தமிழ்library
என்னால் முடியும்

என்னால் முடியும்

தொலைபேசி மணி ஒலித்தது. திடுக்கிட்டு விழித்த பூரணம் அம்மா தன்னை ஒருவாறு சுதாகாரித்தபடி ரிசீவரை எடுத்தார். மறுமுனையில் அவர் கனடா வந்தபின் அவருடன் சினேகிதியாக மாறிய விஜயலட்சுமி எனப்படும் விஜயா தான் எடுத்தாள்.

‘தொலைபேசிய எடுத்தால் உந்த மனிசி இனி வைக்காது. தன்ர காலை வேலை எல்லாம் முடிச்சிட்டா போல கிடக்கு’ என்று நினைத்து பெருமூச்சொன்றை விட்டபடி ‘சொல்லுங்கோ’ என்றா பூரணம் அம்மா. நீண்ட நேரம் இருவரும் மனம்விட்டு தங்கள் கவலைகள் சந்தோசங்கள் பிள்ளைகளின் விசயங்கள் ஊரார் கதைகள் என்றும்… மொத்தத்தில் ஒரு சாம்பாராக இருக்கும் அவர்கள் கதை. அப்படியேதான் அன்றும் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் தன் மகள் துஸா பற்றிய கதையே அதிகமாக இருந்தது.

அன்று பாடசாலை விடுமுறையாதலால் மகன் சங்கரின் பிள்ளைகள் இருவரும் நன்கு தூங்கிக் கொண்டிருந்தனர். இல்லையேல் மூத்த மகன் சஞ்ஜீவை பாடசாலை கூட்டிக்கொண்டு போய் கூட்டிவர வேண்டும். அதோடு சின்ன மகள் துர்க்காவையும் தூக்கிக் கொண்டு போக வேண்டும். இருவரையும் இழுத்துக்கொண்டு கால்கள் வழுக்க வழுக்க விழுந்துவிடாமல் கவனமாக போகவேண்டும். அன்று பூரணம் அம்மாவிற்கு மனத்தில் ஏதோ பாரம் குறைந்த மாதிரி இருந்தது. வெளியில் போகத் தேவையில்லை என்ற காரணமே அது. மெதுவாகக் கட்டிலை விட்டு எழுந்தவர் போய்த் தன் பேரப் பிள்ளைகளைப் பார்த்தார். அவர்கள் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் எழும்பமுதல் எல்லாம் செய்துவிட வேண்டும் என நினைத்தபடி காலைக் கடன் கழிக்கவென ஓடினார். எத்தனை நாட்கள் அதனைக் கூட நிம்மதியாகச் செய்யமுடியாதிருந்தது. தலைக்குள் ஏதோ செய்வது போலிருந்தது. தேத்தண்ணிய என்றாலும் குடிப்பம் என தேநீருக்கான ஆயத்தங்களைச் செய்தார். இந்தத் தேத்தண்ணியக் கூட நிம்மதியாக் குடிக்கேலுமே. இந்தப் பிள்ளையளை இந்தப் பாடுபட்டு வளத்தாச்சு என்று பாக்கேக்கை திரும்பவும் முதல்லேயிருந்து பேரப்பிள்ளையள வளர்க்கவேண்டியிருக்கு. அந்த நேரம் உடம்பில தெம்பிருந்துது செய்தன் இப்ப என்னால அதுகும் இந்தக் குளிர் நாட்டில முடியுமே? எப்பிடிச் சமாளிக்கிறது. இப்படித் தனக்குத்தானே பல தடவைகள் ஆதங்கப் பட்டிருக்கிறார். கண் விழித்த நேரம் முதல் பம்பரமாகச் சுழன்று கொண்டிருப்பார். பிள்ளைகளிற்கு ஏதுமென்றால் தன் மகனிடம் பேச்சு வாங்கவேண்டி வருமே என்ற பயம். ஊரில் ஒரு வேலைக்காரி வைத்திருந்தால் கூட அவளுக்கு இவ்வளவு வேலைகளும் துன்பங்களும் இருக்காது. பாவம் பூரணம் அம்மா. தன் கஸ்டங்கள் கவலைகளை எப்படி மற்றவார்களிடம் கூறுவது? அனுதாபத்தோடும் தோழமையோடும் கேட்பது போல் நடித்துவிட்டு அக்கதைகளைத் தாங்கள் விரும்புபவர்களிடமெல்லாம் கை கால் வைத்து கூறி மகிழ்வார்கள். இதனை அவர் பல தடவைகள் அனுபவித்தும் விட்டார். அந்தப் பிழையை மேலும் விட அவர் விரும்பவில்லை. எனவேதான் யாருடனும் அதிக நேரம் கதைக்க விரும்புவதில்லை.

பூரணம் அம்மாவை இப்போ இன்னொரு வேதனைவாட்டிவதைத்துக்கொண்டிருந்தது. அது அவர் மகள் துஸா திருமணத்திற்கு மறுப்புத் தெரிவிப்பதேயாகும். இன்று எப்படியும் அவளுடன் கதைத்து ஒரு முடிவு எடுக்க வேண்டுமெனத் தீர்மானித்துக் கொண்டார்.

கைகளிரண்டிலும் தேநீர்க் கோப்பைகளை ஏந்தியவாறு துஸாவின் அறைக்குள் நுழைந்த பூரணம் அம்மா அவளுடைய கட்டிலிலே அமர்ந்து கொண்டார் அவளையே விடாமல் பார்த்தார். துஸாவிற்கு அம்மாவின் முகத்தைப் பார்த்தவுடனேயே விளங்கிவிட்டது. அம்மா இன்று பல்லவி பாடப்போறா என்று. மிகுந்த பயத்துடன் துஸா உன்னோட ஒரு விஸயம் கதைக்க வேணும் என்று இழுத்தார் பூரணம் அம்மா. என்ன? என்று அதட்டும் குரலில் கேட்டாள் துஸா. பூரணம் அம்மாவிற்கு அவர் தலையில் ஓங்கி அறைவது போலிருந்தது அவளது குரல். தன்னைச் சுதாகரித்தவாறு நீ இப்பிடியே தனிய எத்தின நாளைக்கென்றிருக்கிறது. உன்னையும் ஒருத்தனிட்ட பிடிச்சுக் குடுத்திட்டனென்டா நானும் நின்மதியா கண்ண மூடிடுவன். ஓமோம் உதத்தானே எந்த நாளும் சொல்லுறியள். விஜயா நல்ல ஒரு புரோக்கர் இருக்கிறதாச் சொன்னவ. கதைச்சுப் பாக்கட்டே. துஸாவிற்குக் கோவம் கோவமாக வந்தது. மிகுந்த ஆவேசத்துடன் அவவிற்கு வேற வேலைவெட்டி கிடையாதாமே ஊராற்ற கதையெண்டா காணும் நல்லா நடிச்சு நடிச்சு உங்கள்ள பெரிய அக்கறை மாதிரிக் கதைச்சிருப்பாவே. அவவிற்கேன் இந்தத் தேவையில்லாத வேலை என்று கேக்கிறன். இருவரிடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டது. துஸா தொடர்ந்தாள். அம்மா ஏன் எனக்குத் திருமணம் வேண்டாமென்னுறன் என்று உங்களுக்கு இன்னுந்தான் புரிய மாட்டேன் என்கிறதே.

சிறிது நேரம் இருவரிடையேயும் மெளனம் நிலவியது. அம்மா உங்கட வாழ்க்கையில எப்ப எப்ப நீங்கள் சந்தோசத்த அனுபவிச்சனிங்க யோசிச்சுப் பாருங்கோ. அப்பா குடிச்சிட்டு வந்து எவ்வளவு அடி உதை உதையெல்லாம் என்னால மறக்க ஏலெல்ல. அப்பா எங்களையெல்லாம் விட்டுட்டு நேரத்தோட போனாப்பிறகு நீங்கள் பட்ட கஸ்டங்களையெல்லாம் எப்படி மறக்கிறது? அப்பாவின் அச்சுப் பிசகாமல் அண்ணா அப்படியே இருக்கிறான். அப்பா விட்ட குறையை அண்ணா இப்போ தொடருகிறான். அண்ணாவிடம் நீங்களும் அண்ணியும் படும் கஸ்டங்கள் எனக்குத் தெரியாதா என்ன? சரி அக்காவிற்குத் திருமணம் பேசும் போது என்ன சொன்னார்கள்? அவர் குடிக்கமாட்டார் நல்ல பிள்ளை எத்தனை பொய்கள்?.. பின் என்ன நடந்தது? ஐயோ எனக்கும் அப்படி ஒரு வாழ்க்கை வேண்டவே வேண்டாம். நான் இப்படியே நிம்மதியா இருக்கப் போறன். இதில எனக்கு சந்தோஸமிருக்கு. நிம்மதியிருக்கு. அது எனக்குக் காணும். யாழ்ப்பாணத்தில இருக்கேக்கை நான் இயக்கத்திற்குப் போப்போறன் என்று அறிஞ்சோன்ன என்னை என்ன பாடுபடுத்தினீங்கள். உங்கட அன்புக்குக் கட்டுப்பட்டன். வெளிநாடு வந்தன் எல்லாம் என்னால அக்காட கலியாணம் நின்றுவிடுமோ என்ற பயம்தான். இப்ப எல்லாமே முடிஞ்சு போச்சு. பூரணம் அம்மாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. துஸா நீ அடம்பிடிக்கிறதில எந்த ஞாயமும் இல்ல. எல்லாரும் ஒருமாதிரியே. ஓரு பெண் நினைச்சா வாறவன மாத்தலாம் தானே.
துஸாவிற்கு சிரிப்பு வந்தது. ஏளனமாகப் பலமாகச் சிரித்தாள். அம்மாவே இப்பிடித் தத்துவம் கதைக்கிறாவே என்று. அம்மாவே தொடர்ந்தார். இந்த நாட்டில ஒரு தமிழ்ப் பெண் தனியா இருந்தா எத்தின கதை கட்டுவினம் தெரியுமே. யார் என்னோட கதைத்தாலும் உன்ற கதையத் தான் கதைக்கினம் தெரியுமே. என்னால அவையளுக்கெல்லாம் என்ன பதில் சொல்லுறதென்டே தெரியாம நான் திண்டாடிக் கொண்டிருக்கிறன். இதெல்லாம் உனக்கெங்க விளங்கப் போகுது. அம்மா இப்பிடிக் கதைக்கிறவ எங்களிற்குத் தெரியாம எத்தினயக் கதைப்பினம்? அதுக்காக நான் என்ற வாழ்க்கைய பாழடிக்கட்டே. நான் கஸ்டப் படேக்க அந்த நாலுபேர்ல ஒராளாவது எனக்கு உதவ வருவினமே? வெறும்வாயிற்கு அவல் கிடைத்த மாதிரி இன்னும் சுவாரசியமா என்ற கதையைக் கதைப்பினம் அம்மா நாங்க மற்றவர்கள் அப்பிடிக் கதைக்கினம் இப்பிடிக்கதைக்கினமென்று வாழக் கூடாது. நாங்கள் எங்களுக்காக வாழப் பழகோனும். என்ன எனக்கிப்ப முப்பத்தி ஒன்பது வயது இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தான் நாங்கள் இருக்கப் போறம் அது வரைக்கும் நின்மதியா சந்தோஸமா என் இலட்சியத்தோட நான் வாழவேணும். என்ற பணியை நான் தொடர வேணும் இதில கிடைக்கிற நின்மதி சந்தோஸம் வேற எதிலயும் கிடைக்கப் போறதில்ல என்றது மட்டும் எனக்குத் தெரியுது. அம்மா நான் போராட்டத்திற்கு போகத் துணிந்த போது என்னைத் தடுத்து இங்க கூட்டி வந்திட்டீங்கள் ஆனா என்னால என் பங்களிப்ப எங்கட தாய் நாட்டிற்கு செய்யவில்லையே என்ற குற்ற உணர்வு என்னை சதா உறுத்திக்கொண்டே இருப்பது உங்களுக்கெங்கே விளங்கும். என்னவிட வயதில குறைஞ்சதுகளெல்லாம் தாய் நாட்டிற்காக தங்களையே சுடராக எரியவிடும் போது நான் எந்த மூலைக்கு. அங்கு என் உயிரைத்தியாகம் செய்ய நினைத்தேன் ஆனால் இங்கிருந்தும் என்னால் பங்காற்ற முடியும். அதற்கு என்னைத் திருமணம் செய்பவர் ஒத்து வரா விட்டால் அந்த வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. நான் என் பங்களிப்பை இங்கிருந்த படியே தொடர்ந்து கொண்டேயிருப்பேன். என் நாடு விடுதலைபெறும் வரை நான் இந்தப் போலி இன்பங்களை அநுபவிக்கப் போவதில்லை. என்னால் முடியும். என்னால் இறுதிவரை இப்படியிருக்க முடியும். இந்த நாட்டில் என்னால் தனிமையில் வாழ முடியும். என் முடிவில் எந்தவிதமான மாற்றமுமில்லை. இதை ஏன் உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. பெற்றமனம் பித்து என்பதாலா?

பெரிய சத்தமாக சங்கர் கத்துவது கேட்டது. அவன் மனைவியும் பதிலுக்கு ஏதோ அடக்கமாகக் கூறினாள். நேரம் செல்லச் செல்ல கீழே பெரிய அமளிதுமளியாகச் சத்தம் கேட்டது. பிள்ளைகள் இருவரும் பலமாக அழுதனர். பூரணம் அம்மாவை துஸா ஒரு பார்வை பார்த்துக் வாய்க்குள்ளாகச் சிரித்தாள். தன் இரு கைகளையும் முன்புறமாக இறுகக் கட்டிக்கொண்டு பூரணம் அம்மாவைப் பார்த்து தலையை ஆட்டினாள். போம்மா போய் சண்டையை விலக்குப்பிடி. அல்லது பிள்ளைகளைக் கூப்பிட்டு அரவணை. போம்மா போ . பூரணம் அம்மா மெல்ல பாம்பு நழுவுவது போல அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: