தமிழ்library
நேர்மையான பிச்சைக்காரர்

நேர்மையான பிச்சைக்காரர்

ஒரு மனிதன் தனக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்தை எப்படி பயன்படுத்துகிறான் என்று அறிய ஒரு மன்னனுக்கு ஆவல் ஏற்பட்டது. அதை சோதிக்க நினைத்து ஒரு நாள் இரண்டு ரொட்டித் துண்டுகளை வரவழைத்து, விலையுயர்ந்த வைரக் கற்களை ஒன்றினுள் பதுக்கி வைத்தான்.

பிறகு இரண்டு ரொட்டித் துண்டுகளையும் பணியாளன் ஒருவனிடம் கொடுத்து, “”கவனமாகக் கேள், தகுதியுள்ள கண்ணியமான மனிதன் ஒருவனுக்கு இந்த கனமான ரொட்டியைக் கொடு. மற்றொரு சாதாரண ரொட்டியை ஒரு சாதாரணப் பிச்சைக்காரனுக்குக் கொடு,” என்று சொன்னான்.

நீண்ட மேலங்கி அணிந்து அடர்ந்த தாடியுடன் சாமியாரைப் போல் தோற்றமளித்த ஒரு நபருக்கு அந்தப் பணியாளன் வைரக் கற்கள் நிரம்பிய கனமான ரொட்டியை அளித்தான். பிறகு மற்றொன்றை ஒரு பிச்சைக்காரனுக்கு அளித்தான்.

இவற்றையெல்லாம் மன்னன் தன் அரண்மனை மேல் மாடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான். சாமியார் போன்ற தோற்றமளித்த நபர் தனக்குக் கிடைத்த ரொட்டியை உற்றுப் பார்த்தான்.

இது சரியாக பக்குவப்படுத்தப்படாததால் கொஞ்சம் கனமாக உள்ளது என்று எண்ணி தன் அருகில் வந்து கொண்டிருந்த பிச்சைக்காரனை அழைத்து, “”நண்பா, எனக்குக் கிடைத்த ரொட்டி கனமாக உள்ளது. எனக்கு அவ்வளவு பசியில்லை. ஆகையால் இதை நீ எடுத்துக் கொண்டு உன்னுடையதை எனக்குக் கொடு,” என்றான்.

உடனே இருவரும் தங்களுடைய ரொட்டிகளை மாற்றிக் கொண்டனர்.

இதைக் கண்ட மன்னன், “”ஆஹா! என்ன கடவுளின் உள்ளம்! ஒரு தவயோகிக்கு செல்வம் தேவை இல்லையாதலால் வைரக் கற்கள் உடைய ரொட்டி அவரிடம் தங்காமல் அந்த ஏழையிடம் சென்று விட்டது’ என்று நினைத்தான்.

உடனே அந்த சாமியாரையும், பிச்சைக்காரனையும் பின் தொடருமாறு தன் வேலையாட்களுக்கு உத்தரவிட்டான்.

அன்று மாலையே அவ்விருவரைப் பற்றிய தகவல்களும் மன்னனுக்குக் கிடைத்தன. சாமியார் போல் தோற்றமளித்தவர் தன் வீட்டுக்குச் சென்று பொய்த் தாடியையும், மேலங்கியையும் எடுத்துவிட்டு, ஆசைதீர ரொட்டியை உண்டு விட்டு, பிறகு பழையபடி தாடியை ஒட்ட வைத்துக் கொண்டு சாமியார் வேடத்தில் பிச்சை எடுக்க கிளம்பி விட்டதாக அறிந்தான்.

தன் வீட்டிற்குச் சென்ற பிச்சைக்காரன், தன் மனைவியுடன் ரொட்டியை உண்ணத் தொடங்கியதும் அதற்குள் இருந்த வைரக் கற்களைக் கண்டான்.

மகிழ்ச்சியில் துள்ளிய அவன் மனைவி அவற்றை தாங்களே எடுத்துக் கொள்ள விரும்பிய போது, அந்தப் பிச்சைக்காரன், “”இந்த வைரக் கற்களைக் கொண்டு கடவுள் என் மனசாட்சியை சோதிக்க விரும்புகிறார்.

இந்த ரொட்டியை அளித்த அரசுப் பணியாளரிடம் இதைப் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வைரக் கற்கள் உள்ளிருப்பது அவருக்குத் தெரியாது என்றால், அவருடைய பொருளை அவரிடமே சேர்க்க வேண்டும். ஆனால், தெரிந்தே இவ்வாறு கொடுத்தார் என்றால், இவை அந்தச் சாமியாரைச் சேர வேண்டும். அதுதான் நியாயம்,” என்று கூறினான்.

அந்தப் பிச்சைக்காரனின் நேர்மையையும், உயர்ந்த உள்ளத்தையும் அறிந்த மன்னன், அவனை அரண்மனைக்கு அழைத்து அந்த வைரக் கற்களை அவனுக்கே கொடுத்து மேலும் பல பரிசுகளும் வழங்கினான்.

கடவுளின் அருளால் வைரக் கற்கள் ஒரு போலிச் சாமியாரிடம் சிக்காமல், நேர்மையான ஒரு பிச்சைக்காரனை அடைந்ததை எண்ணி மகிழ்ந்தான் மன்னன். பிச்சைக்காரரும் அதை விற்று கிடைத்த பணத்தில் வியாபாரம் செய்து சந்தோசமாக வாழ்ந்தார்.

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: