தமிழ்library
இதெல்லாம் எதுக்கம்மா?

இதெல்லாம் எதுக்கம்மா?

தாய் ஒட்டகமும் குட்டி ஒட்டகமும் ஒரு மாலைப் பொழுதில் உலாத்திக் கொண்டிருந்தன.

குட்டி ஒட்டகம் படு சுட்டி. சதா வாய் ஓயாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும். அன்றைக்கும் அப்படித்தான்.

“அம்மா! நமக்கு மட்டும் முதுகில் திமில் இருக்கே. ஏனம்மா?”

தாய் எப்போதும் பொறுமையாக பதில் சொல்லும்.

“நாமெல்லாம் இயல்பாகப் பாலைவனத்தில் வாழ்பவர்கள் இல்லையா! பாலைவனத்தில் தண்ணீர் பாலைவனச் சோலைகளில் மட்டும்தான் கிடைக்கும். தினம் தினம் கிடைக்காது. கிடைக்கும் தண்ணீரை முடிந்த மட்டும் நம் உடம்பில் சேமித்து வைத்துக் கொண்டு வேண்டும் போது உபயோகப் படுத்திக் கொண்டால் தண்ணீர் கிடைக்காத பாலைவனத்தில் பல நாள் சுற்றித் திரியவே நமக்கு இயற்கை திமிலைக் கொடுத்திருக்கு”

குட்டி திரும்பவும் கேட்டது. “அப்போ நமக்கு கண் இமை கெட்டியாக இருக்கே, மூக்கை மூடிக் கொள்ள மூடி இருக்கே? மத்த மிருகத்துக்கு அப்படி இல்லையே. அது ஏன்”

தாய் ஒட்டகம் வாயை அசை போட்டுக் கொண்டு சொன்னது.

“பாலைவனத்தில் மணல் புயல் அடிக்கும், அப்போ சட்டுன்னு ஒதுங்க இடம் கிடைக்காது. கண்ணுக்கும் மூக்குக்கும் பாதுகாப்பா மூடி இல்லைன்னா கண்ணுலயும் மூக்குலையும் மணல் போயிடுமே. அதனால்தான் நமக்கெல்லாம் இப்படி மூடி இருக்கு”

குட்டி இப்போது அம்மாவின் கால் குளம்பைப் பார்த்துக் கேட்டது. “இவ்வளவு பெரிய குளம்பு நமக்கு எதுக்கு?”

“அது கண்ணு, மணல்ல நடக்கும் போது நம்ம கால் மணல்ல புதையாம நடக்கத்தான்”. பொறுமையாக பதில் சொன்னது அம்மா ஒட்டகம்.

“பல்லும் நாக்கும் இவ்வளவு கெட்டியா, தடியா இருக்கே. அது ஏன்?”. இது குட்டி யோசனையுடன் கேட்ட கேள்வி.

அம்மா ஒட்டகம் சொன்னது. “பாலைவனத்தில் செடி கொடியெல்லாம் முரட்டுத்தனமாக இருக்கும். அதையெல்லாம் கடித்துச் சவைத்துத் தின்ன வேண்டாமா?”

இப்போது குட்டி பட்டென்று கேட்டது. “அம்மா! இதையெல்லாம் வைத்துக் கொண்டு லண்டன் குளிரிலே இந்த மிருகக் காட்சி சாலையிலே நாம ரெண்டு பேரும் என்ன செஞ்சுகிட்டு இருக்கோம்?”

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: