தமிழ்library
ரியா

ரியா

இதோ வர போகிறது ரயில்….. திம் தீம் திம் தீம் என யானையின் இரும்புக் கால்கள் கொண்டு மதுக்கரை வளைவில் வந்து கொண்டிருக்கிறது…..

அவன் தயாராகிறான்…. எல்லாம் தயார்… ஏற்கனவே தீட்டிய திட்டம்தான் என்றாலும் நண்பர்கள் கொஞ்சம் நடுங்கி பின் தங்குகிறார்கள். ஒருவன் ‘வேண்டாம்’ என்று கூட கூறுகிறான்.

‘போடா…ங்…… வாழ்க்கை சுவாரஷ்யங்களால் உண்டாக்கப்பட்டவை. திரில் இல்லாமல் மொக்கை போட்டோவுக்கு லைக் வாங்கி எனக்கு பழக்கம் இல்லை…… நான் வேற…..டா….” என்ற அவன்… தண்டவாளத்துக்கும் இரும்பு பாலத்துக்கு இடையே இருக்கும் சிறு இடைவெளியில் தன்னை சமன்படுத்தி நின்றபடியே தன் அலைபேசியை முகத்துக்கு நேராக வைத்து, கிளிக்கினால் கச்சக் என்று காலத்தையும் பின்னால் வந்து கொண்டிருக்கும் ரயிலையும் தன் முகத்தோடு நிறுத்தி விடும் காலச்சிறந்த செல்பியை எடுத்து விடலாம் என்பதுதான் திட்டம்.

வளைவில் திரும்பி ஓர் இரும்பு யானையென ஊர்ந்து அத்தனை வேகத்தோடு ரயிலும் வந்து விடுகிறது. ஏனோ படக்கென்று அலைபேசி செல்பி எடுக்கும் ஆப்ஷனில் இருந்து புகைப்படம் எடுப்பதற்கு மாறி விட……கண நேரத்தில் ரயிலின் நினைவு தாண்டி அலைபேசியில் செல்பி மோடுக்கு மாற்றும் கவனத்தில் சிதறித்தான் போகிறான். காலம் எடுத்து விடுகிறது ஆகச் சிறந்த மரணத்தின் செல்பியை.

***

கொட்டோ கொட்டென கொட்டுகிறது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. எச்சரிக்கை தாண்டி, காவலாளி தாண்டி, நண்பர்கள் தாண்டி, உறவுகள் தாண்டி…500 லைக்ஸ் ஒன்றே குறிக்கோளாக கொண்டு ஒளிந்து மறைந்து அந்த வழுக்கு பாறைக்கு அருகே சென்று விட்டவன்…..உடலை கொஞ்சம் அதிகமாக வளைத்து விடுகிறான். கேமராவும் அவன் தலையும் ஒரே நேரத்தில் சிதறுகிறது. அருவியின் புகை மண்டிய இரைச்சலில் அவனின் செல்பியும்… சிதறிய அவனின் உடலும் யாருக்கும் தெரியாமலே போகிறது.

***

கிணற்றுக்குள் நீந்திக் கொண்டிருக்கும் நிலவோடு முகம் தெரிய எடுத்த செல்பிக்கு பிடி நழுவிய பின்னிரவு மரணம் ஒன்றை ஊரே நாறிய ஒருநாளில் தான் கண்டு பிடிக்க முடிந்தது. நிலவைக் களங்கப் படுத்திய அந்த இரவில் அவன் தலை குப்புற விழுகையில் கிணற்று சுவற்றில் முட்டிய அவன் தலையில் இருந்து சிதறிய மூளை மட்டும் எத்தனை தேடியும் கிடைக்கவில்லை.

***

உயரமான கட்டடம் ஒன்றில் நின்று கொண்டு முத்தமிட்டபடியே செல்பியை மறந்த ஜோடி அடுத்த நாள் தலைப்பு செய்தியானது ஊருக்கே திக் திக் திக். முதலில் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுத்தபடி ஒருவரையொருவர் சமன் செய்தபடிதான் நின்றார்கள். செல்பி ஸ்டிக் படக்கென்று முறியும் என்று யார் தான் நினைத்தார்கள். நொடி நேர பிறழ்வுக்கு, சற்று முன்னோக்கி வளைய நேரிடுகையில்……பூமியின் ஈர்ப்பு சக்திக்கு எந்த யுக்தியும் கை கொடுக்க வில்லை. படக்கென்று ஒருவரையொருவர் முந்திக் கொண்டு பூமிக்குள் பாய்ந்தார்கள்.

***

ரத்தம் சிதறி…..முதுகற்ற ஒரு கை மட்டும் துடிக்க துடிக்க அந்த ஓவியம் இன்னும் சொட்டிக் கொண்டிருந்தது ரயிலின் மரண ஓசையை. கண்களை மூடிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறது ரயிலோடு போன ஆவி.

தன் உடல் கூட கிடைக்காத துக்கத்தில் அருவியின் பேரிரைச்சல் மட்டுமே செவிகளை திரும்ப திரும்ப செவிடாக்கிக் கொண்டிருக்கிறது…. அந்த அதிரப்பள்ளி ஓவியம். தேடி தேடி பார்க்கிறது….செத்து தொலைந்த ஆன்மா.

கிணற்றுக்குள் நிலவு ஏன் சிவப்பாக இருக்கிறது என்று யோசிக்க முடியாத துக்கத்தில் விக்கித்து பிதற்று மொழியில் பார்த்துக் கொண்டிருக்கிறது மூளையற்ற பிணம்.

ஜோடிகள் முத்தமிட முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள். பின் ஒருவரையொருவர் பலமாக தாக்கிக் கொள்கிறார்கள். இந்த மண்ணாங்கட்டி ஐடியாவை கொடுத்ததாக மாற்றி மாற்றி குற்றம் சுமற்றிக் கொள்கிறார்கள். ஏங்கி ஏங்கி அழுதபடியே தங்களின் தலை குப்புற விழும் ஓவியத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

***

இரவின் சாம்பல் பூத்த தருணங்களோடு… வெண்ணிற சப்தம் அழுகையாகி ஆரவாரித்துக் கொண்டிருக்க…அந்த சுடுகாட்டு பின்னிரவில் துக்கம் தாளாமல்…..அகாலமாய் மரித்த, கால்களற்ற, உருவமற்ற புகை மண்டிய ஆன்மாக்கள் தங்களின் சாவு நொடிகளை வரைந்து வைத்திருக்கிற ஓவியங்களை உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

“எப்படி…..?” என்றும் உள்ளுக்குள் யோசனையும் ஓடிக் கொண்டிருக்கிறது.

‘இன்னும் சற்று நேரம் இது இப்படியே தொடர வேண்டும். எந்த இடையூறும் வந்து விடக் கூடாது” என்று எல்லா கடவுள்களையும் வேண்டியபடியே முன்னால் நிற்கும் ஆன்மாக்களோடு மறைந்து நின்று செல்பி எடுத்துக் கொண்டிருக்கிறான் அந்த ஓவியன்.

ஆழ்ந்த பேரமைதியை அவன் கிளிக்கிய அந்த நொடி கலைத்துப் போட ஐந்து ஆன்மாக்களும் ஒரு சேர வேகமாய் திரும்புகின்றன.

‘ஆஹ்ஹ்ஹ்”………..

ஓவியனின் கடைசிக் குரலோடு நாளை யாருக்காவது கிடைக்கலாம் கண்டெடுக்கப்படும் அலைபேசிக்குள் பதிந்த கடைசி செல்பி…

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: