தமிழ்library
இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

 

மன்னன் ஒருவர் தன் அரசவை அறிஞர்களிடம், “நான் எனக்காக ஒரு மோதிரம் செய்யப் போகிறேன். இக்கட்டான கட்டத்தில் படித்தால், எனக்கு உதவக்கூடிய ஒரு சுருக்கமான செய்தியை அதில் வைத்திருக்க விரும்புகிறேன். அப்படி ஒரு செய்தி வேண்டும்” என்று கேட்டார். பலமுறை முயன்றும் அரசவை அறிஞர்களால் இக்கட்டான கட்டத்தில் படித்தால் மன்னருக்கு உதவக்கூடிய ஒரு சுருக்கமான செய்தியைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

மன்னரிடம் ஒரு வயதான வேலையாள் இருந்தார். மன்னர் அவரை ஒரு வேலையாளாகக் கருதுவதில்லை. வயதின் நிமித்தம் அவரிடம் மிகவும் மரியாதை வைத்திருந்தார். அந்த வயதானவர் மன்னருக்கு உதவ முன் வந்தார். அவருக்கு ஞானி ஒருவர் கொடுத்த (இக்கட்டான கட்டத்தில் படித்தால் உதவக்கூடிய) செய்தியை மன்னருக்குக் கொடுத்தார். கொடுக்கும்போது “இதைப் படிக்க வேண்டாம். மோதிரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். எல்லாமே முடிந்து விட்டது, வேறு வழியேயில்லை எனும் சமயத்தில் இதைத் திறந்து பாருங்கள்” என்றார்.

அந்த இக்கட்டான கட்டம் வந்தது. நாட்டின்மீது படையெடுப்பு நடந்தது. மன்னர் நாட்டைப் போரில் இழந்து, தனது குதிரையில் தப்பித்து ஓடினார். பின்னால் எதிரிப் படையினர் துரத்தி வந்து கொண்டிருந்தனர். அப்போது பாதையும் முடிவுற்றது. வேறு வழியற்று ஒரு மலை முகடுக்கு வந்தார் மன்னர். கீழே பெரும் பள்ளத்தாக்கு, மறுபக்கம் எதிரிகள்.

மன்னருக்கு அப்போது மோதிரத்தின் நினைவு வந்தது. அவர் மோதிரத்தில் வைக்கப்பட்டிருந்த செய்தியை எடுத்தார், அதில் “இதுவும் கடந்து போகும்” என்ற வாசகம் இருந்தது. செய்தியின்படியே எதிரிப் படையினர் கடந்து சென்றுவிட்டனர். மன்னரும் இக்கட்டான கட்டத்தில் இருந்து மீண்டார்.

பின்பு, தன்னுடைய படைகளைத் திரட்டிக் கொண்டு, திரும்பவும் போராடி வெற்றி பெற்றார். மன்னர் தலைநகரத்தில் வெற்றியோடு நுழையும்போது, கோலாகலமான வரவேற்புக் கொடுக்கப்பட்டது. மன்னர் தன்னைப் பற்றிப் பெருமையாக உணர்ந்தார்.

மன்னரோடிருந்த அந்த வயதான வேலையாள், “இதுவும் சரியான தருணம். அந்த வாசகத்தை திரும்பவும் பாருங்கள்” என்றார். மன்னரோ, “என்ன சொல்கிறீர்கள், இப்போது நான் வெற்றி பெற்று இருக்கிறேன். மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள், நான் இக்கட்டான நிலையில் இல்லையே” என்றார்.

அந்த வயதானவர், “அந்தச் செய்தி எந்தருணத்திற்கும் ஏற்றது. நீங்கள் தோல்வியுற்ற நிலையில் மட்டுமல்ல, வெற்றி பெற்ற நிலையில் கூட அச்செய்தி மாறாது. நீங்கள் இக்கட்டான நிலையில் இருக்கும்போது மட்டுமல்ல, வெற்றியாளராக இருக்கும் நிலையில்கூட அது தேவைதான்” என்று கூறினார்.

மன்னர் தன் மோதிரத்தில் இருந்த, “இதுவும் கடந்து போகும்” என்ற செய்தியை மீண்டும் படித்தார். மகிழ்ச்சியான, வெற்றியான நிலையிலும்கூட அமைதி அவரை ஆட்கொண்டது. வெற்றியும் தோல்வியும், இன்பமும் துன்பமும், மகிழ்ச்சியும் துன்பமும் கடந்து போகும்.

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: