தமிழ்library
மடப்பயலே..

மடப்பயலே..

கருங்குழி என்னும் கிராமத்தில் ஒரு விவசாயி இருந்தான். ஒருநாள் அவன் தன் கழுதையை கயிற்றினால் கட்டி வீட்டுக்கு இழுத்து வந்து கொண்டிருந்தான். 
வரும் வழியில், ஒரு திருடன் ஒருவன் அவனை பார்த்தான். அந்த விவசாயி ஒரு நல்ல ஏமாளி என்பதை தெரிந்து கொண்டான். 
நல்ல புத்திசாலியான அந்தத் திருடன் தன் நண்பனைப் பார்த்து, “”அந்த விவசாயி இழுத்துச் செல்லும் கழுதையை அவன் அறியாத வண்ணம் திருட வேண்டும்,” என்று சொன்னான். 
வியப்பு மேலிட அவன் நண்பன், “”எப்படி உன்னால் அந்தக் கழுதையை அவன் அறியாத வண்ணம் திருட முடியும்?” என்று ஆவலுடன் கேட்டான். 

அதற்கு அந்தத் திருடன், “”சத்தமின்றி என் பின்னாலேயே வா உனக்குப் புரியும்,” என்று சொன்னான். 
அந்த விவசாயியின் பின்னாலேயே சத்தமின்றி சென்று கழுதையை கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டு, கழுதையை ஓட்டிச் செல்லுமாறு தன் நண்பனுக்கு சைகை செய்தான். 
பிறகு அந்தக் கயிற்றைத் தன் கழுத்தில் கட்டிக் கொண்டு அவன் பின்னாலேயே சென்றான். 
தன் நண்பன் ஓட்டிச் சென்ற கழுதை கண் பார்வையை விட்டு மறைந்ததும், அவன் நகராமல் அப்படியே நின்றுவிட்டான். 
கழுதையை இழுத்து வந்த விவசாயி கயிற்றை இழுத்துப் பார்த்து வராததால், திரும்பிப் பார்த்தான். தன் கழுதைக்கு பதில் அந்தக் கயிற்றில் மனிதன் இருப்பது கண்டு திகைத்தான். 

“”நீ யார்?” என்று விவசாயி அவனைப் பார்த்துக் கேட்டான். 
உடனே அந்தத் திருடன் கண்களில் கண்ணீர் மல்க, “”ஐயா! நான் தங்கள் கழுதை தான்… என் கதை வேடிக்கையானது. இளம் வயதிலிருந்தே நான் கெட்டவனாக இருந் தேன். என்னிடம் எல்லா கெட்ட பழக்கங் களும் இருந்தன. 
ஒருநாள் நன்றாக குடித்து விட்டு, வீட்டுக்கு வந்தேன். என் தாயார் எவ்வளவோ அறிவுரை சொன்னார்கள். நான் அவர்களைப் பிடித்து தள்ளியதோடு நன்றாக அடித்துவிட்டேன். என் கொடுமை தாங்க முடியாமல் அவர்கள் என்னை, “கழுதையாக போ’ என்று சாபம் கொடுத்து விட்டார்கள். நான் உடனே கழுதையாக மாறிவிட்டேன். 

“”என்னை நீங்கள் சந்தையில் வாங்கினீர் கள். அதோடு, மட்டுமின்றி என்னை அடித்து உதைத்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தினீர் கள். நான் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு, உங்களுக்கு உண்மையாக உழைத்தேன். 
“”இன்றுதான் என் அம்மா என்மேல் இரக்கப்பட்டு எனக்காக கடவுளிடம் வேண்டியிருக்கிறார். அதனால் எனக்கு என் சுய உருவம் வந்து விட்டது,” என்றான். 

இதையெல்லாம் அறிந்த அந்த விவசாயி, “”ஐயோ! நீ மனிதன் என்று தெரியாமல், உன்னை அடித்து துன்புறுத்தி விட்டேன். என்னை மன்னித்து விடு,” என்று அவன் கழுத்தில் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டான். 
இருவரும் அவரவர்கள் வழியே சென்றனர். 
ஒருவாரம் சென்றது. 
விவசாயி மீண்டும் கழுதை வாங்குவதற் காக சந்தைக்கு சென்றான். அங்கே அவன் கழுதை விற்பனைக்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. 

அந்தக் கழுதை தன் முதலாளியைக் கண்டதும் சந்தோஷத்தில் கத்தியது. 
அதைப் பார்த்த அந்த விவசாயி அதன் அருகே சென்று “”மடப்பயலே! மீண்டும் குடித்துவிட்டு, உன் தாயை அடித்தாயா? இம்முறை உன்னை வாங்குவதற்கு என்னை என்ன மடையன் என்று நினைத்தாயா?” என்று கத்திவிட்டு, அதன் முகத்தில் உமிழ்ந்து விட்டுச் சென்றான். 
ஏமாளிகள் இருக்கிற வரையில், ஏமாற்றுக் காரர்கள் இருக்கவே செய்கின்றனர். 

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: