தமிழ்library
கொலை

கொலை

கடந்த 28 ஆண்டுகளில் இன்றுதான் முதன்முறையாக என் இதய துடிப்பை இவ்வளவு சத்தமாக கேட்கிறேன். என் உள்ளங்கை முழுவதும் சூடான இரத்தத்தின் பிசுபிசுப்பு. என் சட்டையிலும் சில இரத்த துளிகள் தெறித்திருப்பது நிலா வெளுச்சதில் அப்பட்டமாக தெரிகிறது .என்னை கடந்து செல்லும் காற்று முழுவதும் மெல்லிய இரத்த வாடையை என்னால் உணர முடிகிறது . நான் கொலை செய்துவிட்டதை இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை . அனால் கடந்த கால அவமான அனுபவங்கள் கடைசியில் என்னை கொலை செய்யும் அளவுக்கு கொண்டுவந்துவிட்டது . இன்னும் என் உடல் நடுங்கி கொண்டுதான் இருக்கிறது . 

“இது ஒரு பயங்கர கனவு” என உள்மனம் நினைத்தாலும் , கொலைசெய்யும் பொது வெட்டுபட்ட என் விரலின் வலியும் எரிச்சலும் இது கனவல்ல என்பதை உணரசெய்கிறது . “உலகம் பத்து நிமிடம் பின்னோக்கி சென்றால் எல்லாவற்றையும் சரிசெய்து விடலாம் ” …. ச்சேய் …. நடக்க வாய்ப்பே இல்லாத ஒன்றை பற்றி இந்த சூழ்நிலையில் தேவையில்லாமல் யோசித்து கொண்டு இருக்கிறேன் . “கையில் உள்ள கத்தியால் என் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டால் தேவை இல்லாத கேள்விகளுக்கும், பார்வைகளுக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லையே” என ஒரு நொடி யோசித்தாலும் அடுத்த நொடியே “நான் இறந்து விட்டாலும் என்னை பற்றி தெரிந்தவர்கள் இந்த செயலை பற்றி பேசாமலா குறைந்தபட்சம் யோசிக்காமலா இருந்து விடுவார்கள் ” என்ற எண்ணம் தலைதூக்குகிறது . 

இப்போது என் வீட்டின் பின்புறம் உள்ள கொல்லைபுறத்தில் நின்று கொண்டு இருக்கிறேன் . மணி ஒரு 4.30 இருக்கலாம், இன்னும் 15 அல்லது 20 நிமிடங்களில் விடிந்து விடும் . விடிந்தால் வீட்டில் விசேஷம் . ஊரில் இருந்து வந்த உறவுகள் அனைத்தும் உள்ளே தூங்கிக்கொண்டு இருகிறார்கள் . எழுந்தவுடன் அனைவரின் முதல் வேலையும் கொல்லைபுறத்தில்தான் , வருகின்றவகளின் முகத்தை எப்படி எதிர்கொள்ள போகின்றேன் . “இந்த இடத்தை விட்டு ஓடிவிடு ” என என் மனதும், புத்தியும் உரக்க கத்தினாலும் உடல் ஏனோ அசைய மறுத்து சிலை போல நிற்கிறது . தூரத்தில் ஏதோ பேச்சு சத்தம் கேட்கிறது, யாரோ கொல்லைபுறம் நோக்கித்தான் வருகிறார்கள் . 

இதோ வந்துவிட்டார்கள் , வந்தது என் அண்ணனும் அவருடைய 10 வயது மகனும் . அண்ணன் என் கோலத்தை பார்த்து சிலைபோல உறைந்து விட்டார் . அண்ணன் மகன் கத்திக்கொண்டே உள்ளே ஓடிவிட்டான் . ஒருவர் பின் ஒருவராக உறவுகள் அனைத்தும் கொல்லைபுறத்தில் கூடிவிட்டார்கள் , சிறுது நிமிடம் என்னை கண்களால் மேய்ந்தவர்கள் இப்போது தங்களுக்குள் குசுகுசுவென பேச ஆரம்பித்து விட்டார்கள் . அண்ணன் மட்டும் என்னை நோக்கி நடந்து வருகிறார் , என் கையில் உள்ள கத்தியை வாங்கி தூர எரிந்துவிட்டு என்னை பிடித்து தள்ளியவாறே “உனக்குதான் சின்ன வயசிலிருந்தே இரத்தத்த பார்த்தா பயமாச்சே , ஏன் காலங்கத்தால எந்துருச்சு இந்த ஆட்ட அறுக்குற வேலை உனக்கு ” என கத்திக்கொண்டே மாமாவை நோக்கி “அந்த ஆட்டையும் புடுச்சுட்டு வாப்பா , அதையும் அறுத்துருவோம் காலைல 7 மணிக்கெல்லாம் சமைக்கிற ஆளுங்க வந்துருவாங்க ” என கத்தியை கையில் எடுத்தார் . நான் மூன்று முறை குளித்த பின்பும் உள்ளங்கையில் இருந்த இரத்தத்தின் பிசுபிசுப்பும் , காற்றில் இருந்த இரத்த வாடையும் போகவே இல்லை .

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: