தமிழ்library
பிழைத்துப் போனவன்

பிழைத்துப் போனவன்


‘உண்மையாகவே சண்முகநாதன்…. வளைகுடாவில சண்டை தொடங்கி விட்டுதே?”

இப்ப காலமை ஜ.பி.சி செய்தியைக் கேட்டிட்டு, கையோட பெற்றோல் கானையும் தூக்கிக் கொண்டு பறந்து வறான். எங்கட கடைக்காரர்கள் காதில விஷயம் விழுந்த தெண்டால் பிறகு எரிபொருட்களை மருந்துக்கும் காணேலாது.

வீதி வழியே சென்றவர்கள் இரைந்தது முற்றம் பெருக்கிய பரிமளத்துக்கும் கேட்டது. துணுக்குற்றாள்.

|என்னது வளைகுடாவில் சண்டை வெடிச்சிட்டுதா…? அப்ப எங்கட பிள்ளைகளின்ர கதி? மனதுக்குள் நினைத்துக்கொண்டு பரபரப்போடு திரும்ப, வாசலில் நித்தியா கைப் பையை விசிறிக் கொண்டு வந்தாள்.

‘பிள்ளை ரேடியோவைப் போடு, வனைகுடாவில் சண்டை ஆரம்பிச்சிட்டுதாம். எனக்கு கையும் காலும் இயங்க மறுக்குது”

‘ஆர் உனக்கு சொன்னதம்மா?

பரிமளத்தின் பதற்றம் நித்தியாவிற்கும் தொற்றிக் கொண்டது. நகைவாங்கப் போகும் அவசரத்தைக் கைவி;ட்டு உள்ளே சென்று கையடக்க டிஜிற்ரல் ரேடியோவை எடுத்து வந்தாள். அது சென்ற மாதம் செல்வராசா குவைத்தில் இருந்து அனுப்பியது.

‘ஆண்டவா, நாட்டில் பிரச்சினையெண்டு பிள்ளைகளை கண்காணாத தேசத்துக்கு அனுப்பி வைச்சம். போன இடங்களில் பாதுகாப்பாக இருந்து கொண்டு ஏதேனும் எடுபிடி வேலை செய்தெண்டாலும் பிழைச்சுக் கொள்ளுங்கள் என்று நிம்மதியாய் இருந்தம்.”

‘அம்மா, வீணாக எதையாச்சும் நினைச்சுக் கொண்டு பிலாக்கணம் பாடதே. அண்ணா என்ன சின்னப் பிள்ளையே…! தொன்ணுhற்றொண்டில அங்க பிரச்சினை நடக்கேக்கை சிக்கலெதுவுமில்லாமல் திரும்பி வந்து, ஆறு மாதம் கழிய திரும்பிப் போனவர்தானே. அந்தா, சுப்பிரமணி மாமா பேப்பரும் கையுமா வாறார். ஏதேனும் விஷயமிருக்கும்.”

‘சும்பிரமணி… கேட்டியேடாசங்கதி..” ‘ஓமோம்… எல்லாம் அறிஞ்சு போட்டுத்தான் ஓடோடி வாறன். நீ அக்கா நாலு பேரின்ரை கதையளைக் கேட்டு சஞ்சலப் பட்டுக் கொண்டிருப்பாய் என்ற பயத்தில, காலமை தேத்தண்ணியைக் கூட குடிக்காமல் வாறன். ஒருத்தரும் ஒண்டுக்கும் பயப்பட வேண்டாம்.!”

‘எனக்கு கண்ணாடி போடாட்டி சின்ன எழுத்துக்களை பார்க்ககேலாது. நித்தியா, மாமாவிட்ட பேப்பரை வாங்கிப் படி”

நித்தியா மாமாவிடம் இருந்து பேப்பரை வாங்கினாள். ‘நேற்று ஆரம்பித்த யுத்தம் ஈராக்கின் தலைநகரை இலக்கு வைத்து பல முனைகளில் நகர்கிறது. காலாட் படையினருக்கு உதவியாக மேலதிக கவச வாகனங்கள், டாங்கிகள் விரைவு! வேலை வாய்ப்புக்காகச் சென்ற பிற நாட்டவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்…..”

‘அக்கா, கேட்டியே செய்தியை, சண்டை பிரதானமாக ஈராக்கில தான் நடக்குது. செல்வராசா குவைத்திலயெல்லலோ நிக்கிறான். பிரச்சினை இன்னும் வலுக்கும் என்றால் அவன் சுழிச்சுக்கொண்டு வேற இடத்துக்குப் போயிடுவான். போன கடிதத்திலேயும் எழுதியிருந்தானே, நான்வர வேணுமென்டு யோசிக்;காதேங்கோ. நித்தியாவின்ர கல்யாணத்தைச் சிறப்பாகச் செய்யுங்கோ. வீடியோவை அனுப்புங்கோ. அதில எல்லாவற்றையும் பார்க்கின்றேன். என்று.”

‘ம். அந்த பிள்ளைக்கும் சகோதரியின்ரை கல்யாணத்தில கலந்து கொள்ளுவதற்கு கொடுப்பினை இல்லாம போட்டுது சுப்பிரமணி”

‘அந்த பிறகு பார் புலம்பிறதை. அவன் செல்வராசா என்னத்துக்கு எங்கள் எல்லோரையும் விட்டிட்டு அந்த வானந்தர தேசத்துக்கு போய் மாயுறான்? அம்மா கஷ்ரப் படக் கூடாது சகோதரங்கள் வசதியான இடங்களில் வாழ்க்கைப் பட வேணும். இதுகள் தானே அவன்ரை இலட்சியம். இப்படியொரு பிள்ளைக்காக நீ பெருமைப்படவேணும் பரிமளம் அக்கா. சரி, நித்தியா ஆயத்தமாயிட்டாயா….? நகைக் கடைக்குப் போக வேணும் என்று சொன்னேனே..?”

‘ஆங்… பிள்ளை அப்போதே வெளிக்கிட்டு விட்டாள். ஆனால் சின்னவன் அகல்யா இண்டைக்கு ஸ்பெஷல் வகுப்பு இருக்கெண்டு விடியப்புறமே கிளம்பிட்டாள். அவளின் ஏ.எல் சோதினைக்கு இன்னும் ஒரு மாசம தானே இருக்கு. நகை எடுக்கிறபோ ஒண்டை மறந்திடாதே. மாப்பிள்ளைக்கு எடுகிற மோதிரத்தில சிகப்புக்கல்பதிச்சிருக்க வேண்டுமெண்டு கேட்டிருக்கிறாங்க. சிறிது நேரம் இருங்கோ. தேத்தண்ணி போட்டுக் கொண்டு வாறான். குடிச்சிட்டு கிளம்பலாம்.” பரிமளம் அடுக்களைக்குள் சென்றாள்.

சுமனுக்கு, செல்வராசாவின் வீட்டை நெருங்க கால்கள் தயங்கி, தள்ளாடும் உணர்வு. கையில் உள்ள துண்டைப் பார்த்தான்.

இல29, வீதியின் வலது பக்கம், பச்சை வீடு… அது இதுவாகத்தான் இருக்க வேண்டும்! வாசலில் சாடியில் இருந்த ப10ங்கன்றுகளுக்கு நீர் விட்டுக்கொண்டிருந்த இரட்டைஜடைப் பெண் பரபரப்போடு உள்ளே ஓடினாள். இது யாராயிருக்கும்…? செல்வராசா சொன்ன மாதிரி மணப் பெண்ணின் பொலிவு முகத்தில இல்லையே, அப்படியானால்….

‘தம்பி யாரைத் தேடுறீர்…? குரல் கேட்டு நிமிர்ந்தான்.

‘அம்மா என்னைத் தெரியேல்லையா? நான் சுமன். ஸ்கொலசிப் படிக்கிற காலத்தில் உங்கட மகனட்டை எனக்கும் சேர்த்துச் சாப்பாடு பொதி பண்ணிக் கொடுத்திடுவீங்களே, மறந்திட்டீங்களா…!

பயணப்பைகளை தரையில் போட்டு விட்டு ஓடிச் சென்று பரிமளத்தின் கைகளுள் அடைக்கலமானான் சுமன்.

‘அடடே.அந்த சுட்டிப்பயல் என்னமாய் வளர்ந்திருக்கே. என்னால நம்ப முடியல அகல்யா ஓடிப்போய் என்னோட மூக்குக்கண்ணாடியை கொண்டுவாம்மா”

பரிமளத்துக்கு தனது மகன் செல்வராசாவே நேரில் வந்து விட்ட மகிழ்ச்சி.

‘அகல்யா கூட தோற்றத்தில் ரொம்பவும் மாறிட்டா| ஆச்சரியப்பட்டான் சுமன். 

‘ஏன்ராப்பா சுமன், இவ்வளவு காலமாய் எங்கேயிருந்தே. இடையில ஒரு கடதாசியாச்சும் போட்டிருக்கப்படாதோ” பரிமளம் மூக்குகண்ணாடியைக் கொழுவினாள். ‘எங்கே மாமி, அப்பாவுக்கு தலைநகரில் வேலை மாற்றம் கிடைச்சதோட எல்லோருமே அங்கே போயிட்டம். அப்புறம் இரண்டு தடவை உங்க பழைய முகவரிக்கு கடிதம் போட்டேன். ஏனே, பதில் வரல்ல…”

‘நாம கூட கடன் தொல்லை தாங்க முடியாமல், அடமானத்திலயிருந்த அந்த வீட்டை வித்திட்டோம். ஆம்… இப்போ ஒண்ணு ஞாபகத்துக்கு வருகுது. மூணு மாசம் முன்னாடி செல்வராசா போட்டிருந்த லெட்டரில் ப10டகமாக ஒன்று எழுதியிருந்தான். பழைய சினேகிதன் ஒருத்தனைக் கண்டு பிடிச்சிருக்கேன். யார்னு சொல்ல மாட்டேன். ஊருக்கு வரும் போது நேரில கண்டு ஆச்சரியப்பட்டுப் போவீங்க அப்படின்னு”

சுமன் எதுவும் சொல்லவில்லை. வேறேங்கோ பார்த்தான். வாசலில் ஸ்கூட்டர் சத்தம் கேட்க, திரும்பினார்கள்.

நித்தியா கோயில் தரிசம் முடிஞ்சு வந்தாச்சா. நம்ம சுமன் தம்பி வந்திருக்கான் பாரு! தம்பி கூட கடந்த முணு மாசமா நம்ம செல்வராசா கூட ஒண்ணாகவே வேலை பார்க்குதாம்.”

பரிமளம் மகளையும் மருமகனையும் அறிமுகம் செய்தாள். ஏணண்ணா ஒரு வாரம் முந்தி வந்து திருமணத்தை நடத்தி வைச்சிருக்க கூடாதா? ஆண் துனையில்லாம ரொம்பவும் சிரமப்பட்டோம். செல்வராசா அண்ணாவின் கம்பனி ஒப்பந்தகாலம் முடியலை. இடைநடுவில் ஊருக்கு வந்தால் கம்பனிக்காரங்கள் ஒப்பந்தத்தை முறிச்சுடுவாங்கன்னு சொல்லி வராமலேயே இருந்திட்டான். எனக்கு அண்ணாமேல ரொம்பக்கோபம். இனி ஆறு மாதத்துக்கு அவருக்கு கடிதம் போடுறதில்லையெண்டு முடிவெடுத்திருக்கிறேன்”. என்றாள் நித்தியா.

‘நித்தியா….. நீ இப்படி பேசலாமா? ஏதோ அந்த பிள்ளையாண்டான் அப்பா கண்ணை மூடினதுக்கப்புறம் தன் படிப்பை பாதியில உதறிவிட்டு கடல்கடந்து பிழைக்கப் போனதுக்கப்புறமாகத்தான் நாம தலையெடுக்க முடிஞ்சுது. இந்த வீடு வாங்கினது, உனக்கு இப்படியொரு வாழ்க்கை அமைஞ்சது. சின்னவள் நிம்மதியாய் படிக்க முடியிறது எல்லாமே……” பரிமளம் மகளைக் கோபித்தாள்.

‘ஆமா, மாமி சொல்லுறது ரொம்பச்சரி. செல்வராசா சின்னக்குழந்தை மாதிரி தினமும் வீட்டைப்பற்றியும் உங்களைப் பற்றியுமே உயர்வாகப் பேசிக் கொண்டிருப்பான்.”

இமையோரம் வழிந்த நீரை மறுபக்கம் திருப்பி மறைந்தான் சுமன். ‘இந்த சூட்கேஸ் இரண்டையுமே தங்கச்சிங்க கையில கொடுக்கணும்னு கண்டிப்பாக சொல்லியிருக்கான் உங்கண்ணா செல்வராசா”.

‘அடுத்த புது வருசத்தோடையாவது அண்ணாவை இஞ்சை வந்து எங்களைப் பார்த்துக்கொண்டுபோகச் சொல்லுங்கோ” சகோதரிகள் உரிமையோடு கேட்டுக் கொண்டார்கள்.

தனது கைப்பையைத் திறந்து எதையோ தேடியெடுத்தான் சுமன். இந்தாங்க மாமி… செல்வராசா இதை உங்களட்டை கொடுக்கச் சொன்னான்.”

என்னப்பா பணச் செக்கா?”

‘ஆமாம் மாமி இரண்டு லட்சம் பெறுமதியானது! பரிமளம் அதைப் பெற்று கண்களில் ஒற்றிக் கொண்டாள். சுமன் இருள் மண்டிக் கிடந்த வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கினான். அதுவரை அவனுள் அடங்கி நின்ற துயரம் பீறிட்டெழுந்தது. கன்னங்களைச் சுட்ட விழிநீர் தரையில் விழுந்த படி இருந்தது. பெற்ற மனம் அவனைத் தழுவத் துடிக்கிறது! இரத்த உறவுகள் அவனை ஆசையாய் பார்க்கத் தவிக்கின்றன! ஆனால் அவன் சென்ற வாரம் குவைத்-ஈராக் எல்லையில் வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்த சமயம் பொல்லாத ஏவுகணையொன்று விழுந்து வெடித்ததில் உருத்தெரியாது போய் விட்டான்.! அவன் அஸ்தியைக் கூட பிறந்த மண்ணிற்கு எடுத்து வர முடியாத நிலைமை. செல்வராசாவின் இறப்புக்கு கிடைத்த நஷ்டஈட்டுப் பணம் தான் அந்த இரண்டு லட்சம் என்றால் அந்தக் குடும்பம் இதைத் தாங்குமோ…? எத்தனை நாளுக்குத்தான் அவனின் இழப்பை மறைப்பது. ஒரு நாள்.. ஒரு மாதம்…. என்றோ ஒரு நாள் அந்த உண்மை வெளிச்சத்துக்கு வரத்தான் போகின்றது.! ஆனால் அதைச் சொல்லுகின்ற துணிவு எனக்கில்லை… ஆண்டவா இந்த இழப்பைத் தாங்கும் இதயத்தை அவர்களுக்குக் கொடு! சுமன் இருளில் தனியே நடக்கின்றான்.

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: