க வைச்ச… அவள்களும் நல்ல வேலை, குடும்பம் என்று சந்தோசமா இருக்காங்க. ஆனால் உன்னையே நம்பி வந்த பொண்ண பத்தி ஒண்ணுமே தெரியாம மூணுமாசம் அவகூட வாழ்ந்திருக்க. ஒன்னு தெரியுமா உனக்கு, கவிதா நல்லா படிக்கக்கூடிய பொண்ணு. அவ அப்பா பொய் சொல்லி இருக்கிறார். தன்னுடைய பெரிய பொண்ணு, வேற சாதி பையன கட்டிகிட்டதால வெறுப்பு, கோபம் எல்லாம் கவிதா மேல திரும்பி இருக்கு. இவள படிப்பை நிறுத்தி, வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணி வைச்சி இருக்காரு…’

‘ இதெல்லாம் உங்கக்கிட்ட அவ சொன்னாளா…?’

‘ இல்லைப்பா… ரொம்ப நல்லப்பொண்ணு… தன்னுடைய ஆசைகளை மனுசுல போட்டு மூடிக்கிட்டு இங்கே இருக்கிறா. என்னையும் நல்லாதான் பாத்துகிறா, அன்பா இருக்குறா. படிக்கணும்னு ஆசைப் படறானு நினைக்கிறன். எப்பவுமே மனைவியை அம்மவோடயும், சகோதரிகளோடயும் சேர்த்துப் பாரு. அப்பத்தான் அவங்க உணர்வுகள் உனக்கு புரிய வரும். வேற வீட்டு பொண்ணா பாக்குறதாலத் தான் உனக்கு இது புரியல மாதவா..
பொண்ணுங்க எப்பவுமே அன்புக்கு ரொம்ப மரியாதையை கொடுப்பாங்க. அவங்கள மதிக்கிற, அவங்க விருப்பங்களை தெரிஞ்சிக்க ஆசைப்படுற , அவங்க உணர்வுகளை உணருகிற மனிதர்களை ரொம்பவும் நேசிப்பாங்க. அதுவும் அதுபோல தன்னுடைய கணவனே அப்படி இருந்தால், ஒரு பெண்ணுடைய மனசு எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கும் தெரியுமா. உடனே அவ ஆசை என்னனு கேட்டு அதை நிறைவேத்தி வைப்பா.’

‘அம்மா, எல்லாம் சரி. உங்களை பாத்துக்கத்தான் நான் கல்யாணத்துக்கே ஒத்துக்கிட்டேன். அவ படிக்க போயிட்டா எப்படி…?’

‘நம்முடைய சுயநலத்திற்கு ஒரு சின்ன பொண்ண பலிகடா ஆக்குறது எந்த விதத்துல நியாயம். ம்ம்ம்ம்… சொல்லு மாதவா, அவ என்ன ஊர் விட்டா போக போறா. இங்கே தானே படிக்க போறா.. அதெல்லாம் ஒண்ணுமே பிரச்சனையில்லை. நீ முதல அவ மனசுல உள்ளதை தெரிஞ்சிக்கோ… பிறகு முடிவு பண்ணலாம்.. என்ன சொல்ற..’

‘சரிம்மா பேசறேன்.. இனிமே அவ விருப்பத்திற்கு மாறா நான் எதுவும் பண்ணல போதுமா. நீங்க இதைப்பத்தி எதுவும் கவலை படாதீங்க.’ என்றான் சிரித்தபடி.

மகனின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்து, மற்றொரு கையால் அழுத்தி மூடி,
‘ரொம்ப சந்தோசம்பா.. நீங்க இரண்டு பேரும் ரொம்ப நலலா இருக்கணும்.’
என்றாள் மரகதம்…

மனம் மகிழ்ச்சியில் திளைத்தது…. நாளை அந்த சிறுப்பெண்ணின் சோகமில்லா முகத்தை, ஏக்கமில்லா கண்களை எப்போது பார்ப்போம் என்று மனம் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது…

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: