தமிழ்library
விவேகமான வெள்ளாடு

விவேகமான வெள்ளாடு

உழவர் ஒருவர் வீட்டில் வெள்ளாடும், செம்மறி ஆடும் இருந்தன. அவை இரண்டும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. எங்கே சென்றாலும் ஒன்றாகவே சென்றன.

உழவருக்கு அவை நன்றாகவே உழைத்தன, ஆனாலும் அவன் சரியாக சப்பாடு போடுவதில்லை, ஒரு நாள் தோட்டத்தில் விளையும் சுவையான செடிகளை அவை கடித்து சாப்பிட்டன், அதை கண்டு கோபம் கொண்ட உழவர், ஆத்திரமாக “நீங்கள் இனிமேல் இங்கே இருக்கக் கூடாது. இருந்தால் உங்களைக் கொன்று விடுவேன். எங்காவது போய் விடுங்கள்” என்று விரட்டினார்.

இரண்டு ஆடுகளும் தங்கள் பொருள்களை ஒரு சாக்குப் பையில் போட்டன. அந்தப் பையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டன.

செம்மறி ஆடு வலிமை உள்ளதாக இருந்தது. ஆனால் கோழையாக இருந்தது.
மாறாக வெள்ளாடோ வீரத்துடன் விளங்கியது. ஆனால் வலிமை இல்லாமல் இருந்தது.
சிறிது தூரம் நடந்த இரண்டும் ஒரு வயலை அடைந்தன. அங்கே இறந்து போன ஓநாய் ஒன்றின் தலை கிடந்தது.

அந்த ஓநாயின் தலையை எடுத்துக் கொள். நீதான் வலிமையுடன் இருக்கிறாய், என்றது வெள்ளாடு.

என்னால் முடியாது நீதான் வீரன். நீயே எடு, என்றது செம்மறி ஆடு.

இரண்டும் சேர்ந்து அந்த ஓநாயின் தலையைச் சாக்கிற்குள் போட்டன.

சாக்கைத் தூக்கிக் கொண்டு இரண்டும் நடந்தன. சிறிது தொலைவில் நெருப்பு வெளிச்சத்தை அவை பார்த்தன.

அந்த நெருப்பு எரிகின்ற இடத்திற்குப் போவோம். குளிருக்கு இதமாக இருக்கும். ஓநாய்ளிடம் இருந்தும் நாம் தப்பித்துக் கொள்ளலாம், என்றது வெள்ளாடு.

இரண்டும் நெருப்பு இருந்த இடத்தை நோக்கி நடந்தன. அருகில் சென்றதும் அவை அதிர்ச்சி அடைந்தன.

அங்கே மூன்று ஓநாய்கள் உணவு சமைத்துக் கொண்டிருந்தன.

ஓநாய்கள் தங்களைப் பார்த்து விட்டன. தப்பிக்க வழியில்லை, என்பதை உயர்ந்தன ஆடுகள்.

நண்பர்களே! நீங்கள் நலந்தானே என்று தைரியத்துடன் கேட்டது வெள்ளாடு.

அச்சத்தால் செம்மறி ஆட்டின் கால்கள் நடுங்கின.

நண்பர்களா நாங்களா? எங்கள் உணவு தயார் ஆகட்டும். அதன் பிறகு உங்களைக் கவனிக்கிறோம். எங்கே ஓடிவிடப் போகிறீர்கள்? என்றது ஒரு ஓநாய்.

இவற்றிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தது வெள்ளாடு.

செம்மறி ஆடே! இன்று நாம் கொன்றோமே ஓநாய்கள். அவற்றில் ஒன்றின் தலையை எடுத்து இவர்களிடம் காட்டு. நாம் யார் என்பது புரியும்? என்று உரத்த குரலில் சொன்னது அது.
செம்மறி ஆட்டிற்கு அதன் திட்டம் புரிந்தது. சாக்கிற்குள் கையை விட்டு ஓநாயின் தலையை எடுத்தது.

ஏ! முட்டாள் ஆடே! பெரிய ஓநாயின் தலையை எடுத்துக் காட்டு என்றேன். நீ சிறிய தலையை எடுத்துக் காட்டுகிறாயே, பெரியதை எடு, என்று கத்தியது வெள்ளாடு.

அந்தத் தலையைச் சாக்கிற்குள் போட்டது செம்மறி ஆடு. மீண்டும் அதே தலையை வெளியே எடுத்துக் காட்டியது. கோபம் கொண்டது போல் நடித்தது வெள்ளாடு. இருக்கின்ற ஓநாய்த் தலைகளில் பெரியதை எடு. மீண்டும் நீ சிறிய தலைகளையே எடுத்துக் காட்டுகிறாய். இதைப் போட்டுவிட்டு பெரிய தலையாக எடு, என்று கத்தியது.

அந்தத் தலையைப் போட்டுவிட்டு அதே தலையை மீண்டும் வெளியே எடுத்தது செம்மறி ஆடு.
இதைப் பார்த்த மூன்று ஓநாய்களும் நடுங்கின.

இவை சாதாரண ஆடுகள் அல்ல. நீ அவற்றைக் கேலி செய்திருக்கக் கூடாது. சாக்கிற்குள் இருந்து ஒவ்வொரு ஓநாய்த் தலையாக எடுக்கின்றன, என்றது ஒரு ஓநாய். மூன்றும் சிறிது நேரம் அமைதியாக இருந்தன.

ஆடுகளைப் பார்த்து ஓநாய் ஒன்று, உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, குழம்பு நன்றாகக் கொதிக்கிறது, இன்னும் சிறிது தண்ணீர் ஊற்ற வேண்டும், நான் சென்று தண்ணீர் கொண்டு வருகிறேன், என்று புறப்பட்டது.

சிறிது நேரம் சென்றது. இரண்டாவது ஓநாய், அந்த ஓநாயிற்கு நம் அவசரமே தெரியாது. போய் எவ்வளவு ஆகிறது? நான் சென்று அதை அழைத்துக் கொண்டு தண்ணீருடன் வருகிறேன், என்று புறப்பட்டது.

பரபரப்புடன் இருந்த மூன்றாவது ஓநாய், இருவரும் எங்கே தொலைந்தார்கள்? நான் சென்று அவர்களை அழைத்து வருகிறேன் என்று புறப்பட்டது. தப்பித்தோம் என்ற மகிழ்ச்சியில் ஓட்டம் பிடித்தது.

செம்மறி ஆடே! நம் திட்டம் வெற்றி பெற்று விட்டது. ஓநாய்களிடம் இருந்து தப்பித்து விட்டோம். விரைவாகச் சாப்பிட்டுவிட்டு இங்கிருந்து புறப்படுவோம். உண்மை தெரிந்து மீண்டும் அவை இங்கே வரும், என்றது வெள்ளாடு.

இரண்டும் அங்கிருந்த உணவை வயிறு முட்ட உண்டன. மகிழ்ச்சியுடன் ஏப்பம் விட்டுக் கொண்டே புறப்பட்டன. ஓடிய மூன்று ஓநாய்களும் வழியில் சந்தித்தன.

ஆடுகளுக்குப் பயந்தா நாம் ஓடி வருவது? என்று கேட்டது ஒரு ஓநாய்.

நம்மை அவை ஏமாற்றி இருக்கின்றன. நாமும் ஏமாந்து விட்டோம், என்றது இன்னொரு ஓநாய்.

மூன்றாவது ஓநாய், நாம் உடனே அங்கு செல்வோம், அவற்றைக் கொன்று தின்போம், என்றது. மூன்று ஓநாய்களும் அங்கு வந்தன. உணவை உண்டு விட்டு இரண்டு ஆடுகளும் ஓடி விட்டதை அறிந்தன.

புத்திசாலித்தனத்தால் ஆடுகள் உயிர் தப்பியதை கண்டு ஏமாந்து போன ஓநாய்கள் பற்களை நறநறவென்று கடித்தன. பாவம் அவற்றால் வேறு என்ன செய்ய முடியும்?

உயிர்தப்பிய ஆடுகள் தன் எஜமானனை நினைத்துப் பார்த்தன, அவரிடம் இருந்தவரை உயிருக்கு ஆபத்து ஒன்றும் ஏற்படவில்லை, எனவே அவரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் சேர்ந்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தன, அதே நேரத்தில் ஆடுகளை பிரிந்த உழவர் தன் தவற்றை உணர்ந்து ஆடுகளுக்கு நன்றாக தீனி போடுவது என்று தீர்மானித்து ஆடுகளை தேடி காட்டிற்கு வந்தார், எதிரே வந்த ஆடுகள் ஓடி போய் உழவரிடம் மன்னிப்பு கேட்டது, உழவரும் மன்னிப்பு கேட்டு, ஆடுகளை வீட்டிற்கு அழைத்து வந்து ருசியான இலைகளை கொடுத்தார்

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: