தமிழ்library
புளியோதரை

புளியோதரை

பெருமாள் கோயிலை ஒரு சுற்று சுற்றி வெளி வரும் போது அந்த மாமா கையில் ஒரு தொண்ணை புளியோதரை தந்தார்… அந்தக் கோவிலில் தினம் ஏதாவது கொடுக்கும் வழக்கம்… 
கையில் எப்பொழுது தின்பண்டம் வந்தாலும் நமக்குப் பிடித்தவர்களுக்குப் பிடித்தது என்று நினைவு உடன் வரும்.. புளியோதரை என்றால் பேத்திக்கு மிக இஷ்டம். இன்னொரு தொண்ணை கேட்டேன். மறுத்து விட்டார்.. ஹிந்து அற நிலைய போர்டின் கட்டுப்பாட்டில் சமீபத்தில் வந்துள்ளதால் (அறங்காவலர்களுக்குள் மோதல்) என்ன விதி முறையோ.. என்ன SOP யோ, என்ன பிரோட்டோகோலோ? கூடுதல் தேவை என்றால் ஆபீசில் பணம் கட்டி வாங்கிக் கொள்ளவும் என்ற கூடுதல் அறிவுரை வேறு. ஒரு வாய் புளியோதரைக்காக ஒரு கிலோ வாங்க விருப்பம் இல்லாமல் நகர்ந்து விட்டேன்.. கையில் உள்ள தொண்ணைப் புளியோதரையை பேத்திக்காக பத்திரப்படுத்தி..

கோயில், மடப்பள்ளி எல்லாம் அப்பா, அவர் அப்பா காலம்..
தாத்தா கோவிலிலேயே சேவை செய்து கொண்டிருந்தவராம்… அப்பா மூன்று வயது இருக்கும்போது தாத்தா மறைந்ததாக சொல்லிக் கேள்வி.. நான்கு பிள்ளைகளை அங்கே இங்கே வேலை செய்து, மந்தார இலை தெய்த்து வளர்த்தாள் பாட்டி என்று.. அப்பா பழங்கதை சொல்லும்போது கேட்டதுண்டு.. பசி வயிற்றைக் கிள்ளும்போது கோயில் மடப் பள்ளிதான் கதி என்பார்…

“என்னடா இந்தப் பக்கம்…” என்று கேட்பவருக்குத் தெரியும் இவன் எதற்கு வந்திருக்கிறான் என்று…

“சரி கொஞ்சம் தண்ணி இழுத்துப் போடு…”

முப்பது குடம் தண்ணீர் இழுத்துப் போட்டபின், இலையில் புளியோதரை வயிறு நிரையக் கிடைக்கும்..

அந்த ஊரில் அந்தக் காலத்தில் எவ்வளவு ஆழத்தில் தண்ணீர் இருந்திருக்கும்?

நான் 55 வருடம் முன் பார்த்தபோது தெருக் குழாயில்தான் தண்ணீர்.. கிணறு வற்றித்தான் இருந்தது… இந்தனைக்கும், நம்ம சேப்பாக் மைதானம் கொள்ளும் அளவு கோவில் குளம்.. வற்றித் தான்..

நான் இப்பவும் ஆச்சரியப்படுவேன், எப்படிப் பசியுடன் 30 குடம் தண்ணீர் இழுத்தார் என்று.. வேறென்ன பசிதான் இழுத்திருக்கும்..

ஊர் கோவிலுக்குச் செல்லும்போது மடப்பள்ளிக் கிணற்றைத் தொட்டுப் பார்ப்பதுண்டு.

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: