தமிழ்library
மரியாதை ராமன் மோதிரம்

மரியாதை ராமன் மோதிரம்

ராமனும் சோமனும் நண்பர்கள். ஒரு நாள் ராமன் சோமனிடம் வந்தான்.

“சோமா, நான் ஒரு கல்யாணத்திற்குச் செல்ல வேண்டியிருக்கிறது. உன்னுடைய தங்க மோதிரத்தை ஒரு நாள் இரவல் கொடுத்தால் கல்யாணத்திற்குப் போய் வந்ததும் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்றான் ராமன்.
 
சோமனும் தன் கையிலிருந்த தங்க மோதிரத்தைக் கழற்றி ராமனிடம் கொடுத்தான்.
 
மோதிரம் வாங்கிச் சென்ற ராமன் வெகுநாளாகியும் திரும்பி வரவில்லை. சோமன் அவன் வீட்டுக்குச் சென்றான்.
 
“என்ன ராமா! என்னிடமிருந்து தங்க மோதிரம் இரவலாக வாங்கிப் போனாயே, அதை இன்னும் திருப்பித் தரவில்லையே!” என்றான் சோமன்.
 
“தங்க மோதிரமா? நான் வைத்திருப்பது எனது மோதிரம் தான். உன்னிடம் இருந்து ஒன்றும் வாங்கவில்லையே!” என்று ஒரு போடு போட்டான் ராமன்.
 
அவன் விரலில் அணிந்திருந்தது சோமனின் மோதிரம். ஆனால் ராமனோ அது தன்னுடையது என்றான்.
 
சோமன் நேராக மரியாதை ராமனிடம் சென்று ராமன் தனது மோதிரத்தை வாங்கிகொண்டு ஏமாற்றி விட்டான் என்று முறையிட்டான்.
 
மரியாதைராமன் ராமனை அழைத்து விசாரித்தான். ராமனோ “ஐயா சோமன் பொய் சொல்கிறான். நான் இவனிடம் மோதிரம் வாங்கவில்லை. என் விரலில் இருப்பத்து என் மோதிரம் தான்” என்றான்.
 
இதைக் கேட்ட மரியாதை ராமன் “நீங்கள் இருவரும் சொல்வதிலிருந்து உண்மையாகவே மோதிரம் யாருக்கு சொந்தம் என்பது தெரியவில்லை. அதனால் நாளை தங்கத்தை மதிப்பீடு செய்பவரை வரச்சொல்லி மோதிரத்தை உரசிப்பார்ப்போம். அவர் என்ன மதிப்பு சொல்கிறாரோ, அந்த மதிப்பிற்கு அதை விற்று அந்த பணத்தை இருவருக்கும் சமமாக பிரித்துக் கொடுத்து விடுகிறேன். இருவரும் சென்று நாளை வாருங்கள்” என்று சொல்லி அனுப்பி விட்டார்.
 
மறுநாள் ஒரு பொற்கொல்லர் சபைக்கு வரவழைக்கப்பட்டார். அவரிடம் மோதிரம் கொடுக்கப்பட்டது.
 
அவர் அதை உரைக்கல்லில் வைத்துத் தேய்த்தார். நிறுத்தாமல் அதிக நேரம் தேய்த்துக் கொண்டே இருந்தார். இதைப் பார்த்த சோமன் “ஐயா என் மோதிரத்தை இப்படியே தேய்த்து கரைத்து விடுவாய் போலிருக்கிறதே!” என்று கதறினான்.
 
ராமனோ பேசாமல் இருந்தான். பின்னர் பொற்கொல்லர் தேய்த்து முடித்து மோதிரத்தின் மதிப்பை மிகக் குறைவாக விலை சொன்னார். அந்த விலையைக் கேட்டதும் சோமன் கோபமுற்றான்.
 
“என்ன அநியாயம் இது! நான் வாங்கிய விலையில் கால்பங்கு கூட இல்லையே! இது தானா நீங்கள் போடும் மதிப்பு?” என்று கூச்சலிட்டான்.
 
இதைக்கேட்ட மரியாதைராமன், ராமனைப் பார்த்து “உண்மையாகவே இது உன்னுடைய மோதிரமாக இருந்தால் இந்நேரம் நீ பேசாமல் இருந்திருக்க மாட்டாய், உண்மையை வரவழைப்பதற்க்காக நான் தான் அதிகமாக உரைக்கச் சொல்லியும், மதிப்பைக் குறைத்தும் சொல்லச் சொன்னேன். இப்போது மோதிரத்திற்கு உரியவர் யார் என்பது தெரிந்து விட்டது.” என்று சொல்லி மோதிரத்தை சோமனிடம் ஒப்படைத்தார்.
 
சோமனை ஏமாற்றிய குற்றத்திற்காக ராமனுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினான்.
 
மரியாதை ராமனின் சமயோஜிதமான நடவடிக்கையைப் பார்த்து மக்கள் பாராட்டினார்கள்.

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: